Wednesday, 22 October 2014

Tagged Under: , ,

‘கத்தி’ வெற்றி பெற்றுதா...? - திரைவிமர்சனம்..!

By: ram On: 19:15
  • Share The Gag
  • கொல்கத்தா சிறையில் கைதியாக இருக்கும் கதிரேசன் (விஜய்) அங்கிருந்து தப்பித்து சென்னைக்கு வருகிறார். சென்னையிலுள்ள தனது நண்பன் சதீஷை உதவியுடன் பாங்காக் தப்பித்து செல்ல முயற்சி செய்கிறார். சதீஷின் உதவியுடன் பாங்காக் செல்ல விமான நிலையம் வரும் கதிரேசன், அங்கு நாயகி சமந்தாவை பார்க்கிறார். பார்த்ததுமே அவள் மீது காதல் வயப்படுகிறார். அவரிடம் பேசி செல்போன் நம்பரை வாங்கி கொள்கிறார். அத்துடன் பாங்காக் செல்லும் முடிவையும் தள்ளி வைக்கிறார்.

    சமந்தா கொடுத்த செல்போன் நம்பருக்கு போன் செய்து பார்க்கும் கதிரேசன் ஏமாற்றம் அடைகிறார். அந்த அழைப்பு வேறு யாருக்கோ செல்கிறது. அவரை தேடி கண்டுபிடிக்க நண்பனுடன் சேர்ந்து அலைகிறார் கதிரேசன். மறுமுனையில் சிறையில் இருந்து தப்பித்து சென்ற கதிரேசன் சென்னையில் தான் இருக்கிறார் என்று அறிந்த கொல்கத்தா போலீஸ் அவரை பிடிக்க சென்னை வருகிறது.

    இந்நிலையில் ஒரு நாள் மர்ம கும்பல் ஒன்று துப்பாக்கியால் ஒருவரை சுடுகிறது. துப்பாக்கியால் தாக்கப்பட்ட அவரை அருகில் சென்று பார்க்கிறார் கதிரேசன். அவர் பார்ப்பதற்கு தன்னை போல் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைகிறார். உடனே மருத்துவமனைக்கு அவரை அழைத்து சென்று சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்கிறார். கொல்கத்தா போலீஸ் கதிரேசனை தேடி மருத்துவமனைக்கு வருகிறது. அடிபட்டவன் தன்னைப்போல் இருப்பதை பயன்படுத்தி கொண்டு, தன்னுடைய அடையாளங்களை அடிபட்டவன் மீது வைத்துவிட்டு தான் தான் அடிப்பட்டவன் என்று காண்பித்து விட்டு அங்கிருந்து கதிரேசன் தப்பித்து விடுகிறார்.

    அப்போது மாவட்ட கலெக்டர் கதிரேசனை பார்த்து ஜீவானந்தம் என்று அழைக்கிறார். அப்போது தான் அடிபட்டவன் பெயர் ஜீவானந்தம் என்று தெரிகிறது. கலெக்டர் கதிரேசனை ஒரு முதியோர் இல்லத்திற்கு அழைத்துச் செல்கிறார். அங்குள்ள முதியோர்கள் கதிரேசனை ஜீவானந்தம் என்று நினைத்துக் கொண்டு அவரை வரவேற்கிறார்கள். அப்போது 25 லட்சம் மதிப்புள்ள டி.டி.யை கதிரேசனிடம் கொடுக்கிறார் கலெக்டர்.

    அதை வைத்துக் கொண்டு வெளிநாட்டுக்கு சென்று விடலாம் என்று யோசிக்கிறார் கதிரேசன். அப்போது முதியவர் ஒருவர் அந்த டி.டி.யை கிழித்தெரிகிறார். எதற்காக இப்படி செய்கிறார் என்று தெரியாமல் முழிக்கும் கதிரேசனிடம், மீண்டும் ஒரு வாரத்தில் இந்த தொகையை தருகிறேன் என்று கூறிவிட்டு செல்கிறார் கலெக்டர். இந்தப் பணம் கையில் கிடைக்கும் வரை முதியோர் இல்லத்திலேயே தங்குகிறார் கதிரேசன்.

    இந்நிலையில் பெரிய தொழில் நிறுவனம் நடத்தும் நீல் நிதின் முகேசின் ஆட்கள் முதியோர் இல்லத்தில் தங்கும் கதிரேசனை அழைத்துக் கொண்டு போய் மிரட்டுகிறார்கள். தன் மீது போடப்பட்டிருக்கும் வழக்குகளை எல்லாம் வாபஸ் பெற வேண்டும் என்றும் அதற்காக ஒரு தொகை தருவதாகவும் கூறுகிறார்கள். இல்லையென்றால் முதியோர்களை கொன்று விடுவதாகவும் மிரட்டுகிறார்கள். இதெல்லாம் எதற்கு நடக்கிறது என்று புரியாத கதிரேசன், பணம் வருவதால் பெரியோர்களை எல்லாம் கொல்ல வேண்டாம், இதற்கெல்லாம் சம்மதிக்கிறேன் என்று கூறி 5 கோடி ரூபாயை முன்பணமாக வாங்கி செல்கிறார்.

    பணத்தை வைத்து வெளிநாட்டு செல்ல முடிவெடுக்கும் கதிரேசனுக்கு முதியோர் இல்லத்தில் இருந்து போன் வருகிறது. ஜீவானந்தத்திற்கு ஒரு விருதும் பணமும் தருவதாக கூறுகிறார்கள். விருதும் பணமும் வருவதால் அதற்கும் ஆசைப்பட்டு அங்கு செல்கிறார். அங்கு ஜீவானந்தம் யார் என்பதைப் பற்றிய வீடியோ ஒன்றை காண்பிக்கிறார்கள். அந்த வீடியோவை பார்க்கும் கதிரேசன், திருநெல்வேலி மாவட்ட விவசாயிகளுக்காக பாடுபட்டவர் என்றும், அங்குள்ள மக்கள் விவசாய பூமியை காப்பாற்ற தங்களது உயிரை விட்டார்கள் என்றும் தெரிந்துக் கொள்கிறார்.

    ஜீவானந்தம் பற்றி செய்திகள் தெரிந்த பின் மனம் மாறும் கதிரேசன், பணத்தையெல்லாம் வெறுத்து, ஜீவானந்தமாக மக்களுக்காக போராடி நீல் நிதினிடம் இருந்து விவசாய நிலத்தை பெற்று விவசாய மக்களுக்கு கொடுத்தாரா? உண்மையான ஜீவானந்தம் என்ன ஆனார்? என்பதே மீதிக்கதை.

    படத்தில் கதிரேசன் கதாபாத்திரத்தில் யதார்த்தமான நகைச்சுவை நடிப்பில் அனைவரையும் கவர்கிறார் விஜய். பிற்பாதியில் விவசாயிகளின் வலிகளையும், வேதனைகளையும் அறிந்து செண்டிமெண்ட் கலந்து விவசாயியாகவே வாழ்ந்திருக்கிறார். ஜீவானந்தம் கதாபாத்திரத்தில் பொறுப்பான பட்டதாரியாகவும், தன் மண்ணை காப்பாற்ற வேண்டும் என்னும் விவசாயியாகவும் அழுத்தமாக மனதில் பதிகிறார். பாடல் காட்சிகளில் அழகாகவும், சிறந்த நடனத்தையும் வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக அவர் பாடிய செல்பிபுள்ள பாடலில் திறமையாக செய்திருக்கிறார்.

    கதாநாயகனுக்கு அதிகம் உள்ள கதையில் சமந்தாவிற்கு வாய்ப்பு குறைவாக அமைந்துள்ளது. இருந்தாலும் பாடல் காட்சிகளில் ரசிகர்களை சந்தோஷப்படுத்தியிருக்கிறார். நண்பனாக வரும் சதீஷ், நகைச்சுவைக்கு வாய்ப்பு குறைவாக இருந்தாலும் குணச்சித்திர கதாபாத்திரத்தில் படம் முழுக்க வருகிறார். கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். வில்லனாக வரும் நீல் நிதின் பார்ப்பதற்கு அழகாகவும், தொழில் அதிபர் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாகவும் பொருந்தியிருக்கிறார்.

    அனிருத் இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட். பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார். ஜார்ஜ் சி வில்லியம்சின் ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்திருக்கிறது. பாடல் காட்சிகளையும், சண்டைக் காட்சிகளையும் நம் கண்களுக்கு விருந்தாக அளித்திருக்கிறார்.

    விவசாயிகளுக்கும், அவர்களை அழிக்க நினைக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கத்தியை வைத்து குத்தி காட்டியிருக்கிறார் இயக்குனர் முருகதாஸ். நாட்டிற்கு விவசாயம் என்பது எவ்வளவு முக்கியம் என்பதையும், நாட்டின் முதுகெலும்பே விவசாயம் தான் என்பதையும் மக்களுக்கு எடுத்து சொல்லும் விதமாக படத்தை இயக்கிய முருகதாசை வெகுவாக பாராட்டலாம். படத்தில் சில லாஜிக் மீறல்களும், குறைகூறுவதையும் தவிர்த்திருக்கலாம்.

    மொத்தத்தில் ‘கத்தி’ கூர்மை.

    0 comments:

    Post a Comment