தீபாவளிக்கு பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வரவுள்ள திரைப்படம் கத்தி.
விஜய் நடிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருக்கும் இத்திரைப்படம் ஏற்கனவே தயாரிப்பாளர் ராஜபக்சே உறவினர் என்ற சர்ச்சை உள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் கதையை என்னிடமிருந்து திருடிவிட்டார் என்று ஏ.ஆர். முருகதாசுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் மீஞ்சூர் கோபி மனு தாக்கல் செய்துள்ளார்.
தனது ஊரில் பன்னாட்டு நிறுவனம் ஒன்று தன் நிறுவனத்தைத் துவங்க அப்பாவி மக்களிடம் இருந்து நிலத்தை அடிமாட்டு விலைக்கு கையகப்படுத்தியது. இதை வைத்து 'மூத்த குடி' என்ற தலைப்பில் ஒரு கதையை எழுதினேன்.
இந்தக் கதையை கேட்டுவிட்டு பாராட்டிய ஏ.ஆர்.முருகதாஸ், சில திருத்தங்களைச் சொல்லி, கதையை இரண்டு ஹீரோ சப்ஜெக்ட்டாகவும் மாற்றச் சொன்னார். அதன்பின் என்னை இயக்குநராக வைத்து இந்தப் படத்தை தயாரிக்கவும் ஏ.ஆர்.முருகதாஸ் சம்மதித்தார்.
கதையை மேம்படுத்தும் வேலைகள் மட்டும் ஒன்றரை ஆண்டுகளாக நடைபெற்றது. ஆனால், அதன் பிறகு திடீரென்று அந்த வேலையை நிறுத்திவிட்டு 'என்னால் இப்போது இத்திரைப்படத்தைத் தயாரிக்க முடியாது' என்று சொல்லி ஏ.ஆர்.முருகதாஸ் ஒதுங்கிக் கொண்டார்.
அதன்பிறகு திடீரென்று நடிகர் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கும் 'கத்தி' திரைப்படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்குவதாக அறிவிப்பு வெளியானது. அது பற்றி நான் சினிமா ஆட்களிடம் விசாரித்தபோது 'கத்தி' திரைப்படத்தின் கதை நான் சொன்ன 'மூத்த குடி' கதைதான் என்று எனக்குத் தெரிய வந்தது.
எனவே நீதிமன்றம் இந்த விவகாரத்தில் தலையிட்டு இயக்குநர் முருகதாஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுபோல் 'கத்தி' திரைப்படம் வெளியாகும் முன் எனக்கு உரிய நிவாரணம் வழங்கவும் உத்தரவிட வேண்டும்” என்று மீஞ்சூர் கோபி தன் மனுவில் கூறியுள்ளார்.
இந்த வழக்கு பற்றி விசாரித்து உண்மை நிலையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க அட்வகேட் கமிஷனராக வழக்கறிஞர் சங்கரை நீதிமன்றம் நியமித்துள்ளது. 'மீஞ்சூர் கோபியும், ஏ.ஆர்.முருகதாஸும் தங்களது கதையின் நகலை இவரிடம் கொடுக்க வேண்டும். இரண்டும் ஒரே கதையா என்பதை வழக்கறிஞர் சங்கர் ஆய்வு செய்து நீதிமன்றத்திற்கு அறிக்கை அனுப்ப வேண்டும்' என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
0 comments:
Post a Comment