சமீப காலமாக சில நடிகைகள் படங்களில் பாடி வருதை சில இசையமைப்பாளர்கள் எதிர்த்து வருகின்றனர். முறையான சங்கீதப் பயிற்சி இல்லாமல் பலர் பாடி வருவது கண்டனத்துக்குரியது என்ற குரலும் எழுந்துள்ளது. இந்த நிலையில் 'அஞ்சான்' படத்தில் இடம் பெற்ற 'ஏக் தோ தீன் சார்...' என்ற பாடலைப் பாடியதன் மூலம் சூர்யாவும் பின்னணிப் பாடகராக அறிமுகமாகியுள்ளார். இந்த பாடலை சூர்யா ஏன் பாடினார் என்பதற்கான காரணம், இன்று காலை நடைபெற்ற 'அஞ்சான்' ஆடியோ ரிலீசில் வெளிவந்தது.
மேற்கண்ட பாடலை முதலில் படத்தின் இசையமைப்பாளரான யுவன்ஷங்கர் ராஜாவே பாடியிருக்கிறார். அந்த பாடலை வைத்து படத்தின் படப்பிடிப்பையும் முடித்திருக்கிறார்கள். ஆனால், அவர் பாடியதை விட வேறு யாராவது பாடினால் வித்தியாசமாக இருக்குமே என்று படத்தின் நாயகனான சூர்யா சொன்னாராம். அதன் பின் சூர்யா ஒரு விளம்பரப் படத்தில் பாடியது இயக்குனர் லிங்குசாமிக்கு ஞாபகம் வந்ததாம். அதன் பின் சூர்யாவிடம் அதைச் சொல்லி இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா சம்மதத்துடன் சூர்யாவைப் பாட வைத்திருக்கிறார்கள். பாடல் பதிவன்று சூர்யாவுக்கு ஜலதோஷம் வேறு இருந்ததாம். ஆனால், அதுவே சில பாடல்களுக்கு பிளஸ் பாயின்டாக அமைந்துவிடும் என யுவன் சொல்ல, பாடல் பதிவு இனிதே நடந்ததாம்.
சரி, நாம் பாடியது நன்றாக இருக்காது, திரும்பவும் நம்மைப் பாட அழைப்பார்கள் என சூர்யா எதிர்பார்த்துக் கொண்டிருக்க, அந்த பாடலையே இயக்குனர் ஓகே சொல்லிவிட்டாராம். இப்படித்தான் சூர்யா பின்னணிப் பாடகராகியிருக்கிறார். “நான் பாத்ரூம்ல கூட தப்பித் தவறி பாடினதில்லை. என்னை இயக்குனர் பாடச் சொல்லிக் கேட்கும் போது, எனக்கு தயக்கமாதான் இருந்தது,” என சூர்யா பேசும் போது கூறினார்.
0 comments:
Post a Comment