Monday, 30 September 2013

மாற்றுத் திறனாளிகளுக்கு தனியாக சிறப்பு டிஇடி தேர்வு : ஜெயலலிதா

By: ram On: 23:35
  • Share The Gag

  • பி.எட் படித்துப் பணியில்லாமல் இருக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு எளிதில் பணி கிடைக்க ஏதுவாக, தனியாக ஒரு சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும். இத்தேர்வில் தகுதி பெறும் பி.எட் பட்டதாரிகள் தற்போதுள்ள பின்னடைவு காலிப் பணியிடங்களிலும் மற்றும் இனிமேல் ஏற்படக் கூடிய காலிப் பணியிடங்களிலும் பணியமர்த்தப்படுபவர்.”என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.




    sep 30 jayalalitha
    இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “முதல் முறையாக தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு, மாற்றுத் திறனாளிகளுக்கான நலத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த ஏதுவாக, மாற்றுத் திறனாளிகளுக்கென தனி இயக்ககம் ஒன்றை 1993 ஆம் ஆண்டு துவக்கியதோடு, மாற்றுத் திறனாளிகளுக்கான விரிவான மாநிலக் கொள்கையையும் வெளியிடச் செய்தேன்.


    2011ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர், இதனைத் தொடர்ந்து, மன வளர்ச்சி குன்றியவர்கள், கடுமையாக உடல் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் தசைச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோருக்கான மாதாந்திர உதவித் தொகை 500 ரூபாயிலிருந்து 1000 ரூபாயாக உயர்த்தப்பட்டது; அரசு சிறப்புப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் சிறப்புப் பள்ளிகளில் தங்கிப் பயிலும் மாணவ, மாணவியருக்கு வழங்கப்படும் உணவூட்டு மானியம் 450 ரூபாயிலிருந்து 650 ரூபாயாக அதிகரிக்கப்பட்டது;



    ஒன்றாம் வகுப்பு முதல் பட்ட மேற்படிப்பு மற்றும் தொழிற் கல்வி பயிலும் மாற்றுத் திறனாளி மாணவ மாணவியருக்கு வழங்கப்பட்டு வந்த உதவித் தொகை இரட்டிப்பாக்கப்பட்டது; பார்வையற்ற மாணவர்களுக்கு தேர்வு எழுத உதவும் உதவியாளர்களுக்கான உதவித் தொகை 100 ரூபாயிலிருந்து 250 ரூபாயாக உயர்த்தப்பட்டது என சொல்லிக் கொண்டே போகும் அளவுக்கு பல்வேறு சலுகைகள் மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.



    அண்மையில், அரசுப் பேருந்துகளில் கட்டணமின்றி பயணம் செய்யும் சலுகையை மாற்றுத் திறனாளிகளின் துணைவியாருக்கு விரிவுபடுத்துதல்; மூன்று சக்கர மோட்டார் வாகனங்களுக்கான 14.5 விழுக்காடு மதிப்புக் கூட்டு வரியினை முற்றிலும் நீக்குதல்; 10,000 ரூபாய் மதிப்புள்ள அதிக திறன் வாய்ந்த காதொலிக் கருவிகளை வழங்குதல்; பூந்தமல்லியில் உள்ள பார்வையற்றோர் பள்ளியினை புதுப்பித்தல்; எழுத்துக்களை பெரிதாக்கி பார்க்கக் கூடிய கண்ணாடியை வழங்குதல்; 6 வயதுக்குட்பட்ட பார்வைத் திறன் குறைபாடுடைய குழந்தைகளுக்கு ஆரம்ப பயிற்சி நிலையங்கள் அமைத்தல்; பராமரிப்பு தொகை பெறுவதற்கான குறைபாட்டின் விழுக்காட்டினை 60 லிருந்து 45 ஆக குறைத்தல்; மாற்றுத் திறனாளிகளுக்கென மத்திய கூட்டுறவு வங்கிகளிலிருந்து வழங்கப்படும் கடனுக்கான வட்டியை அரசே செலுத்துதல் என பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளேன்.



    பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் தங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்; பார்வையற்றோருக்கான சிறப்புப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை பார்வையற்றவர்களை கொண்டு விரைவில் நிரப்பிட வேண்டும் என்பன உள்ளிட்ட சில கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத் திறனாளிகள் கடந்த சில நாட்களாக போராட்டம் நடத்தி வந்தனர். இதனை அறிந்தவுடன், அரசு உயர் அதிகாரிகளையும், சமூக நலத் துறை அமைச்சரையும் அழைத்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த ஆணையிட்டிருந்தேன். அவர்களும் இது குறித்து மூன்று கட்ட பேச்சுவார்த்தையை நடத்தி இருக்கிறார்கள்.


    இந்தச் சூழ்நிலையில், இன்று தலைமைச் செயலகத்தில் எனது தலைமையில் ஒரு விரிவான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தின் கோரிக்கைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. விரிவான கலந்துரையாடலுக்குப் பின்னர், மாற்றுத் திறனாளிகளின் நலனைக் கருத்தில் கொண்டு கீழ்க்காணும் நடவடிக்கைகளை எடுக்குமாறு நான் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.



    இதன்படி, பி.எட் படித்துப் பணியில்லாமல் இருக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு எளிதில் பணி கிடைக்க ஏதுவாக, தனியாக ஒரு சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும். இத்தேர்வில் தகுதி பெறும் பி.எட் பட்டதாரிகள் தற்போதுள்ள பின்னடைவு காலிப் பணியிடங்களிலும் மற்றும் இனிமேல் ஏற்படக் கூடிய காலிப் பணியிடங்களிலும் பணியமர்த்தப்படுபவர்.



    இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் பார்வையற்றவர்களுக்கு, மாவட்டங்களில் உள்ள மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம் வாயிலாக சிறப்புப் பயிற்சி வழங்க பள்ளிக் கல்வித் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.
    பார்வையற்றவர்களுக்கு தேர்வு எழுத உதவும் உதவியாளர்களுக்கு சிறப்புப் பயிற்சி வழங்கவும் பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கை எடுக்கும்.
    முதுகலைப் பட்டம் பெற்ற 200 பார்வையற்றவர்கள் தற்போதுள்ள பின்னடைவு காலிப் பணியிடங்கள் மற்றும் இனிமேல் ஏற்படக் கூடிய காலிப் பணியிடங்களில் அவர்தம் முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வில் தெரிவு செய்யப்படின் பணியமர்த்தப்படுவர்.


    தேசிய தகுதி தேர்வு மற்றும் மாநில அளவிலான தகுதித் தேர்வு தேர்ச்சி பெற்ற 100 முதுகலைப் பட்டம் பெற்ற பார்வையற்றவர்களை தற்போது கல்லூரிகளிலுள்ள பின்னடைவு காலிப் பணியிடங்கள் மற்றும் இனிமேல் வரும் காலிப் பணியிடங்களில் உதவிப் பேராசிரியர்களாக பணியமர்த்த ஆசிரியர் தேர்வு வாரியம் நடவடிக்கை எடுக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

    வசீகரிக்கும் கண்கள் வேண்டுமா?

    By: ram On: 23:13
  • Share The Gag

  • காலையில் எழுந்தது முதல் இரவு படுக்கைக்குச் செல்லும் வரை கண்களின் பயன்பாடு அபரிமிதமானது. கணினியில் பணிபுரிவது, புத்தகம் வாசிப்பது, தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளைப் பார்ப்பது என உறங்கும் நேரம் தவிர ஓய்வு கொடுக்காமல் கண்கள் பணியாற்றிக்
    கொண்டிருக்கின்றன.



    இதனால் கண்களுக்கு சோர்வு ஏற்படுகிறது. இந்த சோர்வினால் கண்களுக்கு கீழே கருவளையமும், நாளடைவில் சுருக்கத்தையும் ஏற்படுத்துகின்றன. எனவே கண்களை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க தினந்தோறும் பத்து நிமிடம் ஒதுக்கவேண்டும் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள். அவர்கள் கூறும் ஆலோசனைகள் உங்களுக்காக..




    sep 30 health eyes
     

    கண் எரிச்சலைப் போக்க


    கோடைகாலத்தில் உடலில் சூடு அதிகரித்து கண்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தும். இதனைத் தவிர்க்க தினமும் அதிகாலையில் குளித்து விடுவது நல்லது. அதிகாலையில் குளிப்பது கண்களுக்கு புத்துணர்ச்சி தருவதோடு உடலுக்கு மேலும் அழகு சேர்க்கும்.


    தலையில் தேங்காய் எண்ணெய் தேய்த்து விரல்நுனியால் நன்றாக மசாஜ் செய்யவும். இதனால் உடலுக்கு அதிக குளிர்ச்சி கிடைக்கும். உள்ளங்கையில் தேங்காய் எண்ணெயை ஊற்றி அதனை மோதிர விரலால் தொட்டு கண்களை சுற்றி வலதுபுறமாக சுற்றி மசாஜ் செய்யவும். இது ரத்த ஓட்டத்தை அதிகரித்து சோர்வை போக்கும்.


    புத்துணர்ச்சி பெற


    வெயிலில் கண்கள் கலங்கி மிகவும் சோர்வாக உள்ளதா? சிறிதளவு பன்னீரில் பஞ்சை நனைத்துக் கண்களை மூடிக் கொண்டு மேல் பாதியில் அப்படியே பலமுறை ஒத்தி எடுக்க வேண்டும். பிறகு இப்படியே கண்களை மூடியபடி பத்து நிமிடங்கள் இருக்க வேண்டும். இதற்குப் பிறகு கண்கள் புது ஒளி பெற்றுவிடும்.


    வெள்ளரிக்காயை துருவி மெல்லிய துணியில் கட்டிக்கொள்ளவும். அதனை கண்களை மூடிக்கொண்டு மேலே வைத்து ஒற்றி எடுக்கவும். கண்கள் புத்துணர்ச்சி பெறும்.


    கருவளையம் போக்க


    வெயிலில் வெளியே போய்விட்டு வரும்போது கண்களைச் சுற்றிக் கருவளையம் தோன்றுவது தவிர்க்க முடியாதது. கறிவேப்பிலையை இடித்து சாறு பிழிந்து கொஞ்சம் வெண்ணெயை எடுத்து அதோடு கலந்து கண்களைச் சுற்றி பூசினால் கருவளையம் மறைந்துவிடும்.


    கண்கள் குளிர்ச்சி பெற



    உள்ளங்கால்களிலும், காலின் கட்டை விரல்களிலும் தேங்காய் எண்ணெய் அல்லது விளக்கெண்ணெய் தேய்த்து வந்தால் கண்களுக்கு பொலிவு கிடைக்கும், உடலும் குளிர்ச்சிபெறும்.


    சந்தனம், ஜாதிக்காய் இரண்டையும் ஒன்றாக சேர்த்து அரைத்து இரவில் படுக்கும் முன் கண்களைச் சுற்றி தடவிக்கொண்டு தூங்கினால் கண்கள் குளிர்ச்சிபெறும்.


    வசீகர கண்கள்


    கண் வசிகரத்திற்கும், அழகிற்கும் ஆரஞ்சுப் பழம் பயன்படுகிறது. சிறிதளவு ஆரஞ்சு ஜூஸை ஃபரீஸரில் வைத்து அது ஐஸ் கட்டி ஆனவுடன், அதை மெல்லிய வெள்ளைத் துணியில் கட்டி, கண்ணுக்குமேல் ஒத்தி எடுங்கள். ஒரு நாள் விட்டு ஒரு நாள் இப்படி செய்து வர, கண்கள் பளிச் ஆகிவிடும். வாரத்திற்கு மூன்றுநாட்கள் என தொடர்ந்து கண்கள் வசிகரமாக மாறும்.மேலும் தூக்கமின்மையால் கண்களில் ஏற்படும் சோர்வை நீக்கி கண்களை பிரகாசமாக்கும் தன்மை ஆரஞ்சு பழத்திற்கு உண்டு.


    ப்ளீச் வேண்டாமே


    முகத்திற்கு ப்ளீச் செய்யும் போது கண்களுக்கு அடியில் ப்ளீச் செய்யக் கூடாது. அப்படி செய்வதால் அப்பகுதியில் சுருக்கம் ஏற்பட அதிக வாய்ப்புண்டு. கண்களுக்கு பயன்படுத்தும் மேக்கப் சாதனங்கள் அனைத்தும் தரமானவையாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். அவற்றை கண்களில் பயன்படுத்தும் போது மிகவும் கவனமாக செய்ய வேண்டும்.


    உங்கள் கண்கள் எடுப்பாக தெரிய வேண்டுமெனில், டிரஸ்சிற்கு ஏற்ற நிறத்தில் ஐ ஷேடோவை பயன்படுத்துங்கள். இரண்டு மூன்று கலர்களை கலந்தும் பயன்படுத்தலாம்.பெரிய கண்கள் உடையவர்கள் டார்க் கலரில் ஐ ஷேடோ போட்டால், கண்கள் சிறியதாக தெரியும். ஐ லைனர் பயன்படுத்தும் போது, சிறிய கண்கள் உள்ளவர்கள் மஸ்காரா போட்டால், கண்கள் பெரிதாகவும், அழகாகவும் இருக்கும். பெரிய கண்கள் உடையவர்கள் அடர்த் தியாகவும், சிறிய கண்கள் உடையவர் கள் மெல்லியதாகவும் போட வேண்டும்.

    பிள்ளையார் சுழி! காரணம்!

    By: ram On: 22:05
  • Share The Gag




  • எதை எழுத ஆரம்பித்தாலும் முதலிலே பிள்ளையார் சுழி போட்டுவிட்டுத்தான் ஆரம்பிக்கிறோம். பெரிய காவியமாகத்தான் இருக்கவேணும் என்றில் லை; ஒரு போஸ்ட் கார்டானாலும் சரி, கடை சாமான் லிஸ்டானாலும் சரி, முதலில் பிள்ளையார் சுழி போட்டு விட்டுத்தான் எழுத ஆரம்பிக்கிறோம்.  எழுதுவது மட்டுமில்லாமல் எந்தக் காரியமானாலும் ஆரம்பிக்கிற போது அது விக்நமில்லாமல் பூர்த்தியாவதற்கு மஹாகணபதியைக் கொண்டு வந்து தான் ஆகணும். அவரைக் ஸ்மரிக்காமல் எந்தக் காரியமுமே இல்லையானாலும், இந்த எழுத்துக் காரியத்தில் அவரை ஸ்மரிக்கிறோம் என்பது  Written proof எழுத்து மூல நிரூபணமாகவே பிள்ளையார் சுழியில் தெரிகிறது.

    பின்னாடி நாம் எழுதுகிற விஷயம் ‘சுழித்து’ப் போகாமலிருப்பதற்காக முன்னாடி பிள்ளையார் சுழி போட்டு விடுகிறோம். பிள்ளையார் சுழி போடாமல் ‘ஓம்’ போடு கிறவர்களும் கிரந்தம், தமிழ் இரண்டிலுமே அந்த ஓமுக்கும் சுழித்தே ஆரம்பிக்க வேண்டியிருக்கிறது. அது மட்டுமில்லை, இந்த ப்ரணவ ஸ்வரூபமும் பிள்ளையார்தானே? சுழி என்பது வளைசல்; ‘வக்ரம்’ என்பார்கள். பிள்ளையாரின் தும்பிக்கை நுனி வளைந்து சுருட்டிக் கொண்டிருக்கிறது. அதனால் ‘வக்ரதுண்டர்’ என்றே  அவருக்கு ஒரு பேர். பிள்ளையார் சுழி போடுவதில் பாதியாக இருக்கிற வளைசல் பூர்ணமாகிவிட்டால் முழு வட்டம். பூலோகமும், பல லோகங்களும்,  நக்ஷத்ர மண்டலங்கள் அடங்கியுள்ள பிரம்மாண்டமும் எல்லாமே வட்டமானவைதான். ‘அண்டம்’ என்றாலே முட்டை என்றுதான் அர்த்தம். முட்டை வ ட்ட வடிவந்தானே?

    இந்தப் பூர்ணரூபத்தையே ஸைஃபருக்கும் சொல்வதுதான் ஆச்சரியம்! ‘பரீக்ஷையில் கோழி முட்டை’என்கிறோம். ‘பூர்ணமும் பிள்ளையார்தான், சூன் யமும் பிள்ளையார்தான். உள்ளது அல்லது எல்லாம் பரமாத்மாதான்’ என்கிற மஹா தத்துவத்தையே சுழி காட்டுகிறது. காரியத்தை ஸைஃபர் பண் ணிக்கொண்டு வருகிறவனை, ‘‘என்னடா சுழி!’’ என்று ப்ரக்ருதத்திலும் (நடைமுறையிலும்) சொல்கிறோம். கையிலிருக்கிற மோதகத்தில் தித்திப்புப்  பூர்ணத்தை வைத்துக் கொண்டு தன்னுடைய பூர்ணத்வத்தை ‘டெமான்ஸ்ட்ரேட்’ பண்ணும் பிள்ளையாருக்கே சுழி போடுகிறோம். இந்தச் சுழி மற்றச் சுழியையெல்லாம் முழுசாகப் பண்ணிவிடுவது.

    வளைசலான கொம்போடு ஆரம்பிக்கிற பிள்ளையார் சுழி, கொஞ்சம்கூட வளையாத நேர்கோட்டோடு முடிகிறது. பிள்ளையார் பூர்ணம், சூன்யம் இர ண்டுமாக ஆனாற்போலவே வக்ரமானதும் அவர்தான், ஆர்ஜவமானதும் (நேரானதும்) அவர்தான் என்பது தாத்பரியம். வக்ர குணத்துக்கு  நேரெதிரானதை ஆர்ஜவம் என்பார்கள். தமிழில் இதைத்தான் நேர்மை என்பது. இங்கிலீஷிலும் straightness, straight   forward என்கிறார்கள். குணம், குணஹீனம் எல்லாம் ஒரே நிர்குண பரமாத்மாவின் வேஷங்கள்தான். ‘உ’ என்பது ப்ரணவத்தின் இரண்டாவதான நடு அக்ஷரம். அ, உ, ம என்ற மூன்றும் சேர்ந்தே ‘ஓம்‘காரமான ப்ரணவம். விஷயம் தெரிந்தவர்கள்  இதை இங்கிலீஷில் Om என்று எழுதாமல் Aum என்றே எழுதுவார்கள். ‘அ’ என்பது ஸ்ருஷ்டி; பிரம்மா. உ என்பது பரிபாலனம்; விஷ்ணு. ம  ஸம்ஹாரம்; ஈஸ்வரன்.

    த்ரிமூர்த்திகளும் தோன்றியது ஏக பராசக்தியால்தான். அதனால் அவள் ப்ரணவ ஸ்வரூபிணி. ஆனாலும் ஓமை தேவீ ப்ரணவம்  என்று சொல்வதில்லை. ‘உமா’ என்பதே தேவீ ப்ரணவம் என்பார்கள். அ, உ, ம என்ற சப்தங்களே மாறி ‘உமா’ வில் உமஅ என்று இருக்கின்றன  அல்லவா? ஓமில் ஸ்ருஷ்டி பீஜமான ‘அ’ முதல் எழுத்தாயிருக்க, ‘உமா’ விலோ ஸ்திதி (பரிபாலன) பீஜமான ‘உ’ என்பது முதல் எழுத்தாயிரு ப்பதால்தான், அன்போடு ரக்ஷித்து, காத்து, பரிபாலனம் பண்ணும் அம்பாளின் ப்ரணவம் ‘உ’ வில்தான் ஆரம்பிக்க வேண்டுமென்று காரணம் சொல் லி, இதனாலேயே ‘உமா’ என்பதை அம்பாளுடைய ப்ரணவமாகக் கூறுகிறார்கள்.

    அ, உ, ம வில் ஹ்ருதயம் மாதிரி நடுவேயிருப்பது ‘உ’. அதுவே கருணாமயமாகக் காப்பாற்றுகிற தேவீ ப்ரணவத்தில் ப்ரதம ஸ்தானத்திலிருக்கிறது.  ப்ரணவ ஸ்வரூபப் பிள்ளையார் ‘அ’வும் ‘ம’வும் சேராமல் ‘உ’காரமாக மட்டுமே பிள்ளையார் சுழியில் இருப்பதைப் பார்க்கும்போது ஒன்று தோன் றுகிறது. அதாவது, அவர் ‘’தாயைப் போலப் பிள்ளை’’ மட்டுமில்லை; தாயாருக்கும் ஒரு படி மேலே என்று தோன்றுகிறது. எப்படி? அவளும் ரக்ஷிக்கிற  ‘உ’வுக்குப் பின்னாடியாவது ஸம்ஹார ‘ம’ஸ்ருஷ்டி ‘அ’இவற்றையும் வைத்துக் கொண்டிருக்கிறாள். ஆனால், பிள்ளையோ எப்போது பார்த்தாலும் எ ல்லாரையும் ரக்ஷிப்பது தவிர வேறு ஜோலியே வைத்துக்கொள்ளாத பூர்ண கருணாமூர்த்தியாக இருந்து கொண்டு ‘உ’ஒன்றோடேயே நின்றுவிடுகிறார்.

    ப்ரணவத்தில் ‘உ’விஷ்ணுவின் ரூபம். உமாவும் விஷ்ணு ரூபிணியாக, நாராயண ஸஹோதரியாக, ‘விஷ்ணு மாயா விலாஸினி’யாக, ‘நாராயணி’என்றே  பெயர் படைத்தவளாயிருக்கிறாள். பிள்ளையாரைப் பற்றி ஸகலரும், ஸகல கார்ய ஆரம்பத்திலும் சொல்லும் ஸ்லோகத்திலும் ‘‘சுக்லாம்பரதரம்  விஷ்ணும்’’ என்றே வருகிறது. (இங்கே விஷ்ணு என்றால் ஸர்வ வியாபகமானவர் என்று அர்த்தம்) ‘உ’என்பது சிவசக்தி புத்ரனை விஷ்ணுவோடும்  ஸம்பந்தப்படுத்தி, சைவ வைஷ்ண வத்தை ஸமரஸம் பண்ணி விடுகிறது! வளைசலும் நேர்கோடுமாக இருக்கிற பிள்ளையார் சுழியில் நிறையத் தத்வார்த்தம் இருக்கிறது. சக்ராகாரமாக எந்த ஒன்று சுற்றினாலும் அதற்கு மத் தியில் அதற்கு ஆதாரமாக, அச்சாக (axis ஆக) நேரான (straight ஆன) ஒன்று இருந்தாக வேண்டும்.

    விஷ்ணு தன் விரலையே நேராக  நிமிர்த்திக்கொண்டு அதிலேதான் சக்ராயு தத்தைக் கோத்துக் கொண்டு சுற்றுகிறதாகவே விக்ரஹங்களில் காட்டியிருக்கும். சுற்றச் சுற்றப் பொறிப்  பொறியாகக் கொட்டுகிற கார்த்திகை வாணமானாலும் சரி (இது ஒளி)  விரலிலே மாட்டிக்கொண்டு சுற்றிச் சுற்றி டபடபவென்று அடிக்கிற கிரிச்சட் டியானாலும் சரி (இது ஒலி), இதுகளின் வட்டமான சுழற்சிகளுக்கு ஆதாரமாகக் கையோ, குச்சியோ எதுவோ ஒன்று நேர்கோடாக இருக்க வேண்டியி ருக்கிறது. யுனிவர்ஸில் லோகங்களெல்லாம் ஸர்குலராகத்தான் சுற்றிக் கொண்டிருக் கின்றன என்கிறபோது இவற்றுக்கும்கூட straight line  ஆக ஒரு ஆதார axis நம் கண்ணுக்குத் தெரியாவிட்டாலும் energy (சக்தி) ரூபத்தில் இருக்கத்தான் வேண்டும்.

    வட்டமாகச் சுற்றுகிற  ஸகலப் பிரபஞ்சத்தையும் அதற்கு ஆதார சக்தியான கோட்டையும் சேர்த்துத்தான் பிள்ளையார் சுழியில் வட்டமாகவும் நேர்கோட்டு பாகமாகவும்  போடுகிறோம். எங்கேயோ படித்த, அல்லது கேட்ட, ஞாபகம், எனர்ஜி உண்டாகிறதே பிள்ளையார் சுழி ரூபத்தில்தான் என்று. தாரை கொட்டி அதிலிருந்து எலெக்ட் ரிஸிடி எடுக்கிறபோது ரொடேஷனிலிருந்து (வட்டத்திலிருந்து) நேர்கோடாகத்தான் மின்சாரம் புறப்படுகிறதென்று எடுத்துக்காட்டியிருந்தது. பிள்ளையார்  சுழியில் கொம்பு தான் ரொடேஷன்; கோடு அதிலிருந்து சக்தி உத்பவம். இந்த இரண்டையும் சிவசக்தி ஸ்வரூபமான நாதபிந்துக்களாகக்கூடச் சொல் லிக்கொண்டு போகலாம். அதெல்லாம் ஸூக்ஷ்மமான விஷயம்.

    ஆரம்பித்த இடத்துக்கே வந்து முடிந்துவிடுகிற வட்டம் ஏகமான பிரம்மத்தைக் குறிப்பதாகக் கொள்ளலாம். வட்டத்தில் ஆரம்பித்து அரை வட்டத்துக்கு,  அப்புறம் நேர்கோடாகிற பிள்ளையார் சுழி, ஏகமான பிரம்மத்தை ஸங்கேதமாகக் காட்டிவிட்டு அதிலிருந்து அநேகமான ஸ்ருஷ்டி தோன்றினதையும் சேர்த்துத் தெரிவிக்கிறது என்று சொல்லலாம். பிரம்மமும் பூர்ணம். பிரபஞ்சமும் பூர்ணம். பிரம்ம பூர்ணத்திலிருந்து பிரபஞ்ச பூர்ணம் உண்டாயிற்று  என்று உபநிஷத்தில் சாந்தி மந்திரம் சொல்கிறோம். ஆரம்ப ஸ்வாமியின் அடையாளமாக எதன் ஆரம்பத்திலும் போடும் பிள்ளையார் சுழி, பிரம்ம  பூர்ணத்தை வளைசல் கொம்பாலும், பிரபஞ்ச பூர்ணத்தை நேர் கோட்டாலும் காட்டி, முதலில் கொம்பு அப்புறம் கோடு என்பதால் பிரம்மத்திலிருந்து தான் பிரபஞ்சம் உண்டாச்சு என்றும் தெரிவிக்கிறது.

    கொம்பு, கோடு என்று இரண்டு வார்த்தைகள் சொன்னேன். வேடிக்கையாக இரண்டுமே பிள்ளையாரின் தந்தத்துக்குப் பேராயிருக்கின்றன. ‘ஏக தந்தர்’ என்பதை ‘ஒற்றைக் கொம்பன்’ என்பார்கள். ‘‘பெரும்பாரக்கோடும்’’, ‘‘கோடாயுதத்தால் கொடுவினை களைந்தே’’ என்றெல்லாம் அவ்வைப் பாட்டி  சொல்லும்போது ‘கோடு’ என்றாலும் தந்தந்தான். எப்பொழுதும் குழந்தையாயிருக்கிற ஸ்வாமியை வேண்டிக் கொண்டதாலேயே குழந்தைப் பிராயத்தில்  கிழவியாகிவிட்ட அவ்வை சொன்ன ‘கொடுவினை’ என்பதுதான் ஜன்மாந்தர பாபங்களான பிராரப்த கர்மா. அந்தக் கர்மா எப்படியெப்படி நம்மைப்  பழிவாங்க வேண்டும் என்று பிரம்மா நம் தலையில் எழுதியிருக்கிறாரென்று, சொல்லி, இதை பிரம்மலிபி என்பார்கள். ‘தலைச்சுழி’ என்பதும் இதைத் தான். இந்த தலைச் சுழியையும் கழித்து விடுவது பிள்ளையார் சுழி. ‘‘கோடாயுதத்தால் கொடுவினை களைந்தே!’’

    காஞ்சி பரமாச்சார்யார் என்ற ‘தெய்வத்தின் குரல்’   



    தவிட்டு எண்ணெயிலும் வாகனங்கள் ஓட்டலாம்...

    By: ram On: 21:37
  • Share The Gag


  • கண்டுபிடிப்பின் பெயர் : தவிட்டு எண்ணெய் எரிபொருள்


    கண்டுபிடிப்பாளர்களின் பெயர் : மகேஷ் ராஜா, ப்ரவீன், வெற்றிவேல், விக்னேஷ்வரன்


    கல்லூரி : அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி, திருக்குவளை
    கண்டுபிடிப்பின் பயன் : எரிபொருள் சிக்கனப்படுத்தப்பட்டு, சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படுகிறது


    ரு குறிப்பிட்ட விகிதத்தில் தவிட்டு எண்ணெயை கலப்புத் தொழில்நுட்பத்தின் மூலம் டீசலுடன் கலந்து மாற்று எரிபொருளைக் கண்டறிந்துள்ளனர் திருக்குவளையிலுள்ள அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி மாணவர்கள்.


    தற்சமயம் பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருள்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதற்கு மாற்றாக என்ன செய்யலாம் என்று யோசித்தபோது உருவானது தான் தவிட்டு எண்ணெய். எதற்கும் பயன்படாத தவிட்டு எண்ணெயை டீசலுடன் கலப்புத் தொழில்நுட்பத்தில் சேர்த்து வாகனங்களை இயக்க முடிவு செய்தோம்.


    பல அளவீடுகளில் முயன்று இறுதியில்,  80 சதவிகித தவிட்டு எண்ணெயுடன்  20 சதவிகிதம் டீசலைக் கலந்து சோதனை மேற்கொண்டோம். ஆய்வுக்காக உட்படுத்தப்பட்ட என்ஜின் நன்றாக இயங்கி எங்களுடைய ஆய்வு வெற்றிபெற்றது. தவிட்டு எண்ணெய் கொண்டு இயங்கும் வாகனத்தில் புகையின் அளவு மிகவும் குறைவாகவே இருக்கும். இதனால் சுற்றுச்சூழலுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. இந்தக் கலப்பு எரிபொருள் பயன்படுத்தும்போது, லிட்டர் ஒன்றுக்கு 28 முதல் 30 கிலோ மீட்டர் வரை பயணம் செய்யலாம்" என்கிறார் மாணவர் வெற்றிவேல்.


    இந்தக் கலப்பு எரிபொருளை வாகனங்களில் பயன்படுத்தும் போது என்ஜினின் செயல் திறன் வேகம் அதிகரித்துள்ளது என்று ஆய்வின்போது, இந்த மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

    உளவு உலோகப் பட்டாம் பூச்சி..!

    By: ram On: 20:22
  • Share The Gag

  • எம்.ஐ.டி. பொறியியல் கல்லூரியில் உள்ள வான்பயண மின்னணுவியல் (Avionics) ஆராய்ச்சித் துறையைச் சேர்ந்த ‘தக்ஷா‘ என்ற குழுவினர்  ஆட்கள் இல்லாமலேயே பறக்கும் குட்டி விமானம் ஒன்றை  உருவாக்கியுள்ளனர்.

    பெயரிடப்படாத இந்த ஆளில்லாத குட்டி விமானம், நிலஅளவீடுகள், விண்வெளி, புவியியல் ஆராய்ச்சி மற்றும் இயற்கைப் பேரிடர்கள் ஏற்படும்போது, பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. 1.8 கிலோ எடை கொண்ட இந்த விமானத்தை எளிதாக எந்தப் பகுதிக்கும் தூக்கிச் செல்ல முடியும் என்பது இதன் சிறப்பு. விமானத்தின் அடிப்பாகத்தில் கேமரா மற்றும் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டுள்ளன.

    ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயங்கும் இந்த விமானம், வானத்தில் பறந்தபடி எடுக்கும்  படங்கள், வீடியோக்களை லேப் டாப்பில் நாம் நேரடியாகப் பார்த்துக் கொள்ளலாம். ஒரு கிலோ மீட்டர் உயரம் வரை பறக்கும் திறன் கொண்ட இது, ஐந்து கிலோ மீட்டர் சுற்றளவிற்குப் பறந்து படம் பிடிக்கும் திறன் கொண்டது. பார்ப்பதற்கு மெகா சைஸ் பட்டாம் பூச்சி போல் உள்ளது.

    2006-ஆம் ஆண்டு இந்த விமானத்தை உருவாக்குகிற முயற்சியில் எங்களுடைய தக்ஷா குழு ஈடுபட ஆரம்பித்தது. விமானத்தை போர்க்காலங்களில் ராணுவத்திற்கு உதவும் வகையில்தான் முதலில் வடிவமைத்தோம். ஆனால், அதன்பிறகு மக்களுக்குப் பயன்படுகிற வகையில் மாற்றி வடிவமைத்தோம். உலகில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஆளில்லா குட்டி விமானங்கள் அதிகளவு எடை கொண்டவையாக இருக்கும். ஆனால், நாங்கள் கண்டுபிடித்துள்ள விமானத்தின் எடை மிகவும் குறைவு.

    மும்பை தாஜ் ஹோட்டலுக்குள் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கும்போது, உள்ளே தீவிரவாதிகள் எங்கிருந்து தாக்குதல் நடத்துகின்றனர் என்று தெரியாமல், உள்ளே நுழைந்த நமது காவலர்கள் பலர் தீவிரவாதிகள் சுட்டதில் இறந்து போனார்கள். அதுபோன்ற நெருக்கடியான சமயங்களில் இந்தக் குட்டி விமானம் அபாரமாகக்  கைகொடுக்கும்.  இதன் மூலம் உயிர்ச்சேதத்தைத்  தவிர்க்கலாம்" என்கிறார் இணைப் பேராசிரியர் செந்தில்குமார்.

    தக்ஷா குழுவினர் கண்டுபிடித்துள்ள இந்த விமானம் Low Intensity Confict என்ற அப்ளிகேஷன் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது, இந்த விமானத்தை எல்லைப்பகுதி, தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தும் பகுதிகளில் சிறிய பாகங்களாக எடுத்துச் சென்று, அரைமணி நேரத்தில் பொருத்தி குட்டி விமானத்தை உருவாக்கிட முடியும்.

    ஆறு வருட கடின உழைப்பில் தக்ஷா குழுவினர் குட்டி விமானத்தை உருவாக்கியிருந்த நிலையில், 2012-ஆம் ஆண்டு அமெரிக்க ராணுவத்தின் அங்கமான ‘டார்பா‘ (DARPA – Defense Advanced Research Projects Agency) ஆளில்லாத விமானங்களுக்கான சர்வதேசப் போட்டி ஒன்றை அறிவித்திருந்தது. முதல் சுற்றில் 150 நாடுகளுடன் தக்ஷா குழுவினரும் போட்டியில் பங்குபெற்று, இறுதிச் சுற்றுக்கு முன்னேறினர்.

    அமெரிக்காவில் நடந்த போட்டிக்காக தயாராகிக் கொண்டிருந்த தக்ஷா குழுவினரில் இரண்டு பேருக்கு மட்டுமே அமெரிக்காவிற்குச் செல்லும் விசா கிடைத்தது. ஐந்து பேர் இருந்த குழுவில் இரண்டு பேர் மட்டுமே, ஐந்து பேர் செய்ய வேண்டிய வேலைகளை செய்ய வேண்டிய நிலையில், தன்னம்பிக்கையை இழக்காமல் செந்தில்குமார் தன் குழு ஆராய்ச்சி மாணவர் ஒருவருடன் அமெரிக்கா பறந்தார்.

    இறுதிப் போட்டி அமெரிக்காவின்  ஜார்ஜியா மாகாணத்தில் உள்ள ஸ்வார்ட் மிலிட்டரி பேஸில் நடைபெற்றது. இறுதிச் சுற்றில் அமெரிக்காவின் கப்பற்படைக் குழு உட்பட மொத்தம் ஆறு நாடுகள் போட்டியில் பங்கு பெற்றன. மற்ற குழுவினர்களிடம் மூன்று முதல் ஐந்து குட்டி ஆளில்லா விமானங்கள் இருந்தன. ஆனால், நாங்கள் ஒரே ஒரு குட்டி விமானத்தைதான் கொண்டு சென்றோம். முதல் சுற்று அடர்ந்த காட்டுக்குள் நடந்தது. 150 அடிக்கு மேலே உயரம் உள்ள  மரங்களுக்கு மேல் பறந்து,  ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சாலையில் நடக்கும் நிகழ்வுகளை எங்களுடன் இணைக்கப்பட்டிருந்த லேப்டாப்பில் காண்பிக்க வேண்டும்.

    போட்டியில் கலந்து கொண்ட அனைத்துக் குழுவினரின் விமானங்களும் தொழில்நுட்பக் கோளாறினால் அடர்ந்த காட்டுக்குள் விழுந்து நொறுங்கியது. எங்களுடைய விமானம் காட்டுக்குள் நான்கு கிலோ மீட்டர் சென்ற பிறகு, தொடர்பில்லாமல் போனது. எங்களுடைய விமானமும் காட்டுக்குள் விழுந்து நொறுங்கி விட்டது என்று அங்குள்ள ராணுவ அதிகாரிகள் முடிவு செய்துவிட்டனர்.

    ஆனால், தொடர்பு இல்லாமல் போனாலும் வானத்தில் மிதக்கும்படி செய்து வைத்திருந்த எங்களுடைய தொழில்நுட்பத்தை, அதிகாரிகளுக்கு விளக்கினோம். சொன்னது போலவே காட்டின் நான்காவது கிலோ மீட்டரில் மிதந்து கொண்டிருந்தது. அதுவே அங்குள்ள அதிகாரிகளுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. சார்ஜ் இல்லாமல் போனதால் விமானம் கீழே இறங்கும்போது, தரையில் வீழ்ந்து நொறுங்கியது. மறுநாள் எங்களுடைய விமானத்தை ஓட்டிக் காட்ட இன்னொரு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால், கையில் நொறுங்கிப் போன விமானத்தின் பாகங்கள் மட்டுமே இருந்தன. மனம் தளராமல் இரவோடு இரவாக 100 மைல் பயணம் செய்து விமானம் சரி செய்யத் தேவையான அனைத்துப் பொருட்களையும் சேகரித்து, இரவு முழுக்க உழைத்து சேதமாகியிருந்த விமானத்தை சரி செய்தோம். மறுநாள் காலையில் ராணுவ அதிகாரிகள் சொன்ன இடத்தில் எங்களுடைய விமானம் எந்தத் தடையும் இல்லாமல் சென்று, அங்கு நடக்கின்ற நிகழ்வுகளை போட்டிக் குழுவினருக்குப் படம் பிடித்துக் காட்டியது. அப்போது நாங்கள் அடைந்த சந்தோஷத்திற்கு அளவே இல்லை" என்று சிலிர்ப்புடன்  நினைவு கூர்கிறார் செந்தில்குமார்.

    கடந்த 2012-ஆம் ஆண்டு, ஆகஸ்டு மாதம் அமெரிக்காவின் ராணுவ நிறுவனமான ‘டார்பா‘விடம் இருந்து உலகின் மிகச்சிறந்த ஆளில்லாத குட்டி உளவு விமானம் என்று சான்றளித்து தக்ஷா குழுவினருக்கு கடிதம் வந்திருக்கிறது. மேலும் தக்ஷா குழுவினரின் விமானத்தை அமெரிக்காவிற்குத் தரும்படி கோரிக்கையும் விடப்பட்டது. ஆனால், இது என் நாட்டு மக்களுக்கு பயன்பட வேண்டும் என்று சொல்லி அமெரிக்காவின் கோரிக்கையை நிராகரித்துள்ளார் செந்தில்குமார்.

    எம்.ஐ.டி. கல்லூரியின் முன்னாள் மாணவரான அப்துல் கலாம், இந்த விமானத்தை இயக்கிப் பார்த்து பாராட்டியுள்ளார், மேலும் நாட்டின் பயன்பாட்டிற்கு விரைவில் இதனை அர்ப்பணிக்கும்படி தக்ஷா குழுவினரை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

    வளர்ந்த நாடான அமெரிக்காவில் UAV-(Unnamed ariel Vechicle ) ஆளில்லாத குட்டி விமானங்களின் பயன்பாடு அதிகமான அளவில் உள்ளது. ஆனால், நம்மூரில் இது போன்ற விமானங்களை உருவாக்குகின்ற முயற்சியில்தான் இருக்கிறோம்.  அதற்குத் தேவையான ஆய்வுக்கூடங்கள், வசதிகள் தமிழகத்தில் ஏற்படுத்திக் கொடுத்தால் இன்னும் சிறந்த கண்டுபிடிப்புகளை நம்மால் உருவாக்க முடியும்" என்கிறார் இணைப் பேராசிரியர் செந்தில்குமார்.


    கிரானைட் முறைகேட்டைக் கண்டறிய உதவியது

    மதுரை மேலூர் பகுதியில் நடந்த கிரானைட் முறைகேடு தொடர்பாக கிரானைட் கற்களை அளவிடும் பணி நடந்தது. குவாரியில் உள்ள ஸ்டாக் யார்டு பகுதியில் ஆயிரக்கணக்கில் கற்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளன. இதனால் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கிரானைட் கற்களைக் கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டது. உடனே மாவட்ட நிர்வாகத்தினால் இந்தக் குட்டி விமானம் வரவழைக்கப்பட்டு, கிரானைட் குவாரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. இந்த விமானம் குவாரியில் உள்ள கிரானைட் கற்களால் ஆன ரகசிய அறைகள், பதுங்கு குழிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கற்களை துல்லியமாகப் படம் பிடித்து அதிகாரிகளின் ஆய்விற்கு மிகவும் உதவியிருக்கிறது.

    மேலும் திருவண்ணாமலையில் நடந்த கார்த்திகை தீப திருவிழாவில் மக்கள் கூட்டத்தைக் கண்காணிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது. தற்போது பரமக்குடியில் நடைபெற்ற இமானுவேல் சேகரன்  நினைவு நாள் விழாவில் வானில் பறந்து பாதுகாப்புப் பணிக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளது. தமிழக காவல்துறை வரலாற்றிலேயே காவல்துறைக் கண்காணிப்பில் ஆளில்லா விமானம் ஒன்று ஈடுபடுத்தப்பட்டுள்ளது இதுவே முதல் முறை ஆகும்.



    எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்?

    குறிப்பிட்ட அளவு பூச்சிக்கொல்லி மருந்தை விமானத்தில் வைத்து பத்து ஏக்கர் பரப்பளவு கொண்ட பயிர்கள் மீது பத்து நிமிடங்களில் தெளிக்கலாம். சொட்டுநீர்ப் பாசன முறையில் எந்தப் பகுதியில் தண்ணீர் செல்லவில்லை என்று விமானத்தில் பொருத்தப்பட்டுள்ள கேமரா மூலம் அறிந்து அதன் மூலம் துல்லியமாக சொட்டுநீர்ப் பாய்ச்சலாம். தீ விபத்து ஏற்படும்போது, ஆட்கள் செல்ல முடியாத இடத்திற்கு, விமானத்தை சற்று உயரமாக பறக்கச் செய்து தீயை அணைக்கும் ரசாயனப் பொடியை விமானத்திலிருந்து தூவி  தீயை முழுமையாக அணைக்க முடியும்.

    புரட்டாசிப் பட்டம் - என்ன விதைக்கலாம்? எவ்வளவு அறுக்கலாம்?

    By: ram On: 19:52
  • Share The Gag

  • தமிழ்நாட்டின் முக்கிய சாகுபடி பட்டங்களில் புரட்டாசிப் பட்டமும் ஒன்று. இப்பட்டத்தில் தானியங்கள், சிறு தானியங்கள், பயறு வகைகள், நார்ப் பயிர்கள் அதிகமாக சாகுபடி செய்யப்படுவது வழக்கம். தென்மேற்குப் பருவ மழை  சிறப்பாக கைகொடுத்துள்ள நிலையில், வடகிழக்குப் பருவ மழையும், அக்டோபர் முதல் வாரத்தில் துவங்க வாய்ப்புள்ளதால் இந்தாண்டு புரட்டாசிப் பட்டம் செழிப்பு நிறைந்ததாகவே இருக்கும். புரட்டாசிப் பட்டத்தில் என்னென்ன பயிர்கள் விதைக்கலாம், சராசரியாக எவ்வளவு மகசூல் கிடைக்கும்? இதோ...


    பருத்தி: வெள்ளைத் தங்கம்


    புரட்டாசிப் பட்டத்திற்கு எல்.ஆர்.ஏ. 5166, கே 11, கே.சி. 2, எஸ்.பி.வி.ஆர். 2 போன்ற பருத்தி ரகங்களைப் பயிரிடலாம். பருத்திக் காய்களில் மேலிருந்து கீழாக கீறல் தோன்றி, ஓரிரு நாட்களில் முழுவதும் மலர்ந்து வெடிப்பதே அறுவடைக்கான அறிகுறியாகும். விதைத்த  120 நாட்களுக்குப் பின் வாரம் ஒரு முறை அல்லது 10 நாட்களுக்கு ஒரு முறை காலை மற்றும் மாலை நேரங்களில் பஞ்சை கைகளால் அறுவடை செய்ய வேண்டும். ரகங்களைப் பொருத்து மகசூல் அளவு மாறுபடும்.


    துவரை: ஏற்றம் தரும் நாற்று நடவு


    துவரை, மிதமான வெப்பம் மற்றும் குறைந்த ஈரப்பதத்தில் வளரக்கூடியவை. நல்ல வடிகால் வசதி கொண்ட செம்மண் மற்றும் குறுமண் நிலம் துவரை சாகுபடிக்கு ஏற்றது. புரட்டாசிப் பட்டத்தில் கோ 6, வம்பன் 1, வம்பன் 2, கோ(சிபி) 7  போன்ற துவரை ரகங்களைப் பயிரிடலாம். துவரை சாகுபடியில் விதைப்பு முறையை விட, நாற்று நடவு தொழில்நுட்பத்தைப் பின்பற்றுவதன் மூலம் ஏக்கருக்கு 800 கிலோ மகசூல் பெறலாம். 150 நாட்களில் அறுவடை செய்துவிடலாம். 80 சதவிகிதக் காய்கள் முதிர்ச்சி அடைந்தவுடன் காய்களை தனியாகவோ அல்லது முழு செடியாகவோ அறுவடை செய்து வெயிலில் உலர்த்தி விதைகளைப் பிரித்தெடுக்கலாம்.


    அவரை: அள்ளலாம் மகசூல்


    அவரையில் இரண்டு ரகங்கள் உண்டு. ஒன்று, செடியில் காய்ப்பது (குத்து அவரை), மற்றொன்று கொடியில் காய்ப்பது (பந்தல் அவரை). பந்தல் ரகத்தை பயிர் செய்வதாக இருந்தால் பார்களுக்கிடையே 10 அடியும், குத்து ரகத்தைப் பயிர் செய்வதாக இருந்தால் பார்களுக்கிடையே 1.5 அடியும் இடைவெளி விட வேண்டும். பந்தல் அமைத்து சாகுபடி செய்யும்போது, கொடி, பந்தலை அடைந்தவுடன் நுனிக்குருத்தைக் கிள்ளிவிட வேண்டும். அவரை வேர்களில் நைட்ரஜனை நிலைநிறுத்தக்கூடிய பாக்டீரியங்கள் இருப்பதால் இது மண்ணில் தழைச்சத்தை நிலைநிறுத்தி மண்ணை வளமாக்குகிறது. பந்தல் அவரையில் ஹெக்டேருக்கு 240 நாட்களில் 8-10 டன் மற்றும் குத்து அவரையில் 120 நாட்களில் 6-8 டன் மகசூல் கிடைக்கும்.


    தட்டைப்பயறு: வெப்பத்திலும் மகசூல் கொட்டும்


    வெப்ப மற்றும் மிதவெப்ப மண்டலப் பகுதிகளில் தட்டைப்பயிரை சாகுபடி செய்யலாம். நல்ல வடிகால் வசதியுள்ள வண்டல் மண் மற்றும் நடுநிலை கார அமிலநிலை கொண்ட மண் ஏற்றது. தனிப்பயிராக இருப்பின் ஹெக்டேருக்கு அனைத்து ரகங்களுக்கும் 20 கிலோ விதைகளும், கலப்புப் பயிராக இருப்பின் 10 கிலோ விதைகளும் தேவைப்படும். 120 நாட்களில் அறுவடை செய்து விடலாம். காய்கள் 80 சதவிகிதம் முற்றியபின், செடிகளை அறுத்துக் கட்டி வைத்து பின்பு வெயிலில் காய வைத்து, மணிகளைப் பிரித்தெடுக்க வேண்டும். ஹெக்டேருக்கு மானாவாரியில் 700-900 கிலோ மற்றும் இறவையில் 1,200-1,500 கிலோ மகசூல் கிடைக்கும்.


    பச்சைப்பயறு: பலே வருமானம்


    கோ 4, கோ 6, கேஎம் 2, விபிஎன் 1, பிஒய் 1 போன்ற பச்சைப்பயறு ரகங்கள் புரட்டாசிப் பட்டத்துக்கு ஏற்றவை. ஹெக்டேருக்கு தனிப்பயிருக்கு 20 கிலோவும், கலப்புப்பயிருக்கு 10 கிலோ விதைகளும் தேவைப்படும். மூன்றில் 2 பங்கு காய்கள் முதிர்ச்சியடைந்த நிலையில் செடியை அறுவடை செய்து காயவைத்து விதைகளைப் பிரித்தெடுக்கலாம். பச்சைப்பயறு தானியங்களில் பாஸ்பாரிக் அமிலம் அதிகளவில் உள்ளது. பருப்பு தவிர எஞ்சிய பாகங்கள் பசுந்தாள் உரமாகவும், கால்நடைத் தீவனமாகவும் பயன்படுகின்றன. ஹெக்டேருக்கு மானாவாரியில் 600-750 கிலோவும், இறவையில் 1,000-1,200 கிலோவும் மகசூல் கிடைக்கும்.


    தினை: மானாவாரி மன்னன்


    தமிழகத்தில் பெரும்பாலும் மானாவாரியாகவே சாகுபடி செய்யப்படும் தினை, கடினமான வறட்சியைத் தாங்கி வளரக்கூடியது. செம்மண், இரு மண் கலந்த நிலங்கள் இதற்கு உகந்தது. ஒரு ஹெக்டேருக்கு வரிசை விதைப்பிற்கு 10 கிலோவும், தூவுவதற்கு 12.5 கிலோ விதைகளும் தேவைப்படும். 90-ஆம் நாளில் கதிர் முற்றி, அறுவடைக்குத் தயாராகி விடும்.  உயர் விளைச்சல் ரகங்களைப் பயன்படுத்துவதாலும், சீரிய சாகுபடி குறிப்புகளைக் கடைப்பிடிப்பதாலும் தோராயமாக ஹெக்டேருக்கு ஒன்றரை டன் தானியமும், 5 டன் தட்டையும் பெறலாம். தினை தானியத்தை சாக்குப் பைகளில் வைத்து நீண்ட காலத்திற்கு சேமிக்க முடியும். தினையில் உள்ள சத்துக்கள் நெல், அரிசி, கோதுமையில் உள்ளதைவிட அதிகமானது.


    குதிரைவாலி: காலம் கம்மி, லாபம் ஜாஸ்தி


    குதிரைவாலியை 90 நாட்களில் மானாவாரியாகப் பயிரிட்டு அறுவடை செய்யலாம். ஏக்கருக்கு 5 கிலோ விதைகள் தேவைப்படும். ஒரு மழை பெய்த பின், ஒரு மாதம் வரை மழை இல்லாவிட்டாலும் தாக்குப் பிடிக்கும். பெரும்பாலும் பூச்சிகள், நோய்கள் குதிரைவாலியைத் தாக்குவது இல்லை. கதிர் நன்கு காய்த்து முற்றிய பின், அறுவடை செய்து, நன்கு காய வைத்து சுத்தம் செய்து, காற்று புகாதபடி சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும். குதிரைவாலி சாகுபடியில் தானியங்களைத் தவிர, அவற்றின் தாள்களும் கால்நடைத் தீவனங்களுக்காக விற்பனை செய்யப்படுவதால், விவசாயிகளுக்கு இரட்டிப்பு லாபம் கிடைக்கும். ஏக்கருக்கு 800 கிலோ மகசூல் கிடைக்கும். இதன் உமி நீக்கிய அரிசி மிகவும் சத்தானது.



    கோதுமை, கம்பு, ராகி, மக்காச்சோளம், உளுந்து, சோயாமொச்சை போன்ற பயிர்களையும் புரட்டாசிப் பட்டத்தில் சாகுபடி செய்யலாம். மேலும் விவரங்களுக்கு வட்டார வேளாண் உதவி இயக்குநர் அலுவலகத்தைத் தொடர்புகொண்டு விவசாயிகள் ஆலோசனை பெற்றுக்கொள்ளலாம்.

     

    மிரட்டும் மெட்ராஸ் ஐ!

    By: ram On: 19:29
  • Share The Gag

  • கோடை காலம் வந்தாலே உஷ்ணம் சம்பந்தமான வியாதிகள் வேகமா பரவும். இதுல குறிப்பா மக்கள தாக்குற நோய் மெட்ராஸ் ஐ தான். ஆனா என்னவோ சம்மர் முடிஞ்சு, 3 மாசம் ஆகியும் சிட்டிவாசிகளை இந்த நோய் மிரட்டிட்டு வர்ருது. டெய்லி 15 பேராவது மெட்ராஸ் ஐ அறிகுறிகளுடன் சிகிச்சைக்கு வர்றதா அரசு கண் மருத்துவமனை டாக்டர்கள் சொல்றாங்க.


    மெட்ராஸ் ஐ என்ற நோய் ஒருவித வைரஸ் மூலம் பரவுகிறது. கண்வீக்கம், எரிச்சல், கண்ணில் இருந்து நீர் வடிதல் மற்றும் சிவப்பாகுதல் போன்றவை இந்த நோயின் அறிகுறிகளாகும். பாதிக்கப்பட்டவரிடம் இருந்து மற்றவர்களிடம் மிகவும் எளிதாக இந்த நோய் பரவுகிறது. குறைந்தது இந்நோயின் தாக்கம் ஒரு வாரம் நீடிக்கும். மெட்ராஸ் ஐ பாதிப்பு ஏற்பட்டவர்கள் உடனடியாக கண் மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.



    இதுகுறித்து கண் மருத்துவர் ஒருவர் கூறுகையில், ‘மழைக்காலம் தொடங்கிய பிறகும் மெட்ராஸ் ஐ சிட்டியின் சில இடங்களில் பரவிட்டு வருது. இதில் பாதிக்கப்பட்ட 40 சதவீத நோயாளிகள் அரசு மருத்துவமனைக்கும், 30 சதவீதம் பேர் தனியார் மருத்துவமனைக்கும் சிகிச்சைக்காக செல்கின்றனர். மீதமுள்ள 30 சதவீதம் பேர் சுய சிகிச்சை அளித்துக் கொள்கின்றனர். மெட்ராஸ் ஐ பாதிப்பு உள்ளவர்கள் உடனடியாக கண் மருத்துவரை சந்தித்து சிகிச்சை பெறுவது அவசியம். கண் சிவப்பாகுதல், கண்ணில் நீர்வடிதல் போன்றவை இந்நோயின் அறிகுறிகள். பொதுவாக இந்த நோய் காற்று மற்றும் தண்ணீர் மூலமாக பரவுகிறது. 



    இந்நோய் வராமல் இருக்க அடிக்கடி சுத்தமான தண்ணீரில் கண்களை கழுவ வேண்டும். மேலும் முன்தினம் இரவு சுமார் 15 நிமிடம் சூடு வைத்த தண்ணீரை கொண்டு மறுநாள் காலையில் கண்களை சுத்தம் செய்வது நல்லது. ஃபில்டர் வாட்டரை பயன்படுத்த கூடாது. ஏனென்றால் ஃபில்டர் வாட்டரில் பாக்டீரியாக்கள் இருக்காது. ஆனால் அதில் வைரஸ்கள் இருக்கும் என்கிறார்.  அதானல உங்க கண்களை ஜாக்கிரதையா பார்த்துக்குங்க!

    ஆர்டிஐ( RTI ) பற்றி தெரியுமா?

    By: ram On: 19:19
  • Share The Gag



  • அரசு துறையின் நடவடிக்கை, செயல்பாடுகளை சாமானிய மக்கள் அறிந்து கொள்ளவது இயலாத காரியமாகவே இருந்து வந்தது. ஆனா இப்போது அப்படியில்லை. அரசின் அனைத்து நடவடிக்கை பற்றியும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் (ஆர்.டி.ஐ) மூலமாக யார் வேண்டுமானாலும் தகவலை கேட்டறியலாம்.
    மத்திய மாநில அரசு நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், அரசு நிதி பெறும் நிறுவனங்கள் ஆகியவற்றின் செயல்பாடுகளை அறிய இச்சட்டத்தை பயன்படுத்தலாம். ஆனால், தனியார் நிறுவனங்களுக்கு இந்த சட்டம் பொருந்துவது கிடையாது. உதாரணமாக, அரசு அலுவலகங்களின் கோப்புகள், ஆவணங்கள், சுற்றறிக்கைகள், ஆணைகள் ஆகியவற்றை கேட்டு பெறலாம். இதே போல் சாலை அமைத்தல், பாலம் உள்ளிட்ட கட்டுமான பணிகளின் மாதிரிகள் ஆகியவற்றை கேட்டு விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பம் செய்பவர் தனது பெயர் மற்றும் முகவரியுடன் தகவல் குறித்த காரணத்தையும் சாதாரண தாளில் எழுதினால் போதும். அதை சம்பந்தப்பட்ட அரசு அலுவலகத்தில் உள்ள உதவிப் பொதுத் தகவல் அலுவலர் அல்லது பொதுத்தகவல் அலுவலரிடம் வழங்க வேண்டும்.

    தகவல் பெறுவதற்காக 10 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. உரிய தகவல் கிடைத்த உடன் அதை சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் இருந்து கொண்டே படிக்கலாம். தகவலின் ஜெராக்ஸ் வேண்டுமென்றால் ஒரு பக்கத்திற்கு ரூ. 2 வசூலிக்கப்படும். சம்பந்தப்பட்ட பதிவேடுகளை பார்வையிடுவதற்கு முதல் ஒரு மணி நேரத்திற்கு கட்டணம் கிடையாது. ஆனால் அதற்குபிறகு வரும் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ரூ. 5 வசூலிக்கப்படும். சி.டியில் வேண்டுமானால் ரூ. 50 வசூலிக்கப்படும்.

     உயிர் பாதுகாப்பு பற்றிய கேள்வியாக இருந்தால் 2 நாட்களிலும், பொது தகவலாக இருந்தால் 1 மாதத்தில் விண்ணப்பதாரருக்கு தகவல் வழங்க வேண்டும். உரிய தகவல் வழங்கவில்லை என்றால் மேல்முறையீடு செய்யலாம். தகவல் தர மறுத்தாலோ அல்லது முழுமையான தகவலை தராமல் இருந்தாலோ சம்பந்தப்பட்ட துறைக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்க தகவல் ஆணையத்திற்கு உரிமையுள்ளது.

    தமிழ்நாடு மாநில தகவல் ஆணையம் தேனாம்பேட்டையில் (வானவில் அருகே) இயங்கி வருகிறது. உங்களுக்கு அரசுத்துறைகளின் செயல்பாடு, திட்டம் குறித்து தெரிய வேண்டுமானால் தகவல் பெறும் உரிமை சட்டத்தை பயன்படுத்துங்க... தொடர்புக்கு: 044&24357580.

    வசூலிலும் மிரட்டிய ‘தி கான்ஜூரிங்’!

    By: ram On: 18:00
  • Share The Gag


  • திரைக்கதையில் ஒளி-ஒலி அமைப்பை சாதுர்யமாக கையாண்டு ரசிகர்களை திகிலடையச் செய்வதில் பலே கில்லாடி ‘ஜேம்ஸ் வான்’.  இவர் இயக்கிய ‘சா’, ‘இன்சீடியஸ்’, ‘டெட் சைலன்ஸ்’ முதலிய படங்கள் கதையிலும் கையாளப்பட்ட விதத்திலும் தனித்தன்மை பெற்று விளங்கியது. 



    அந்தவகையில் உண்மை சம்பவத்தின் அடிப்படையில் அமைந்ததாக எடுக்கப்பட்டுள்ள ‘தி கான்ஜுரிங்’ ரசிகர்களை மிரட்டி வருகிறது என்றால் மிகையல்ல. தமிழில் இப்படம் டப்பிங் செய்யப்பட்டு ரிலீஸ் செய்யப்பட்டன. 



    ஸ்பாட் லைட் மோசன் பிக்சர்ஸ் இப்படத்தை தமிழகத்தில் திரையிட்டு இருந்தது. சுமார் 60க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியான இப்படம் ரசிகர்களை மிரட்டியதோடு மட்டுமல்லாமல் வசூலிலும் மிரட்டியுள்ளது. இப்படம் வெளிவந்த ஒரு வாரத்தில் மட்டும் 4.2 மில்லியன் வசூலை குவித்துள்ளது. 

    மீண்டும் டி.டி.எச்.-ஐ கையில் எடுக்கும் கமல் - விஸ்வரூபம்-2வை வெளியிட திட்டம்!!

    By: ram On: 17:52
  • Share The Gag


  • Anuradha Sriram Hits




    இந்தமுறை விஸ்வரூபம்-2 படத்தை டி.டி.எச்.ல் வெளியிடும் முடிவில் உறுதியாக இருக்கிறார் நடிகர் கமல்ஹாசன். தமிழ் சினிமாவுக்கு ஒவ்வ‌ொரு முறையும் புதிய தொழில்நுட்பத்தை கொண்டு வருபவர்களில் நடிகர் கமல்ஹாசனுக்கு முக்கிய இடம் உண்டு. அந்தவகையில் இந்தாண்டு துவக்கத்தில் கமல் இயக்கி, நடித்து, தயாரித்த விஸ்வரூபம் படத்தை டி.டி.எச். தொழில்நுட்பத்தில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டார். ஆனால் இதற்கு தமிழகத்தில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. இதனால் தனது முடிவை கைவிட்டார் கமல். இந்நிலையில் தற்போது விஸ்வரூபம்-2 படத்தை இயக்கி வரும் கமல், இந்தமுறை படத்தை டி.டி.எச்.ல் வெளியிடும் முடிவில் உறுதியாக இருக்கிறார்.  



    இந்திய திரைப்பட தொழில் வர்த்தக கூட்டமைப்பின் நிகழ்ச்சி பெங்களூருவில் நடந்தது. அதில் பேசிய கமல், விஸ்வரூபம்-2 படத்தை டி.டி.எச்.ல் வெளியிடுவேன் என்றார். இதுகுறித்து அவர் மேலும் கூறும்போது, டி.டி.எச்.ல் படத்தை திரையிடுவதன் மூலம் அதற்கு உரிய கட்டணம் வசூலிக்கப்படும். டி.வி. மூலம் மட்டும் மக்கள் பார்க்கும் நிலை இருக்காது, வீட்டில் படத்தை பார்த்துவிட்டு தியேட்டரிலும் அப்ப‌டத்தை பார்க்க அவர்களுக்கு தூண்டும். ஆனால் இந்த முறையை எதிர்க்கிறார்கள். எல்லோரது வீட்டிலும் சமையல் அறை இருக்கிறது, ஆனால் அவர்கள்‌ ஹோட்டலுக்கு சென்று சாப்பிடுவது இல்லையா, அதுபோலத்தான் இதுவும். இந்தமுறை விஸ்வரூபம்-2 படத்தை டி.டி.எச்.ல் வெளியிட எண்ணியுள்ளேன். ஒருவேளை இந்தியாவில் எதிர்த்தால் அமெரிக்காவில் இப்படத்தை டி.டி.எச்.ல் வெளியிடுவேன் என்றார்.




    ஆக விஸ்வரூபம்-2 படத்திற்கு அடுத்த பிரச்னை கிளம்பிவிட்டது. இந்தமுறை தியேட்டர் அதிபர்கள் என்ன சொல்ல போகிறார்களோ...?



    அடிமை எழுப்பிய புகழ்க்கோபுரம்- குதுப்மினார்- சுற்றுலாத்தலங்கள்!

    By: ram On: 08:32
  • Share The Gag


  •       அடிமை எழுப்பிய புகழ்க்கோபுரம்- குதுப்மினார்
    லகளவில் பாரம்பரியமிக்க இடங்களை பட்டியலிட்டுள்ள  யுனெஸ்கோ அவற்றை உலக பண்பாட்டுச் சின்னங்களாக அறிவித்துள்ளது. அதில் இந்தியாவில் 27இடங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் 23இடங்கள் பரிசீலனையில் இருக்கின்றன. இந்தியாவில் உள்ள பண்பாட்டுச் சின்னங்களை டூரிசம் பகுதியில் வாரம்தோறும் பார்த்துக்கொண்டு இருக்கிறோம். இந்தவாரம்....
     
    அடிமை எழுப்பிய புகழ்க்கோபுரம்- குதுப்மினார்
     
    டெல்லி குதுப்மினார். இந்தியாவின் மிகஉயர்ந்த கோபுரம். செம்மண்-பாறைக் கற்களால் உருவான அரிய பொக்கிஷம். இதன் உயரம் 72.5 மீட்டர் (சுமார் 238அடி). உயர்ந்து நிற்கும் குதுப்மினார், சுவாரஸ்ய வரலாற்றையும் உள்ளடக்கியது.

     
    டெல்லி மட்டுமின்றி தெற்காசியாவின் முதல் முஸ்லிம் ஆட்சியாளர், முதல் சுல்தான் என்ற பெருமைக்குரியவர் குத்புதீன் ஐபக். அடிமை வம்சத்தை தோற்றுவித்தவர். மத்திய ஆசியாவில் துருக்கிய மரபில் பிறந்த குத்புதீன் ஐபக் சிறுவயதிலேயே அடிமையாக விற்கப்பட்டார். இடையே கைமாறி, கடைசியில் முகமத்கோரியால் விலைக்கு வாங்கப்பட்டார். தனது வீரதீர செயல்பாடுகளால் கோரியின் முக்கிய தளபதியாக விளங்கினார். கோரியின் மறைவுக்குப் பிறகு டெல்லி சுல்தான் ஆனார்.டெல்லியில் உருவான முஸ்லிம் நினைவுச்-சின்னங்களுக்கு காரணகர்த்தா இவரே.
     
    முதலில் குவ்வாத்-உல்-இஸ்லாம் மசூதியை அமைத்த குத்புதீன் ஐபக், 1199ம் ஆண்டில் குதுப்மினாருக்கு அஸ்திவாரம் போட்டார். மக்களை தொழுகைக்கு அழைப்பதற்கு வசதியாக இந்த கோபுரத்தை எழுப்பத் தொடங்கினார். இதன் முதல் அடுக்கு முற்றுப்பெற்ற நிலையில் குத்புதீன் ஐபக் திடீரென மரணம் அடைந்தார். பிறகு ஆட்சிக்கு வந்த குத்புதீன் ஐபக்கின் மருமகன் சம்சுதீன் அல்துமிஷ், கோபுரத்தில் மேலும் மூன்று அடுக்குகளை அமைத்தார். 1211 முதல் 1236ம் ஆண்டு வரை கட்டடப்பணிகள் நடந்தன.
     
    இருப்பினும், கடைசி அடுக்கு 1386ம் ஆண்டில் பெரோஷா துக்ளக் என்பவரால் கட்டி முடிக்கப்பட்டது. இப்படி மூன்று மன்னர்களால் உயர்த்தப்பட்டதுதான் குதுப்மினார். ஒவ்வொரு அடுக்கிலும் உப்பரிகை அமைந்திருப்பது இதன் தனிச்சிறப்பு. குதுப்மினாரின் உச்சிக்கு சென்றடைய 379 படிகள் அமைக்கப்பட்டுள்ளன.
     
    குதுப்மினார் வளாகத்தில் உள்ள அல்துமிஷ் ஸ்தூபி, அலைய் தர்வாஷா மெயின்கேட், அலைய் மினார் போன்ற கட்டடங்களும் கலைநயம் மிக்கவை. ஏழு மீட்டர் உயரம் கொண்ட இரும்புத்தூண் ஒன்றும் இங்கு உள்ளது. நான்கரை அடி பருமனும் ஏழரை டன் எடையும் கொண்ட இந்த இரும்புத்தூண் இன்றளவும் சிறிதும்கூட துருப்பிடிக்காதது அதிசயமே.
     
    குதுப்மினாரையும் அதைச் சுற்றியுள்ள கட்டடங்களையும் உலகப் பண்பாட்டுச் சின்னங்களாக யுனெஸ்கோ அமைப்பு 1993ம் ஆண்டில் அறிவித்தது. நவம்பர்- டிசம்பரில் இங்கு குதுப் திருவிழா நடத்தப்படுகிறது. டெல்லி மாநில சுற்றுலாத்துறை சார்பில் 3நாட்கள் நடைபெறும்  இந்த  விழா, இசை - நடனம் - நாட்டியம்  என அமர்க்களப்படுகிறது.
     
    அடிமை உருவாக்கிய அற்புத கோபுரம் குதுப்மினார்,தன்னைக் காண்போரையும் அடிமையாக்கி விடுகிறது, வனப்பாலும் வசீகரத்தாலும்..!

    இந்தி, தமிழ் உட்பட 5 மொழிகளில் ஆன்லைனில் படிக்க புதிய திட்டம்!

    By: ram On: 07:55
  • Share The Gag






  •  இந்தியாவின் உயர் கல்வி துறையில் தற்போதுள்ள புதிய சவால் தரமான கல்விதான். நூற்றுக்கணக்கான பல்கலைக்கழகங்கள், ஆயிரக்கணக்கான பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகள் உருவாகியுள்ளன. ஆனால், அதற்கு ஏற்றவாறு உயர்கல்வியில் பெரிய அளவில் தரம் இல்லை. உயர்கல்வி துறை தரம் மேம்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கையை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் எடுத்து வருகிறது. இதற்காக தேசிய தொழில்நுட்ப வழி கல்வி மேம்பாட்டு திட்டம் (என்பிடிஇஎல்) 2003ல் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் இலவசமாக அனைத்து வகையான தரமான பாடத்திட்டங்கள் வழங்குவதே முக்கிய நோக்கம். 

    http://nptel.iitm.ac.in  மற்றும் http://.youtube.com/iit  என்ற இணையதள முகவரியில்  எளிமையாக புரிந்து கொள்ளும் வகையில் பாடங்கள் உள்ளன. வீடியோவிலும் கிடைக்கிறது. முதல்நிலையில் பி.இ பிரிவில் கம்ப்யூட்டர், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், சிவில் உள்ளிட்ட அனைத்து பாடத்திட்டங்களும் ஆங்கிலத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது, மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மாணவர்கள் தெளிவாக புரிந்துகொள்ளும் வகையில் பயனுள்ளதாக இருக்கிறது. பேராசிரியர்கள் பற்றாக்குறையாக உள்ள பெரும்பாலான கல்லூரி மாணவர்கள் இந்த வசதி மூலம் எளிமையாக படித்து அறிவுத்திறனை மேம்படுத்திக்கொள்ள முடியும்.

    தற்போது பல்வேறு புதுமைகள் புகுத்தப்பட்டு வருகிறது. இதற்கு யி96 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 700 பாடங்கள் இணையதளம் வழியாக இலவசமாக படிக்க முடியும். 14,000க்கு மேற்பட்ட வீடியோக்களும் இடம் பெற்றுள்ளன. இந்த இணையதளம் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை முன்னேறி வருகிறது. இதில் 80 சதவீதம் பேர் இந்தியர்கள். அமெரிக்கர்கள் 5 சதவீதமும், மற்ற நாடுகளை சேர்ந்த 15 சதவீதம் பேரும் பயன்படுத்துகின்றனர்.

    இத்திட்டத்தின் 4வது நிலை 2014ல் தொடங்குகிறது. இதில், முக்கிய அங்கமாக இதுவரை அளிக்கப்பட்டு வரும் மொத்த பாடப் திட்டங்களும், பயிற்சி முறைகளும் பிராந்திய மொழிகளில் அளிக்கும்போது, மாணவர்கள் எளிதில் புரிந்து கொண்டு அறிவுதிறனை மேம்படுத்திக்கொள்ள முடியும் என்று ஐஐடி பேராசிரியர்கள், இத்திட்டத்தின் நிர்வாகிகள் மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளனர்.

    இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் பி.இ பாடத்திட்டங்களை மொழிபெயர்ப்பு செய்து இணையதளத்தில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பணியை ஐஐடிக்கள் தொடங்கவுள்ளது. இதுதவிர, கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு அதற்கான பாடத்திட்டங்களை ஆன்லைனில் கிடைக்கும் வகையில் புதிய திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

    இதுகுறித்து என்பிடிஇஎல் திட்ட தேசிய ஒருங்கிணைப்பாளரும், சென்னை ஐஐடி பேராசிரியருமான மங்கல சுந்தர், திட்ட அலுவலர் உஷா நாகராஜன் கூறியதாவது:
    மாணவர்கள் உயர்கல்வியை கற்கவும், தொடர்ந்து புதிய தொழில்பயிற்சிகளை பெறவும் ஆன்லைன் மூலம் இலவசமாக பாடம் நடத்தப்படுகிறது.  முதல் நிலையில் பி.இ,  மேலாண்மை படிப்புகள் தொடர்பாக 265 பாடங்கள் பெற வழி வகுக்கப்பட்டது. தற்போது 650க்கும் மேற்பட்ட பாடங்கள் இணையதளத்தில் பெற முடியும். ஆண்டுதோறும் 200 புதிய பாடத்திட்டங்களை  சேர்க்க உள்ளனர்.

    அடுத்த கட்டமாக பிராந்திய மொழிகளில் பொறியியல், மேலாண்மை உள்ளிட்ட பாடங்களை இணையதளம் மூலம் அளிக்க முயற்சித்து வருகிறோம். முதல்கட்டமாக இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் இந்த வசதியை தர முடிவு செய்துள்ளோம். விரைவில் இதற்கான மொழிபெயர்ப்பு பணிகள் தொடங்கும். இதற்கு அனைத்து கல்லூரிகள், பல்கலைக்கழக பேராசிரியர்களின் பங்களிப்பு முக்கியம்.

     இதுதவிர, திறன்மேம்பாட்டு பயிற்சிகளை வழங்கவுள்ளோம். பிராந்திய மொழித்திட்டத்தின் மூலம் பொறியியல் படிக்கும் 70 சதவீத மாணவர்கள் பயன்பெற முடியும். அறிவியல் மற்றும் கலை கல்லூரி மாணவர்கள் பயன்பெறும் வகையில் அவர்களுக்கான பாடத்திட்டங்களையும் இணையதளம் மூலம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  மேலும், என்பிடிஇஎல் திட்டத்தின் கீழ் புதிய சான்றிதழ் படிப்புகள் தொடங்கவுள்ளன. இதில் அனைத்து பொறியியல் மாணவர்களும் சேரலாம்.  இவ்வாறு அவர்கள் கூறினர்.

    விழிப்புணர்வு ஏற்படுத்த ஐஏஎஸ் அதிகாரி நியமனம்

    இந்த பயிற்சி திட்டங்கள் குறித்து நகரம் மற்றும் கிராமப்புற மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சமீபத்தில் ஐஏஎஸ் அதிகாரி பிரவின் பிரகாஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.  ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள தொழில்நுட்ப இயக்குநர் அல்லது கல்வித்துறை செயலாளர்கள் மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கருத்தரங்கம், துண்டுபிரசுரங்கள் அளித்தல், கலை நிகழ்ச்சிகள் மூலம் பல்வேறு நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளது.

    எக்ஸ்ட்ரா தகவல்

    என்பிடிஇஎல் திட்டத்தில் 2008ம் ஆண்டில் 41,42,726 பார்வையாளர்கள் இருந்தனர். ஒரு சந்தாதாரர்கள் கூட இல்லை. இப்போது 9 கோடியே 74 லட்சத்து 97 ஆயிரத்து 697 பார்வையாளர்கள் உள்ளனர். 1,98,041 பேர் சந்தாதாரர்களாக இருக்கின்றனர்.

    பிசிசிஐயின் தலைவராக சீனிவாசன் போட்டியின்றி மீண்டும் தேர்வு!

    By: ram On: 07:41
  • Share The Gag


  • கிரிக்கெட் வாரியத்தின் வருடாந்திர பொதுக்கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது.இதில் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது.இந்த தேர்தலில் வேறு எந்த நிர்வாகிகளும் வேட்பு மனுதாக்கல் செய்யாத நிலையில் சீனிவாசன் பி.சி.சி.ஐ தலைவராக போட்டியின்றி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து என் சீனிவாசனுக்கு அடுத்த ஓராண்டு காலம் பதவி நீட்டிக்கப்பட்டுள்ளது.



    sep 29 - b c c i srinivasan

     


    இன்று காலை சென்னையில் நடைபெற்ற பிசிசிஐயின் பொதுக்குழு கூட்டத்தில் சீனிவாசன் போட்டியின்றி மீண்டும் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். தலைவர் பதவிக்கு சீனிவாசனை எதிர்த்து வேறு யாரும் போட்டியிடவில்லை. கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக தற்போது 3வது முறையாக சீனிவாசன் தேர்ந்தெடுகப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. எனினும் தற்போது சீனிவாசனால் பிசிசிஐ தலைவராக உடனடியாக பதவியேற்க முடியாது. ஏனெனில் கிரிக்கெட் சூதாட்ட சர்ச்சை விவகாரத்தில் சீனிவாசன் சிக்கியுள்ளதால் உச்சநீதிமன்றம் அவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டாலும் உடனடியாக பதவி பொறுப்பை ஏற்ககூடாது என்று நிபந்தனை விதித்துள்ளது. பீகார் சங்கம் தொடர்ந்துள்ள வழக்கு முடியும் வரை சீனிவாசன் பொறுப்பை ஏற்றுக்கொள்ள முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.



    இதற்கிடையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தேர்தல் முறைப்படியே நடந்துள்ளதாக ராஜூவ் சுக்லா தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படியே பிசிசிஐ தேர்தல் நடைபெற்றுள்ளதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வந்தவுடன் சீனிவாசன் தலைவராக பொறுப்பேற்பார் என்றும் கூறினார். இதனிடையே கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் மத்திய மண்டல தலைவராக ராஜூவ் சுக்லா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


    N Srinivasan re-elected BCCI president;


    ***********************************


    Narayanaswamy Srinivasan will be elected unopposed as president of the Board of Control for Cricket in India (BCCI) for a third year at its Annual General Meeting (AGM) in Chennai on Sunday alongwith all other office bearers.Srinivasan, however, will know Monday whether he can take charge or not only after the Supreme Court decides Monday on the petition filed by the secretary of the Cricket Association of Bihar.

    கடவுள் பக்தி (நீதிக்கதை)!

    By: ram On: 07:06
  • Share The Gag



  • ஒரு ஊரில் கடவுள் மீது அதிக பக்திக் கொண்ட ஒருவன் இருந்தான்.அவன் பெயர் முருகன்.அவனுக்கு நாதன் என்னும் நண்பன் ஒருவன் இருந்தான்.

    நாதன் நாத்திகவாதி.கடவுள் என்று ஒன்றும் இல்லை என்று சொல்லித் திரிபவன்.

    ஒரு நாள் நாதன்,முருகனிடம் ' நீ கடவுளை எனக்குக் காட்டு....நான் ஒப்புக்கொள்கிறேன் ' என்றான்.

    என்னுடன் இரு.நான் உனக்கு கடவுளைக் காட்டுகிறேன் என்றான் முருகன்.

    அதன்படியே நாதன் முருகன் வீட்டிற்கு வந்தான்,பல மணிநேரம் ஆகியும் இறைவன் வரவில்லை.

    நாதன், முருகனிடம் ' பசிக்கிறது என்றான்.

    நீ சொல்வது பொய்- என்றான் முருகன்.

    இல்லை உண்மையிலேயே எனக்கு பசிக்கிறது.

    அப்படியானால் எனக்கு பசியைக் காட்டு.

    பசியை எப்படி காட்டமுடியும்.

    அதன் நிறம்.

    பசிக்கு ஏது நிறம்.

    அதன் குணம்.

    குணம் இல்லை.

    உன்னால் உன் பசியைக் காட்டமுடியவில்லை.ஏன்.?

    அது வந்து....அது வந்து..

    எப்படி பசி என்று ஒன்று இருந்தும் உன்னால் அந்தப் பசியை காட்டமுடியவில்லையோ அது போன்று தான் கடவுள் என்று ஒருவர் இருந்தும் அவர் புற உருவத்தைக் காட்டமுடிவதில்லை.

    கடவுள் மீது பக்தி உள்ளவர்கள் மட்டுமே அந்த இறைவன் இருப்பது உணரமுடியும் என்றான் முருகன்.

    நாதனுக்கும் கடவுள் நம்பிக்கை ஏற்படத் தொடங்கியது.