Friday, 6 December 2013

Tagged Under: , , , ,

பாண்டவர்கள் வெட்டிய குளம்!

By: ram On: 23:19
  • Share The Gag


  • ஆமதாபாத் மாவட்டத்தில், பவநகர் என்னும் ஊருக்கு அருகே அமைந்துள்ள “கோலியாக்’ என்னும் கிராம கடற்கரை வியப்பையும், பக்தியையும் அளிக்கக் கூடியது.


    ஆம். அந்த ஊரில் காலை 8 மணிக்கெல்லாம் கடல் உள்வாங்கி நெடுந்தூரம் சென்றுவிடுகிறது. கரையில் இருந்து ஒன்றரை கி.மீ. தொலைவில் பழமையும், வரலாறும் கலந்த சிவலிங்கங்கள் எழுந்தருளியிருக்கும் மேடு கண்ணில் தென்படுகிறது.


    கொடிமரம் மற்றொரு சூலம் கொண்ட தூண் நன்கு வெளிப்படுகிறது. கடலலை உள் வாங்காத நேரத்தில் கொடியும், தூணும் கடல்நீரால் சூழப்பட்டிருக்கும்.


    அந்தக் கோயில் அந்த மேடு “நிஷ்களங்க மகாதேவர்’ எனப் போற்றப்படும் சிவபெருமான் வீற்றிருக்கும் புண்ணிய பூமி.


    கடல்நீர் வற்றியதும், அவரை வணங்கிப் போற்ற, மக்கள் கரையில் கூடுவர். காலையில் உள்வாங்கிய கடல், மதியம் 2 மணியளவில் மீண்டும் நீர்ப்பரப்பாகிவிடும். இடைப்பட்ட ஐந்து மணி நேரத்திற்குள், கடலுக்குள் சென்று, இறைவனை வழிபட்டுத் திரும்ப வேண்டும்.


    அந்தக் கோயிலைக் கண்டு வணங்குதல் அவ்வளவு எளிதல்ல. கடல்நீர் வற்றியதும், கடலுக்குள் குறுக்கே நடந்து செல்ல வேண்டும். செல்லும் வழி, பள்ளமும், சேறும் நிறைந்த பாதை. ஒன்றரை கி.மீ. நடக்க வேண்டும். விழுந்து, எழுந்து, ஆடையெல்லாம் நனைந்து, சேறாகி அடிபட்டு, கால்தடுமாறி, ஒரு வழியாய்ச் சமாளித்துச் செல்ல வேண்டும்.


    ஆயினும் இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாத மக்கள் நாள்தோறும் நூற்றுக்கணக்கில் வழிபட வருகிறார்கள்.


    நடுவே கோயிலாய் விளங்கும் அம்மேட்டில் ஐந்து சிவலிங்கங்கள் தனித்தனியே காட்சி அளிக்கின்றன. நந்தியும் உண்டு. பெரிய கோயில் அளவு பரப்பு கொண்ட அந்த இடத்தில், சிறிய சுனை (குளம்) உள்ளது.


    பாண்டவர்கள், போரிலே கௌரவர்களை அழிக்கின்றனர். உறவினர்களையே அழித்ததால், பாண்டவர்களுக்குக் களங்கம் ஏற்படுகிறது. களங்கத்தைப் போக்கிக் கொள்ள, சிவபெருமானை ஐவரும் வழிபடுகின்றனர்.


    கடல் நடுவே மேட்டு நிலத்தை உருவாக்கி, சிவலிங்கம் அமைத்து வழிபடுகின்றனர். மகிழ்ந்த சிவபெருமான், அவர்களது களங்கத்தைப் போக்குகிறார். பாண்டவர்களது களங்கத்தைப் போக்கியதால், “நிஷ்களங்க மகாதேவர்’ என அழைக்கப்படுகிறார். பாண்டவர்கள் போற்றிய லிங்கங்கள், வெட்டிய குளம், கொடிமரம் எல்லாம் அங்கே இன்றும் காட்சி தருகின்றன.

    0 comments:

    Post a Comment