Sunday, 10 November 2013

Tagged Under: , , ,

கர்பிணிகளுக்கு அவசியமாகும் பல் ஆரோக்கியம்!

By: ram On: 00:29
  • Share The Gag
  •  

    கர்ப்ப கால ஆரோக்கியம் என்பது ஒரு தாயின் ஆரோக்கியத்தை மட்டும் அல்லாமல், அவள் வயிற்றில் வளரும் சிசுவின் ஆரோக்கியத்தையும் சார்ந்த விஷயமாக இருப்பதால் அதற்கு அதீத கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும்.

    முதலில், கர்ப்பமுற்றிருப்பதாக ஒரு பெண்ணுக்குத் தெரிய வந்தால், உடனடியாக மருத்துவரிடம் சென்று உரிய பரிசோதனை செய்து அதனை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

    மருத்துவர் பரிந்துரைக்கும் சோதனைகளை செய்து கொள்வதும், அவர் பரிந்துரைக்கும் மருந்துகளை எடுத்துக் கொள்வதும் அவசியம்.

    இது இல்லாமல், ஒரு சில விஷயங்களை கர்பிணிகள் கடைபிடிப்பது மிகவும் அவசியமாகும்.

    அதாவது, சில மருத்துவமனைகளில் கர்ப்பிணிகளுக்கு முதலில் பல் சோதனை செய்து, ஏதேனும் பிரச்னை இருந்தால், உடனடியாக சிகிச்சை அளிப்பது வழக்கம்.

    கர்ப்பிணிகளுக்கும், பல் பிரச்னைக்கும் என்ன சம்பந்தம் என்று பலரும் குழம்புவார்கள். ஆனால் உண்மையில் நிறைய சம்பந்தம் உண்டு. கர்ப்ப காலத்தின் போது ஹார்மோன் சுரப்பில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக சிலருக்கு பற்களில் பிரச்னைகள் தோன்ற வாய்ப்பு உள்ளது.

    மேலும், ஏற்கனவே பல் சொத்தை இருந்தால் அதனால் வளரும் சிசுவுக்கும் பிரச்னை ஏற்பட வாய்ப்பு உள்ளது. பல் சொத்தையில் இருந்து கிருமிகள் எச்சில் வழியாக உணவில் கலந்து அதனால் வயிற்றில் வளரும் சிசுவை பாதிக்கலாம்.

    எனவே தான் கர்ப்பிணிகளுக்கு பல் சோதனையும், சிகிச்சையும் அவசியம் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

    கர்ப்பிணிக்கு பற்களில் ஏதேனும் பிரச்னை இருந்தால் உடனடியாக அவர் பல் மருத்துவரிடம் சென்று, கர்ப்பமுற்றிருப்பதை முதலில் தெரிவித்துவிட்டு, பல்லுக்கு சிகிச்சை பெறுவது அவசியம்.

    இதில்லாமல், ஹார்மோன் மாற்றங்களால் சிலருக்கு ஈறு அழற்சி கர்ப்ப காலத்தில் தோன்றுவதும் உண்டு. இது பொதுவாக கர்ப்ப காலத்தின் 2 அல்லது 3வது மாதத்தில் தொடங்கி, 8வது  மாதத்தில் தீவிரமாகி, 9வது மாதம் குறைய ஆரம்பிக்கும். ஈறுகளில் அழற்சி, வீக்கம், ரத்தம் வடிதல் போன்றவை இதன் அறிகுறிகள். சிலருக்கு வீங்கிய ஈறு திசுக்களில் கட்டிகளைப் போன்றும் உருவாகும். ஆனால், அவற்றில் வலியிருக்காது. எனினும், பிரசவத்துக்குப் பிறகு இதன் பாதிப்பு குறையும். சிகிச்சை எடுத்துக் கொண்டால் பூரண குணம் அடையலாம்.

    பற்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைத்திருப்பின், ஒவ்வொரு முறை உணவு சாப்பிட்ட பிறகும் கர்ப்பிணிகள் பல் தேய்க்க வேண்டும்.

    மேலும், கால்சியம் அதிகம் நிறைந்த உணவு பொருட்களான பால், தயிர் போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.

    மசக்கை காரணமாக அடிக்கடி வாந்தி எடுக்கும் கர்ப்பிணிகள், ஒவ்வொரு முறையும் வாந்தி எடுத்த பிறகு பற்களை நன்கு சுத்தம் செய்ய வேண்டியது மிகவும் அவசியமாகும்.

    0 comments:

    Post a Comment