Saturday, 27 September 2014

சர்க்கரை நோய் போக்கும் சிறுகுறிஞ்சான்…!

By: ram On: 20:35
  • Share The Gag
  • சிறு குறிஞ்சான் மூலிகை சர்க்கரை வியாதிக்கு மிகச்சிறந்த மருந்து. இது வேலிகளில் கொடியாக படரும். கசப்புச் சுவை உடையது. இலை சிறிதாகவும், முனை கூர்மையாகவும் மிளகாயிலை போன்று காணப்படும். மலையைச் சார்ந்த காடுகளில் இது அதிகம் வளர்கிறது. இத்தகைய தாவரங்களுக்கு சர்க்கரை கொல்லிகள் என்று தமிழில் சொல் வழக்கு உண்டு. முழுத்தாவரமும் மருத்துவகுணம் கொண்டது. இலைகள், விதைகள், வேர் மருத்துவ குணம் கொண்டவை.

    சர்க்கரைக் கொல்லி :

    சமீப காலமாக இந்தியா மற்றும் ஜப்பானில் ஜிம்னீமா தொடர்பாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் விளைவாக நீரிழிவு நோயினை இயற்கையாக கட்டுப்படுத்த ஜிம்னிமா இலைகள் பெரிதும் பயனுள்ளவை என்பது கண்டறியப்பட்டுள்ளது. மருத்துவ ஆய்வுகளில் நீரிழிவு நோயினால் அவதிப்படுபவர்களுக்கு குறைவான இன்சுலின் தேவைப்படுவது தெரியவந்துள்ளது. இலைகள் நாக்கின் இனிப்பு சுவைமொட்டுக்களை தற்காலிகமாக செயல் இழக்கச் செய்து அதற்கான ஆர்வத்தினைத் தடுத்து செயல்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    இலைகள் மிக முக்கிய மருத்துவ பயன் கொண்டவை. நீரிழிவு நோயினை தடுக்க முக்கிய மருந்தாக இந்தியாவில் நெடுங்காலமாக பயன்படுத்தப்படுகிறது. இதிலுள்ள ஜிம்னீமிக் அமிலம் சர்க்கரைக்கான ஆசையினை கட்டுப்படுத்துகிறது. நாவிலுள்ள உணர்ச்சி மொட்டுக்களை தற்காலிகமாக செயல் இழக்கச் செய்கிறது. மேலும் கணயத்தில் உள்ள செல்களை புத்துயிர்க்கச் செய்து இன்சுலின் சுரப்பினை மேம்படுத்துகிறது. எடை குறைக்க உதவுகிறது.

    விஷக்கடி போக்கும் :

    வண்டு, பூரான், செய்யான் செவ்வட்டை முதலியவற்றின் விஷங்கள் உடலில் தங்கினால் அதன் மூலம் பலவித வியாதிகள் வரும். இதற்கு சிறுகுறிஞ்சான் இலையில் மிளகு 5 வைத்து அரைத்து சுண்டக்காய் பிரமாணம் இருவேளை சாப்பிட்டால் அனைத்து விஷ ரோகமும் போய்விடும். ஆனால் விடாமல் ஒரு மண்டலம் சாப்பிட வேண்டும். கடுகு, புளி சேர்க்காமல் பத்தியம் இருக்க வேண்டும். உடல்மேல் வரும் தடிப்பு, பத்து, படை, இவைகளுக்கு இதன் இலையை அரைத்து பூசி வர அவை மறைந்துவிடும். ரத்தத்தை சுத்தம் செய்து உடலை வனப்பாக வைக்கும். (Gymnema) நீரிழிவு உள்ளவர்கள் சக்கரைகொல்லி எனப்படும் சிறுகுறிஞ்சா இலையை உண்பதாலும் நிவாரணம் பெறலாம். இது இன்சுலின் என்னும் ஓமோன் சுரக்கப்படுவதைத் தூண்டி இரத்தத்தில் குளுக்கோசின் அளவு அதிகரிப்பதைக் கட்டுபடுத்த உதவுகிறது. சிறுகுறிஞ்சா 2,3 இலையைக் காலையில் பச்சையாகச் சப்பிச் சாப்பிடலாம். கறியாக அல்லது வறை செய்தும் உண்ணலாம்.

    இளையராஜாவை உச்சக்கட்டமாக அவமானப்படுத்திய மிஷ்கின்!

    By: ram On: 20:23
  • Share The Gag
  • என் அப்பாவை விட நான் மிகவும் மதிப்பவர் இளையராஜா தான்’ என்று சில பேட்டிகளில் மிஷ்கின் கூறியிருந்தார். ஆனால் சமீபத்தில் அவர் மக்களிடையே நேர்காணல் நடத்தினார்.

    அதில் ஒருவர் ‘இளையராஜா அவர்களிடம் ஏன் அடுத்த படத்தில் இணைந்து பணிபுரியவில்லை’ என்று கேட்டார்.

    அதற்கு அவர் ‘இளையராஜா இன்னும் சில நாட்களில் இறந்து விடுவார், பிறகு என்ன செய்வது’ என்று கூறி அங்கு கூடியிருந்த பலரையும் சங்கடப்படுத்தினார்.

    “ஜீவா” கிரிக்கெட் வீரனின் மற்றொரு ஜீவன் - திரைவிமர்சனம்!

    By: ram On: 12:38
  • Share The Gag
  • கிரிக்கெட் ரசிகர்களுக்கு இப்படம் ஒரு ட்ரீட் தான்.

    தன்னுடைய படங்களில் எப்போதும் ஒரு சாதாரண மனிதனின் இயல்பு வாழ்க்கையில் நடக்கும் சின்ன சின்ன சம்பவங்களையே படமாக எடுக்கும் சுசீந்திரன் இந்த முறை கையில் எடுத்திருப்பது கிரிக்கெட். நம் தமிழக மண்ணில் கிரிக்கெட் ஒரு சாதாரண இளைஞனின் வாழ்க்கையில் எப்படி விளையாடுகிறது என்பதை மிக நெருக்கமாக படம் பிடித்திருக்கிறார் .

    மிக இயல்பாக நாயகனுக்கு கிரிக்கெட் சிறு வயதில் இருந்து அவனோடு எப்படி ஒட்டிப்போகிறது என்பதை படம் துவங்குவதில் மிக அழகாக சொல்லிவிட்டு, வழக்கமான ஒரு காதல் எபிசோடை ரொம்பவும் போட்டு திணிக்காமல், சின்னதாக ஒரு பிரேக் விட்டு பின்பு தொடர்கிறார்.

    கிரிக்கெட்டையும் அதனால் ஏற்படும் சாதாரண குடும்பத்து பிரச்சினைகளையும், கிரிக்கெட்டில் சாதிக்க நினைக்கும் சாதாரண குடும்பத்து இளைஞர்கள் எப்படி எல்லாம் ஓரங்கட்டபடுவார்கள் என்பதை தைரியமாக சொல்லிவிட்டு, கிரிக்கெட் நட்பையும் அந்த நட்பின் பிரிவையும் அழுத்தமாக சொல்லி நெகட்டிவாக ஒரு எண்டு கார்டு போடாமல் பாசிட்டிவாக படத்தை முடித்து கைதட்டு வாங்கிவிட்டார் சுசீந்திரன்.

    “ஜீவா” வாக நடித்திருக்கும் விஷ்ணு விஷால் அப்படியே இந்த கதாபாத்திரத்துக்கு பொருந்திவிட்டார். நல்ல விளையாடுகிறார் [அவரும் ஒரு நிஜ கிரிக்கெட்டர்] நல்ல நடிக்கவும் செய்திருக்கிறார். இமான் பின்னணி இசையிலும் பாடல்களிலும் [ஒரே ஒரு பாடலை தவிர] பிரமாதப்படுத்தி இருக்கிறார்.

    ஒளிப்பதிவு மதி கிரிக்கெட் விளையாட்டை படம் பிடிப்பதில் இருக்கும் சிரமங்களை துளியும் திரையில் தெரியாமல் மிக நேர்த்தியாக படம் பிடித்து இருக்கிறார்.

    கதாநாயகி ஸ்ரீ திவ்யா பள்ளிக்கு செல்லும் மாணவியாக, கல்லூரி மாணவியாக, வேலைக்கு செல்லும் பெண்ணாக பொருத்தமாக இருக்கிறார்.

    கிரிக்கெட்டில் திறமையும் வேகமும் மட்டும் இருந்தால் போதாது அதுக்கு வேற ஒரு குடியில பிறந்திருக்கணும் என்பதையும், கண்ணுக்கு தெரிந்த மனித விஷக்கிருமிகள் இன்னும் எத்தனையோ திறமைசாலிகளை ‘எப்படி இல்லாமல் ஆக்குகின்றனர்’ என்பதை வெளிச்சம்போட்டு காட்டி இருக்கும் படம்தான் “ஜீவா”.

    மொத்தத்தில் “ஜீவா” கிரிக்கெட் வீரனின் மற்றொரு ஜீவன்

    இரவில் பாதுகாப்பான டிரைவிங்குக்கு சில டிபஸ்...

    By: ram On: 12:26
  • Share The Gag
  • பகல் நேரங்களை விட இரவு நேரங்களில் வாகனம் ஓட்டும்போது வேகத்தையும்,தூரத்தையும்கணிப்பதில் பல சிரமங்கள் ஏற்படுகின்றன.தவிர,எதிரே வரும் வாகனங்களின்ம முகப்புவிளக்குகளின் வெளிச்சம் நம் கண்களை சில வினாடிகள் இருளாக்கி விடும்.இதனால்,இரவுநேரங்களில் அதிக விபத்துக்கள் நடக்கின்றன.பகல் நேரத்தைவிட இரவு நேரத்தில்,விபத்துக்கள் மூன்று மடங்கு அதிகம் நிகழ்வதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
    பகல் நேரத்தை போன்று இரவு நேரங்களில் வாகன ஓட்டிகளுக்கு போதிய வெளிச்சமும்,பார்வைதிறனும் கிடைப்பதில்லை.வாகனத்தின் முகப்பு விளக்குகள் குறைந்த தூரத்திற்கு மட்டுமேவெளிச்சத்தை தருகின்றன.இதனால்,இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் சாலையை கணித்துஓட்டுவதில் பல்வேறு சிக்கல்கள் எழுகின்றன. எனவே,இரவு நேர பயணங்களில் டிரைவர்கள் மிகவும் விழிப்புடன் செயல்படுவதற்கான சில முன் யோசனைகள்...

    •கார்களில் இரவு நேர பயணம் செல்வதை பெரும்பாலும்,தவிர்த்து விடுங்கள்.தவிர்க்க முடியாதகாரணங்களால் செல்லும்போது,டிரைவர் இருந்தாலும் கார் ஓட்ட தெரிந்த மற்றொருவர் காரில் இருப்பது அவசியம்.அவசர சமயங்களிலோ அல்லது டிரைவருக்கு அயர்ச்சி ஏற்பட்டாலோமற்றொருவர் காரை ஓட்டலாம்.

    •கார்களில் அடிக்கடி இரவு பயணங்கள் செல்லும் தேவை இருந்தால்,வெள்ளை நிற காரில் செல்வதுபாதுகாப்பானது.கார் வாங்கும்போதே இதை நினைவில் கொள்ளுங்கள். இரவில் சாலை ஓரங்களில்நிறுத்தினாலோ அல்லது இருளான பகுதிகளில் செல்லும்போதோ பின்னால் வரும் வாகன ஓட்டிகள்மற்றும் எதிரே வரும் வாகன ஓட்டிகளுக்கு வெள்ளை நிறம் கொண்ட கார் தெளிவாக தெரியும்.

    •பவர் ஸ்டியரிங் மற்றும் அதிக எஞ்சின் திறன் கொண்ட கார்களை ரத்த அழுத்தம்,சர்க்கரை வியாதி உள்ளவர்கள் இரவில் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும்.

    •இரவு நேர பயணத்தின்போது முகப்பு கண்ணாடிகள்,முகப்பு விளக்குகள்,பின்பக்கமுள்ள எச்சரிக்கைவிளக்குகளை துடைத்து சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

    •முகப்பு விளக்குகள் எதிரில் சரியான திசையில் ஒளிரும் வகையில் பொருத்தி இருக்கவேண்டும்.இல்லையென்றால் உங்களுக்கு மட்டுமல்ல எதிரில் வாகன ஓட்டிகளுக்கும் சிரமத்தைஏற்படுத்தும்.

    •மது அருந்திவிட்டு இரவில் வாகனம் ஓட்டுவதை முற்றிலும் தவிர்த்து விடுங்கள்.ஆல்கஹால் தரும் ஒரு சில மணி நேர சந்தோஷம்,ஒரு சில வினாடிகளில் உங்கள் உயிரையே பறித்துவிடக்கூடும்.

    •முன்னால் செல்லும் வாகனத்துக்கும்,உங்கள் வாகனத்துக்கும் இடையே போதுமான இடைவெளி இருக்குமாறு பார்த்து வாகனத்தை ஓட்டுங்கள்.மேலும்,வாகனத்தை பின்தொடரும்போதும்,எதிரில் வாகனம் வரும்போதும் முகப்பு விளக்கை டிம் செயது ஓட்டுங்கள்.

    •தொடர்ந்து கார் ஓட்டுவதை தவிர்த்து விடுங்கள்.குறிப்பிட்ட தூரத்திற்கு ஒரு முறை காரை நிறுத்திடீ,காபி அல்லது கூல் டிரிங்ஸ் குடித்து உடலை ரிலாக்ஸ் செய்து கொள்ளுங்கள்.

    •எதிரில் அதிக வெளிச்சத்துடனும்,அதிவேகமாகவும் வாகனங்கள் வருவதை உணர்ந்தால்,வேகத்தை குறைத்து கவனமாக ஓட்டுங்கள்.
    நள்ளிரவில் தூக்கம் வருவதாக தோன்றினால்,பார்க்கிங் லே-பை அல்லது மக்கள் நடமாட்டமிக்கபகுதிகளில் காரை நிறுத்திவிட்டு குட்டி தூக்கம் போடுங்கள்.அதன்பின்,முகத்தை தண்ணீரில் நன்றாக கழுவிக்கொண்டு பயணத்தை தொடர்வது நல்லது.

    •எதிர் திசையில் வாகனம் வருவது தூரத்தில் தெரிந்தாலும்,முன்னாள் செல்லும் வாகனத்தைஅவசரப்பட்டு ஓவர்டேக் செய்ய வேண்டாம்.இரவு நேரத்தில் எதிரில் வரும் வாகனம் தொலைவுமற்றும் வேகத்தை கணிப்பது கடினம்.இதுபோன்று ஓவர்டேக் செய்வதால்தான் அதிக விபத்துக்கள் நிகழ்கின்றன.
    காரில் இரவு பயணம் செல்லும்போது மேற்கண்ட சில எளிய வழிமுறைகளை பின்பற்றினால்,உங்கள் இரவு பயணமும் மகிழ்ச்சியானதாகவே அமையும் என்பதில் எள் அளவும் ஐயமில்லை

    கருங்காலி என்ற சொல் எப்படி வந்தது?

    By: ram On: 00:52
  • Share The Gag
  • "கருங்காலி" என்ற சொல்லின் தோற்றம் இன்று வரை விவாதத்திற்கு உட்பட்டதாகவே இருந்துவருகிறது.

    ஆங்கில மொழி வல்லுனர்களுக்கும் தமிழ் மொழி வல்லுனர்களுக்கும் இடையில் ஒரு அர்த்தம் செறிந்த சொல் யுத்தம் பல ஆண்டுகளாகவே நடைபெற்று வருகிறது.

    நம்பிக்கை துரோகிகளைக் குறிக்கப் பயன்படும் ஆங்கில சொல்லான “Black Legs” என்பதன் நேரடி மொழி பெயர்ப்புதான் நாம் தமிழில் பயன்படுத்தும் கருங்காலி என்ற சொல்லாகும் என்பது ஆங்கில மொழி வல்லுனர்களின் வாதமாகும்.

    இதை நிரூபிக்க அவர்கள் வரலாற்றிலிருந்து ஒரு சம்பவத்தை நினைவு படுத்துகிறார்கள்.ஐரோப்பாவில் ஏற்பட்ட தொழிற்புரட்சிக்கு பின்பு, காரல் மார்க்ஸின் சிந்தாந்தம் அங்கே வேகமாக பரவத்தொடங்கியது. தொழிலாளர்களுக்கென்று சங்கங்கள் உருவாகத்தொடங்கின. அப்படிப்பட்டதொரு காலகட்டத்தில் அங்கே ஒரு நிலக்கரி தொழிற்சாலையில் வேலை நிறுத்தப்போராட்டம் தொடங்கியது.

    இப்போது செய்வதைப் போலவே அப்போதும் முதலாளித்துவம் போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்வதற்காக தொழிலாளர்களை விலைக்கு வாங்கத் தொடங்கியது.போராட்ட காலகட்டத்தில் யாரெல்லாம் வேலைக்கு வருகிறார்களோ அவர்களுக்கெல்லாம் இரண்டு சம்பளம் என்று அறிவித்தது. சில தொழிலாளர்களும் இந்த அறிவிப்பால் மயங்கி தொழிற்சாலையின் பின்வாசல் வழியாக வேலைக்கு சென்றுவிட்டு, வேலை முடிந்ததும் முன்வாசலில் நடக்கும் போராட்டத்தில் ஒன்றும் தெரியாத பிள்ளைகளைப் போல வந்து உட்கார்ந்து கொண்டார்கள்.

    போராட்டக் குழுவின் தலைவருக்கு சிலர் போராட்டத்திற்கு துரோகம் செய்துவிட்டு இப்போது போராட்டத்தில் கலந்து கொண்டிருக்கிறார்கள் என்பது தெரிந்து விடுகிறது. அவர்களை அடையாளம் காண அவர் ஒரு யுத்தியை கண்டுபிடித்தார். அது ஒரு நிலக்கரி தொழிற் சாலையாக இருந்ததால் தொழிற்சாலைக்குள் சென்று திரும்பியவர்களின் கால்களில் எப்படியும் கரி பிடித்து கருப்பாகத்தானே காட்சியளிக்கும்? எனவே அவர்களை மிக எளிதாக அவர் அடியாளம் கண்டு பிடித்து விட்டார்.

    அவர்கள் தொழிலாளர்களாக இருந்து கொண்டு தொழிலாளர் இனத்திற்கே துரோகம் செய்ததால் நம்பிக்கை துரோகம் செய்பவர்களை “Black Legs” என்று அதுமுதல் ஆங்கிலேயர்கள் அழைத்து வருவதாக ஆங்கில மொழி வல்லுனர்கள் கூறி வருகின்றனர்.

    எனவே அந்த ஆங்கில மொழிச் சொல்லிலிருந்துதான் நாம் நமது கருங்காலி என்ற சொல்லை மொழி பெயர்த்துப் பெற்றுக்கொண்டோம் என்பது அவர்கள் வாதம்.

    ஆனால் உண்மை அதுவல்ல. தமிழ் நாட்டில் தொன்று தொட்டு கோடரிக்கு கருங்காலி என்ற மரத்திலிருந்துதான் கைப்பிடி செய்து போடுகிறோம். மர இனத்தில் பிறந்து தன் மர இனத்தையே அழிக்கப் பயன்படும் ஆயுதமான கோடரிக்கு கைப்பிடியாய் மாறிப்போன அவலம் இந்த கருங்காலி மரத்திற்குத்தான் ஏற்பட்டது. அதனால்தான் தமிழர்கள் நம்பிக்கைத் துரோகிகளை கருங்காலி அழைக்கின்றனர்.

    வேண்டுமேயானால் ஆங்கிலேயர்கள் நம் சொல்லான கருங்காலி என்ற சொல்லிலிருந்து அவர்கள் சொல்லான “Black Legs” என்ற சொல்லை பெற்றிருக்கலாம்.


    ஐரோப்பாவில் தொழிற்புரட்சி ஏற்படுவதற்கு முன்பிருந்தே இங்கு கோடரிகளுக்கு கருங்காலி மரத்தால்தான் கைப்பிடி செய்யப்படுகிறது என்ற வரலாற்று உண்மையை ஏன் ஆங்கிலேயர்கள் மறுக்கிறார்கள்? தமிழன் கண்டறிந்த எல்லாவற்றையும் தான் கண்டறிந்ததாய் மார் தட்டிக் கொள்பவர்கள் இதை மட்டும் விட்டு வைக்கவா போகிறார்கள்?

    இதே போன்றுதான் தேனிலவு என்ற சொல்லும்.
    ஆங்கிலத்தில் அதை அப்படியே மொழி பெயர்த்துக் கொண்டு அதை Honeymoon என்று அழைத்து வருகிறார்கள். இதுவும் தமிழில் இருந்து போன சொல்தான் என்பதை புரிந்து கொண்டால் நாம் நம் பலத்தை அறியலாம்.

    ‘மெட்ராஸ்’ வடசென்னையை ஒரு வலம் வரும் - திரைவிமர்சனம்!

    By: ram On: 00:40
  • Share The Gag
  • வடசென்னை பகுதியில் உள்ள ஒரு ஹவுசிங் போர்டில் வசித்து வருகிறார் கார்த்தி. இவரும் கலையரசனும் உயிர் நண்பர்கள். கார்த்தி ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்துவருகிறார். அதே ஏரியாவில் வசிக்கும் நாயகி கேத்ரீன் தெரேசாவும் கார்த்தியும் காதலிக்கிறார்கள்.

    இவர்கள் வாழும் ஏரியாவில் உள்ள சுவர் மீது இரு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் போட்டி போட்டு விளம்பரம் செய்வது வழக்கம். இதனால் இரு கட்சிகளுக்கு இடையே பல பிரச்சனைகள், அடிதடி ஏற்படுகிறது. இதில் பலர் பலியாகின்றனர். இந்த பிரச்சினைகள் காரணமாக கலையரசனின் தந்தை இறந்து விடுகிறார்.

    பிறகு அந்த சுவரில் எதிர் கோஷ்டியைச் சேர்ந்த கண்ணன், அவரது தந்தை படத்தைப் போட்டு விளம்பரம் செய்கிறார். பக்கத்து ஏரியாவில் இருந்து தங்கள் ஏரியா சுவரை சொந்தம் கொண்டாடும் கண்ணனின் கொட்டத்தை அடக்கத் துடிக்கும் அரசியல்வாதி மாரியின் உதவியுடன் அந்த சுவரைக் கைப்பற்றப் பார்க்கிறான் அன்பு.

    இதனால் இரு கும்பலுக்கும் பிரச்சினை ஏற்படுகிறது. இந்த பிரச்சினையில் கண்ணனின் மகன் கொலை செய்யப்படுகிறார். இதற்கு பழிக்குப் பழி வாங்கும் விதமாக அன்புவை கார்த்தியின் கண் முன்னே எதிர் கும்பல் கொலை செய்து விடுகின்றனர்.

    தன் உயிர் நண்பனை பறி கொடுத்த கார்த்தி அதற்கு காரணமாக இருந்தவர்களை பழி வாங்க நினைக்கிறார். ஆனால் காதலி கேத்ரீன் தெரேசா கார்த்தியை தடுக்கிறார்.

    இறுதியில் கார்த்தி நண்பனை கொலை செய்தவர்களை பலிவாங்கினாரா? கலையரசனின் லட்சியமான அந்த சுவரை கைப்பற்றினார்களா? என்பதே மீதிக்கதை.

    படத்தில் கார்த்தி, காளி என்னும் கதாபாத்திரத்திற்கு அற்புதமாக பொருந்தியிருக்கிறார். வடசென்னை பையனாகவே மாறி கதாபாத்திரத்திற்கு உயிரூட்டிருக்கிறார் கார்த்தி. குறிப்பாக இவரது உடல் அசைவும், பேசும் வசனங்களும் சிறப்பாக அமைந்துள்ளன. படத்திற்காக நிறைய உழைத்திருக்கிறார் கார்த்தி. காதல் காட்சிகளிலும், சண்டைக்காட்சிகளிலும் கார்த்தியின் நடிப்பு அருமை.

    முதல் படத்திலேயே அருமையான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் கேத்ரீன் தெரேசா. இவருடைய முகபாவனைகள் ரசிக்கும் படியாக இருக்கிறது. கலை என்னும் கதாபாத்திரத்தில் ரசிகர்களை கவர்கிறார். கார்த்தி நண்பனாக வரும் கலையரசன், அவரின் மனைவியாக வரும் ரித்விகா ஆகியோர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

    சந்தோஷ் நாராயணன் இசை படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்திருக்கிறது. பாடல்கள் அனைத்தும் மனதில் நிற்கின்றன. பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார். முரளி தனது ஒளிப்பதிவில் வடசென்னையை அழகாக படம் பிடித்து காட்டியிருக்கிறார். படத்தின் வசனங்கள், எடிட்டிங் மற்றும் பாட்டிற்கு நடன அமைப்புகள் அனைத்தும் சிறப்பாக அமைந்திருக்கின்றன.

    அட்டக்கத்தி படத்தை ஜாலியான கதையாக இயக்கிய ரஞ்சித், மெட்ராஸ் படத்தை சீரியசான கதையில் காதல் கலந்து உருவாக்கி வெற்றி கண்டிருக்கிறார். வட சென்னையில் உள்ள ஒரு சுவரை மையமாக வைத்து கதைக்கருவை உருவாக்கி, அதற்கு ஏற்றாற்போல் திரைக்கதையையும் அமைத்து ரசிகர்களின் ரசனைக்கேற்ப மெட்ராசை உருவாக்கிய ரஞ்சித்தை பாராட்டலாம்.

    மொத்தத்தில் ‘மெட்ராஸ்’ நல்ல மெட்ராஸ்.