Thursday, 25 September 2014

Tagged Under: , ,

'பயப்படலாம்’ எனப் போனால், சிரிக்கவைத்து அனுப்புகிறார்கள்! அரண்மணை - திரைவிமர்சனம்!

By: ram On: 11:35
  • Share The Gag
  • தமிழ் சினிமாவுக்குப் பழக்கமான 'ஆயிரம் ஜென்மத்து’ப் பேய், இந்த முறை 'அரண்மனை’யில் பயமுறுத்துகிறது!

    பழைய அரண்மனையை விற்க சித்ரா லட்சுமணன், கோவை சரளா, மனோபாலா, வினய், ஆண்ட்ரியா, ராய் லட்சுமி, சந்தானம்... என உறவினர்கள் ஒன்றுகூடுகிறார்கள். ஆனால், அரண்மனையை விற்க முடியாமல் ஏகப்பட்ட தடங்கல்கள். விருந்தாளி சுந்தர்.சி அதற்கான காரணத்தைத் தேடிப்போனால்... பேய் ஃப்ளாஷ்பேக். அப்புறம் என்ன... அப்பாவி, கொலை, அம்மன், கிரகணம், இரவுக்குள் கணவன்-மனைவி சேரக் கூடாது என, பேய் ஃபார்முலா சினிமா!

    பேய் படமாக ஆரம்பித்து காமெடி படமாக மாறி, சாமி படமாக முடிக்கிறார்கள். 'ஆயிரம் ஜென்மங்கள்’, 'சந்திரமுகி’, 'முனி’ என படம் முழுக்க பரண் தூசி!   

    ஒரு ஹீரோயினுக்கே ஸ்கோப் இருக்காது தமிழ் சினிமாவில். ஆனால், ராய் லட்சுமியின் கிளாமர் பேக்கேஜோடு ஆரம்பிக்கும் படம், ஹன்சிகா ஃப்ளாஷ்பேக்கில் பயம் காட்டி, ஆண்ட்ரியா ஆவேசத்தில் முடியும் விதத்தில் அனைவருக்கும் சரிவிகித முக்கியத்துவம்.

    மறக்காமல் மூவரும் துண்டு கட்டிக் குளிக்கிறார்கள். வாவ்..! 

    கொஞ்சிக் கொஞ்சிப் பேசுவதும் வில்லன்களிடம் கெஞ்சுவதுமாக ஹன்சிகா ஓ.கே ஓ.கே.. தலை கவிழ்ந்து, முகம் மறைத்து உறுமுவதும், கவிழ்ந்துகிடக்கும் காரில் குத்தவைத்து அமர்ந்து மிரட்டுவதுமாக... அதட்டுகிறார் ஆண்ட்ரியா. 'பேய், பயம் காட்டுகிறதோ இல்லையோ, நான் காட்டுகிறேன்’ என 'காத்தாட’ உடைகளில் அழகு காட்டிக்கொண்டே இருக்கிறார் ராய் லட்சுமி. 

    வழக்கம்போல அலட்டிக்கொள்ளாமல் சுந்தர்.சி., 'என்னமோ கூப்பிட்டாங்க... எதுக்கோ வந்தேன்’ என வந்துபோகிறார் வினய். இவர்களுக்கு இடையில் மொத்தப் படத்தையும் குத்தகைக்கு எடுத்துக்கொள்கிறது, சந்தானம் - கோவை சரளா - மனோபாலா கூட்டணி. பேய்க்கு பால் கொடுக்கச் செல்லும் சரளாவின் 'பயந்து வருது’ பதற்றத்துக்கு படா அப்ளாஸ். தலையில் அடிபட்டு 25 வருடங்களுக்குப் பின்னால் ரீவைண்டு ஆகிவிடும் மனோபாலாவின் அலப்பறைகளும், அதற்கு 'முன்னாள் மனைவி, இந்நாள் காதலி’ கோவை சரளாவின் புலம்பல் கவுன்ட்டர்களும் அட்ராசிட்டி!

    'என் பாட்டி உழைப்பு எல்லாம் வீணாப் போயிருச்சே’, 'பழைய பிளேடை வெச்சு பைல்ஸ் ஆபரேஷன் பண்ணமாதிரி ஓடுறான்’, 'முருங்கைக்காய் சாப்பிட்டாதான் முறுக்கேறும்பாங்க... இங்க முருங்கைக்காய்க்கே முறுக்கேறிக்கிடக்குது’, 'பேயைப் பார்த்தா செவுள்லயே அடிப்பேன்’ என அள்ளு கிளப்புகிறார் சந்தானம். படத்தின் 'ஸோ கால்டு ஹீரோ’க்களைவிடவும் அழகா இருக்கீங்களேஜி!

    'பேயே லாஜிக் கிடையாது. பேய்க்கு எதற்கு லாஜிக்?’ என நினைத்துவிட்டார்கள். பேய்க்கு திகில் கிளப்பும் உருவமும் இல்லை. திரைக்கதையில் பேய் பயத்துக்கான உதறலும் இல்லை!

    பரத்வாஜ் இசையில் 'பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணுமா?’ பாடல் மட்டும் ஹம்மிங் ரகம். பின்னணி இசையில் திகில் கிளப்புகிறார் கார்த்திக் ராஜா. 

    'பயப்படலாம்’ எனப் போனால், சிரிக்கவைத்து அனுப்புகிறார்கள்!

    0 comments:

    Post a Comment