பார்த்திபன் இயக்கிய கதை திரைக்கதை வசனம் இயக்கம் படம் கடந்த 15ந் தேதி வெளியானது. மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ள இந்தப் படம் பார்த்திபனை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது. 60 திரையரங்குகளும் உயர்த்தப்பட்டுள்ளது. 25 வருடங்களுக்கு பிறகு பெற்ற வெற்றியை நண்பர்கள், பத்திரிகையாளர்களுடன் கொண்டாடுகிறார். கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நாளை (ஆகஸ்ட் 21) வெற்றி விருந்து (சக்சஸ் பார்ட்டி) வைக்கிறார். அதோடு படம் பற்றிய திறனாய்வு நிகழ்ச்சி ஒன்றையும் நடத்துகிறார்.
இதுகுறித்து பார்த்திபன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: 1989ல் புதிய பாதை வெளியீட்டின்போது அனுபவித்த அதே பிரவச வேதனையை இந்த 2014 ஆகஸ்ட் 15லும் அனுபவித்தேன். என் கதை திரைக்கதை வசனம் இயக்கத்தில் எத்தனை படங்கள் வந்திருந்தாலும் இந்த கதை திரைக்கதை வசனம் இயக்கம் படம் கொஞ்சம் வித்தியாசமானது என்று எனக்கு நானே ஒத்துக் கொண்ட படம். காரணம் கதைக்களம் இல்லாத கதையில் களமாட வேண்டியதாயிருந்தது. பலமான திரைக்கதையில் பரீட்சார்த்தமாய் செய்த எல்லா விஷயங்களும் இன்று எல்லோராலும் ரசிக்கப்படுவதில் ஆனந்த அதிர்ச்சியாகியுள்ளேன்.
திரைத்துறைக்கு முற்றிலும் புதிதான ஆனால் திரைக்கலையையும், என்னையும் நேசித்த ஒரு நல்ல தயாரிப்பராளரால் தான் இந்த வித்தியாசமான முயற்சி சாத்தியமானது. புதிதாக எடுக்கப்படும் ஒரு முயற்சியின் போது இது மக்களுக்கு புரியுமா, ஏற்றுக் கொள்வார்களா என்பதுதான் படைப்பாளியின் முன் வைக்கப்படும் கேள்வி. அது அவனை சமரசம் செய்ய வைக்கும்.
என்மேல் ரசிகர்களுக்கு இருக்கும் நம்பிக்கையும், அவர்கள் மேல் நான் வைத்திருக்கும் நம்பிக்கையும் பொய்ததில்லை. அரங்கங்களிலும் எழும் கைதட்டல்கள் அதை உறுதிப்படுத்தும்போது கலங்கி விட்டேன். என் கைகுட்டை கண்ணீர் குட்டையானது. ஒவ்வொரு ரசிகனையும் கட்டிப்பிடித்து நன்றி தெரிவிக்க ஆசை, அதனை உங்கள் மூலம் செய்கிறேன். இது 25 வருடங்கள் இதயத்தில் அடக்கி வைத்த ஆக்கபூர்வமான ஆதங்கம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியிருக்கிறார்.
0 comments:
Post a Comment