Sunday, 10 November 2013

Tagged Under: , ,

“வைக்கோல் குக்கர்” எட்டாம் வகுப்பு மாணவர் ரிஷி சித்து சாதனை!

By: ram On: 13:27
  • Share The Gag
  •  vaikool

    வைக்கோல் மூலம் வீட்டில் சமையல் எரிபொருளை மிச்சப்படுத்தலாம்” என்கிறார் கோபிச்செட்டிபாளையம், ஸ்ரீ நேஷனல் பள்ளியின் எட்டாம் வகுப்பு மாணவர் ரிஷி சித்து.

    ”எனக்கு அறிவியல் மீது ஆர்வம் அதிகம். அறிவியல் சம்பந்தமான புத்தகங்களை நிறையப் படிப்பேன். ‘அடிக்கடி பெட்ரோல், சிலிண்டர் விலையை ஏத்திடுறாங்க. குடும்பத்தை நடத்துறது பெரிய சவாலா இருக்கு’னு அப்பாவும் அம்மாவும்  பேசிக்குவாங்க. இதுக்கு நாம் ஏதாவது செய்யலாமேனு நினைச்சேன். அப்போ உருவானதுதான் இந்த வைக்கோல் குக்கர்” என்ற ரிஷி சித்து, அதன் செய்முறையை விளக்கினார்.

    ”சாதம் சமைக்க, பாத்திரத்தில் தண்ணியைக் கொதிக்கவெச்சு, அதில் அரிசியைப் போடுவோம். அது முழுமையா வேகும் வரை காஸ் அடுப்பு எரியும். அப்படி இல்லாமல், ஒரு கொதிவந்ததும் அந்தப் பாத்திரத்தை எடுத்து, வைக்கோல் நிரப்பப்பட்ட அட்டைப் பெட்டியில நடுவில் வைக்கணும். பிறகு, வைக்கோலை அடைச்சு செய்த ஒரு தலையணையால் மூடிடணும். வைக்கோல் என்பது திறன் குறைந்த ஒரு வெப்பக் கடத்தி. அதனால், அது வெப்பம் வெளியே போகாமல் பாதுகாக்கும். அந்த வெப்பத்தில் உள்ளே இருக்கும் அரிசி, நாம குக்கரில் சமைக்கும் நேரத்தில் வெந்துவிடும். இதனால், எரிபொருள் மிச்சம்’ என்றார் ரிஷி.

    சாதம் மட்டுமல்ல; பருப்பு, சுண்டல் மற்றும் அனைத்து விதமான காய்கறிகளையும் இப்படி வைக்கோல் குக்கர் மூலம் வேகவைக்கலாம்.

    ”இதனால், நேரம் மற்றும் எரிபொருள் மிச்சப்படும்;  ஆரோக்கியமானதும்கூட. முழுக்க முழுக்க இயற்கை சார்ந்தது. குக்கரில் சமைக்கிறப்போ, கஞ்சி வெளியே போக வாய்ப்பு இல்லாததால் அரிசியோட கலந்துடுது… இது சர்க்கரை நோய்க்குக் காரணமாயிடுது. ஆனா, இந்த முறையில் நாம் கஞ்சியைத் தனியே வடிச்சுக்கலாம். சுற்றுச்சூழல் மாசுபாட்டையும் கட்டுப்படுத்தும்” என்கிறார்.

    ரிஷி சித்துவின் இந்தக் கண்டுபிடிப்பு, டெல்லியில் நடைபெறும் பாலஸ்ரீ விருதுக்கு தமிழ்நாட்டில் இருந்து அனுப்பப்பட்ட 15 சிறந்த கண்டுபிடிப்புகளில்  ஒன்றாகத் தேர்வுசெய்யப்பட்டுள்ளது.

    ”விருது கிடைப்பதைவிட, இதைப் பார்த்து நூறு பேர் பயன்படுத்தினாலும் கணிசமான அளவு எரிபொருள் மிச்சப்படுமே. நாட்டுக்கு செய்யும் நல்ல விஷயமா அதை நினைக்கிறேன்” என்று ‘பெரிய மனுஷ’த் தோரணையில் பொதுநல அக்கறையுடன் சொல்கிறார் ரிஷி சித்து.

    வாழ்த்துகள் சித்து!

    0 comments:

    Post a Comment