Thursday, 14 August 2014

Tagged Under: ,

தலையணை மந்திரம்!

By: ram On: 22:24
  • Share The Gag

  • எல்லாமே இயந்திரமயமாகிப் போன இன்றைய உலகில், தூக்கத்தின் அளவு, நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இதனால், மனதின் அமைதி கெட்டு, தூக்கமின்றி தவிக்க நேரிடுகிறது. சில நூற்றாண்டுகளுக்கு முன் வரை, மக்களிடையே, கடுமையான உழைப்பும், எதையும் ஆழ்ந்து ரசிக்கும் மனதும் இருந்தது.

    இதனால், மனதில் அமைதியும், சந்தோஷமும் ஏற்பட்டன. அதனால், அவனுக்கு, படுத்தவுடன் தூக்கம் கண்களை தழுவியது. ஆனால், இன்றைய காலக் கட்டத்தில், தொழில், வேலை, வசதி, பொறாமை பெருகி விட்டதால், மன அமைதி கெட்டுப் போனது.

    இதனால், தூக்கம் குறைந்து மருந்து, மாத்திரை, போதை என்று பெருகிப்போனது. மனசும், ஆரோக்கியமும் சீராக இருந்தால்
    மட்டுமே, படுத்தவுடன் தூக்கம் வரும். தூக்கத்திற்கு முக்கிய காரணமாக இருப்பது, சுகமான தலையணைகள். இதனால், தற்போது, தலையணைகளுக்கு மவுசு அதிகரித்து, விதவிதமான தலையணைகள் உருவாகி வருகின்றன.

    பழங்காலத்தில், துணிகளை சுருட்டி வைத்து, தலையணையை உருவாக்கினர். அப்புறம், பஞ்சினால் தலையணை உருவானது. பின், தேங்காய் நார் மூலம் தயாரித்தனர். இப்போது, பாரம்பரிய பழக்க முறை மாறி, சிந்தெட்டிக் தலையணைகள் விற்பனை செய்யப்படுகின்றன.

    சரியான உயரத்தில், தலையணையை வைக்காவிட்டால், முதுகு வலி, கழுத்து வலி, தூக்கமின்மை ஏற்படும். தலையணை வைக்கும் போது, நம்முடைய கழுத்து, தலை மற்றும் தோள் ஆகிய மூன்று பகுதிகளும் தலையணையில் சமமாக இருக்க வேண்டும். இப்படி வைத்து தூங்கினால் தான், தூக்கம் சீராகும்.

    ஓட்டல்களில், சரியான அளவுகளில், தலையணைகள் வைக்கப்படுகின்றன. கழுத்து வலி உள்ளோர்களுக்கு, புதுவிதமான தலையணைகள் உருவாக்கப்படுகின்றன. தலையணை பொருத்தமாக இருந்தால், தூக்கத்திற்கு கவலை இல்லை. அதுமட்டுமின்றி, தலையணை சுத்தமாக, மிதமான நிற தலையணை உறைகளுடன் இருந்தால் பார்க்க, இதமாகவும், தூங்குவதற்கு சுகமாகவும் இருக்கும்!

    நிம்மதியாக தூங்க...

    * இரவு தூங்குவதற்கு முன், அதாவது இரண்டு மணி நேரத்திற்குள், டீ, காபி குடிக்க வேண்டாம்.

    * இரவு, படுக்கைக்கு செல்லும் முன், மிதமான சூட்டில் பால் அருந்தவும்.

    * சிலர் தூங்குவதற்கு முன், அன்று நடந்த விஷயங்களையும், மறுநாள் என்னென்ன செய்யலாம் என்று நினைத்து, டென்ஷனாகி கொண்டிருப்பர். கண்டிப்பாக அதையெல்லாம் தவிர்க்கவும்.

    * ஆன்மிகத்தில் ஈடுபாடு உள்ளோர், கடவுளை நினைத்துக் கொள்ளலாம். அன்றைய பொழுது, இனிமையாக சென்றதற்கு, கடவுளுக்கு நன்றி கூறலாம்.

    * படுக்கை அறையில், அதிகமான வெப்பமோ அல்லது அதிகமான குளிரோ இல்லாமல், மிதமான தட்பவெப்பம் இருப்பது நல்லது.

    * சிந்தனையைத் தூண்டாத, மகிழ்ச்சி தரும் புத்தகத்தை படிக்கலாம்.

    * மனசுக்கு இதமான இசையை, கேட்பதும் நல்லது.

    0 comments:

    Post a Comment