சென்னையில் திருட்டு தொழில் செய்து வரும் நாயகன் அகிலை போலீஸ் தேடி வருகிறது. அவர்களுக்கு பயந்து திருவண்ணாமலை செல்லும் பஸ்ஸில் ஏறி தப்பித்து செல்கிறார்.
அந்த பஸ்ஸில் பயணம் செய்யும் ஜோஸ் மல்லூரி திடீரென்று மயங்கி விழுகிறார். அப்போது அகில் அவருக்கு முதலுதவி செய்து காப்பாற்றுகிறார். இதனால் அகில் மீது ஜோஸ் மல்லூரிக்கு நல்ல எண்ணம் வருகிறது.
அகில் அனாதை என்று அறிந்துகொள்ளும் மல்லூரி தன்னுடைய ஊருக்கு அவனை அழைத்துச் செல்கிறார். போலீசில் இருந்து தப்பிக்க இதுதான் சரியான வழி என்று ஜோஸ் மல்லூரியுடன் செல்கிறார் அகில்.
திருவண்ணாமலையில் தனது மனைவி கோவை சரளாவுடன் வாழும் மல்லூரிக்கு ஒரு பிரச்சினை. தனது மகளை வீட்டுக்கு தெரியாமல் திருமணம் செய்துகொண்ட தம்பி ராமையா மீது கோபத்துடன் இருக்கிறார். நீண்ட நாட்களாக இருவருக்கும் பேச்சுவார்த்தை கிடையாது.
இந்நிலையில், ஜோஸ் மல்லூரியின் வீட்டுக்கு வந்திருக்கும் அகிலை, தம்பிராமையாவின் மகளான நாயகி சரண்யா நாக், பார்த்ததும் காதல் வயப்படுகிறார். அகிலையே சுற்றி சுற்றி வருகிறார். இது அகிலுக்கு பிடிக்கவில்லை.
ஒருகட்டத்தில் சரண்யாவை அகில் கண்டிக்கிறார். இதனால் கோபமடைந்த அவள் தற்கொலைக்கு முயற்சிக்கிறார். அவளை காப்பாற்றும் அகில், அவளுடைய காதலை ஏற்றுக் கொள்கிறார். ஒருநாள் இவர்களுடைய காதல் ஜோஸ் மல்லூரிக்கு தெரிய வருகிறது. அதனால் அகிலை ஊரை விட்டே அனுப்புகிறார்.
பேருந்தில் செல்லும் அகிலை தம்பி ராமையா பார்க்கிறார். ஜோஸ் மல்லூரிக்கு வெறுப்பை வரவழைக்க வேண்டும் என்பதற்காக அகிலை தன்னுடைய வீட்டுக்கு அழைத்து வருகிறார். அகில் தன்னுடைய மகளைத்தான் காதலிக்கிறார் என்பது தம்பி ராமையாவுக்கு தெரியாமலேயே இருந்து வருகிறது.
ஒருநாள் அகில் தம்பி ராமையா வீட்டில் இருக்கிறான் என்பதை தெரிந்து கொண்ட போலீஸ் அவரது வீட்டில் வந்து அவனை தேடுகிறது. அகில் அங்கு இல்லாததால் அவனுக்கு அடைக்கலம் கொடுத்த தம்பி ராமையாவை ஸ்டேஷனுக்கு அழைத்து செல்கிறார்கள். அங்கு தம்பி ராமையா தனக்கு அகிலும் தொடர்பில்லை என்று போலீசிடம் எடுத்துச் சொல்கிறார்.
இதற்கிடையில், தான் ஒரு திருடனை காதலித்துவிட்டோம் என்று மிகுந்த மனவேதனையடைகிறாள் சரண்யா. அவளிடம் அகில் தான் எதற்காக திருடன் ஆனேன் என்பதை விளக்கிக் கூறுகிறார் அகில். இதைக் கேட்டதும் சமாதானமடைந்த சரண்யா, அவனுடன் வாழவேண்டும் என்று ஆசைப்பட்டு இருவரும் சென்னைக்கு தப்பித்து செல்கிறார்கள்.
சென்னைக்கு சென்ற அவர்களை போலீஸ் உதவியோடு தேடி கண்டுபிடிக்க முயற்சி செய்கிறார் தம்பி ராமையா. இறுதியில் அவர்களை தேடிக் கண்டுபிடித்தாரா? அகிலும் சரண்யாவும் சந்தோஷமாக வாழ்ந்தார்களா? என்பதை பல்வேறு திருப்பங்களுடன் சொல்லியிருக்கிறார்கள்.
அகில் வழக்கம்போல் அப்பாவி பையன் போலே இந்த படத்திலும் வருகிறார். சரண்யா நாக் உடன் காதல் காட்சிகளில் அழகாக நடித்திருக்கிறார். மற்றபடி ஒவ்வொரு காட்சிகளில் நடிப்பை வரவழைக்க ரொம்பவும் கஷ்டப்பட்டிருக்கிறார்.
காதல் படத்தில் நாயகியின் தோழியாக நடித்த சரண்யா நாக் இந்த படத்தில் ஹீரோயினாக அவதாரம் எடுத்திருக்கிறார். இவருக்கு படத்தில் நடிக்க வாய்ப்புகள் குறைவுதான் என்றாலும் நிறைவாக செய்திருக்கிறார்.
ஜோஸ் மல்லூரி, தம்பி ராமையா, கோவை சரளா ஆகியோர் தங்களது கதாபாத்திரம் உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார்கள். பிற்பாதியில் வரும் சோனா வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார். இவர் வரும் 15 நிமிட காட்சிகள் வெகுவாக ரசிக்க வைக்கிறது.
பெற்றோர் பேச்சை மதிக்காமல் பருவ வயதில் தவறான முடிவுகள் எடுக்கும் இளைஞர், இளைஞிகளுக்கு ஒரு பாடமாக படத்தை எடுத்திருக்கிறார் இயக்குனர் தேசிகா. படம் ஆரம்பம் முதலே சோகம் தொற்றிக்கொண்டதுபோல் திரைக்கதை மெதுவாக நகர்கிறது. பிற்பாதியும் அதேவேகத்தில் செல்வது ரசிக்க முடியவில்லை.
படத்திற்கு மிகப்பெரிய பலம் வசனம்தான். கிளைமாக்சில் தம்பி ராமையா பேசும் வசனம் பெற்றோர்களை அழவிட்ட பிள்ளைகளுக்கு பெரிய படிப்பினையாக இருக்கும்.
செல்வகணேஷ் இசையில் பாடல்கள் பரவாயில்லை. பின்னணி இசை சுமார் ரகம்தான். சிட்டி பாபுவின் கேமரா கண்கள் காட்சிகளை தெளிவாக படமாக்கியிருக்கிறது.
மொத்தத்தில் ரெட்டவாலு வாலாட்டவில்லை.
0 comments:
Post a Comment