Monday, 15 September 2014

Tagged Under:

ருத்திராட்சம் ஐந்து லட்சம்... ராசிக்கல் மோதிரம் ஏழு லட்சம்! காரைக்காலில் ஒரு சதுரங்க வேட்டை..!

By: ram On: 08:02
  • Share The Gag
  • ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்களும் இருந்து கொண்டேதான் இருப்பார்கள் என்பதற்கு லேட்டஸ்ட் உதாரணம் இந்த சம்பவம்.

    மோசடி கும்பலிடம் சிக்கி பணத்தைப் பறிகொடுத்ததுடன் உயிரையும் விட்டிருக்கிறார் புதுவையைச் சேர்ந்த தொழிலதிபர் ரமேஷ். மோசடி கும்பலைச் சேர்ந்த காரைக்கால் காசிநாதன், ஜெயக்குமார், இளவரசன் ஆகியோரை போலீஸ் கைது செய்திருக்கிறது.

    ரமேஷ§க்கு நெருக்கமானவர்களிடம் பேசினோம். ''புதுச்சேரியில் ரியல் எஸ்டேட் தொழிலை லாபகரமாக நடத்தி வந்தார் ரமேஷ். இவரிடம் பணம் இருப்பதைத் தெரிந்துகொண்ட பழைய நண்பனான காசி, அதை எப்படியாவது அபகரிக்கத் திட்டம் தீட்டினான். காரைக்கால் காங்கிரஸ் எம்.எல்.ஏ பி.ஆர்.என். திருமுருகனின் உதவியாளராகிவிட்டேன் என்று சொல்லி ரமேஷிடம் நெருங்கியிருக்கிறான். இவரும் அதை உண்மையென நம்பிவிட்டார்.

    அடுத்ததாக  இவரிடம் பணத்தைக் கறக்க... இல்லாத ஒரு சாமியாரை கற்பனையாக உருவாக்கி, 'அந்த சாமியார் திருமுருகன் எம்.எல்.ஏ-வுக்கு ரொம்ப நெருக்கம். அவரிடம்  உங்களைப் பற்றிச் சொன்னதால், அவருக்கு உங்களைப் பிடித்துவிட்டது. அதனால் சக்தி வாய்ந்த இந்த இரண்டு எலுமிச்சை பழங்களை உங்களுக்காகக் கொடுத்தார். இதற்கு பத்து லட்சம் வரை தர நிறைய பேர் தயாராக இருந்தும், என் தம்பி ரமேஷ§க்குதான் இது சேர வேண்டும். அதனால் வெறும் இரண்டு லட்சம் மட்டும் போதும்’ என்று சாமி சொன்னதாக சொல்லி வேட்டையை ஆரம்பித்திருக்கிறார். இதை ரமேஷ் நம்பி பணத்தைக் கொடுக்கவே, மேலும் பல கதைகளை அவிழ்த்து விட்டிருக்கிறான். அப்போதுதான் இளவரசனையும், ஜெயக்குமாரையும் கூட்டு சேர்த்திருக்கிறான். உலகத்திலேயே முதலில் உருவான ருத்திராட்சம் என்று சொல்லி ஒரு ருத்திராட்சத்தை ஐந்து லட்சத்துக்கும், ராசிக்கல் மோதிரத்தை ஏழு லட்சத்துக்கும், எதிரிகள் அருகே வராமல் இருக்க தாயத்து மூன்று லட்சத்துக்கும், விபூதி ஐம்பதாயிரத்துக்கும் கொடுத்திருக்கிறார். இதையெல்லாம் ரமேஷ் உண்மை என நம்பி ஏமாந்து பணத்தைக் கொடுத்து வாங்கியிருக்கிறார்.

    சாமியைப் பார்க்க வேண்டும் என்று ரமேஷ் கேட்கும்போதெல்லாம், 'சாமி இமயமலையில் ஒரு மத்திய அமைச்சருடன் யாகத்தில் இருக்கிறார். அவர் வந்ததும் 'சைஸ் புல்லிங்’ உங்களுக்குக் கிடைத்துவிடும்’ என்று சொல்லி ஏமாற்றியிருக்கிறார். இதையெல்லாம்விட கொடுமை, சாமியின் சின்ன மனைவிக்கு பத்து பவுனில் அட்டிகை பெரிய மனைவிக்கு 12 பவுனில் ஆரம், தனக்கு ஏழு பவுனில் பிரேஸ்லெட் என்று சாமி கேட்டதாகச் சொல்லி வாங்கியிருக்கிறார்.
    அவரசரமாக சாமிக்கு கொஞ்சம் பணம் வேண்டும் என்று காசி போன் செய்யும்போதெல்லாம் இவர் காசியின் மனைவி ஆனந்தியின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தியிருக்கிறார். இப்படி இவரிடம் இருந்த அனைத்து பணத்தையும் சுரண்டிவிட்டதால், தொழிலிலும் கவனம் செலுத்தாமல் கடன் சுமையும் அதிகமானதால் சாமியை சந்திக்க வேண்டும் என்று காரைக்கால் சென்று காசியை நெருக்க ஆரம்பித்திருக்கிறார். அப்போது காசிக்கும் ரமேஷ§க்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் நடந்திருக்கிறது. அதன் பிறகு ரமேஷின் உடல் புதுவையில் கரை ஒதுங்கியிருக்கிறது. இடையில் என்ன நடந்தது என்று தெரியவில்லை'' என்று சொல்கிறார்கள்.

    ரமேஷ் மனைவியைப் பார்க்கப் போனோம். அவர் பேசும் நிலையில் இல்லை. அவரது உறவினர்களோ, ''தற்கொலை பண்ணிக்கிற அளவுக்கு ரமேஷ் கோழை இல்லைங்க. அவரோட மரணத்தில் எங்களுக்கு சந்தேகம் இருக்கிறது. ரமேஷ் எப்படி இறந்தார் என்பது நிச்சயம் காசிக்குத் தெரியும். சாமி என்ற பெயரில் ரமேஷிடம் பேசியது யார்? உண்மையில் அப்படி ஒருவர் இருந்தால் அவர் எங்கே இருக்கிறார்... என்பதெல்லாம் போலீஸ் விசாரிக்க வேண்டும். ரமேஷிடம் இருந்து சாமி பெயரைச் சொல்லி காசி வாங்கிய பணத்தையும் நகைகளையும் திருப்பிக்கொடுக்க வேண்டும்'' என்று சொல்கிறார்கள்.
    இது குறித்து கோட்டுச்சேரி எம்.எல்.ஏ திருமுருகனிடம் பேசினோம். ''காசி என் தொகுதியைச் சேர்ந்தவர். அவர் எனக்கு உதவியாளர் எல்லாம் கிடையாது. அவருக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை!'' என்று சொன்னார்.
    வழக்கை விசாரிக்கும் காரைக்கால் டவுன் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராஜசேகரிடம் கேட்டபோது, ''தற்கொலைக்குத் தூண்டியதாக மூன்று பேர் மீது வழக்குப் பதிவு செய்திருக்கிறோம். விசாரணை நடந்து வருகிறது'' என்றார்.

    பேராசை பெரு நஷ்டத்தில் மட்டுமல்ல... மரணத்திலும் சில நேரங்களில் தள்ளிவிடுகிறது!

    0 comments:

    Post a Comment