Wednesday, 22 October 2014

Tagged Under: , , ,

கிரெடிட் கார்டு: புரிந்துகொள்ளுங்கள் லாபம் அள்ளுங்கள்!

By: ram On: 19:28
  • Share The Gag
  • கிரெடிட் கார்டு என்றாலே அது ஒரு சூனியத் தகடு என்று நினைத்து பயந்து ஓடுகிறார்கள் நம்மவர்கள். அதை வைத்திருந்தாலே நாம் ஊதாரியாக மாறிவிடுவோம் என்று அஞ்சுகிறார்கள். உள்ளபடி பார்த்தால், கிரெடிட் கார்டு என்பது நம்மை வஞ்சிக்கும் சூனியத்தகடும் அல்ல; நமக்கு நல்லதே செய்யும் அட்சய பாத்திரமும் அல்ல. அதை நாம் எப்படி பயன்படுத்துகிறோம் என்பதை பொறுத்தே அது நமக்கு நல்லதா, கெட்டதா என்று முடிவு செய்ய முடியும். கிரெடிட் கார்டை சரியாக, லாபகரமாக பயன்படுத்துவது எப்படி என நிதி ஆலோசகர் யூ.என்.சுபாஷிடம் கேட்டோம். விளக்கமாக எடுத்துச் சொன்னார் அவர். 

    கிரேஸ் பிரீயட்!

    ''கிரெடிட் கார்டு மூலம் வாங்கும் பொருட்களுக்கான பணத்திற்கு சுமார் 45 முதல் 51 நாட்கள் வட்டி கட்ட வேண்டாம் என்பது முக்கிய விஷயம். உதாரணமாக, ஒருவர் கிரெடிட் கார்டு ஸ்டேட்மென்ட் தயார் செய்வதற்கான கட் ஆஃப் தேதியான ஜூலை 5-ம் தேதி ஒரு பொருளை வாங்குகிறார். அதற்கு பணம் கட்ட வேண்டிய தேதி ஜூலை 25. அதாவது, ஜூலை 5-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை 20 நாட்கள் வட்டி இல்லாத கடன் கிடைக்கிறது.

    ஒருவர் ஜூலை 6-ம் தேதி ஒரு பொருளை வாங்கினால் அதற்கான பணத்தைக் கட்ட வேண்டிய  தேதி ஜூலை 25-ம் தேதி அல்ல,  ஆகஸ்ட் 25-ம் தேதி. அதாவது, அவருக்கு அதிகபட்சம் 50 நாட்கள் வட்டி இல்லாத கடன் கிடைக்கும். இதை கணக்கிட்டு பொருட்களை வாங்கினால், அதிக நாட்களுக்கு வட்டி இல்லாத கடன் கிடைக்கும். 

    பில்லிங் சுழற்சி..!

    ஒவ்வொரு கிரெடிட் கார்டு கம்பெனியும் ஒவ்வொரு பில்லிங் சுழற்சியை வைத்திருக்கிறது. இதனால் நமக்குக் கிடைக்கும் சலுகை காலத்தை (கிரேஸ் பீரியட்) சரியாகப் பயன்படுத்தினால்  வட்டியே இல்லாமல் ஊரார் வீட்டு பணத்தில் பல விஷயங்களை உங்களால் அனுபவிக்க முடியும். பொதுவாக ஒருவர் இரண்டு கிரெடிட் கார்டு கம்பெனிகளிடம் கார்டுகளை வாங்கி வைத்துக் கொள்ளலாம். இவற்றின் பில்லிங் சுழற்சி மாதத்தில் 15, 30 தேதி என்று இருந்தால் நல்லது.


    விழாக் கால ஆஃபர்!

    புத்தாண்டு, பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் கிரெடிட் கார்டு மூலம் வாங்கப்படும் பொருட்களுக்கு 5 முதல் 10% கேஷ் பேக் ஆஃபர் என்கிற சலுகை அளிக்கப்படுகிறது. உங்களுக்கு பெரிய தொகை போனஸாக கிடைத்து, அதை கொண்டு வீட்டு உபயோகப் பொருளை வாங்கப் போகிறீர் கள் என்றால் கிரெடிட் கார்டு மூலம் வாங்கிக் கொள்ள லாம். போனஸ் தொகையை வங்கி சேமிப்புக் கணக்கு அல்லது குறுகிய கால லிக்விட் மியூச்சுவல் ஃபண்ட் போன்றவற்றில் போட்டு வைத்துவிட்டு, கிரெடிட் கார்டு கடனை அடைக்கும்போது எடுத்தால், முதலீடு மூலமும் வட்டி கிடைக்கும். இடைப்பட்ட காலத்தில் நீங்கள் வாங்கிய பொருளுக்கான பணத்திற்கு வட்டியும் தர வேண்டியிருக்காது. 

    ஆனால், பின்னால் வரப் போகிற பணத்தை நம்பி  கிரெடிட் கார்டில் பொருட்களை வாங்காதீர்கள். எதிர்பார்க்கும் தொகை சரியான நேரத்தில் கிடைக்க வில்லை என்றால் அதிக வட்டி கட்ட வேண்டியிருக்கும். தவிர, இந்த ஆஃபரில் அத்தியாவசிய மான பொருட்களை மட்டுமே வாங்க வேண்டும். தேவை யில்லாதப் பொருட்களை வாங்கக் கூடாது.

    பல நேரங்களில் குறிப்பிட்ட தொகைக்கு மேல் வாங்கினால்தான் ஆஃபர் சலுகை என்பார்கள். 10% கேஷ் பேக் என்று அறிவிப்பார்கள். ஆனால், ஒரு மாதத்தில் அதிகபட்சம் 500 ரூபாய்தான் சலுகை என்பார்கள்.  நீங்கள் 50,000 ரூபாய்க்கு பொருட்களை வாங்கி அதற்கு கேஷ் பேக்காக 500 ரூபாய் கிடைத்தால், தள்ளுபடி 10% அல்ல, வெறும் 1%தான். இதுபோன்ற விஷயத்தைக் கவனிப்பது அவசியம்.

    உஷார் டிப்ஸ்கள்..!

    கிரெடிட் கார்டு மூலம் வாங்கிய பொருளுக்கு செலுத்த வேண்டிய முந்தைய மாதத்தின் தொகை ஏதாவது பாக்கி இருந்தால், அதே கார்டு மூலம் புதிதாக பொருள் வாங்கும்போது சலுகை எதுவும் கிடையாது. எனவே, ஒரு கடனை முழுமையாக அடைத்துவிட்டு அடுத்த பொருளை வாங்க வேண்டும்.

    கிரெடிட் கார்டு கடனுக்கான வட்டி வீட்டுக் கடனைப் போல் சுமார் 4 மடங்கும், பெர்சனல் லோனை போல் சுமார் 2 மடங்கும் அதிகம். அதாவது, கிட்டத்தட்ட 35 முதல் 40% என்கிற அளவில் இருக்கும். இலவச சேவை, கட்டணம் இல்லை என்று வாய் வழியாக சொல்வதை மட்டும் நம்பி விடாதீர்கள்.

    கிரெடிட் கார்டு கடன்களை ரொக்க பணமாக கட்டினால் சில முன்னணி வங்கிகள் 100 ரூபாய் என்பது போல் அபராதம் விதிக்கின்றன. அவை காசோலை அல்லது டி.டி. மூலமே கட்ட வாடிக்கையாளர்களை வலியுறுத்துகின்றன.

    கிரெடிட் கார்டு கடனுக்கு வட்டி போக வேறு பல கட்டணங்களும் இருக்கின்றன. குறிப்பிட்ட தேதியில் பணம் கட்டவில்லை என்றால் தாமதக் கட்டணம் விதிக்கப்படும். இது பாக்கித் தொகையைப் பொறுத்து சுமார் 250 ரூபாயில் தொடங்கி 700 ரூபாய் வரை செல்கிறது.

    கிரெடிட் வரம்புக்கு மேல் அதிகமாக பொருட்கள் வாங்கினால், குறைந்தபட்சம் 300 முதல் 500 ரூபாய் அபராதம் இருக்கிறது. பணமில்லாமல் காசோலை திரும்பினால் 200 முதல் 300 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்; கிரெடிட் கார்டை பயன்படுத்தி பெட்ரோல் போட்டால், டிக்கெட் புக் செய்தால் மொத்த தொகையில் சுமார் 2.5% வரை கட்டணம் எடுத்துக் கொள்வார்கள். வெளியூர் காசோலை என்றால் அதற்கு தனியே 100 ரூபாய் கட்டணம் இருக்கிறது.

    கிரெடிட் கார்டு கடனை மொத்தமாக கட்ட முடியவில்லை என்றால் அதனை இ.எம்.ஐ. ஆக மாற்றி கட்டும் வசதி இருக்கிறது. கிரெடிட் கார்டு கடனுக்கு ஆண்டு வட்டி 35 முதல் 40 சதவிகிதம் என்கிற நிலையில் இந்த இ.எம்.ஐ. கடனுக்கு ஆண்டு வட்டி 14 முதல் 25%தான்.

      
    கிரெடிட் கார்டு கடன்!

    கிரெடிட் கார்டு மூலம் அவசரத் தேவைக்கு கடன் வாங்கிக் கொள்ளும் வசதி இருக்கிறது. இது கிட்டத்தட்ட பெர்சனல் லோன் மாதிரிதான். ஒரே ஒரு வித்தியாசம் ஆவணங்கள் எதுவும் தர வேண்டியதில்லை. ஆனால், கடனுக்கான வட்டி, பெர்சனல் லோனைவிட அதிகமாக இருக்கும். இதற்கு பிராசஸிங் கட்டணம் இருக்கிறது. கடனை மாதத் தவணைகளில் திரும்பச் செலுத்த வேண்டும். முன்கூட்டியே அடைக்க வேண்டுமெனில் அபராதம் அதிகமாக இருக்கும்.

    அவசர செலவுக்குப் பணம்..!

    கிரெடிட் கார்டு மூலம் அவசர செலவுக்குப் பணம் எடுத்துக் கொள்ள முடியும். ஆனால், இதற்கு குறைந்தபட்ச பரிமாற்றக் கட்டணம் 250 முதல் 500 ரூபாயாக இருக்கிறது. உதாரணத்துக்கு, 1,000 ரூபாய் எடுப்பதாக வைத்துக் கொண்டால், அதற்கு 250 ரூபாய் பரிமாற்றக் கட்டணம் என்பது 25%. எடுக்கப்படும் பணத்துக்கு அன்றே  வட்டி போட ஆரம்பித்து விடுவார்கள். நீங்கள் திரும்பக் கட்டும் பணம் அவர்களின் கணக்கில் வரவு வைக்கப்படுகிற தேதி வரைக்கும் வட்டி போடப்படும்.



    கூடுதல் வசதிகள்!

    கிரெடிட் கார்டு மூலம் இன்ஷூரன்ஸ் பிரீமியம், தொலைபேசி கட்டணம், மின்சார கட்டணம், ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி இருக்கிறது. இந்த கூடுதல் வசதிக்கு பரிமாற்றக் கட்டணம் இருக்கிறதா என்பதைக் கவனித்த பிறகு களமிறங்குவது நல்லது.

    விருது புள்ளிகள்!

    கிரெடிட் கார்டை அதிகமாக பயன் படுத்த வேண்டும் என்பதற்காக வங்கிகள், கார்டை பயன்படுத்துபவர்களுக்கு விருது புள்ளிகளை (ஸிமீஷ்ணீக்ஷீபீ றிஷீவீஸீt) அளிக்கின்றன. இந்தப் புள்ளிகள் 100 ரூபாய்க்கு ஒன்று என்கிற விகிதத்தில் கணக்கிடப்படுகிறது. இது வங்கிக்கு வங்கி மாறுபடும். அதிகப் புள்ளிகள் சேர்ந்தால், பொருட்களை வாங்கும்போது விலை குறைப்பு அல்லது பயண டிக்கெட் களை புக் செய்யும்போது குறிப்பிட்ட சதவிகிதம் தள்ளுபடி கிடைக்கும். கிரெடிட் கார்டு மூலமே பொருட்களை வாங்கி, தொகையை சரியான தேதியில் கட்டி வந்தால், ரிவார்ட் புள்ளிகள் மூலம் கணிசமான தொகை கிடைக்கும்.''

    தேவை அறிந்து, அளவாக, சரியாக பயன்படுத்தினால் எதனாலும் நமக்கு தீங்கு வராது என்பது மட்டும் நிச்சயம்!

    0 comments:

    Post a Comment