Thursday, 5 December 2013

Tagged Under: , , , , ,

கட்டை விரலின் மகத்துவம் - கட்டுரை!

By: ram On: 20:02
  • Share The Gag

  •  புகைப்படம், வாக்காளர் அட்டை, கடவுச்சீட்டு. குடும்ப அட்டை, நிறுவனத்தில் பணிபுரியும் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமை – எத்தனையோ விதங்களில் அடையாள நிரூபணங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டாலும், கட்டை விரல்தான் சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட நம்    அடையாளம். உன்னையே நீ மறந்தாலும் ( மூளைச் சிதைவு நோயில் இது சாத்தியம் ) உன்னை உலகுக்கு அடையாளம் காட்டுவது உன் விரல் ரேகைதான்.

    கட்டைவிரலில் சாதாரண கொப்பளம் வந்தாலும் கூட,நாம்   சேமித்து வைத்த  நம்    பணத்தை வங்கியில் இருந்து எடுக்க முடியாது. கட்டைவிரல் சரியில்  லை என்றால் கையெழுத்தும் சரியாக இருக்காது. அந்தக் கட்டை விரல் வெட்டுப்பட்டால்தான் பிற விரல்களின் ரேகைகள் தேவைப்படும் நம் . கட்டை விரலை இழப்பது நம்   அடையாளத்தை இழப்பதாகும்.

    ஏல்லோர்க்கும் தங்களை நேசிப்பதே மிகப் பெரிய விசயமாக இருக்கும். ‘ நாட்டை, குடும்பத்தை, நண்பர்களை, நேசிக்கிறேன், என்னைப் பற்றி அக்கறையே இல்லை ‘ என்று சொல்பவர்களும் அப்படி உண்மையாகவே நினைப்பவர்களும் உண்டு. நிஜத்தில், தன்னை நேசிக்காதவன் பிறரை நேசிக்க முடியாது. தியாகி கூட அந்தச் செயலில் ‘தனக்கு’ மகிழ்ச்சி கிடைக்கிறது என்பதால்தான தியாகம் செய்வான். ‘மற்றவர் மகிழ்ச்சிக்காக’ ஒரு காரியம் செய்தாகச் சொல்லிக் கொள்பவன் கூட உண்மையில் அதைத் ‘தன்’ சௌகரியத்திற்காக, ‘தான் தனத்னைப் பற்றி’ வகுத்துக் கொண்ட பிம்பத்திற்காகவே செய்வான். அப்படித் தன்னையே முக்கியமாக நேசிக்கும் மனிதன் – தன் உறுப்புகளிலேயே முதலில் சுவைப்பதும், சுவைப்பதால் ரசிப்பதும் தன் கட்டை விரலைத்தான். குழந்தைகள் கட்டை விரல் சூப்புவதும் இப்படித்தான். தாயின் மார்பு இதமான உணவு தரும் பாதுகாப்பு என்பதை அனிச்சையாக அறியும் குழந்தைகள், தாங்களாகவே வாயில் வைத்துக் கொள்வது கட்டை விரலைத்தான். இந்தக் கட்டை விரலுக்குத்தான் எவ்வளவு முக்கியம்?

    அவ்வளவு முக்கியமான கட்டை விரலை இழக்கலாமா? ஏகலைவனுக்கு அதுதான் ‘கதை’யில் நடந்தது. நாம் இப்பொது ஏகலைவன்களாக ஏமாறாமல் இருப்பதற்கே இது எழுதப்படுகிறது. ‘அது கதைதானே’ என்று ஒதுக்கி விட முடியாது – ராமன் பாலம் கட்டியதும் கதைதான். கதை சொல்வதும், அதைக் கேட்பதும் காலங்காலமாய் இருந்து வரும் உலகளாவிய கலாச்சார வழக்கம். கதைகளைச் சொல்பவர்கள் யாருமே தங்கள் கற்பனைத் திறனையும் மொழித் திறனையும் பறைசாற்ற மட்டுமே கூறுவதில்லை. உள்ளே ஒரு செய்தி பொதிந்ததுதான் கதை. ‘இதனால் அறியப்படுவது என்னவென்றால்….’ என்று அறம் போதிக்கும் முடிவுரை இல்லாவிட்டாலும் எல்லாக் கதைகளுமே ஒவ்வொரு செய்தியைக் கூறுகின்றன. செய்தியைச் சுவையாக ஆக்குவதே கதைதான். சில கதைகள், அவற்றை எழுதும் மனிதனின் மனநிலையை மட்டுமே பிரதிபலித்தாலும் அவையும் செய்திகள்தான். இப்படியெல்லாம ஒருவன் சிந்திக்க முடியும் என்ற செய்தியையே அவை சொல்கின்றன.

    செய்திகள் அவசியம்தான். நிலைமைகளையும் நிஜங்களையும் அவை நமக்குச் சுட்டிக் காட்டுவதால் அவசியம். ஆனால் நாம் உண்மைகளை அப்படியே ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தில் இல்லை. சமுதாய மனநிலைக்கு ஒப்பனைகள் அலங்காரங்களாகவே தெரிகின்றன. தெருவில், வண்டியில் விற்கப்படும் மாம்பழத்தை விடவும், அழகான உறையில் அடைத்து பிரம்மாண்டமான கடையிலிருக்கும் மாம்பழத்தையே மக்கள் வாங்குகிறார்கள். இரண்டுமே நிஜ மாம்பழங்கள்தான். ஒன்று அப்பட்டம், இன்னொன்று ஆடம்பரம். கதைகளும் அப்படித்தான். அப்பட்டமான உண்மைகளைச் சொல்லும் செய்திகள் கூட அலங்கரிக்கப்பட்டு வெளிப்படுத்தப் படுவதால் அவைகள் கதைகளாகின்றன. மேலிருக்கும் உறையை எடுத்துவிட்டால் மாம்பழம் தோன்றும். அதுவரை அதைப் போர்த்தியிருந்த உறை அதன அடிப்படை எளிமையை மெருகேற்றியே காட்டும். அந்தப் பழத்தையும் தோலுரித்துத் தின்றுவிட்டு கொட்டையை வீசினால் – என்றாவது இன்னொரு மாமரம் முளைக்கும், பழம் தரும். கதைகளையும் இப்படி அணுகினால்தான அவை உதவும். ஒவ்வொரு கதையும் பழம்தான். ரசித்து சுவைத்து மறதிச் சகதிக்குள் வீசினாலும் உள்ளிருக்கும் அந்த ஆதாரச் செய்தி வருங்காலத்திற்கு மீண்டும் போய்ச் சேரும்.

    மீண்டும் ஏகலைவன் கதையைப் பார்ப்போம். வெறும் கதையாக மட்டுமல்லாமல் அதில் புதைந்திருக்கும் செய்தியை, உணைமையை, விளக்கத்தை, எச்சரிக்கையை பார்ப்போம். ஏகலைவனுக்கும் கற்றுக் கொள்ள வேண்டும் என்று ஆசை. அவன் படிக்க நினைத்த பாடத்தைக் கற்றுக் கொடுப்பதிலேயே மிகச்சிறந்த ஆசிரியன் துரோணன். வாத்தியாருக்கு ஊதியமும் சன்மானமும் தருவதற்கு வழியில்லாத மாணவன் ஏகலைவன் – ஏழை. அந்த வாத்தியாருக்கோ ராஜா விட்டுப் பிள்ளைகளெல்லாம் மாணவர்கள். வருமானத்தோடு மரியாதையையும் நிறைய சம்பாதிக்கும் அந்த வாத்தியாரிடம் ஏகலைவன் எப்படிப் பாடம் கற்றுக் கொள்ள முடியும்? எனவே அவரை ‘குரு’வாக்கிக் கொண்டு, அவர் சொல்லிக் கொடுப்பதை கற்பனை செய்து கொண்டு வித்தை பழகினான்.

    மேலோட்டமாக இல்லாமல் மனதாரா விரும்பி, சிரத்தையோடு பழகியதால் வித்தையில் சிறப்பாகவும் தேர்ச்சி அடைந்தான். வாத்தியாருக்கு இது தெரிந்து விட்டது. ஏகலைவனிடம் உன் படிப்பிற்கு என் சம்பளம் வேண்டுமென்றார். தன்னிடம் இருக்கும் எதையும் தருகிறேன் என்கிறான் ஏகலைவன். ‘உன் கட்டை விரலைத் தா’ என்கிறான் துரோணன். குரு என்று மனதில் நம்பிவிட்டதால் தன் கட்டை விரலை வெட்டிக் கொடுத்தான் ஏகலைவன். அவன் கற்றது வில் வித்தை. கட்டை விரல் இல்லாமல் வில்லால் காற்றைக் கூட அடிக்க முடியாது. நமக்குச் சொல்லப்பட்ட கதை இதுதான். ஆனால் இது இவ்வளவுதானா? இதனுள் பார்ப்பதற்கும் புரிந்து கொள்வதற்கும் எவ்வளவு விசயங்கள்!

    ஏழை – பணக்காரன், உயர்ந்த – தாழ்ந்த சாதி – இவை இந்தக் கதையில் எளிமையாகத் தெரியும் உண்மைகள். இந்தக் கதையில் சொல்லப்பட்ட இன்னொரு விவரம், இப்படியொரு சிறந்த வில் வித்தைக் கலைஞன் இருக்கிறான் என்பதைப் பொறாமையோடு ‘குரு’விடம் முறையிட்டவன் துரோணரின் பணக்கார உயர்சாதி மாணவன்! தம்மை விடத் தாழ்ந்த நிலையிலேயே தாழ்த்தப்பட்டவர்கள் இருக்க வேண்டுமென்று தீவிரமாக நம்பும் மேலாதிக்க மனப்பான்மை இதில் தெரிகிறது. இது இன்று மட்டுமல்ல, காலங்காலமாய் இருந்து வந்த பேத வெறி. வளர்ந்து பெரியவர்களான பின்தான் இது வரவேண்டும் என்பதில்லை, வளரும், மாணவப் பருவத்திலேயே இது உள்ளூர பதிந்து விடுகிறது. இந்த சமூக அவலத்தையும் தவிர இந்தக் கதையில் இன்னொரு விசயமும் முக்கியமானது.

    ‘கட்டைவிரலை வெட்டித் தா’ என்று துரோணன் கேட்டான். ஏகலைவன் மனமுவந்து வெட்டிக் கொடுத்தான். அவன் கட்டை விரலில்லாமல் அம்பை எய்வது முடியாது. தெரிந்தே அந்த ‘குரு’ கேட்டான். எந்த வற்புறுத்தலுமில்லாமல் வலியவே சீடன் கொடுத்தான். கேட்டதும் கொடுத்ததும் கட்டை விரல் மட்டுமல்ல, ஒரு வருங்காலம், ஒரு வாழ்க்கை. இதிகாச காலத்தில் நடந்த இந்த அற்பத்தனத்திலும் ஒரு சின்ன நேர்மை இருந்தது, இருக்கிறது. அவன் நேரடியாகவே கேட்டான், இவன் தெரிந்தே கொடுத்தான். இன்று?

    கட்டை விரல் என்பது அடையாளம், சிந்தனை, செயல், இயக்கம், பண்பு எனும் கோணத்தில் பார்த்தால், இன்றும் கட்டை விரல்கள் கேட்கப்படுகின்றன, கொடுக்கப்படுகின்றன.

    இன்றைய ‘குரு’மார்கள் நேர்மையுடன் நேரடியாக “உன்னை முழுமையாய் எனக்கு கொடுத்துவிடு, கொடுத்ததன் மூலம் உன் சுய சிந்தனையை நெறியை, உழைப்பை, மனதை எனக்குக் கொடுத்து விடு”, எனும் அவர்களது விளம்பரங்களில் மோகித்து மக்கள் தாமாகவே தங்களைத் தந்து விடுகிறார்கள். வற்புறுத்தல் இல்லாமல் வலியவே தங்களை இழந்து விடுகிறார்கள். ஒன்றை இழந்தால்தான இன்னொன்றைப் பெற முடியும் எனும் போலி வியாபார வித்தை என்று வைத்துக் கொண்டாலும் தங்களையே இழப்பவர்கள் எதைப் பெறுகிறார்கள்? தன் அடையாளத்தையும் அறிவையும் இழந்தபின் பெறுவதற்கு என்ன இருக்கிறது?

    காதலிப்பதும் இப்படித்தான். ஒருவன் தன்னையே இழந்து காதலியிடமும், காதலிடமும் கலந்து விடுவான். அங்கேயும் சிந்தனை அலசப்படுவதை விட உணர்ச்சியே மேலோங்கி நிற்கும். காதலின் சரணடைதல் ஒரு வளர்ச்சியாக மாறலாம். சாமியார்களிடம் சரணடைவது எப்படி வளர்ச்சியாகும்? பக்தியும் காதலும் உணர்ச்சிகளின் அடிப்படையில் இயங்குபவை. இரண்டுமே பகுத்துப் பார்க்கும் அறிவுத் திறனை மறுப்பவை. சரியான நபருடன் ஏற்படும் காதலே வாழ்வில் மலர்ச்சியையும் வளர்ச்சியையும் தரும். சரியான சாமியாரிடமும் அப்படி சாத்தியம் என்று வைத்துக் கொண்டால் அந்தச் ‘சரி’யான சாமியாரை எப்படி அடையாளம் கண்டு கொள்வது?

    ஆசையோடு காதலித்து அன்போடு திருமணம் செய்து கொண்ட பிறகும் சில தம்பதியார் வெறுப்பும் கசப்பும் ஏற்பட்டுப் பிரிந்து விடுகிறார்கள். சட்டம் இதை அனுமதிக்கிறது. சமுதாயம் அங்கீகரிக்காவிட்டாலும் அனுசரித்துப் போகிறது. அப்படியிருந்தும் இனி இந்தத் திருமணம் தொடர்வதால் பயனோ பொருளோ இல்லை என்று தீர்மானித்த பலரும் அந்த பந்தத்தில் தொடர்கிறார்கள். முடிந்த வரை முயற்சித்துப் பார்க்கிறேன் என்று தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொண்டு உறவைத் தொடர்கிறார்கள். முயற்சி எப்போதுமே முழுதாய் முடிந்த வரைதான். ஒப்புக்குச் செய்வது முயற்சியே அல்ல. சுகமோ அமைதியோ இல்லாமல், அன்பும் அக்கறையும் கூட இல்லாமல் இப்படிப் பலர் போலியாகத் திருமண உறவில் தொடர்வது ஏன்? திருமணம் புனிதமானது என்று கூட இவர்கள் நினைப்பதில்லை. ஆனால் விவாகரத்து வெட்கப்பட வேண்டியதாக இவர்களுக்குத் தோன்றுகிறது. ‘நாளைக்கு எப்படி நாலுபேர் முன்னால் நிற்பது?’ என்றே பொய்யான வாழ்க்கையைத் தொடர்கிறார்கள். சாமியாரைப் பின்பற்றுவதிலதும் இதே நிலைக்கு உள்ளாகிறார்கள்.

    ஒத்துவரவில்லை விட்டு விடுகிறேன் என்று முடிவெடுக்க தைரியம் வேண்டும். அவசரமாக உணர்ச்சிவசப்பட்டு முடிவெடுப்பதால் தைரியம் – அது நிதானமாக நிலைமையைத் தெளிவாக உணர்ந்து செயல்படத் தயாராகும் மனநிலை. சமூக அங்கீகாரம் என்பது மனிதர்களில் பலருக்கு மிகவும் அவசியமானது. அந்த அங்கீகாரத்திற்காக உண்மைகளை மறுக்கவும் ஒதுக்கவும் கூட மனது தயாராகும். நம்பி வழிபட்ட சாமியார் சிறைக்குச் செல்லுமளவு குற்றம் புரிந்தவன் என்று தெரிந்தவுடன் உணர்ச்சி மிகுந்து அவனைப் பழிப்பவர்கள் உண்டு. அந்தக் கட்டம் வருவதற்கு முன்னமேயே அந்தக் கயவனின் நடவடிக்கைகள் அவர்கள் மனதை நெருடியிருக்கும். அப்போதெல்லாம் ‘கண்டு கொள்ளாமலிருப்பதும்’, அதையெல்லாம் ‘அட்ஜஸ்ட் பண்ணிக்கொள்வதும்’ பக்தியினால் அல்ல, மிகுந்த சுயநலத்தினால்தான். பலர் தங்கள் ‘கௌரவ’த்தைக் காப்பாற்றிக் கொள்ளவே போலிகளை உணர்ந்தும் பின்பற்றுகிறார்கள்.

    விவாகரத்து என்பது திருமணம் போன்றே மனம் தீர்மானிக்கும் முடிவு. இதைச் செயல்படுத்தப் பலர் தயங்குவது வெட்கத்தினால்தான். மணமுறிவை பகிரங்கமாக்கினால் தாங்கள் தோற்றுவிட்டதாகவே பலர் கருதுகிறார்கள். இதனால்தான் கசப்பையும் சகித்துக் கொள்கிறார்கள். தோற்றுவிட்டேன் என்பதன் உள்ளே தப்பாகக் கணக்கு போட்டுவிட்டேன் என்பதும் உள்ளது. போட்ட கணக்கு தப்பு என்பதை மனம் ஒப்புக்கொண்டால்தான் சரியான விடையைத் தேடும். சாமியார்கள் விசயத்திலும் இப்படித்தான். ‘போலியிடம் ஏமாந்தேன், அந்த நேரம் நான் முட்டாள்; போலி என்னை ஏமாற்றினான், அந்த நேரம் அவன் புத்திசாலி’ என்று தீர்மானிப்பதே தைரியம். நம்மில் பலருக்கு இந்த நேர்மையின் தைரியம் இல்லாததால்தான் திருட்டு சாமியார்களுக்கு இன்னும் ஏமாற்றலாம் என்ற தைரியம் வருகிறது.

    இது தனிமனிதன் சம்பந்தப்பட்ட பிரச்சினை மட்டுமல்ல. எந்த மனிதனும் அவ்வளவு தனியுமல்ல. அவனது குடும்பமும் சுற்றமும் – நெருக்கமாக இல்லாவிட்டாலும் – அவனையும், அவனாலும் பாதிப்பை உருவாக்கக் கூடிய சாத்தியங்கள் உண்டு.

    ஒரு சாமியாரை நான் நம்புவதால் ‘அவரு’டைய புகழ் பற்றி நிறைய பேசுவேன். என் நண்பர்களும் குடும்பமும் நான் பேசுவதாலேயே அதைக் கேட்பார்கள். நம்பிக்கையில்லாவிட்டாலும் அவர்கள் மனம் இந்த விசயத்தை ஒரேயடியாக ஒதுக்கிவிடாமல் சற்றேயாவது பரிசீலிக்கும். ஒரு பலவீனமான தருணத்தில் அவர்களும் இந்த நம்பிக்கை உதவுமோ என்று ஏங்குவார்கள். யதேச்சையாக அப்போது எது நடந்தாலும் அது அவர்களது நம்பிக்கையையும் ஆசையையும் வலுப்படுத்தும். நான் தனியாக இல்லாமல் ஒரு சிறு கூட்டமாக மாறுவேன். சிறு கூட்டம் சமுதாயமாக மாறும். பெரும்பான்மை போகும் திக்கில் சமூகம் போகும். கேள்விகள் அப்போது எழுந்தாலும் உதாசீனப்படுத்தப்படும். பொய் உண்மை போலாகி விடும்.

    மகப்பேறு வேண்டி மரத்தைச் சுற்றி வரும் பெண்கள் இன்றும் உண்டு. கலாச்சாரம் சமூகத்தில் ஆழப் பதித்து விட்ட நம்பிக்கைகள் இன்றும் தொடர்வது உண்டு. மூட நம்பிக்கை என்பதை அறிவியல் நிரூபித்தாலும் தொடர்ந்து சில விசயங்களை நம்மில் பலர் செய்து கொண்டுதான் இருக்கிறோம். ‘எதற்கு வம்பு’ என்று நினைப்பது அச்சம். ‘என்ன நஷ்டம்’ என்று கேட்பது தெளிவின்மை. மூட நம்பிக்கையோடு சில பழக்கங்கள் தொடரும் போது மனத்தினுள் சலனங்களும் சபலங்களும் வளரும். ஒருவேளை இப்படியே ஜெயித்து விடலாமே என்ற கோணல் எண்ணம் தோன்றும். ‘ஒரு நாள் பண்ணினா போதாது போலிருக்கு’ என்று மனம் தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்ளும். இதுதான் நஷ்டம். இதைவிடப் பெரிய நஷ்டம் எது?

    0 comments:

    Post a Comment