Tuesday, 26 August 2014

Tagged Under: , , , ,

ஆஸ்திரேலியாவில் அருள்பாலிக்கும் ஐந்து கரத்தோன்...!

By: ram On: 01:00
  • Share The Gag



  • தலவரலாறு:

     ஆஸ்திரேலியாவின் அடிலைடு மாநிலத்தில், ஸ்ரீ கணேசர் ஆலயம் அமைந்துள்ளது. இந்துக்களுக்கான வழிபாட்டு தலம் அமைப்பதற்காக, 1985ம் ஆண்டு ஆகஸ்ட் 10ம் தேதி ஆஸ்திரேலிய இந்து சமூக கூட்டம் நடைபெற்றது. இந்துக்களின் வழிபாட்டு தலத்திற்கு எளிதில் அனுமதி பெறுவதற்கு ஏதுவாக இருப்பதற்காக, ஓக்லான்ட்ஸ் பார்க்கிலுள்ள உபயோகமற்ற கிறிஸ்தவ தேவாலயத்தை வாங்க வேண்டும் என அக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

    மேலும், அக்கோயிலை, இந்துமத தத்துவங்களைப் போதிப்பதற்கும் கலாச்சாரம், இந்திய மொழிகள் மற்றும் பள்ளிப் பாடத்திட்டத்தில் போதிக்கப்படாத, அதனுடன் தொடர்புடைய பிறவற்றையும் போதிக்கும் இடமாகவும் பயன்படுத்த திட்டமிடப்பட்டது. தற்காலிகமாக அமைக்கப்பட்ட ஸ்ரீ கணேசர் ஆலயத்தில், விநாயகர் சிலை மட்டுமே பிரதிஷ்டை செய்து, அவரையே முக்கிய தெய்வமாக வழிபடுவதாகவும் முதலில் முடிவெடுக்கப்பட்டு, 1986ம் ஆண்டு ஜூலை மாதம் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இந்துக்களின் பாரம்பரிய முறைப்படி கோயிலைச் சீரமைத்து, 1998ம் ஆண்டு ஜூன் மாதம், புதிய கோயிலுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. இக்கோயிலுக்கான திட்டவரைபடத்தை வடிவமைத்துக் கொடுத்தவர், இந்தியாவின் முதன்மை கட்டிடக்கலை நிபுணரான நாகராஜன் ஆவார். இக்கோயிலில் உள்ள தெய்வங்களின் விரிவான வடிவத்தைச் சித்தரித்தவர், ராஜலிங்கம் என்பவர் ஆவார். சிட்னியிலுள்ள முருகன் கோயிலும் இவரால் வடிவமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்து சமூகத்தாரின் முழு ஒத்துழைப்பு மற்றும் பொருளுதவியால் வெகு விரைவில் இக்கோயில் கட்டி முடிக்கப்பட்டது. பெரும் சிரமங்களைக் கடந்து, கட்டி முடிக்கப்பட்ட இக்கோயில் ஆஸ்திரேலியவாழ் இந்துக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக அமைந்தது. புதிதாக மாற்றி அமைக்கப்பட்ட கோயிலின் மகா கும்பாபிஷேகம், 2000ம் ஆண்டு நவம்பர் 6லிருந்து 9ம் தேதி வரை வெகு சிறப்பாக கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

    முக்கிய தெய்வங்கள்: பாரம்பரியம் மிக்க, சிறப்பு வாய்ந்த இக்கோயிலில், கணேசர், முருகன், லட்சுமி நாராயணர், சிவலிங்கம், பைரவர், ஹனுமன் மற்றும் துர்க்கை அம்மன் ஆகியோரது சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. வெண்கலத்தால் ஆன மூலவர் சிலைகள், சிறப்பாக அலங்கரிக்கப்பட்ட வசந்த மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளன. மார்பிள் கற்களால் ஆன சிலைகள், வட இந்திய முறைப்படியும், கிரானைட்டால் ஆன சிலைகள், தென்னிந்திய முறைப்படியும் அமைக்கப்பட்டுள்ளன. மார்பிள் மற்றும் கிரானைட் ஆகிய இரண்டாலும் உருவாக்கப்பட்ட சிலைகள் ஒரே கோயிலில் அமைந்திருப்பது அரிதான ஒன்றாகும்.

    முக்கிய திருவிழாக்கள்: விநாயகர் சதுர்த்தி, சிவராத்திரி, தைப்பூசம், கந்தசஷ்டி, நவராத்திரி, ஹனுமன் ஜெயந்தி, கிருஷ்ண ஜெயந்தி, ராமநவமி, பங்குனி உத்திரம் போன்றவை இக்கோயிலின் முக்கிய விழாக்களாக கொண்டாடப்படுகின்றன.

    கோயில் நேரங்கள்: திங்கள் முதல் வியாழன் வரை - காலை 7.00 மணி முதல் 8.00 மணி வரை, இரவு7.00-8.00 மணி வரை; வெள்ளிக்கிழமை அன்று காலை 7.00 மணி முதல் 8.00 வரையிலும், இரவு 7.00 - 9.00, சனிக்கிழமை-காலை 7.00 முதல் 8.00 வரை, இரவு 7.00 முதல் 8.00 வரை; ஞாயிறு காலை 10.30 முதல் 1.00 வரை, மாலை 6.30- இரவு 8.00 வரை.

    0 comments:

    Post a Comment