லஞ்சம் வாங்கியது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள மும்பை சென்சார் போர்டு முதன்மை செயல் அதிகாரி ராகேஷ் குமார், சர்ச்சைக்குரிய இந்திராகாந்தி படுகொலை தொடர்பான படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்க ரூ.1 லட்சம் லஞ்சம் பெற்றுள்ளது தெரியவந்துள்ளது.
முதன்மை செயல் அதிகாரி கைது செய்யப்பட்டதன் எதிரொலியாக சென்னை உள்பட நாடு முழுவதும் உள்ள சென்சார் அலுவலகங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்திராகாந்தி படுகொலை படத்திற்கு ரூ.1 லட்சம் லஞ்சம் பெற்ற சென்சார் போர்டு சிஇஓ
சான்றிதழ் வழங்க லஞ்சம்
இந்தி படம் ஒன்றை தணிக்கை செய்து சட்டீஸ்கரில் வெளியிடுவதற்காக ரூ. 70 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக சென்சார் ஆலோசனைக்குழு உறுப்பினர் சர்வேஷ் ஜெய்ஸ்வால், அதிகாரபூர்வ முகவர் ஸ்ரீபட்டி மிஸ்ரா ஆகியோர் மும்பையில், கடந்த வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
அதிகாரிக்கு தொடர்பு
அவர்களிடம் விசாரணை நடத்தியதில், லஞ்ச பணத்தில் மத்திய தணிக்கை வாரிய முதன்மை செயல் அதிகாரி ராகேஷ் குமாருக்கும் பங்கு கொடுத்தது தெரியவந்தது.
சிஇஒ கைது
இதனை தொடர்ந்து முதன்மை செயல் அதிகாரி ராகேஷ் குமார் கைது செய்யப்பட்டார். திரைப்படங்களை விரைவாக சென்சார் செய்ய ரூ.10 ஆயிரம் முதல் லட்சக்கணக்கில் லஞ்சம் பெற்றதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.
கலெக்சன் ஏஜென்ட்
ராகேஷ் குமாரின் அதிகார பூர்வ ஏஜென்டாக கிருஷ்ண பள்ளி என்பவர் செயல்பட்டுள்ளார். இவர் ராகேஷ் குமாருக்காக லஞ்சம் வாங்கி கொடுத்துள்ளார்.
லஞ்சப்பணத்தில் சொத்து
இவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ராகேஷ் குமார் லஞ்சம் பெற்றதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. லஞ்ச பணத்தில் ராகேஷ் குமார் உத்தரபிரதேச மாநிலம் நொய்டா மற்றும் பீகாரில் நிலங்கள் வாங்கி குவித்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
சிபிஐ ரெய்டு
மும்பையில் உள்ள அவரது வீட்டில் சிபிஐ அதிகாரிகள் ரெய்டு நடத்தி ரூ.10 லட்சம் பணம் மற்றும் நகைகள் பறிமுதல் செய்தனர்.
ரூ.1 லட்சம் லஞ்சம்
இதனிடையே இந்திராகாந்தி படுகொலை சம்பவம் பற்றிய சர்ச்சைக்குரிய திரைப்படமான காம் தே ஹீரே திரைப்படத்திற்கான தணிக்கைச் சான்றிதழ் வழங்குவதற்காக ராகேஸ்குமார் ரூ.1லட்சம் லஞ்சப்பணம் பெற்றுள்ளதாக சிபிஐ அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்தப்படம் நாளை வெளியாக உள்ளது.
மத்திய பணியாளர் தேர்வாணையம்
ராகேஷ் குமார் 1997 மத்திய பணியாளர் தேர்வாணையம் மூலம் ரயில்வே தனிச்சேவை அதிகாரியாக தேர்வானவர். 2014ம் ஆண்டு ஜனவரி மாதம் சென்சார் போர்டின் முதன்மை செயல் அலுவலராக பணியில் சேர்ந்தார். இவர் வகிக்கும் பதவி மத்திய தணிக்கை துறை தலைவருக்கு அடுத்த நிலையில் உள்ள பதவி என்பது குறிப்பிடத்தக்கது.
கண்காணிப்பு வளையத்திற்குள்
சினிமாக்களை தணிக்கை செய்து வெளியிட சென்சார் போர்டு அதிகாரி லஞ்சம் பெற்று கைதாகியிருப்பது நாடுமுழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து சென்னை உள்பட நாடு முழுவதும் உள்ள சென்சார் போர்டு அலுவலகங்கள் தீவிர கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.
0 comments:
Post a Comment