உங்களில் யார் அடுத்த சூப்பர் ஸ்டார் என ஏதோ ஒரு டிவி நிகழ்ச்சியின் டைட்டிலுக்காக போட்டி போடுவதைப் போல இன்றைய சில முன்னணி நடிகர்கள் போட்டி போட்டு வருகிறார்கள். கொஞ்ச நாளைக்கு முன்னர் ஆரம்பமான இந்த அடுத்த சூப்பர் ஸ்டார் யார் ? என்ற பேச்சு தற்போதைக்கு கொஞ்சம் அடங்கியுள்ளது. எப்போது அதைப் பற்றி மீண்டும் கத்தி பேச ஆரம்பிப்பார்களோ தெரியாது. தற்காலிகமாக அந்த பேச்சு அடங்கியுள்ளது அவ்வளவுதான்.
அஞ்சான் டிரைலர் வெளியீட்டு விழாவில் கூட சூர்யாவை இந்தியாவின் சூப்பர் ஸ்டார் என்றெல்லாம் வானளாவ புகழ்ந்த விஷயமெல்லாம் நடந்தது. எங்கே சூர்யாவும் அந்த டைட்டிலுக்கு ஆசைப்படுகிறாரோ என்று பார்த்தால் அவருக்கு அப்படியெல்லாம் ஆசை இல்லை என்பதை உணர்த்தியிருக்கிறார். ஆக, சுற்றியுள்ளவர்கள் போடும் கோஷம்தான் அது, என்பதை நன்றாகவே புரிந்து வைத்திருக்கிறார் சூர்யா.
“சூப்பர் ஸ்டார் என்பது ஒரே டைட்டில்தான், ஆனால் அது என்னிடம் இல்லை. நான் ரஜினிகாந்த் படங்களைப் பார்த்து வளர்ந்தவன், அவருடைய சூப்பர் ஸ்டார் பட்டத்தை வேறொருவர் எடுத்துச் செல்வதை என்னால் கற்பனை செய்து கூடப் பார்க்க முடியாது, ஆனால் கண்டிப்பாக நான் கிடையாது. என்னுடைய படங்களை ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோரது படங்களுடன் ஒப்பிடவே கூடாது. அவர்கள் வேறு உயரத்தில் இருப்பவர்கள். அதே போல, விஜய், அஜித் இருவருமே 50 படங்களுக்கு மேல் நடித்தவர்கள், நான் தற்போதுதான் 30 படங்களைத் தொட்டிருக்கிறேன். எனக்கு விஜய்யுடன் நல்ல நட்பு உண்டு. அவர் என்னுடைய அகரம் விளம்பரப் படத்தில் கூட நடித்திருக்கிறார். என்னுடைய படத்தின் டிரைலரைப் பார்த்துவிட்டு மெசேஜ் கூட அனுப்பியுள்ளார்,” என சூப்பர் ஸ்டார் பட்டம் பற்றிய தன்னிலை விளக்கம் ஒன்றை சமீபத்திய பேட்டி ஒன்றில் அளித்திருக்கிறார் சூர்யா.
அடுத்த சூப்பர் ஸ்டார் சூர்யான்னு சொல்றவங்கள்லாம் அவரை விட்டு தள்ளி நில்லுங்கப்பா…அவர் குழப்பமில்லாம இருக்காரு.
0 comments:
Post a Comment