கொண்டை ஊசி கிடைக்கலேன்னு கோணி ஊசிய சொருகிக் கொண்ட மாதிரி, கே.வி.ஆனந்த் ஸ்டைல் படத்தை ரவி.கே.சந்திரன் இயக்கியிருக்கிறார். இருவருமே ஒளிப்பதிவு மேதைகள்! நல்லவேளை… ஆனந்த் நிரூபித்துவிட்டார். சந்திரனுக்குதான் ‘கிரகணம்!’
ஒரு சுவாரஸ்யமான படத்திற்கு கதையே தேவையில்லை. ஒரு அசுவாரஸ்யமான படத்திற்கு கதையிருந்தாலும் பிரயோஜனமில்லை. ஜீவாவின் ‘யான்’ எப்படி? நாலு வரிக்குள் கோர்த்து கோர்த்து சொல்வதற்கு ஒரு சுவாரஸ்யமான கதையோடுதான் இந்த படம் துவங்குகிறது. வெட்டியாக ஊர் சுற்றுகிற ஒரு இளைஞன் ஏடிஎம் வாசலில் ஒருத்தியை பார்க்கிறான். ‘ஃபிகர் சோக்காக்கீதே’ என்று நினைக்கும் போதே அந்த ஏரியாவில் ஒரு பிரபல டெரரிஸ்ட் ஒருவனை என்கவுன்ட்டரில் போட முயல்கிறது போலீஸ். கலவரத்தில் அவளை காப்பாற்றி இழுத்துச் செல்லும் அவன், அப்படியே அவள் அழகில் சொக்கி விழ, அடுத்தடுத்த நாட்களில் இருவரும் சந்திக்க வேண்டி வருகிறது. …காதல்!
வேலையில்லா பட்டதாரிக்கு பெண் கொடுக்க, அப்பாவான நாசருக்கு தயக்கம். நடுவில் முறை மாமன் என்றொரு மாங்கா பீசும் கூடவே என்ட்ரியாகிறதா…. கோபித்துக் கொள்கிற ஹீரோ, அவள் ஞாபகமே நமக்கு வேணாம் என்ற முடிவோடு ஃபாரின் கிளம்புகிறார். பிஸ்கிஸ்தானோ கிஸ்கிஸ்தானோ… ஏதோ ஒரு கன்ட்ரி (ஃபுருட்) ஊர். ஏர்போர்ட்டில் இறங்கியவுடனே போதை பொருள் கடத்தியதாக இவனை பிடித்துக் கொள்கிறது போலீஸ். அந்த நாட்டு வழக்கப்படி முச்சந்தியில் வைத்து தலையை வெட்ட உத்தரவிடுகிறது நீதிமன்றம். கொடுமையான ஜெயில். கடுமையான மன உளைச்சல். எப்படி தப்பிக்கிறார் ஹீரோ என்பது க்ளைமாக்ஸ்.
யோவ்… ‘யான்’ கதைய சொல்லுன்னா ‘மரியான்’ கதையவா சொல்றே? என்று கோபப்படும் கோ(ப)பெருந்தேவர்களும், தேவிகளும், தனுஷ்-பார்வதியை எரேஸ் பண்ணிவிட்டு மறுபடியும் யோசனையை சுழல விட்டால், மண்டைக்குள்ளேயே ‘யான்’ ஷோ ரெடி! இருந்தாலும் இந்த படத்தை மொராக்கோ என்ற நாட்டில் எடுத்திருக்கிறார்கள். ஊர் சுற்றிப்பார்க்க ஆசைப்படுகிறவர்களும், ராதா மகள் துளசியை சுற்றி சுற்றி பார்க்க ஆசைப்படுகிறவர்களும் தாராளமாக பிளாக்கில் டிக்கெட் வாங்கிக் கொண்டாவது உள்ளே வரலாம். ஒளிப்பதிவாளர் புண்ணியத்தில் ரெண்டுமே ஃபுல் மீல்ஸ்!
‘டேய்… இன்னைக்கு ஒருத்தியை பார்த்தேண்டா’ என்று சம்பவத்தை ஒப்பன் பண்ணிவிட்டுவிட்டு, அதை விஷுவலாக ஜீவா சொல்கிற காட்சியிருக்கிறதே, அற்புதம்! ஒளிப்பதிவாளர் மனுஷ் நந்தனும், எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத்தும் மெனக்கெட்டு மிரள வைத்த காட்சி அது. அதற்கப்புறம் சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் அள்ளுவதற்கு? போகட்டும்… ஜீவா எப்படி? முதல் பாதி முழுக்க இளமையும் துடிப்புமாக பொளந்து கட்டுகிறார். டீஸன்ட்டான முறை பையனுடன், துளசி ஓட்டலில் பேசிக்கொண்டிருக்க, அங்கே திடீர் என்ட்ரி கொடுத்து ‘மச்சி ஒரு குவார்ட்டர் சொல்லேன்’ ரேஞ்சுக்கு கலாய்ப்பதை இளசுகள் கொண்டாடுவார்கள். வருங்கால மாமனாரை பார்க்கப் போகிற காட்சியில் கூட வாயில் சூயிங்கத்தை மென்று அதை நாசரின் போட்டோவுக்கு ஊட்டிவிடுகிற காட்சியெல்லாம் பெருசுங்க ஏரியாவை பொசுக்கி, இளசுங்க ஏரியாவை நொறுக்கி எடுக்கும்! செகன்ட் ஹாஃப் அபத்தமான திரைக்கதை என்றாலும், ஜீவாவின் நடிப்பும், கடின உழைப்பும் ஸ்கிரீனில் பரிபூரணமாக வெளிப்பட்டிருப்பதை சொல்லியே ஆக வேண்டும்.
குடிக்க மாட்டேன். அப்பிடியே சாப்பிடுவேன் என்று சொல்லி சொல்லியே வளர்ந்திருப்பார் போலிருக்கிறது துளசி! தள தள துளசி மரமாய் வளர்ந்து மொத்த தியேட்டருக்கும் ஏ.சி. போடுகிறது அவரது எக்கு தப்பான லுக்! ரம்பா, மந்த்ரா, மீனா, ஜெயமாலினி, சில்க் என்று அஷ்ட தேவதைகளையும் அள்ளி பூசிக் கொண்ட மாதிரி அப்படியொரு கனமான கவர்ச்சி விளையாடுகிறது துளசியிடம். நடிப்பு…? அந்த கருமத்தை விடுங்க. அதை பார்க்கவா துளசி படத்துக்கு போகணும்?
மும்பை போலீஸ் அதிகாரியாக ஜெயப்ரகாஷ். ஸ்கூல் வாத்தியார் கையில் ஏ.கே.47 கொடுத்த மாதிரி, இவரை வீதியில் இறக்கி சுட விட்டிருக்கிறார்கள். (சுடணும்னு முடிவு பண்ணியாச்சு. யாரு எங்க சுட்டா என்ன என்று நினைத்திருப்பார்கள் போல). நாசர் முன்னாள் மிலிடிரியாம். தம்பி… என்ன பண்றீங்க என்று ஜீவாவிடம் கேட்டு, அவரை கோபப்படுத்துவதை தவிர வேறொன்றும் அவருக்கு வேலையில்லை. தம்பி ராமய்யா வழக்கம்போல! சில காட்சிகள் வந்தாலும், ‘என்னை ஒருத்தரும் மறக்க முடியாதுல்ல?’ என்பதை போல ஒரு நடிப்பு.
வெளிநாட்டுக்கு போகிற யாரும் ஏஜென்டுகளிடம் ஜாக்கிரதையாக இருங்கள் என்பதுதான் இந்த படத்தின் ‘நாட்’ (ஆக இருக்கக்கூடும்) பொருத்தமான நபராக போஸ் வெங்கட்டையே நடிக்க வைத்திருக்கிறார்கள் அந்த ஏஜென்ட் கேரக்டரில் ! இவர் பாட்டுக்கு அந்த நாட்டுக்கு வந்து கோனார் தமிழ் உரையை சத்தம் போட்டு படிப்பதை போல எல்லாருடனும் தமிழிலேயே பேசுகிறார். ஜீவா மட்டுமென்ன? அவர் பாட்டுக்கு ஒரு கான்பிரன்ஸ் ஹாலில் நுழைந்து எல்லா வெளிநாட்டவர்களும் இருக்கிற இடத்தில் சாலமன் பாப்பையா போல தமிழ் சொற்பொழிவு நடத்துகிறார். இப்படி படத்தில் இணைக்கப்பட்டிருக்கும் காமெடி டிராக், அதுவரையான கவலைகளை விழுந்து விழுந்து மறக்கடிக்கிறது.
நாளைக்கு உசிரோடு இருப்போமா என்று அச்சப்படுகிற ஒருவனுக்கு இந்தியா திரும்ப ஒரு வழி கிடைத்தால் பின்னங்கால் பிடறியில் பட ஓடி வர வேண்டியதுதானே? அதை விடுத்து சிவனே என்றிருக்கிற வில்லனின் ஏரியாவுக்கே போய் உதார் விட்டு உப்பு கண்டமாகிறார் ஜீவா. ‘உன்னயை அங்கேயே பொலி போட்ருனுக்கும்டீய்…’ என்று தியேட்டரில் கூக்குரலிடுகிறார்கள் ரசிகர்கள்.
ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பாடல்கள் ஏற்கனவே கேட்ட சாயலில் இருந்தாலும், படத்தோடு கேட்கும்போது தனி மயக்கம் ஏற்படுத்தாமலில்லை. குறிப்பாக கபிலன் வரிகளில் ‘ஆத்தங்கரை ஓரத்தில்…’ பாடல். பின்னணி இசையிலும் நிறைவு. படத்தில் ஒரு விசிட்டிங் கார்டு பறந்து போகிற காட்சி வருகிறது. பாகவதர் காலத்தில் கூட இவ்வளவு நீண்….ட பொறுமையை சோதிக்கிற காட்சி இருந்தததாக நினைவு இல்லை. எடிட்டிங் ஸ்ரீகர் பிரசாத். என்னாச்சு சார் உங்களுக்கு?
வான் வழித் தாக்குதல் கேள்விப்பட்டிருக்கோம். இது தமிழ்சினிமாவே அலறும் ‘யான்’ வழி தாக்குதல்?!