புகைப் பிடித்தல், மது அருந்துதல் தவிர்த்து இன்னுமோர் அபாயமிருக்கிறது, அது காம விருப்பு சம்பந்தமானது. யோகம் தனது தூய்மையாக்கும் வேலையைச் செய்யும் போது உன்னிடம் பதுங்கிக் கிடக்கும் வேகங்களையும் ஆசைகளையும் மேலுக்கு எறிகின்றது. நீ விஷயங்களை ஒளிக்காமலும், ஒதுக்கிவைக்காமலும் இருக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். நீ அவைகளைச் சந்தித்து, வென்று, அவைகளுக்குப் புது உருவம் தரவேண்டும்.
யோகத்தின் முதற்பயன் என்னவெனில் மனத்தின் ஆதிக்கம் தளர்ந்துவிடுகிறது. உள்ளே உறங்கிக் கிடக்கும் வேட்கைகள் திடீரென விடுதலையடைந்து குப்பென்று கிளம்பி ஆதாரத்தை ஆக்கிரமிக்கின்றன. மனத்தின் ஆதிக்கம் இருந்த இடத்தில் இறைவனின் ஆட்சி ஸ்தாபிக்கப்படாத வரையில் ஓர் இடைநிலை ஏற்படுகிறது. அதுசமயம் உனது நேர்மையும் சரணமும் சோதனைக்குட்படும்.
காம உணர்ச்சி போகன்ற வேகங்களின் பலமானது சாதாரணமாக ஜனங்கள் அவைகளின் மீது அதிகமாகக் கவனம் செலுத்துவதிலிருந்தே வருகின்றது. அவர்கள் அவைகளை மிக அழுத்தமாக மறுத்து பலவந்தமாகக் கட்டுப்படுத்தவும் உள்ளே அமுக்கிவிடவும் முயல்கின்றனர். ஆனால் ஒன்றை நினைத்துக்கொண்டே, "அது எனக்கு வேண்டாம், அது எனக்கு வேண்டாம்" என்று சொல்லிக்கொண்டு போனால் நீ அதற்குப் பந்தப்பட்டுப் போகிறாய். நீ செய்ய வேண்டியது என்னவெனில், அதை உன்னிடமிருநூது சிலக்கி, அதனுடைய உறவு வைத்துக்கொள்வதை நிறுத்தி, கூடுமானவரை அதைக் கவனிக்காமல் இருந்துவிட வேண்டும். நீ அதை நினைக்க நேரிட்டாலும் அசட்டையாயும் கவலையில்லாமலும் இருந்துவிட வேண்டும்.
யோகத்தின் நெருக்கத்தினால் மேலே கிளம்பிவரும் வேகங்களும் ஆசைகளும் உனக்கு அந்நியமாயும் புறஉலககைச் சேர்ந்தவையாயும் இருப்பவைபோலக் கருதி அவைகளைப் பற்றற்ற நோக்குடனும் அமைதியுடனும் நீ சந்திக்க வேண்டும். இறைவன் அவற்றை எடுத்துக்கொண்டு உருமாறுதல் செய்யும் பொருட்டு அவற்றை இறைவனுக்கே அர்ப்பணம் செய்துவிட வேண்டும்.
உன்னை ஒருதரம் இறைவனுக்குத் திறந்துவிட்டு, இறைவனது சக்தியும் உன்னுள்ளே இறங்கிவர ஆரம்பித்தபிறகு நீ பழைய சக்திகளோடு ஒட்டிக்கொண்டிருக்க முயன்றால், தொந்தரவுகளுக்கும், கஷ்டங்களுக்கும் அபாயங்களுக்கும் நீயே வழிதேடிக்கொள்வாய். நீ விழிப்புடனிருந்து, உனது ஆசைகளைத் திருப்தி செய்வதன் பொருட்டு இறைவனை ஒரு மறைப்பாக உபயோகித்துக் கொள்ளாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும்.
0 comments:
Post a Comment