Wednesday, 22 October 2014

Tagged Under: , , ,

தந்தை பெரியார் - வாழ்க்கை வரலாறு

By: ram On: 02:12
  • Share The Gag



  • 1. இளமைப் பருவம்

    காவும் கழனியும் நிறைந்த காவிரி ஆற்றின் அரவணைப்பில் அமைந்திள்ள ஊர் ஈரோடு. மஞ்சளும், மாவும் செழித்த நகரம் ஈரோடு. யாரோடும் வம்பு பேச்மல் தானுண்டு தன் வேலையுண்டு என்று வாழ்ந்து வந்தார் வெங்கட்ட நாயக்கர்.

    வெங்கட்ட நாயக்கர் இளம் வயதிலேயே அப்பாவை இழந்தார். வசதியற்ற குடும்பம். எனவே, அவர் தனது பன்னிரண்டு வயதிலேயே கூலி வேலை பார்த்தார். கூலி பெற்றுத்தான் கூழ்கூடிக்க வேண்டிய நிலை. அவ்வளவு வறுமை. பதினெட்டு வயதில் அவருக்குத் திருமணம் நடைபெற்றது. மனைவி பெயர் சின்னத்தாயம்மை.

    வெங்கட்ட நாயக்கர் – சின்னத்தாயம்மை வாழ்க்கை வண்டி ஓடிற்று. வண்டிமாடு வைத்துப் பிழைத்தார். நிலை கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்தது. வண்டி மாட்டை விற்றார். அந்தப் பணத்தைக்கொண்டு சிறிய அளவில் பலசரக்குக் கடையொன்றைத் துவக்கினார். கணவருடன் சேர்ந்து அவரது மனைவி சின்னத்தாயம்மையும் உழைத்துப் பாடுபட்டார். நெல் குத்தி அரிசி வியாபாரம் செய்தார். உளுந்து, துவரை போன்ற பருப்பு வகைகள் உடைத்துக் கொடுத்தார். ஆமணக்கு விதையினின்று எண்ணெய் எடுத்து அதைக் காசாக்கினார். தம்பதிகள் இருவருமே சோம்பல் இன்றிப் பாடுபட்டார்கள். ஓய்வு இன்றி உழைத்தார்கள். நாளடைவில் கொடிகட்டிப் பறந்தார். சூரியனைக்கண்ட பனி விலகுவதுபோல் வறுமை அவர்களை விட்டு அகன்றது. செல்வமும் செழிப்பும் சேர்ந்தது.

    உழைப்பினால் உயர்ந்த உன்னத தம்பதிகள் அவர்கள்.

    வணிகப் பெருந்தகை வைணவ மத்தில் பெரிதும் ஈடுபாடு கொண்டார். பக்திப் பெருக்கினால் இராமாயணம், பாகவதம் போன்ற கதைகளைக் கேட்டு மகிழ்ந்தார். தமது இல்லத்திலேயே பாகவதர்களுக்கும், சாதுக்களுக்கும் விருந்து அளித்து அவர்களை வணங்கி மகிழ்ந்தார்.

    திருமணம் முடிந்த சில ஆண்டுகளில் இரண்டு குழந்தைகள் பிறந்து இறந்துவிட்டன. அதன் பின்னர் பத்து ஆண்டுகள் அவர்களுக்குக் குழந்தைபேறு கிட்டவில்லை. கோயில்களுக்குச் சென்று இறைவனைக் கும்பிட்டார்கள். இருவரும் விரதங்கள் மேற்கொண்டார்கள். அவர்களது பக்தி மேலும் வளரலாயிற்று.

    இந்தச் சூழலில் 1877 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28 ஆம் தேதி ஓர் ஆண் மகவு பிறந்தது. கிருஷ்ணசாமி என்று பெயரிட்டு அகமகிழ்ந்தார்கள். அதன் பிறகு 1879 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17 ஆம் தேதி இரண்டாவது மகன் பிறந்தான். அந்த மகனுக்கு இராமசாமி என்று பெயர் சூட்டி கொண்டாடினார்கள்.

    இராமசாமிக்கு இரண்டு தங்கைகள் உண்டு. அவர்கள் பொன்னுத்தாய -ம்மாள், கண்ணம்மாள் ஆவார்கள்.

    இராமசாமி சின்னபாட்டி வீட்டில் வளர்ந்தான். பாட்டி அவனை தத்துப்பிள்ளையாக தந்துவிடுமாறு வெங்கட்ட நாயக்கரிடம் கேட்டார். அவர் தர மறுத்துவிட்டார். என்றாலும் இராமசாமி அந்தப் பாட்டி வீட்டில்தான் வளர்ந்தான்.

    பாட்டி வீட்டில் இராமசாமி அடித்த லூட்டிகள் ஏராளம். பாட்டி கண்டிப்புடன் வளர்க்காமல் கனிவுடன் மட்டுமே வளர்த்தார்கள். தாய்ப்பால் கிடையாது. தினமும் இராமசாமி ஆட்டுப்பால் குடித்து வளர்ந்தான். பாட்டி வீட்டில் பெரும்பாலும் பழையதும், சுண்டக்கறியும்தான். உணவாக்க் கிடைத்தது. தின்பண்டம் வாங்கித்தின்பதற்கு வழி போதாது.

    இராமசாமிக்கு ஆறுவயது நிரம்பியது. பாட்டியின் வீட்டில் வாழ்ந்த பையன் கட்டுப்பாடின்றி ஊர் சுற்றித் திரிந்தான். யாருக்கும் அடங்காதவனாக மாறினான். பெற்றோர்கள் மனம் வருந்தினர். எனவே இராமசாமியை சின்னப்பாட்டி வீட்டினின்று அழைத்து வந்துவிட்டார்கள்.

    இராமசாமியை திண்ணைப் பள்ளிக்கூடத்தில் சேர்த்துவிட்டார்கள். பள்ளிக்கூடத்தில் அவன் போக்கிரி, குறும்புக்காரன் என்று பெயரெடுத்தான். படிப்பு அவனுக்கு வேப்பங்காயாய்க் கசந்தது. மற்ற பையன்களுடன் சண்டையிடுவான். சட்டென்று கோபத்தில் அவர்களை அடித்தும் விடுவான். அடிபட்ட மாணவன் ஆசிரியரிடம் முறையிடுவான்.

    இராமசாமியைத் திருத்தும் நோக்கத்துடன் ஆசிரியர் அவனிடம்,

    “இனி பிள்ளைகளை அடிப்பதில்லை” என்று ஆயிரம் தடவை எழுதிவா என்று தண்டனை வழங்குவார். இப்படி ஒன்றல்ல… இரண்டல்ல நூற்றுக்கணக்கான தடவைகள். இராமசாமி தண்ட எழுத்து வேலை (இம்போசிசன்) எழுதியது உண்டு.

    இராமசாமி பள்ளிக்கூடத்தில் படிக்கும்போது இடைவேளையின் போது தண்ணீர் குடிப்பதற்காக ஆசிரியர் வீட்டுக்கு போவதுண்டு. அவர்கள் வீட்டில் தண்ணீரை அண்ணாந்து குடிக்கச் சொல்வார்கள். அப்படிக் குடிக்கும்போது மூக்கில் தண்ணீர் சிந்தி இருமல் வந்துவிடும். சட்டை முழுவதும் நனைந்துவிடும். அதுமட்டுமல்ல, அவன் தண்ணீர் குடித்த தம்ளரை கழுவி எடுத்துச் செல்வார்கள். அது அவனுக்குப் பிடிக்கவில்லை. அப்புறம் அவன் ஆசிரியர் வீட்டில் தண்ணீர் குடிக்கச் செல்வதில்லை.

    பள்ளிக்கூடத்திற்கு அருகிலேயே கிறிஸ்தவர்கள், முஸ்லீம்கள் வாழ்ந்து வந்தார்கள். அவர்கள் வீடுகளில் தண்ணீர் வாங்கிக் குடித்தான் சிறுவன் இராமசாமி.

    பெற்றோர்கள் ஆசிரியர்கள் வீட்டில் மட்டும்தான் தண்ணீர் குடிக்கச் சொல்லியிருந்தார்கள். ஏனென்றால் அவர்கள் மட்டும்தான் சைவ உணவு சாப்பிடுபவர்கள். மற்றவர்கள் மாமிச உணவு சாப்பிடுபவர்கள். எனவே அங்கு தண்ணீர் வாங்கிக் குடிக்கத் தடை போட்டிருந்தனர் பெற்றோர். முஸ்லீம், கிறிஸ்தவ நண்பர்களின் வீட்டில் தண்ணீர் குடித்தது அவன் வீட்டாருக்குத் தெரிந்துவிட்டது. அதுமட்டுமல்ல, அவர்கள் கொடுத்த திண்பண்டங்களையும் அவன் வாங்கிச் சாப்பிட்டுவிட்டான்.

    செய்தி அப்பா, அம்மாவுக்கு தெரிந்துவிட்டது. செந்தேளை கொட்டியதுபோல் அவர்கள் துடித்துப் போனார்கள். கோபத்தால் முகம் சிவந்து போனார்கள். சிறுவன் இராமசாமியை அடித்தார்கள். மேலும் கடுமையாக தண்டனை வழங்கினார்கள்.

    இரண்டு கால்களிலும் விலங்குக்கட்டை போடப்பட்டது. இரண்டு தோள்களிலும் இரண்டு விலங்குகள் பூட்டப்பட்டன. இதைத் தூக்கிச் சுமந்து அவன் பள்ளி செல்ல வேண்டும். இப்படி பதினைந்து நாட்கள் விலங்கு பூட்டப்பட்டு துன்பத்திற்கு ஆளானான் இராமசாமி.

    இராமசாமி திண்ணைப் பள்ளிக்கூடத்தில் மூன்று ஆண்டுகள் படித்தான். பின்னர் இரண்டு ஆண்டுகள் ஆங்கிலப் பள்ளியில் படித்தான். படிப்பறிவு வளரவில்லை; பகுத்தறிவு வளர்ந்தது.

    பத்தாவது வயதிலேயே பகவானைப் பணிபவர்களைப் பார்த்து பரிகசிக்கத் தொடங்கினான் அவன். ஆனால், தந்தையைப் போல் தொழிலில் நாட்டம் இருந்தது. பார்த்தார் தந்தை; சிந்தித்தார். பிறகு சிறுவனின் பள்ளிப் படிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தார். அவனைத் தொழிலில் பழக்கினார். பன்னிரண்டாவது வயதிலேயே ‘தரகு’ வர்த்தகத்தில் அவன் தலைசிறந்து விளங்கினான்.

    கடையில் அவன் சுறுசுறுப்பாக வேலை செய்தான்.

    மூட்டைகளுக்கு விலாசம் போடிவது, சரக்குகள் ஏலம் போடிவது இவைதான் இராமசாமி செய்த வேலை ஆகும்.

    சிறுவன் பேச்சில் குறிப்பாக வியாபாரப்பேச்சில் கெட்டிக்காரன். யாரிடமும் விவாதம் செய்து வெற்றி பெறுவான். அவன் வீட்டில் எப்போதும் சாமியார்கள், புராணக்கதை சொலுபவர்கள். பிராமணர்கள், சமயப் புலவர்கள் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். அவர்கள் மகிழும் வண்ணம் விருந்து தடபுடளாக நடந்துகொண்டேயிருக்கும. இது சிறுவனுக்கு சற்றும் பிடிக்கவில்லை. காரணமில்லாமல் அவர்கள்மீது வெறுப்பு வளர்ந்தது. அதன் காரணமாக கடவுள்மீது வெறுப்பும், கசப்பும் வளர்ந்தது. கடவுள் இல்லை. ஆனால் இந்தக் கூட்டம் கடவுள் இருப்பதாகக் கற்பனை செய்து, வயிறு வளர்த்து வருகிறார்கள் என்று எண்ணினான்.

    எல்லாம் கடவுள் செயல். தலைவிதிப்படிதான் நடக்கும் என்பதை அவன் எதிர்த்தான். அப்படிச் சொல்பவர்களைப் பார்த்து கிண்டல் செய்வது அவன் வழக்கமாயிற்று.

    இராமசாமி தன் கடைக்குச் செல்லும் வழியில் இராமநாத ஐயர் என்பவர் ஒரு கடை வைத்திருந்தார். அவர் எல்லாம் விதிப்படிதான் நடக்கும் என்பதில் தீவிர நம்பிக்கைகொண்டவர். இராமசாமி அவரை மடக்க எண்ணினான். ஒரு நாள் அவர் கடையின் முன்பக்கம் நிழலுக்காகப் போடப்பட்டிருந்த தட்டியின் மூங்கில் காலைத் தட்டிவிட்டான். மூங்கில் தட்டி ஐயரின் தலையில் விழுந்துவிட்டது.

    “ஏன் இப்படி செய்தாய்?” என்று இராமநாத ஐயர் கோபித்துக் கொண்டார்.

    இராமசாமி புன்னகை செய்தான். தலைவிதிப்படி நடந்துள்ளது, எனவே தட்டி உங்கள் தலையில் விழுந்துவிட்டது. அப்புறம் “என்னை ஏன் திட்டுகிறீர்கள்” என்று சொல்லிவிட்டு சிட்டாய்ப் பறந்துவிட்டான் பன்னிரண்டு வயது சிறுவன் இராமசாமி.

    பள்ளியில் படிக்கும்போது பிற மத்த்தினர் வீட்டில் தண்ணீர் குடித்ததற்காகவும், தின்பண்டங்கள் சாப்பிட்டதற்காகவும் கைவிலங்கு, கால்விலங்கு போடப்பட்ட அந்தச் சிறுவன்தான் பின்னாளில் சுயமரியாதைச் சுடராக, பகுத்தறிவு பகலவனாக விளங்கினார்.

    தாழ்த்தப்பட்ட மக்களின் விலங்குகளை ஒடுப்பதற்காக அன்று அந்தச் சிறுவயதில் விலங்கு பூட்டப்பட்டாரோ என்னவோ?

    எப்போதும் பஜனையும், பக்திப் பாடல்களும், ஆழ்வரார் பாசுரங்களும், கதா காலட்சேபங்களும் நிறைந்த இல்லத்தில் இருந்து கேள்விகள் கேட்டுக்கேட்டு மக்களை சிந்திக்கச் செய்த சமூக சீர்திருத்தவாதியாக அந்தச் சிறுவன் பரிணாமித்தான்.

    அந்தச் சிறுவன்தான் ‘வெண்தாடி வேந்தர்’ என்று போற்றப்பட்டவர். விவேகமும், வீரமும் ஒருங்கே அமையப்பெற்றவர்.

    தேரோடும் வீதிகளில் சுற்றித் திரிந்த அந்தப் பையன்தான்
    ஊரோடு ஒத்துப்போகாமல், உயரிய சிந்தனைகளை
    முன்வைத்து தமிழர்களின் தலைவராய்
    உயர்த்தான் – அவர்தான் பெரியார்; ஈவெ.ரா. பெரியார்.

    பள்ளி வாழ்க்கையைப் போல் அவரது பகுத்தறிவு வாழ்க்கையும் சுவையானது.

    2. இல்லற வாழ்கை



    “கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது” என்பார்கள். பன்னிரண்டு வயதுச் சிறுவன் இராமசாமியின் வாழ்க்கையில் அது உண்மையாயிற்று.

    பள்ளிப்படிப்பு ஏறவில்லை. எனவே கடையில் வேலை செய்யப் பழக்கினார் தந்தை. அங்கு தனது பேச்சுத்திறத்தால் வாடிக்கையாளர்களைக் கவர்ந்தான் இராமசாமி. அவனது உற்சாகமான வார்த்தைகளால் வந்தவர்கள் வியப்படைந்தார்கள். ஐந்து ரூபாய் பொருளை எட்டு ரூபாய்வரை விலை ஏற்றி விற்கும் சாமர்த்தியம் இராமசாமிக்கு கைவந்த கலையாயிற்று.

    “சொலல்வல்லன் சோர்வுஇலன் அஞ்சான் அவனை
    இகல்வெல்லல் யார்க்கும் அரிது”
    என்ற குறளுக்கு ஏற்ப இராமசாமியின் வாதத்திறமை வருவோரை வாயடைக்கச் செய்தது.

    வீட்டில் பாகவதர்கள், சங்கீத வித்வான்கள், பண்டிதர்கள், வேத பிராமணர்கள் என எப்போதும் கூட்டம் நிரம்பிக் காணப்படும். அவர்கள் சொல்லும் இராமாயணம், மகாபாரதக் கதைகளைக் கேட்பார். தர்க்கம் செய்வார். அவர்கள் ஆளாளுக்கு ஒவ்வொரு பதிலை சொல்லி சமாளிப்பார்கள். அப்பொழுதிலிருந்தே இராமசாமிக்கு இந்துமதப் புராணங்கள், இதிகாசங்கள், வேதங்கள் இவற்றின்மீது வெறுப்பு உண்டாயிற்று. அதன் காரணமாக அவர் கடவுள் இல்லை, கடவுள் என்பது மனிதனின் கற்பனை என்றும் உறுதியாக நம்பினார்.

    வணிகத்தில் அவரது பேச்சுத்தன்மையால் வியாபாரம் பெருகிற்று.

    கடைக்கு கணக்கு எழுதவும் தந்தையார் கற்றுக் கொடுத்தார். கடைக்கு வருபவர்களிடமும் தர்க்கம் செய்வதில் அவருக்கு நிகர் அவரே. அந்த இளம்வயதிலேயே அவரது பேச்சுத்திறன் குறிப்பாக தர்க்கம் செய்யும் ஆற்றல் தடையின்றி வளர்ந்தது. பின்னாளில் அவரது அழுத்தந் திருத்தமாக அரசியல் சொற்பொழிவுகளுக்கு அதுவே காரணமாயிற்று.

    வியாபார நேரம்போக, ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் நண்பர்களுடன் ஊர்சுற்றத் தொடங்கினார். காவிரி ஆற்றுப் படுகையில் நண்பர்களுடன் உண்டு மகிழ்ந்து களித்தார். பெற்றவர்கள் கவலைப்பட்டார்கள்.

    விளையாட்டாய்க் காலம் ஓடிற்று. இராமசாமிக்கு வயது பத்தொன்பதாயிற்று. திருமணம் செய்து வைத்துவிட்டால் பொறுப்பு வந்துவிடும் என்று பெற்றோர்கள் எண்ணினர்.

    இராமசாமிக்கு பெண் பார்க்கத் தொடங்கினார்கள். இராமசாமி தனது உறவுக்காரப் பெண் நாகம்மையை மணக்க விரும்பினார். சிறுவயது முதலே நாகம்மையுடன் ஓடி ஆடி விளையாடி மகிழ்ந்தவர். எனவே, அவர் அந்தப் பெண்ணைத்தான் மணப்பேன் என்று பிடிவாதம் செய்தார்.

    பெற்றோர்கள் சொல்லுக்கு எதிர்சொல் சொல்லாத கடுமையான காலம் அது. அவர்கள் பார்த்துப் பேசும் பழக்கமும் கிடையாது. அந்தச் சூழ்நிலையில் இராமசாமி தன் விருப்பத்தில் உறுதியாக நின்றார். புரட்சியின் வேர்கள் அப்போதே முளைவிடத் தொடங்கின.

    நாகம்மைக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்க்கத் தெடங்கினர். இராமசாமி படிக்காதவர்; ஊர் சூற்றித்திரிபவர்; எனவே அவருக்குத் திருமணம் செய்து வைக்க நாகம்மை வீட்டில் சம்மதிக்கவில்லை.

    நாகம்மையின் வயது 13. ஆனால், அவருக்குப் பார்த்த மாப்பிள்ளையின் வயதோ 50க்கு மேல். அதுவும் இரண்டு முறை திருமணம் ஆகி மனைவியை இழந்தவர். எனவே இந்தத் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தார் நாகம்மை.

    “மணந்தால் இராமசாமியைத்தான் மணப்பேன். இல்லையென்றால் தற்கொலை செய்துகொள்வேன்” என்று நாகம்மையார் தன் அப்பா, அம்மாவிடம் தெளிவாக்க் கூறிவிட்டார்.

    வேறு வழி இன்று நாகம்மையின் பெற்றோர் இராமசாமிக்கே தங்கள் பெண்ணைத் திருமணம் செய்து கொடுக்கச் சம்மதித்தனர்.

    போராட்டமே வாழ்க்கை நியதியாக்க் கொண்டவர் தந்தை பெரியார். இளமையில் திருமணம்கூட போராட்டங்களுக்கும், புகைச்சல்களுக்கும் இடையெதான் நடைபெற்றது.

    அன்றைய நாளில் இளம் வயது திருமணம் நடைமுறையில் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது ஆகும்.

    இராமசாமியை இனி நாமும் மரியாதையுடன் பெரியார் என்றே அழைப்போம். திருமணம் நடந்து விட்டாலே பெரிய ஆள்தானே!

    பெரியார் – நாகம்மையார் இல்லறம் பிறர்க்கு எடுத்துக்காட்டாகவே அமைந்தது எனலாம்.

    கணவரின் குணம் அறிந்து அதற்கு ஏற்ப தன்னையும் மாற்றிக்கொண்டார் நாகம்மையார்.

    பெரியார் வீட்டில் யாரும் மாமிச உணவு சாப்பிடமாட்டார்கள். ஆனால், பெரியாரோ மட்டன் பிரியாணி என்றால் மட்டற்ற மகிழ்ச்சியுடன் சாப்பிடுவார். அவருக்கு சைவ உணவு பிடிக்காது. எனவே கணவருக்காகத் தனியாக அசைவ உணவு சமைப்பார் நாகம்மையார்; நாகம்மையார் வெள்ளிக்கிழமை விரதம் இருப்பார். சைவ உணவுதான் சாப்பிடுவார். பெரியாருக்கு விரதம் இருப்பதெல்லாம் கட்டோடு பிடிக்காது.

    ஒருமுறை நாகம்மையார் சமைத்து வைத்திருந்த சைவ உணவில் அவர் அறியாதவாறு ஒரு எலும்புத்துண்டை மறைந்து வைத்துவிட்டார் பெரியார். நாகம்மையார் பூஜை முடித்து சாப்பிட உட்கார்ந்தார். சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே எலும்புத்துண்டு தலை நீட்டியது. நாகம்மையார் பதறிப்போனார். இது தன் கணவன் வேலை எனபதையும் உணர்ந்து கொண்டாள்.

    அன்றோடு நாகம்மையின் விரதம் போயிற்று. சைவ உணவு சாப்பிடும் வழக்கமும் மறைந்துவிட்டது.

    பெரியார் கொஞ்சம் கொஞ்சமாக தன் இல்லத்தரசியாரை தன் கொள்கைகளுக்கு மாறச் செய்தார். தனது தந்திரமிக்க நடவடிக்கைகளால் நாகம்மையார் கோயிலுக்குச் செல்வதையும் அறவே தடுத்து நிறுத்திவிட்டார்.

    நண்பர்களுடன் ஆற்றங்கரையில் அமர்ந்து, அரட்டை அடிப்பது மட்டும் ஓயவில்லை. அங்கேயிருந்துகொண்டே சாப்பாடு தயார் செந்து கொடுத்துவிடு என்று நாகம்மையாருக்குச் சொல்லிவிடுவார். நாகம்மையாரும் ருசியாக சமைத்து பாத்திரங்களில் நிரப்பி சாப்பாடு கொடுத்து அனுப்புவார். இப்படி செய்வது மாமனார், மாமியாருக்குப் பிடிக்காது என்றாலும் அவர்களுக்குத் தெரியாமல் சாப்பாடு கொடுத்து விடுவார். இவ்வாறு பெரியாரின் விருப்பங்களுக்கு ஏற்ப சிறந்த மனைவியாக அவர் வாழ்ந்து வந்தார்.

    பெரியார் மிகுத்த சிக்கனவாதி; காசை எண்ணி எண்ணிதான் செலவழிப்பார். வீட்டில் சமையலிலும் சிக்கனம் வேண்டும் என்று எண்ணுவார். தேவையில்லாமல் இரண்டு காய்கள் வைத்தால் கோபித்துக்கொள்வார். காபிக்குப் பால் அதிகம் ஊற்றினால், பாலை ஏன் இப்படி வீணாக்குகிறாய்? சிறிது பால் ஊற்றினாலே போதுமே என்பார்.

    சில வேளைகளில் “பாலைவிட மோரே உடம்புக்கு நல்லது” என்றுகூட சொல்லுவார்.

    நாகம்மையார் பெரியாரின் எல்லாக் கொள்கைகளையும் ஏற்றுக்கொண்டார். ஆனால், இந்த உணவில் சிக்கனத்தை மட்டும் கடைபிடிக்க தயக்கம் காட்டினார். வீட்டிற்கு வருபவர்களுக்கு வயிறார உணவு பரிமாறி உபசரித்தார். அதே சமயம் வேண்டுமென்றே பெரியாருக்கு சிறிதளவே காய்கறிகள் வைப்பார். இதனால் நாளடைவிலை நாகம்மையார் செய்யும் சமையலில் மட்டும் அவ்வளவாக தலையிடுவதில்லை.

    இரவு பன்னிரண்டு மணிக்கு வந்தாலும், நாகம்மையார் சுடச்சுட உணவு தயாரித்து விருந்தளித்து விடுவார். அவரது விருந்தோம்பல் பணியைப் பாராட்டாத தமிழ்நாட்டுத் தலைவர்கள் இல்லையென்றே சொல்லிவிடலாம்.!

    பெரியாரின் பொதுவாழ்விலும் நாகம்மையார் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டார். அவர் மேற்கொண்ட எல்லாப் பராட்டங்களிலும் கலந்துகொண்டார். பெரியார் அவர்களின் பொது வாழ்வின் வெற்றிக்கு அவர் பெரிதும் உதவினார்.

    திருமணம் ஆன இரண்டாண்டுக்குப் பின் நாகம்மையார் அழகான பெண் குழந்தைக்குத் தாயானார். ஆனால், அந்தக் குழந்தை ஐந்து மாதங்களில் இறந்துவிட்டது. பெரியார் மனைவிக்கு ஆறுதல் சொன்னார். ஆனாலும் ஒருநாள் -

    வாழ்க்கையில் வெறுப்புற்று, பெரியார் வீட்டைவிட்டு வெளியேறினார். யாரிடமும் சொல்லாமல்கொள்ளாமல் ஊர் விட்டுப் புறப்பட்டார்.

    பெரியார் துறவியானார்!

    இந்நிகழ்ச்சியை வேடிக்கை என்பதா? வேதனை என்பதா?

    எந்தக் குறையும் இல்லை.

    செல்வமும் செழிப்பும் செறிந்த வாழ்க்கை …

    0 comments:

    Post a Comment