Thursday, 16 October 2014

Tagged Under:

ஹால்மார்க் தங்கம்…சுத்த தங்கமல்ல! விரிவான அலசல்...!

By: ram On: 01:51
  • Share The Gag
  • தங்க நகை வாங்கும்போது ஹால்மார்க் முத்திரை உள்ள நகையான்னு பார்த்து வாங்குங்கள் என்றுதான் எல்லோரும் சொல்கிறார்கள். ஆனால், இப்போது ஹால்மார்க் முத்திரையிட்ட தங்க நகைகள்கூட அசல் தங்க நகைகள் அல்ல என்று சொல்கிற அளவுக்கு சில விஷயங்கள் நடந்திருக்கின்றன.

    இது என்ன, புதுக் குழப்பமாக இருக்கிறது என்கிறீர்களா? மேற்கொண்டு படியுங்கள்.

    ஹால்மார்க் நகையை விற்பனை செய்யும் கடைக்காரர்களுக்கு பிஐஎஸ் (Bureau of Indian Standards)அனுப்பியுள்ள ஆணையின்படி, ஹால்மார்க் முத்திரையிட்ட நகைகளில் ஏதாவது தரக்குறைவு ஏற்பட்டால், அதற்கு நகை விற்பனை செய்யும் கடைக்காரர்தான் பொறுப்பு என்று சொல்லப்பட்டுள்ளது. இதை எதிர்த்து கோவை நகை உற்பத்தியாளர் சங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் பதிவு செய்த வழக்கில் இந்த ஆணைக்கு தற்காலிக தடை  வழங்கப்பட்டுள்ளது.

    இந்த வழக்கு தொடர்பான மற்ற விவரங்களை தெரிந்துகொள்ளும்முன், ஹால்மார்க் முத்திரை பற்றிய சில அடிப்படைத் தகவல்கள் குறித்து தங்க நகைமதிப்பீட்டாளர் மற்றும் ஜெம் அண்டு ஜுவல்லர் டெக்னாலஜி ட்ரைனிங் சென்டரின் இயக்குநர் கே.சுவாமிநாதன் விளக்குகிறார்.

    ”ஹால்மார்க் முத்திரை உள்ள நகைகளை விற்பனை செய்வதற்கு லைசென்ஸ் வாங்கியிருக்க வேண்டும். நகை தயாரிப்பாளர் செய்துதரும் நகையின் தரத்தை உறுதி செய்வதற்காக ஹால்மார்க் சென்டருக்கு அனுப்பி முத்திரை இட்டு வாங்க வேண்டும். இதில் தங்கம் எத்தனை கேரட்டில் உள்ளது என்பதை தெரிவிப்பதுதான் இந்த முத்திரை. அதாவது 23 (958), 22 (916), 21 (875), 18 (750), 17 (708), 14 (585) மற்றும் 9 (375) காரட் நகைகளுக்கும் இந்த முத்திரை போடப்படும். ஹால்மார்க் முத்திரை பதிக்கப்பட்டதால் மட்டும் தரம் உயர்ந்த தங்கம் என நினைக்கக்கூடாது. எந்த காரட்டுக்கான ஹால்மார்க் முத்திரை இடப்பட்டிருக்கிறது என்று பார்ப்பது அவசியம்.

    ஹால்மார்க் முத்திரை போடுவதற்கு கட்டணம் உண்டு. அதாவது, ஒரு நகைக்கு ரூ.25   முதல் ரூ.150 வரை

    கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஒவ்வொரு நகையையும் தனித்தனியாக ஹால்மார்க் முத்திரை போட மாட்டார்கள். மொத்த மாக நகைகளை அனுப்புவார்கள். அனைத்து நகைகளையும் ஹால்மார்க் முத்திரை போட்டபின், அதிலிருந்து ஏதாவது ஒரு நகையை எடுத்து அதை டெஸ்ட் செய்வார்கள்.

    அதாவது, தேர்ந்தெடுக்கப்படும் நகையை முதலில் உரைகல் மூலம்  உரசுவார்கள்.  அதன்பிறகு எக்ஸ்ஆர்எஃப் மெஷினில் சோதனை செய்வார்கள். இதில் இரண்டிலும் 916 தரத்தில் நகை இருந்தால், அடுத்த கட்ட சோதனை செய்வார்கள். தேர்ந்தெடுக்கும் நகையில் அனைத்து பாகங்களிலிருந்தும் தங்கத்தை சுரண்டி எடுப்பார்கள். அதை ஆசிட் டெஸ்ட் செய்வார்கள். இதிலும் 916 தரம் உறுதி செய்யப்பட்டால், அனைத்து நகைகளுக்கும் 916 தரத்துக்கான முத்திரை இட்டுத் தருவார்கள். இதில் ஏதாவது தரம் குறைந்த நகைகள் இருந்தால் அதை கண்டுபிடிக்க முடியாது” என்றவர். ஹால்மார்க் சென்டர் செயல்படும் விதத்தையும் அங்கு நடக்கும் தவறுகளையும் எடுத்துச் சொன்னார்.

    ”ஹால்மார்க் முத்திரையை அரசு நிறுவனங்கள் நேரடியாக போட்டு தருவதில்லை. இந்த வேலையை லைசென்ஸ் பெற்ற தனியார்

    நிறுவனங்கள்தான் செய்கின்றன. உள்ளூரில் கோல்டு டெஸ்ட் லேப் நடத்தி மூன்று ஆண்டுகள் அனுபவம் உடையவர்கள் ஹால்மார்க் சென்டர் அமைக்க முடியும். இதற்கு பிஐஎஸ்ன் வழிக்காட்டலின்படி, லேப் அமைக்க வேண்டும். இதற்கு பிஐஎஸ் 25%  மானியம் வழங்கும். இந்த ஹால்மார்க் லேப் அமைக்க ரூ.7580 லட்சம் வரை செலவாகும். என்றாலும், இந்த லேப்கள் மூலம் கிடைக்கும் வருமானம் மிகக் குறைவே.

    ஹால்மார்க் நகைகளை விற்பதற்கு நகைக்கடைகள் பிஐஎஸ்-ஸிடமிருந்து அனுமதி வாங்கவேண்டும். இதற்கு  மூன்று ஆண்டு வருமான வரிதாக்கல் செய்த விவரம், எந்த வகையான நகைகளை எந்த தரத்தில் விற்பனை செய்கிறார்கள் என்ற விவரத்தை தந்து, அனுமதி பெறலாம். பெரிய நகைக்கடைகள் வருமான வரி தாக்கல் விவரத்தை தந்துவிடும். ஆனால் , சின்ன சின்ன கடைகளால் தரமுடியாது. ஏனெனில் பெரும்பாலான நகைக் கடைகள் விற்பனை செய்யும் நகை களுக்கு முறையான ரசீது தருவதில்லை. வருமான வரியும் சரியாக செலுத்துவதில்லை.

    பிஐஎஸ் லைசென்ஸ் பெற்ற கடைகளுக்கு மட்டும்தான் ஹால்மார்க் தர முத்திரையை போட்டுதர வேண்டும். ஆனால், சில ஹால்மார்க் சென்டர்கள் போட்டி காரணமாகவும், அதிக வருமானம் பார்க்கவும் அனுமதி பெறாத கடைகளின் நகைகளுக்கு முத்திரை போட்டு தருகின்றன. அதாவது, கூடுதலாக பணம் வாங்கிக்கொண்டு இதை செய்கின்றன. இது சட்டப்படி தவறுதான்” என்றார்.

    இந்த நிலையில், ஹால்மார்க் குறித்து பிஐஎஸ் வெளியிட்ட ஆணையை எதிர்த்து வழக்கு தொடுத்தது குறித்து கோவை நகை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் முத்து வெங்கட்ராமனிடம் கேட்டோம்.

    ”கடந்த மே மாதம் பிஐஎஸ் சட்டத்தில் (Bureau of Indian Standards Act)சில திருத்தங்களை செய்த பிஐஎஸ் அமைப்பு, ஹால்மார்க் முத்திரை இட்ட நகைகளை விற்பனை செய்யும்போது அந்த நகையின் தரத்தில் ஏதாவது குறைபாடு இருந்தால் அதற்கு அந்த கடைதான் முழுப் பொறுப்பு எனச் சொல்லியுள்ளது.

    அடுத்து, பிஐஎஸ் முத்திரையிட்ட நகைகளில் ஏதாவது குறைபாடு இருந்தால் அல்லது நகையை வாங்கியபிறகு ஏதாவது தரக்குறைபாடு இருப்பதாக வாடிக்கையாளர்கள் புகார் தந்்தால், அந்த கடைக்கு அபாரதம் விதிக்கப்படும். நகைக்கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள நகையை பிஐஎஸ் அதிகாரிகள் சோதனை யிடும்போது குறைபாடு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டாலும் அபராதம் விதிக்கப்படும். இப்படி மூன்று முறைக்கு மேல் அபராதம் செலுத்தும் கடைகளின் லைசென்ஸ் ரத்து செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது.

    பிஐஎஸ் சொல்லியுள்ள இந்த விஷயங்கள் எதுவுமே நடைமுறைக்கு சரிப்பட்டு வராது. அதாவது, எந்த நகைக் கடைக்காரரும் தனது நகையை நேரடியாக செய்வதில்லை. பொற் கொல்லர்கள் செய்துதரும் நகையை தயாரிப்பாளர்களிடம் இருந்து வாங்கி, வியாபாரிகள் விற்பனை செய்கிறார்கள். இந்த நகைகளுக்கு அரசு நிறுவனம் பிஐஎஸ் முத்திரை வழங்குகிறது. இதில் தரக்குறைவு ஏற்பட்டால் நகை வியாபாரி கள் எப்படி பொறுப்பு ஏற்க முடியும்?

    நகைக் கடைகள் விற்பனை செய்யும் ஹால்மார்க் முத்திரையிட்ட நகைகளின் விவரம், அவற்றின் வரவு செலவு கணக்கு ஆகியவற்றை குறைந்தபட்சம் ஐந்தாண்டுகளுக்கு பாதுகாப்பாக வைக்கவேண்டும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், பல நகைக்கடைகளில் இன்னும் கம்ப்யூட்டர் இன்னும் வரவில்லை. இதில் எப்படி ஐந்தாண்டுகளுக்கான விவரங்களை பாதுகாப்பாக வைக்க முடியும்?

    இதுபோன்ற திருத்தங்கள் கொண்டுவருவது தவறில்லை. ஆனால், அதை நடைமுறையில் அமல்படுத்த முடியுமா என்பதைப் பார்க்க வேண்டும். அல்லது இந்த புதிய விதிமுறைகளை நடைமுறைப்படுத்த கால அவகாசத்தை யாவது தரவேண்டும்’ என்றார்.

    நகை வாங்குபவர்கள் சேதாரம் குறைவாக உள்ளதா, கிஃப்ட் தருகிறார்களா, அதிக டிசைன்கள் உள்ளதா என்பதை கவனிப்பதோடு,  தங்கத்தின் தரம் குறித்தும் கொஞ்சம் அக்கறை கொள்வது நல்லது. அதாவது, உங்களுக்கு தெரிந்த நம்பிக்கையான கடைகளில் நகை வாங்குவது நல்லது.

    ஹால்மார்க் முத்திரையில் இவ்வளவு பிரச்னை இருக்கிறதே என்று நினைத்து அதைத் தவிர்க்க வேண்டாம். ஹால்மார்க் முத்திரை இருந்தால்தான் தரக்குறைவு இருப்பின் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர முடியும். இந்த முத்திரை இல்லையெனில் இது குறித்து எங்குமே முறையிட முடியாது என்பதை மறந்துவிடக் கூடாது.

    அதேபோல, ஹால்மார்க் நகையில் அந்த கடையின் லைசென்ஸ் எண் இருக்கும். நகையில் உள்ள எண் அந்தக் கடையினுடையதுதானா என்பதையும் உறுதி செய்துக்கொள்வது நல்லது.

    0 comments:

    Post a Comment