ஆஸ்கர் விருது பெற்ற பிரபல ஹாலிவுட் நடிகர், நகைச்சுவைக் கலைஞர் ராபின் வில்லியம்ஸின் மரணம் சர்வதேச அளவில் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.
63 வயதான ராபின் வில்லியம்ஸ் உடல் தெற்கு கலிஃபோர்னியாவின் டிபூரனில் உள்ள இல்லத்தில் கண்டெடுக்கப்பட்டது.
இது மரணமா.. தற்கொலையா என்பதில் இன்னும் சந்தேகம் நீடிக்கிறது. இது தொடர்பாக விசாரணை நடந்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஆஸ்கர் விருது பெற்ற ஹாலிவுட் நடிகர் ராபின் மர்ம சாவு.. தற்கொலையா?
திங்கள் கிழமை முற்பகல் 11:55 மணிக்கு அளவில் அவரது வீட்டில் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. அப்போது ஒருவர் சுயநினைவற்ற மற்றும் மூச்சு இல்லாமல் வீட்டில் கிடப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனடியாக அவசர குழு அங்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு சென்ற குழு அவர் வில்லியம்ஸ் என்று கண்டுபிடித்தது. பின்னர் அவர் இறந்துவிட்டார் என்று மதியம் 12:02 மணிக்கு டாக்டர்கள் தெரிவித்துவிட்டனர்.
ராபின் வில்லியம் சமீப காலமாக மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு இருந்ததாக, அவரது செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.
சமீப காலமாக மன அழுத்த பாதிப்புக்கு உள்ளான ராபின் வில்லியம்ஸ், கடந்த 1997-ல் வெளிவந்த 'குட் வில் ஹான்டிங்' படத்தின் நடிப்புக்காக ஆஸ்கர் விருதை வென்றவர். அப்படத்தில் ராபின் வில்லியம்ஸ் மனக் கோளாறுகளுக்கு சிகிச்சை தரும் நிபுணராக நடித்தது குறிப்பிடத்தக்கது.
"என் கணவர் - சிறந்த நண்பரை இன்று காலை இழந்துவிட்டேன். இந்த உலகம் அன்புக்குரிய கலைஞரையும், அன்பான மனிதரையும் இழந்துவிட்டது. என் இதயம் நொறுங்கிவிட்டது" என்று ராபின் வில்லியம்ஸ்சின் மனைவி சூசன் ஷைனிடர் தெரிவித்துள்ளார்.
ராபின் வில்லியம்ஸின் மிஸஸ் டவுட்பயர்தான், நடிகர் கமல்ஹாசனின் 'அவ்வை சண்முகி' படத்துக்கு மூலம். அதேபோல முன்னாபாய் எம்.பி.பி.எஸ் (வசூல்ராஜா எம்பிபிஎஸ்) படத்தின் மூலம் ராபின் வில்லியம்ஸின் 'பேட்ச் ஆடம்ஸ்'தான்.
சிறுவர்களுக்கு மிகவும் பிடித்த 'நைட் அட் தி மியூஸியம்', 'ஜூமான்ஜி', 'ரோபோட்ஸ்' உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்தவர் ராபின் வில்லியம்ஸ்.