Thursday, 25 September 2014

Tagged Under: ,

கமலுடன் ட்ரிபிள் ட்ரீட்! ஜிப்ரானுடன் ஒரு சுவையான நேர்காணல்..!

By: ram On: 17:47
  • Share The Gag
  • 'வாகை சூட வா’ படத்தின் மூலம் பளிச் கவனம் ஈர்த்தவர் இசையமைப்பாளர் ஜிப்ரான். இப்போது 'விஸ்வரூபம்-2’, 'உத்தம வில்லன்’, 'பாபநாசம்’ என கமல் ஹாசனின் மூன்று புராஜெக்ட்களுக்கு நோட்ஸ் பிடித்துக்கொண்டிருக்கிறார். நமாஸ், கம்போஸிங், பின்னணி ஒலிப்பதிவு எனச் சுற்றிச் சுழன்றுகொண்டிருந்தவருடன், இரவில்தான் ரிலாக்ஸாகப் பேச முடிந்தது... 

    ''இளையராஜாவுக்கு அப்புறம் கமல் உங்க மீதுதான் அபார நம்பிக்கை வெச்சிருக்கார்போல..?''

    நெஞ்சில் கைவைத்து பணிவாகச் சிரிக்கிறார்... ''அந்த மேஜிக் எப்படி நடந்ததுனு எனக்கே ஆச்சர்யம்தான். அவர்கூட வேலை பார்க்கிற ஒவ்வொரு நாளும் பெர்சனலா நிறையக் கத்துக்கிட்டே இருக்கேன். கமல் சார்கூட டெல்லியில் முதன்முதலா 'விஸ்வரூபம்-2’ படத்துக்காக டிஸ்கஷன் போனப்போ, ரொம்ப நெர்வஸா இருந்தேன். 'உட்காருங்க ஜிப்ரான்’னு கையைப் பிடிச்சுப் பக்கத்துல உட்காரவெச்சுக்கிட்டார். 'உங்க மியூசிக் எனக்குப் பிடிச்சிருந்தது. உங்களைப் பத்தி தெரிஞ்சுக்க ஆசைப்படுறேன். ஒரு மியூசிக் டைரக்டரா இல்லாம, சாதாரண ஜிப்ரானா பேசுங்க’னு சொன்னார். குடும்பம், படிப்பு, இசைக்கு எப்படி வந்தேன்னு நான் சொல்லச் சொல்ல, எல்லாத்தையும் கேட்டார். பார்த்தா... முழுசா ரெண்டு மணி நேரம் ஆச்சு. அப்புறம்தான் என் கூச்சத்தை, தயக்கத்தைப் போக்கி கொஞ்சம் நான் சகஜமான பிறகுதான், 'விஸ்வரூபம்-2’ படத்தை எனக்கு ப்ளே பண்ணார்.

     படம்... செம மிரட்டல். இந்தியா முழுக்க பல மாநிலங்களில் நடக்கிற கதைங்கிறதால, எந்த இடத்துல என்ன மாதிரியான பேக்ரவுண்ட் வெச்சுக்கலாம்னு கேட்டார். என் பதிலில் அவருக்கு ரொம்பவே திருப்தி. 'இப்பவே ஒரு பாட்டுக்கு கம்போஸிங் உட்கார்ந்தா என்ன?’னு கேட்டார். 'தாராளமா சார்’னு நம்பிக்கையா சொன்னேன். கடகடனு கால் மணி நேரத்துல பாட்டு எழுதிட்டார். ஒரு கிளாசிக்கல் கர்னாட்டிக் பாடலை அவர் பாட, உடனே கம்போஸ் பண்ணோம். அப்படியே அடுத்தடுத்த பாடல்களுக்கும் வேலை நடந்துட்டு இருந்தப்ப, ஒரு நாள் ரமேஷ் அரவிந்த் சாரை எனக்கு அறிமுகப்படுத்தினார். 'உத்தம வில்லன் புராஜெக்ட்ல ஜிப்ரான்தான் மியூசிக் டைரக்டர்’னு அவர்கிட்ட சொன்னார் கமல் சார். டபுள் சந்தோஷத்துல ஷாக் ஆகிட்டேன். 'உத்தம வில்லன்’ வேலை பார்த்துட்டு இருக்கிறப்பவே, ' 'பாபநாசம்’ படமும் நீங்கதான் பண்றீங்க’னு சொன்னார். இந்தத் தடவை எனக்குப் பேச்சே வரலை. இப்பவும் எல்லாமே ஏதோ மேஜிக் மாதிரி இருக்கு. கமல் சார் ஆபீஸில் சிலர், 'உங்க மியூசிக்கை சார் ரொம்ப ரசிச்சுப் பாராட்டினார்’னு சொன்னப்போ இன்னும் சந்தோஷமா இருந்தது. கமல் சார்கூட ஹாட்ரிக் எனக்கு. இந்த மூணு படங்களிலும்  ஒவ்வொரு கோர்ஸ் படிச்ச அனுபவம் கிடைச்சது!''

    ''கமல் எழுதின பாட்டுல என்ன விசேஷம்?''

    '' 'உத்தம வில்லன்’ படத்துக்கு சார் எழுதின ஒரு பாட்டு, 18-ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு இளவரசி பாடுற சிச்சுவேஷன். கொஞ்சம் எராட்டிக்கான பாட்டு. சில வரிகள் மட்டும் சொல்றேன்...

    'காதலாம் கடவுள் முன்
    கண்களாம் கோவிலில்
    தேகத்தின் தாகமே ஆராதனை...
    காமமாம் கடும்புனல்
    கடந்திடும் படகிது
    ஆசையாம் பாய்மரம்
    அமைந்ததோர் படகிது
    கரையைத் தேடி அலையும் நேரம்
    உயிரும் மெழுகாய் உருகுதே’

    - இப்படி இன்னும் நிறைய ரகசியம் பேசும்!''

    '' 'வாகை சூட வா’ மியூசிக்ல தனித்துத் தெரிஞ்ச ஜிப்ரான், அப்புறம் சின்னதா சறுக்கிட்ட மாதிரி தெரிஞ்சதே?''

    ''ஒரு இசையமைப்பாளரின் கேரியரில் அது எல்லாருக்கும் நடக்கும்தான். எனக்கு ரொம்ப சீக்கிரமே நடந்திருச்சு. 'வாகை சூட வா’ படத்துக்குப் பிறகு என்கிட்ட அதே மாதிரி ஒரு மியூசிக் எதிர்பார்த்தாங்க. ஆனால், நான் வேலை பார்த்த ஸ்க்ரிப்ட்ல இயக்குநர்கள் என்ன மியூசிக் எதிர்பார்த்தாங்களோ, அதைக் கொடுத்திருக்கேன். அதுல 'வத்திக்குச்சி’ ஆரம்பிச்சு 'குட்டிப்புலி’ வரை என் பரிசோதனை முயற்சிகளும் நல்லா இருந்துச்சு. 'நய்யாண்டி’ படத்துக்கு வித்தியாசமான ஜானர்ல கமர் ஷியலா மியூசிக் பண்ணேன். அது இங்கே ஒர்க்-அவுட் ஆகலை. ஆனா, ஒரு தெலுங்கு படத் தயாரிப்பாளர், ' 'நய்யாண்டி’ படத்துக்கு மியூசிக் பண்ணினவர்தான் வேணும்’னு அடம்பிடிச்சுக் கேட்டிருக்கார். ஆனா, அந்தப் பட இயக்குநர், 'அதெல்லாம் வேணாம். எனக்கு 'வாகை சூட வா’ மியூசிக் டைரக்டர்தான் வேணும்’னு மல்லுக்கட்டினாராம். அப்புறம் விசாரிப்பதான் ரெண்டு பேரும் ஒருத்தர்தான்னு அவங்களுக்குத் தெரிஞ்சிருக்கு. இதுக்கு என்ன சொல்றது?''

    ''உங்க செட் இசையமைப்பாளர்களோட டச்ல இருக்கீங்களா?'

    ''நேரடியாத் தொடர்பு இல்லைன்னாலும், பொதுவான நண்பர்கள் மூலமா நானும் அனிருத்தும் நிறைய விஷயங்களைப் பகிர்ந்துக்குவோம். சந்தோஷ் நாராயணன் என் பெஸ்ட் ஃப்ரெண்ட். ரெண்டு பேரோட பாசிட்டிவ் நெகட்டிவ் பத்தி அப்பப்போ அப்டேட் பண்ணிட்டே இருப்போம். மத்தபடி இங்கே எல்லாருக்கும் நடுவுல ஆரோக்கியமான ஒரு போட்டி இருக்கு. அது ரொம்ப நல்லா இருக்கு!''

    ''சமீபத்துல உங்களுக்குப் பிடிச்ச பாட்டு என்ன?''

    '' 'காவியத்தலைவன்’ ஆல்பத்தின் 'யாருமில்லா தனி அரங்கில்’ பாட்டு... அந்த ட்யூன் பச்சக்னு மனசுல ஒட்டிக்கிச்சு. ரஹ்மான் ரஹ்மான்தான்!''

    0 comments:

    Post a Comment