Thursday, 12 December 2013

Tagged Under: ,

ரிலீஸாகும் நாளிலேயே என் படத்தை இன்டர்நெட், கேபிளில் வெளியிடுவேன்: சேரன்!

By: ram On: 18:09
  • Share The Gag

  • “என்னுடைய ‘ஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கை’ படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்யும் நாளிலேயே இன்டர்நெட், கேபிளில் வெளியிடப்போகிறேன்” என்று இயக்குநர் சேரன் கூறியுள்ளார்.


    சமுத்திரக்கனியின் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் தயாராகிவரும் ‘நிமிர்ந்து நில்’ படத்தின் இசை மற்றும் டிரெயிலர் வெளியீட்டு விழா சென்னையில் புதன்கிழமை நடந்தது. இந்த விழாவில் திரைப்பட சங்கப் பொறுப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர்கள், நடிகைகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


    இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் சேரன் பேசியதாவது: சமுத்திரக்கனி ஒரு போராளி. சமூகத்தின் பிரச்சினைகளை தொட்டுப்பேசும் படங்களை இயக்கும் போராளி. இந்தப்படம் வெளிவரும்போது சமூகத்தில் நிறைய மாற்றங்கள் நிகழும். இந்தப்படத்தில் நடிகர் ஜெயம்ரவி முழு ஆற்றலை வெளிப்படுத்தி யிருப்பது டிரெயிலரை பார்க்கும் போது தெரிகிறது. இங்கே தணிக்கைத்துறை பற்றி ராஜன் பேசினார்.


    அவர் ரொம்ப காலமாக பேசியும் போராடியும் சண்டைப் போட்டும் பார்க்கிறார். ஆனால், பலருக்கும் முதுகெலும்பு நிமிர்ந்து எழும்பத்தான் இல்லை. இன்றைக்கு படம் ரிலீஸாகும் முன்பே இன்டர்நெட், கேபிள், திருட்டு விசிடிக்களில் படங்கள் வந்துவிடுகின்றன. அப்படி இருந்தும் திரையரங்கில் படம் பார்க்க வருபவர்கள் வரத்தான் செய்கிறார்கள். இப்படி யாரோ ஒருவர் அபகரிக்கிற சொத்தை நாம ஏன் வியாபாரமாக்கக்கூடாது? தயாரிப்பாளர்கள் ஏன், அந்த பணத்தை சம்பாதிக்கக்கூடாது? கேபிள், இன்டர்நெட் என்று எல்லா உரிமைகளையும் படத்தை ரிலீஸ் செய்யும் அன்றைக்கே கொடுத்துவிட்டால் திருடர்களை ஒழித்துவிடலாமே. திருட்டு விசிடியையும் ஒழித்துவிடலாமே.


    இன்று பாம்பே, கேரளாவில் எல்லாம் திருட்டு விசிடி வரவில்லை. இங்கு மட்டுமே எப்படி நுழைகிறது. இங்கே முக்கியமான உரிமம் உட்பட எல்லாமே அரசியல்வாதிகளின் கைகளில் இருக்கிறது. அவர்களை நெருங்க யாரும் முன்வருவ தில்லை. சினிமாவில் இனி போராடத் தயாராக இருக்க வேண்டும். சினிமா தழைத்தோங்க ‘நிமிர்ந்து நில்’ என்று படம் எடுத்தால்மட்டும் போதாது. சினிமாக்காரர்கள் நாமும் நிமிர்ந்து நின்று போராடத் தயாராக வேண்டும். நான் என்னுடைய ‘ஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கை’ படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்யும் அன்றைக்கே கூகுள், இன்டர்நெட், கேபிளில் வெளியிடப்போகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

    0 comments:

    Post a Comment