Sunday, 21 September 2014

Tagged Under:

சர்க்கரையின் அளவை சரிபாதியாக குறைக்கப் பரிந்துரை – BBC

By: ram On: 18:53
  • Share The Gag
  • நம் அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ளும் சர்க்கரையின் ஒரு நாளைக்கு சுமார் 15 கிராமாக குறைக்கவேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் பரிந்துரை செய்திருக்கிறார்கள். இதனை ஊக்குவிக்க அரசுகள் சர்க்கரை வரி என்கிற புதிய வரியை விதிக்கலாம் என்றும் அவர்கள் ஆலோசனை தெரிவித்துள்ளனர்.

    உலக சுகாதர நிறுவனமும், இங்கே பிரிட்டனின் சுகாதார நிபுணர்களும் சமீபத்தில் அன்றாட உணவில் சேர்க்கப்படும் சர்க்கரையின் அளவை சரிபாதியாக குறைக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்கள்.

    இன்றைய நிலையில் ஒருவரின் அன்றாட உணவில் இருந்து உடலுக்கு பெறப்படும் சக்தியின் அளவில் அதிகபட்சமாக 10 சதவீதம் வரை உணவில் சேர்க்கப்படும் சர்க்கரையில் இருந்து கிடைக்கலாம் என்று மருத்துவர்கள் அனுமதிக்கிறார்கள். ஆனால் சமீபத்தில் உலக சுகாதார நிறுவனம் கொடுத்திருந்த தனது பரிந்துரையில் இந்தமாதிரி சேர்க்கப்படும் சர்க்கரையில் இருந்து உடலுக்கு கிடைக்கும் சக்தியின் அளவு சரிபாதியாக குறைக்கப்பட வேண்டும்; அதாவது சேர்க்கப்படும் சர்க்கரைச்சக்தியின் அளவு 5 சதவீதமாக குறைக்கப்பட வேண்டும் என்று தெரிவித்திருந்தது.

    தற்போது லண்டனில் இருக்கும் ஆய்வாளர்கள் இதுகுறித்து செய்திருக்கும் பரிந்துரையில் இந்த ஐந்து சதவீதத்திற்கு பதிலாக உடலுக்கு கிடைக்கும் உணவில் சேர்க்கப்படும் சர்க்கரை சக்தியின் அளவு 3 சதவீதத்திற்கு மேல் போகாமல் இருக்கவேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்கள்.

    சிறார்களின் பற்களை சிதைக்கும் சர்க்கரை

    குறிப்பாக பற்களில் ஏற்படும் சிதைவுக்கு உணவில் சேர்க்கப்படும் சர்க்கரையே முக்கிய காரணியாக இருப்பதாக சுட்டிக்காட்டும் லண்டன் ஆய்வாளர்கள்ம், நம் அன்றாட உணவில் சேர்க்கப்படும் சர்க்கரையின் அளவை குறைத்தால் மட்டுமே பற்கள் மற்றும் ஈறுகளில் ஏற்படும் பலவகையான நோய்கள் மற்றும் அதற்கு அரசும் தனிநபர்களும் செலவிடும் கூடுதல் மருத்துவ செலவுகளை குறைக்க முடியும் என்று கணக்கிட்டு தெரிவித்திருக்கிறார்கள்.
    சர்க்கரை பற்சிதைவை அதிகரிக்கும்

    சர்க்கரை பற்சிதைவை அதிகரிக்கும்

    குறிப்பாக பற்சிதைவு என்பது பெருமளவு தடுக்கப்படக்கூடிய ஒரு நோய் என்று கூறியுள்ள இந்த ஆய்வாளர்கள், ஒரு குழந்தையின் உணவில் சேர்க்கப்படும் சர்க்கரை அளவு அதிகரிக்க அதிகரிக்க அதற்கேற்றபடி, அந்த குழந்தையின் பற்சிதைவின் அளவும் அதிகரிப்பதாக இந்த ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். அதுமட்டுமல்லாமல், பொருளாதார ரீதியில் வளர்ச்சியடைந்த மேற்குலக நாடுகளில் ஒரு நாட்டின் ஒட்டுமொத்த சுகாதாரச் செலவில், 5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை பற்கள் தொடர்பான நோய்களுக்காக செலவிடப்படுவதாகவும் இவர்கள் கணக்கிட்டிருக்கிறார்கள்.

    பல் மருத்துவத்துக்காக செலவிடப்படும் இந்த 5 முதல் 10 சதவீத அரசு மற்றும் தனியார் பணத்தை, அன்றாட உணவில் சேர்க்கப்படும் சர்க்கரையின் அளவை குறைப்பதன் மூலம் கண்டிப்பாக குறைக்க முடியும் என்றும் இந்த ஆய்வாளர்கள் அரசுகளுக்கு பரிந்துரை செய்திருக்கிறார்கள்.

    சர்க்கரை வரி விதிக்க யோசனை

    இது தொடர்பில் அரசுகள் கடுமையான தடுப்பு நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்கிறார் இந்த ஆய்வறிக்கையை எழுதியவர்களில் ஒருவரான ஊட்டச்சத்து மருத்துவத்துறை பேராசிரியர் பிலிப்ஸ் ஜேம்ஸ். உதாரணமாக அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் பள்ளிகள், மருத்துவமனைகளில் இருக்கும் சாக்லேட் மற்றும் சர்க்கரை கலந்த குளிர்பானங்களை விற்கும் தானியங்கி இயந்திரங்கள் உடனடியாக அகற்றப்படவேண்டும் என்று இவர் அரசுகளுக்கு பரிந்துரை செய்கிறார்.

    அடுத்ததாக உணவுப்பொருட்களில் சேர்க்கப்படும் சர்க்கரையின் அளவு 2.5 சதவீத்திற்கு மேல் போனால் அத்தகைய உணவுகளை அதிக சர்க்கரை உள்ள உணவு என்று லேபிள் ஒட்டுவதோடு, அத்தகைய உணவுகள் மீது சர்க்கரை வரி என்கிற கூடுதல் வரியையும் விதிக்கவேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்திருக்கிறார். அதிகரித்த சர்க்கரையை அன்றாடம் சாப்பிடுவது என்பது மிகப்பெரிய பொது சுகாதார பிரச்சனையாக மாறிவிட்டது என்று கூறும் பேராசிரியர் ஜேம்ஸ், இதில் இனியும் காலம் தாழ்த்த முடியாது என்றும் எச்சரிக்கிறார்.

    ஆரோக்கியமாக இருக்க அன்றாட சர்க்கரையின் அளவு என்ன?
    ஒரு நாளைக்கு 5 முதல் 7 தேக்கரண்டி சர்க்கரையே சரியான அளவு

    ஒரு நாளைக்கு 5 முதல் 7 தேக்கரண்டி சர்க்கரையே சரியான அளவு

    ஒருவரின் அன்றாட உணவிலிருந்து உடலுக்கு கிடைக்கும் சக்தியின் அளவில் 10 சதவீதத்துக்கு மேல் உணவில் சேர்க்கப்படும் சர்க்கரையால் கிடைக்கக்கூடாது என்கிற முந்தைய அதிகபட்ச அளவையே இன்று பெரும்பாலானவர்கள் கடைபிடிப்பதில்லை என்றும் இந்த ஆய்வில் தெரியவந்திருக்கிறது.

    இதில் புதிய பரிந்துரையான 5 சதவீதம் என்பது பெண்களுக்கு ஒரு நாளைக்கு 25 கிராம் சர்க்கரை. அதாவது 5 முதல் 6 தேக்கரண்டி சர்க்கரை. இதுவே ஆண்களுக்கு ஒரு நாளைக்கு 35 கிராம் சர்க்கரை. அதாவது 7 முதல் 8 தேக்கரண்டி சர்க்கரை.

    இந்த அளவையும் ஏறக்குறைய சரிபாதியாக குறைக்கவேண்டும் என்று இந்த ஆய்வாளர்கள் வலியுறுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    0 comments:

    Post a Comment