வருடா வருடம் கலர்ஸ் டி.வி.யில் நடைபெரும் மிகப் பிரபலமான தொடர், 'பிக்பாஸ்'. அதன் எட்டாவது பாகம், செப்டம்பர் 21ம் தேதி முதல் ஒளிபரப்பாகத் துவங்கி உள்ளது. இதனை நான்காவது முறையாக தொகுத்து வழங்குகிறார், சல்மான் கான். இந்த நிகழ்ச்சியைப் பற்றியும், அதன் விதிமுறைகள் பற்றியும் ஒரு சிறப்புப் பகிர்வு...
தொடக்கம்
1999-ல் 'பிக் பிரதர்ஸ்' எனத் தொடங்கப்பட்ட நெதர்லேண்ட் நிகழ்ச்சியின் இந்தி வெர்ஷன் தான் இந்த 'பிக் பாஸ்'. குறிப்பிட்ட எண்ணிக்கையில் சில பிரபலங்களைத் தேர்ந்தெடுத்து அவர்களை வெளி உலகிலிருந்து தனிமைப்படுத்துவதற்கு என்றே உருவாக்கப்பட்ட வீட்டில் தங்க வைப்பார்கள். அந்த நபர்களின் எண்ணிக்கையும் அவர்கள் தங்கியிருக்கும் நாட்களின் எண்ணிக்கையும் ஒவ்வொரு முறையும் மாறுபடும். ஒவ்வொரு வாரமும் இந்த குழுவிலிருந்து யார் வெளியேற வேண்டும் என்பது, நிகழ்ச்சியைப் பார்க்கும் நேயர்களின் வாக்குகள் மூலம் முடிவு செய்யப்படும். நிகழ்ச்சியின் இறுதியில் மூன்று பேர் மட்டும் மீதமிருப்பார்கள். அவர்களில் யார் வெல்லப் போகிறார்கள் என்பதும் நேயர்களின் வாக்குகள் மூலம் முடிவு செய்யப்படும். இதில் கலந்து கொள்பவர்களின் ஒவ்வொரு அசைவையும் கவனித்து, தேவைப்படும் போது சில அறிவிப்புகளையும் 'பிக் பாஸ்' என அழைக்கப்படும் நபர் தனது குரல் வழியே வழங்குவார்.
விதிமுறைகள்:
பொதுவாக இந்த நிகழ்ச்சியின் விதிமுறைகளை, நிகழ்ச்சி ஆரம்பிக்கும்போதே கூறுவார்கள். அதில் சில விதிகள் மட்டும் எப்போதும் உபயோகிக்கப்படும்.
1. இதில் கலந்து கொள்ளும் நபர்கள் தங்களின் சகாக்களுடன் இந்தி தவிர வேறு எந்த மொழியிலும் பேசக்கூடாது.
2. கோபப்பட்டு வீட்டில் உள்ள எந்தப் பொருட்களுக்கும் சேதம் ஏற்படுத்தக்கூடாது.
3. பகல் நேரத்தில் உறங்க அனுமதி கிடையாது.
4. அவர்களுக்கான வெளியேறும் நேரம் வரும் வரை வீட்டைவிட்டு வெளியேறக் கூடாது.
5. சில நேரங்களில் விதிகளை மீறுதல், வேறு ஏதாவது முக்கியமான பிரச்சனை வரும் போது, அதற்குக் காரணமான அந்த நபர், நேயர்களின் வாக்கு இல்லாமலேயே வெளியேற்றப்படுவார்.
போட்டியாளர்கள்:
1. அரசியல் சார்ந்த நபர்கள்
2. முன்னாள் ரியாலிட்டி ஷோ பங்கேற்பாளர்
3. LGBT (Lesbian, Gay, Bisexual, Transgender) வகையில் உள்ள நபர்
4. அழகிப் போட்டியில் வெற்றி பெற்ற நபர்கள்
5. குற்ற செயலில் ஈடுபட்ட நபர்கள்
6. கவர்ச்சி நடிகைகள்
7. சர்வதேச நட்சத்திரங்கள்
8. முன்னேறிக் கொண்டிருக்கும் மாடல்கள்
9. பல திறமைகள் கொண்ட நபர்கள்
10. பாடகர்/ பாடகி
11. விளையாட்டு துறை சார்ந்த நபர்கள்
12. திரைப்பட நட்சத்திரங்கள்
13. நகைச்சுவை நடிகர்கள் (டிவி, நாடகம், சினிமா)
இந்த பதிமூன்று வகையில் போட்டியாளர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இதில் சில வகையில் ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் தேர்வு செய்யப்படலாம். சில நேரங்களில் ஒரு நபர் கூட தேர்வு செய்யப்படாமல் போகலாம்.
வீடு:
இந்த நிகழ்ச்சி முழுவதும் ஒரு வீட்டுக்குள்ளேயே நடைபெறும். எனவே ஒவ்வொரு முறையும் நிகழ்ச்சிக்காக வேறு வேறு இடங்களில் இந்த வீடு அமைக்கப்படும். படுக்கையறை, கழிவறை, தோட்டம், நீச்சல்குளம், உடற்பயிற்சிக்கூடம் என ஒரு ஆடம்பர வீட்டின் எல்லா அம்சங்களும் இருந்தாலும், நிகழ்ச்சிக்காகப் பிரத்யேகமான சில ஏற்பாடுகளும் வீட்டில் செய்யப்பட்டு இருக்கும். உதாரணதிற்கு, வீட்டில் தொலைக்காட்சி, தொலைபேசி, இணையவசதி, கடிகாரம், காகிதம், பேனா போன்ற எந்த விஷயமும் இருக்காது.
இவை தவிர ஓர் உரையாடல் அறை இருக்கும். 'பிக் பாஸ்' எனும் திரைமறைவு நபர் போட்டியாளர்களில் யாரையும் எதாவது ஒரு தலைப்பின் கீழ் உரையாட அழைக்கலாம். நேயர்களின் வாக்கெடுப்பு போன்ற நிகழ்வுகளும் இந்த அறையில் நடைபெரும்.
ஹைலைட்ஸ்:
* அதிகபட்சமாக இந்த நிகழ்ச்சி 105 நாட்களும் குறைந்த பட்சமாக 84 நாட்களும் நடைபெற்றிருக்கிறது.
* ஒரு கோடி வரை பரிசுத்தொகையாக வழங்கப்பட்டிருக்கிறது.
* ஜேட் மற்றும் பண்ட்டி என்பவர்கள் 2 நாட்களில் இந்த நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள்.
* அர்ஷட் வர்ஷி, ஷில்பா, ஷெட்டி, அமிதாப் பச்சன், சல்மான்கான், சன்ஜய் தத் போன்றவர்கள் இதன் முந்தைய 5 பாகங்களை தொகுத்து வழங்கியுள்ளனர்.
* 2006 மற்றும் 2007 ஆகிய வருடங்களில் சோனி தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பப்பட்ட இந்த நிகழ்ச்சி 2008 முதல் கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பப்படுகிறது.
மிகப் பிரபலமான ரியாலிட்டி ஷோவுக்கே உரிய முக்கிய அடையாளமாக பல சர்ச்சைகளும் இதன் மூலம் ஏற்பட்டிருக்கிறது. ஆனாலும், இந்த நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். பல பிரச்சனைகள் ஏற்பட்டாலும் அதையும் கடந்து தொடரின் 8-ம் பாகமும் தொடங்கிவிட்டது. இதில் என்ன பிரச்சனை வரப்போகிறது, வெற்றியாளர் யார் என்ற கேள்விகளுக்கான சுவாரஸ்யமான விடையை பொறுத்திருந்து பார்ப்போம்.