Friday, 13 December 2013

Tagged Under: , , , ,

மருத்துவ கழிவுகளால் விளையும் பேராபத்து!

By: ram On: 08:56
  • Share The Gag



  • உயிரி மருத்துவக் கழிவுகள் தொடர்பான சட்ட விதிகளை மீறியதாக ஒடிசா மாநிலம் ஜெகத்சிங்பூர் சார்பு குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் அஞ்சன் குமார்தாஸ் என்பவர் மீது அண்மையில் தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு இரண்டாண்டு கடுங்காவல் சிறைத்தண்டனையும், ரூ.50,000 அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.மருத்துவக் கழிவுகள் என்பது மருத்துவமனையில் நோயாளிக்கு அளிக்கப்படும் சிகிச்சைக்குப் பிறகு, வெளியேற்றப்படும் கழிவுப் பொருள்கள் ஆகும். அதாவது பயன்படுத்தப்பட்ட சிரிஞ்சுகள், ஊசிகள், கத்தி, ரத்தக்குழாய்கள், செயற்கை சுவாசக் குழாய்கள், ரத்தம் மற்றும் சீழ் துடைக்கப்பட்ட பஞ்சுகள், பேண்டேஜ் துணிகள், கையுறைகள் போன்றவை.


    சில நோய்களுக்கு உடல் உறுப்புகளையே அகற்ற வேண்டியுள்ளது. உதாரணமாக சர்க்கரை நோய் போன்றவற்றுக்கு, பாதிப்பின் நிலையைப் பொருத்து விரல்கள் அல்லது கை, கால் போன்ற உறுப்புகளை அகற்ற வேண்டியுள்ளது. அதுபோல் மருத்துவ ஆய்வுக் கூடங்களிலிருந்து நுண்ணுயிர்க் கிருமிகள் கலந்த கழிவுகள் வெளியேற்றப்படுகின்றன. இவையும் கழிவுகள் பட்டியலில் சேர்க்கப்படுகின்றன.


    இவை மட்டுமின்றி காலாவதியாகும் மருந்துப் பொருள்களும் கழிவுப் பட்டியலில் சேர்கின்றன. ரத்த வங்கிகளில் சேமிக்கப்படும் ரத்தம் கூட குறிப்பிட்ட நாள்களுக்குப் பின்னர் பயனற்ற கழிவாகிறது. இவ்வாறு சேரும் கழிவுகளை முறையாக அழிப்பதற்கென, சுற்றுச்சூழல் விதிமுறைகள் உள்ளன.


    ஆபத்தை ஏற்படுத்தும் மருத்துவக் கழிவுகள் பெரும்பாலான இடங்களில், முறையாக அகற்றப்படாமல் அப்படியே குப்பையில் கொட்டப்படுகின்றன. குப்பையில் சேரும் மருத்துவக்கழிவுகள் நோய் பரப்பும் கிருமிகளாக உருவெடுக்கின்றன. இதனால், ஒரு நோயாளியை குணமாக்கியதன் காரணமாக வெளியேற்றப்பட்ட மருத்துவக் கழிவுகள் பத்து நோயாளிகள் உருவாகக் காரணமாகின்றன.


    இது குறித்து மருத்துவ கழிவுகள் அகற்றம் பற்றி மாசு கட்டுப்பாடு வாரிய உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: மருத்துவமனைகளில் ஏற்படும் கழிவுகள் தரம் வாரியாக பிரிக்கப்படுகிறது. மனித உடற்கூறு கழிவுகள், நுண்ணுயிர் கழிவுகள், கூர்முனை கழிவுகள் (ஊசி) என 10 வகையான கழிவுகளை மருத்துவமனை ஊழியர்களே பிரித்து விடுவார்கள். இந்த கழிவுகள் மஞ்சள், சிகப்பு, கருப்பு மற்றும் புளூ அல்லது வெள்ளை கவரில் சேகரித்து வைக்கப்படும்.


    பின்னர் தனியார் ஊழியர்கள் ஒவ்வொரு மருத்துவமனையாக சென்று அனைத்து கழிவுகளையும் சேகரித்து பாதுகாப்பான இடங்களில் எரித்தும், புதைத்தும் அழித்து விடுவார்கள். மருத்துவ கழிவுகளை சேகரித்து எரிப்பதற்காக, செங்கல்பட்டு, காட்பாடி, ஊட்டி, ராமநாதபுரம், சேலம், கோவை, திருநெல்வேலி, விருதுநகர் உள்ளிட்ட 12 இடங்களில் நிலையங்கள் உள்ளன.


    தமிழகத்தில் தினமும் 26 டன் மருத்துவ கழிவுகள் அப்புறப்படுத்தப்படுகிறது. சராசரியாக ஒரு படுக்கைக்கு 250 கிராம் மருத்துவ கழிவுகள் சேரும். அவற்றை 48 மணி நேரத்துக்குள் அப்புறப்படுத்த வேண்டும். இது ஒழுங்காக கடைபிடிக்கப்படுகிறதா என்பதை மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் கண்காணிப்பார்கள். மீறும் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.


    இந்திய மருத்துவமனைகளில் சேரும் மருத்துவக் கழிவுகளில், பாதிக்கும் மேற்பட்டவை முறையாக அழிக்கப்படுவதில்லை என்றும், அவை நகராட்சி குப்பைத் தொட்டிகளில் கொட்டப்படுவதாகவும் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்திருந்தது.இந்தியாவில் மருத்துவமனை களிலிருந்து நாள்தோறும் பல லட்சம் கிலோ அளவுக்கு மருத்துவக்கழிவுகள் வெளியேற்றப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.”என்று சொன்னார்


    மேலும் சில ஆண்டுகளுக்கு முன் புது தில்லியிலுள்ள குப்பைமேடு ஒன்றில் பழைய பொருள்களை சேகரித்த ஆறு பேருக்கு உடல்நலம் கடுமையாக பாதிக்கப்பட்டது. குப்பையிலிருந்த மருத்துவக் கதிரியக்கப் பொருளை கையில் எடுத்ததால் வந்த பாதிப்பு என்பது விசாரணையில் தெரியவந்தது. பாதிக்கும் மேற்பட்ட மருத்துவக் கழிவுகள் இந்தியாவில் எங்கும் முறையாக அழிப்பதில்லை என்று மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அப்போது தெரிவித்தது.


    குப்பைகளில் போடப்படும் ஊசி, சிரிஞ்ச் போன்வை,பள்ளிக் குழந்தைகளின் கண்களில் படும்போது ஆபத்து ஏற்படும் வாய்ப்புள்ளது. அறியாமல் டாக்டர் விளையாட்டு என குப்பையில் போடப்பட்ட ஊசியை எடுத்து பயன்படுத்தும்போது குழந்தைகளுக்கு நோய் பரவ வாய்ப்புள்ளது.


    சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழலேரிக் கரையை ஒட்டி மருத்துவக் கழிவுகள் ஏராளமான அளவில் கொட்டப்பட்டு நீராதாரம் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


    மேலும் மருத்துவக் கழிவுகளால் தொற்றுநோய் பாதிப்பு ஏற்படும் ஆபத்து உள்ளதால் அவற்றை முறையாகக் கையாளவும், அழிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும். மருத்துவக் கழிவுகளைக் கையாளவும், அழிக்கவும் பெரிய மருத்துவமனைகளில் வசதிகள் உள்ளன. ஆனால் சிறிய மருத்துவமனைகளில் இதுபோன்ற வசதிகள் குறைவாகவே உள்ளன. எனவே மருத்துவக்கழிவுகளை முழுமையாக அழிப்பதற்கான “ட்ரீட்மெண்ட் பிளாண்ட்’டுகளை அதிகரிக்க வேண்டியுள்ளது.


    “ட்ரீட்மெண்ட் பிளாண்ட்’டுகளில் “இன்சினரேட்டர்’, “மைக்ரோவேவ்ஸ்’ போன்ற எரிப்பான்கள் மூலம் உயர் வெப்பநிலையில் எரித்தல் போன்ற முறைகளைக் கையாண்டு மருத்துவக்கழிவுகள் அழிக்கப்படுகின்றன.


    சிறிய மருத்துவமனைகளின் கழிவுகளை வாங்கி அழிக்க அரசும், தனியாரும் ட்ரீட்மெண்ட் பிளாண்ட்டுகளை அதிகரிக்க முயற்சிக்க வேண்டும். மேலும் அவ்வப்போது மருத்துவமனைகளுக்குச் சென்று, மருத்துவக் கழிவுகள் முறையாக அப்புறப்படுத்தப்படுகிறதா என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்.


    கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டால் மருத்துவக் கழிவுகளால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கலாம். மருத்துவமனைகளுக்குச் சென்று ஆய்வுகளில் ஈடுபடும் அமைச்சர்களும், அதிகாரிகளும் மருத்துவக் கழிவு மேலாண்மை குறித்தும் ஆய்வு செய்ய வேண்டும்.

    0 comments:

    Post a Comment