சென்னையில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்து வரும் ராகவன் (ஜெய்), தனது சொந்த ஊரான கோயம்புத்தூருக்கு ரெயிலில் புறப்படுகிறார். டிக்கெட் முன்பதிவு செய்யாததால் முஸ்லீம் பெயருடைய ஒருவருடைய பயணச்சீட்டில் பயணம் செய்கிறார்.
அதே ரெயிலில் சாப்ட்வேர் இன்ஜினியரான ப்ரியா (நஸ்ரியா) வேலை நிமித்தமாக தனது தோழி ஆயிஷாவின் பயணச்சீட்டில் பயணம் செய்கிறார். இருவரும் பிராமண வகுப்பை சேர்ந்தவர்கள் என்றாலும், ரெயிலில் ஒருவருக்கொருவர் அறிமுகமாகிக் கொள்ளும்போது தங்களை முஸ்லீம் என்றே அறிமுகம் செய்துகொள்கின்றனர்.
பயணத்தின் போது சகபயணி ஒருவர் ப்ரியாவை அவரது மொபைலில் தவறாக படம் பிடிக்க, அவரை ராகவன் கண்டித்து போலீசில் ஒப்படைக்கிறார். இதனால், பிரியாவுக்கும், ராகவனுக்கும் இடையே நல்ல நட்பு உருவாகிறது. பின்னர் இருவரும் கோயம்புத்தூரில் இறங்கி தனித்தனியாக பிரிந்து சென்றுவிடுகிறார்கள்.
2 நாட்கள் கழித்து இருவரும் சென்னைக்கு திரும்பும்போது மறுபடியும் சந்திக்கிறார்கள். அப்போது இருவரும் தங்கள் மொபைல் நம்பரை பரிமாறிக்கொள்கிறார்கள். அன்றுமுதல் ஒருவருக்கொருவர் போனில் தொடர்பு கொண்டு பேசி காதலிக்க ஆரம்பிக்கிறார்கள்.
பிரியாவிடம் தன்னை முஸ்லீமாக காட்டிக் கொள்ளவேண்டும் என்பதற்காக ராகவன் முஸ்லீம் பழக்கவழக்கங்களை கற்றுக் கொள்கிறான். அதேபோல், பிரியாவும் ராகவனிடம் தன்னை முஸ்லீமாக காட்டிக் கொள்ளவேண்டும் என்பதற்காக முஸ்லீம் பழக்க வழக்கங்களை கற்றுக் கொள்கிறாள்.
இந்நிலையில், இருவரது பெற்றோர்களும் இவர்களுக்கு வரன் தேடுகிறார்கள். இதனால் பிரியாவும், ராகவனும் தங்களை பற்றிய உண்மையை பரிமாறிக் கொள்கிறார்கள். இருவருமே ஒரே பிரமாண குலத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களது பெற்றோர்களும் இருவரின் காதலை ஏற்று திருமணத்துக்கு ஏற்பாடு செய்கிறார்கள்.
ஒருவரையொருவர் முஸ்லீமாக நினைத்து காதலித்து வந்ததால் பிரமாண முறைப்படி நடக்கும் திருமணத்தை இவர்களால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. இதனால் திருமணத்தை நிறுத்திவிட்டு இருவரும் பிரிகிறார்கள். இறுதியில் இரண்டு பேரும் ஒன்று சேர்ந்தார்களா? இல்லையா? என்பதே மீதிக்கதை.
ராகவனான ஜெய், தன்னுடைய நடிப்பின் மூலம் ரசிக்க வைக்கிறார். அவருடைய நடிப்பும், தோற்றமும் ஒரே மாதிரியாக இருந்தாலும், அந்த வேடத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். பிரியாவாக வரும் நஸ்ரியா தமிழுக்கு அறிமுகமானது இதுதான் முதல் படம் என்றாலும், தமிழில் அவருக்கு இது கடைசி படமாக அமைந்திருக்கிறது. இஸ்லாமிய பெண், பிரமாண பெண் என இரண்டு வேடங்களிலும் தனது வேலையை சரியாக செய்திருக்கிறார்.
ஜெய், நஸ்ரியா என இருவரையும் சுற்றியே முழுப்படமும் நகர்வதால், மற்ற கதாபாத்திரங்களில் வலுவில்லை. ரொம்பவும் சென்சிட்டிவான கதையை கையிலெடுத்து அதை பக்குவமாக படமாக்கியிருக்கிறார் இயக்குனர் அணிஸ். முதல் பாதியை விறுவிறுப்பாக நகர்த்தியவர், இரண்டாம் பாதியில் சொல்ல வந்த கருத்திலிருந்து விலகி, வேறு எதையோ சொல்ல வர, கடைசியில் ரசிகர்களுக்கு குழப்பமே மிஞ்சியிருக்கிறது. திரைக்கதையிலும், கிளைமாக்ஸ் காட்சியிலும் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் மறக்க முடியாத படமாக இருந்திருக்கும்.
ஜிப்ரான் இசையில் ‘நெஞ்சுக்குள் பொத்தி வைப்பேன் பாடல்’ ரசிக்கும்படியாக இருக்கிறது. அப்பாடலின் காட்சியமைப்பும் பலே. லோகநாதனின் ஒளிப்பதிவு நஸ்ரியாவையும், படத்தின் பெரும்பாலான காட்சிகளையும் அழகாக காட்டியிருக்கிறது.
மொத்தத்தில் ‘திருமணம் எனும் நிக்காஹ்’-வில் கோலாகலம் குறைவு.
0 comments:
Post a Comment