Friday, 29 November 2013

Tagged Under: , , ,

விதியா மதியா?

By: ram On: 21:59
  • Share The Gag
  • மனிதன் இருக்கிறானே, அவன் மகா சாமர்த்தியசாலி; ஆளப்பிறந்தவன். சாதிக்கப் பிறந்தவன். கடவுளின் படைப்பகளிலேயே மிக உன்னதப் படைப்பு.

    ஆறு, மலை, கடல், காடு போன்றவற்றைத்தான் கடவுள் இந்தப் பூமியில் படைத்தார். இவனோ ஆயிரமாயிரம் விஷயங்களைப் படைத்துவிட்டான். இன்னமும் தினம் தினம் புதிதாக எதையாவது படைத்துக்கொண்டே இருக்கிறான்.

    எப்படி?

    அவனுடைய அறிவால். அவனுடைய முயற்சியால்.

    சரிதானே?

    அறிவு

    மனிதனின் அறிவு என்பது ஒரு அற்புதமான ஆயுதம். அதைக் கூர்தீட்டுவதைப் பொறுத்தும், பயன்படுத்துவதைப் பெறுவதும், ஒருவருடைய சிறப்பும் செழிப்பும் அமைகிறது
    .

    முயற்சி


    தனது இலக்கை நோக்கி, ஒரு மனிதன் எடுக்கின்ற முயற்சியின் தீவிரமும், தொடர்முயற்சிகளும், விடாமுயற்சிகளும் அவனது வெற்றிக்கும் வளர்ச்சிக்கும் இன்றியமையாத விஷயங்கள்.

    வள்ளுவர் சூப்பராக ஒரு போடுபோடுகிறார் பாருங்கள்.

    தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சிதன்
    மெய் வருத்தக் கூலி தரும்.


    இது முடியாது என்று கடவுளே கைவிட்ட காரியமாக இருந்தால்கூட, நீ கைவிட்டு விடாதே. முயன்றுபார். நீ எடுக்கிற முயற்சியின் அளவுக்குத்தகுந்தபடி உனது வெற்றியின் அளவும் அமையும் – என்பதுதானே இதன் பொருள்.

    அதாவது உழைப்புக்குத் தகுந்த ஊதியம் (Payment According to performance).

    தெய்வத்தை ஒதுக்கி வைக்கிற அளவுக்கு, முயற்சிக்கு முக்கியத்துவம் தருகிறார் வள்ளுவர்.

    ஆனால்

    இந்தக் கருத்து நூற்றுக்கு நூறு ஒததுக்கொள்ளக கூடியதுதான் என்று நம் உள்ளம் சொன்னாலும்…

    உள்ளத்துக்குள்ளே ஒளிந்திருக்கும் ஒரு உள்மனம் இலேசாக புருவத்தை உயர்த்துகிறது. என்னவென்று?

    அதே திருவள்ளுவர் இன்னொரிடதில் இதற்கு நேர்மாறாக இன்னொரு கருத்தை சொல்லியிருக்கிறாரே, அது கொஞ்சம் இடிக்கிறதே? என்று. அந்தக்குறள் -

    ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
    சூழினும் தான்முந் துறும்.


    இது என்ன சொல்கிறது?

    விதியைவிட வலிமயுடையது எது?

    எதுவுமில்லை.

    அந்த விதியை வெல்வதற்காக என்னதான் வேறு வழிகளில் முயன்று உழைத்தாலும், விதியானது அங்கேயும் வந்து நின்று வென்று காட்டிவிடும்.

    இது எப்படி இருக்கிறது?

    அந்தக் குறள்படி, முயற்சி, தெய்வத்தால் ஆகாததையும் முடித்துக்கொடுத்து விடும்.

    இந்தக் குறள்படி, முயற்சியை முறியடித்துவிட்டு விதி வென்றுவிடும்.

    அப்படியென்றால்….

    திருவள்ளுவர் நம்மை குழப்புகிறாரா? என்ற சந்தேகம் எழுகிறது.

    திருவள்ளுவரா குழப்புகிறவர்? மிக மித் தெளிவாக தனது கருத்துக்களை வைப்பவர் அல்லவா அவர். ஆக, நாம்தான் உரிய விதத்திலே புரிந்து கொள்ள வேண்டும்.

    எப்படி?

    மனிதன் முன்னேற விரும்புகின்றவன். முன்னேறப் பிறந்தவன். முன்னேறியே ஆக வேண்டும். அதற்கு அவன் முதலில் தன் மீது நம்பிக்கை வைக்க வேண்டும்.

    அது தன்னம்பிக்கை.

    அதோடு மட்டுமல்லாமல், அவன் சோம்பி இருக்கக் கூடாது.

    உள்ளம் முழுவதம் தன்னம்பிக்கை இருந்தாலும், உடலிலே சோம்பல் இருந்துவிட்டால ஒன்றையும் சாதிக்க முடியாது. கடுமையாக உழைக்க வேண்டும். எந்த வெற்றியும் வியர்வை சிந்தாமல், விலை கொடுக்காமல் எளிதாக வந்து விடாது.

    இந்தக்கருத்தை, மனிதனின் மனதிலே மிக மிக ஆழமாகப் பதிப்பதற்காகத்தான், “தெய்வத்தால் ஆகாது எனினும்” என்ற வார்த்தைகளைப் போட்டு, அந்தக் கருத்துக்கு அதிகபட்ச வலிமையை ஊட்டியிருக்கிறார்.

    இதுசரி, பிறகு எதற்கு விதியை விட வலிமையுடையது வேறெதுவும் இல்லை என்ற கருத்தையும் சொல்ல வேண்டும்?

    ஏனென்றால்…

    மனிதன் மற்ற உயிரினங்களைவிட உயர்ந்தவன். “அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது” என்கிறார் அவ்வையார்.

    அப்படிப்பட்ட பிறவியை எடுத்தவன், ஐந்தறிவு படைத்த விலங்குகளைப் போல, மிருக குணம் காட்டியா வயிறு வளர்ப்பது? வாழ்ந்து காட்டுவது? வளர்ந்து காட்டுவது? கூடாதல்லவா?

    ஆனால், அதை உணராமல், குறுக்கு வழிகளிலே, தீய வழிகளிலே, மனித நேயத்தை மறந்து, இழி குணத்தை மட்டுமே காட்டி,

    “ஜெயித்துக் காட்டுகிறேன் பார்”

    “வளர்ந்து காட்டுகிறேன் பார்”


    “உயரத்தை அடையாமல் ஓயமாட்டேன் தெரியுமா?”

    என்று முயற்சிகளை எடுக்கும்போது கூட அவனது முயற்சிகளுக்கு மதிப்புக்கொடுத்து வெற்றிகள் அவனிடம் வருகின்றன.

    ஆனாலும், அவன் செல்லுகின்ற பாதை, நீதி நெறியால், தர்மத்தால், நியாயத்தால் ஏற்றுக் கொள்ள முடியாத பாதை என்கிறபோது, அந்த நீதிநெறி, தர்மநெறி நியாயம் எல்லாம் விதி என்ற பெயரில் அவனது வாழ்வில் விளையாடி விடுகிறது.

    எப்போதோ அவன், அடுத்தவரின் வாழ்வோடும் வளர்ச்சியோடும் தீய நோக்கத்தோடு விளையாடி, வென்றிருக்கலாம்.

    ஆனால், பிறகு எப்போதோ, நல்ல நோக்கத்துக்காக அவன் எடுக்கும் நல்ல முயற்சிகளைக்கூட, விதி முறியடித்து முந்திச் சென்று முதலிடம் பிடித்துவிடுகிறது. கணக்கை நேர் செய்து விடுகிறது.

    அதாவது, செய்த வினைகளுக்கு ஏற்பவே, விளைவுகள் நிகழ்கின்றன. வினையை விதைத்தால் வினையை அறுத்துத்தான் ஆகவேண்டும்.

    இந்தக் கருத்து காலத்தால் அழியாத கருத்து, வாழ்க்கைத் தத்துவங்களிலேயே வளம் செறிந்த கருத்து. புல்முனை கூட புறக்கணிக்க முடியாத கருத்து.

    இப்போது புரியுமே, விதியைவிட வலியது எதுவுமில்லை என்று ஏன் சொன்னார் வள்ளுவர் என்று.

    இப்போதும் புரியவில்லையா? இன்னொரு குறளையும் எடுத்து விடுகிறார் பாருங்கள்.

    அழக்கொண்ட எல்லாம் அழப்போம், இழப்பினும்
    பிற்பயக்கும் நாற்பா லவை.

    என்ன பொருள்?

    பிறரை வருத்தப்பட வைத்து ஒருவன் பெற்ற பொருளெல்லாம் அவனை வருத்தப்பட வைத்து, அவனை விட்டுப் போய்விடும். நல்லவழியில் வந்தவைகளோ, கைவிட்டுப் போனாலும், வேறு எந்த விதத்திலாவது நன்மையே தரும்.

    சுருக்கமாக

    முதலிடத்தைப் பிடிக்க வேண்டும் என்பதற்காக, வழியில் குறுக்கிடும் மனிதர்களையும், வாகனங்ளையும் இடித்துத்தள்ளிவிட்டு, மூர்க்க்தனமாக வண்டியை ஒட்டுபவனை, வெற்றி பெற்றவனாக எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? பாராட்டமுடியும்?

    நீ முன்னேறு. யார் வேண்டாம் என்றார்கள். ஆனால் அடுத்தவன் வயிற்றில் ஏன் அடிக்கிறாய்? அடுத்தவனை ஏன் மோசம் செய்கிறாய்? நம்பியவனுக்கு ஏன் துரோகம் செய்கிறாய்?

    யோசிக்கலாமே?

    0 comments:

    Post a Comment