ஒரு காலத்தில் ஏதோ ஒரு சில பெண்களுக்கு இருந்த சூலக நீர் கட்டி பிரச்னை தற்போது பெரும்பாலான பெண்களுக்கு உள்ள பிரச்னையாகிவிட்டது.
சூலக நீர் கட்டி என்பதை ஆங்கிலத்தில் பாலிசிஸ்டிக் ஓவேரியன் சின்ட்ரோம் என்று கூறுகிறார். ஓவரி என்பது பெண்களின் சூலகமாகும். இதில் உருவாகும் முட்டைகள்தான் கருவாகி கருப்பையில் குழந்தையாக வளருகிறது. இந்த சூலகத்தில் நீர் நிரம்பிய ஒன்று அல்லது அதிகமான கட்டிகள் இருப்பதைத்தான் சூலக நீர் கட்டி என்கிறோம்.
இந்த பிரச்னை பொதுவாக நிறைய பெண்களுக்கு இருந்தாலும், இவற்றில் சில பெரிதாக எந்த பிரச்னையையும் செய்யாமலே இருந்து விடுகிறது. குழந்தைப் பேற்றின் போது தானாகவே மறைந்துப் போகும் நீர்க்கட்டிகளும் உள்ளன.
சில பெண்களுக்கு இந்த நீர் கட்டிகளால் மாதவிலக்கில் தாமதம், குழந்தைப் பேறில் தாமதம் போன்றவை ஏற்படுகிறது.
இது மட்டுமல்லாமல், உடல் எடை அதிகரித்தல், முகத்தில் பரு போன்றவையும் இதன் அறிகுறிகளாக உள்ளன.
இந்த நீர்க்கட்சிகளைப் பொருத்த வரை எளிதான சிகிச்சை முறைகள் உள்ளன. மருந்து மாத்திரைகளிலேயே குணப்படுத்தும் கட்டிகளும் உள்ளன. சில சிறிய அறுவை சிகிச்சை மூலமாகக் குணப்படுத்தும் கட்டிகளும் உள்ளன. ஆனால், எவ்வளவு விரைவாக இதற்கு சிகிச்சை எடுக்கிறோமோ அவ்வளவுக்கும் எளிதாக நிவாரணம் பெறலாம்.
மாதவிடாய் தள்ளிப் போவது, ஒரு வருடத்துக்கு 8க்கும் குறைவான மாதவிடாய் போன்றவை இருக்கும் இளம் பெண்களை உடனடியாக மருத்துவரிடம் காண்பித்து சிகிச்சை பெறுவது பிற்காலத்தில் ஏற்படும் மலட்டுத் தன்மையை தவிர்க்க உதவும்.
எனினும், இந்த நீர்க்கட்டி இருந்தாலே மலட்டுத்தன்மை ஏற்படும் என்பதை கூற முடியாது. நீர்க்கட்டிகள் இருந்தும் எந்த சிக்கலும் இன்றி குழந்தைப் பேறு உண்டானவர்களும் பலர் உள்ளனர். எனவே, இது பற்றி பயப்படாமல், இது ஒரு சிறிய பிரச்னை என்பதை அறிந்து அதற்கேற்ற சிகிச்சையை பெறுவது சிறந்தது.