Thursday, 31 October 2013

Tagged Under:

சுண்டெலியின் மிரட்டலுக்கு அஞ்சி பெரிய யானை பதுங்குவதா?

By: ram On: 16:24
  • Share The Gag
  • காமன்வெல்த் நாடுகளின் மாநாட்டைப் புறக்கணிக்கும் நாடுகள் அந்த அமைப்பிலிருந்து தனிமைப்படுத்திக் கொள்வதாகக் கருதப்படும். இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் பங்கேற்காவிட்டால் அதனால் யாருக்கு பாதிப்பு என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும்’ என புது தில்லியில் உள்ள இலங்கைத் தூதர் கரியவாசம் எச்சரித்திருக்கிறார்.அதாவது இந்தியா தனிமைப்படுத்தப்படும் எனவும் இந்தியாவிற்கு பாதிப்பு ஏற்படும் எனவும் மிரட்டும் அளவுக்கு அவர் சென்றிருக்கிறார். ஒரு நாட்டின் தூதர் எந்த வரம்பிற்கு உட்பட்டுப் பேச வேண்டுமோ அந்த வரம்பைத் தாண்டி அவர் பேசியுள்ளார்.


    31 - edit srilanka


    இந்தியாவின் தலைநகரிலேயே இந்த மிரட்டலை விடும் துணிவு அவருக்கு ஏற்பட்டிருக்கிறது. சாதாரணமாக ஒரு நாட்டின் தூதர் இது போன்று வரம்பு மீறினால் அவரை வெளியுறவுத் துறைச் செயலாளர் அழைத்து கடும் கண்டனத்தைத் தெரிவிப்பது வழக்கம். ஆனால் இவரின் மிரட்டலுக்கு இந்திய அரசின் சார்பில் யாருமே எத்தகைய கண்டனமும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.


    சின்னஞ்சிறு நாடான இலங்கையின் தூதர், உலகில் இரண்டாவது பெரிய நாடான இந்தியாவை பகிரங்கமாக மிரட்டுகிறார். யார் யாரோ கொஞ்சமும் மதியாமல் எடுத்தெறிந்துப் பேசுகிற நிலை இந்தியாவிற்கு வந்திருப்பது குறித்து அனைவருமே வெட்கப்பட வேண்டும். அதிலும் உலக நாடுகளுக்கு முன்பாக இனப்படுகொலைக் குற்றவாளியாக நிறுத்தப்பட்டிருக்கும் இராஜபட்சயின் தூதுவர் துணிந்து அச்சுறுத்துகிறார் என்றால், இந்தத் துணிவு அவருக்கு எப்படி வந்தது?


    இலங்கையில் போரின்போது நடைபெற்ற மனித உரிமை மீறல்களும் இன அழிப்பு நடவடிக்கைகளும் கடந்த நான்காண்டுகளைக் கடந்து இன்னமும் தொடர்கின்றன. டப்ளின் மக்கள் தீர்ப்பாயமும், ஐ.நா. விசாரணைக் குழுவும், ஐ.நா. மனித உரிமை ஆணையரும் மேற்கண்ட குற்றச்சாட்டுகளை உறுதி செய்து அறிவித்த பிறகு, உலக அரங்கில் தலை குனிந்து நிற்க வேண்டிய குற்றவாளி தலை நிமிர்ந்து நின்று இந்தியாவிற்கு எச்சரிக்கை விடும் அளவிற்குத் துணிவு பெற்றிருப்பது எதனால்? யாரால்? இலங்கையின் தமிழ்ப் பகுதியில் சொல்லொணா கொடுமைகள் இன்னமும் தொடர்கின்றன.


    பெண்களுக்கு கட்டாயக் கருத்தடை, போரில் கணவரை இழந்த பெண்களை இராணுவத்தினரின் இச்சையைத் தீர்க்கும் பாலியல் தொழிலாளிகளாக ஆக்குவது, சிங்கள இராணுவத்தினருக்கு தமிழ்ப் பெண்களை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைப்பது போன்ற இனத்தின் அடையாளத்தையே அழிக்கும் நடவடிக்கைகள் தங்கு தடையின்றி நடைபெறுகின்றன.
    2009-ஆம் ஆண்டு போர் முடிவடைந்த நிலையில், வெற்றி விழா கூட்டத்தில் முழங்கிய இராஜபட்ச, “எதிர்காலத்தில் இலங்கையில் இரு இனங்கள்தான் இருக்கும். ஒன்று சிங்கள இனம்; மற்றொன்று சிங்களக் கலப்பினம்’ என்று மார்தட்டிக் கூறியதை நடைமுறையில் செயல்படுத்தும் வேலையில் இராணுவம் ஈடுபட்டிருக்கிறது.


    படிப்படியாக நடத்தப்பட்டு வருகிற இத்தகைய நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த இந்தியா எதுவும் செய்யவில்லை. மாறாக, ஐ.நா. மனித உரிமை ஆணையத்திலும் பிற சர்வதேச அரங்குகளிலும் உலக நாடுகளின் கண்டனத்திலிருந்து இலங்கையைக் காப்பாற்றும் முயற்சியில் இந்தியா தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.


    தன்னை ஆதரித்துத் தீர வேண்டிய நிலையிலிருந்து இந்தியா ஒரு போதும் மாற முடியாது என்பதைப் புரிந்து கொண்ட இராஜபட்ச தனது தூதுவரை வைத்து இந்தியாவை வெளிப்படையாக மிரட்டுகிறார். கரியவாசம் மட்டும் இவ்வாறு பேசியிருக்க முடியாது. அவருக்குப் பின்னணியில் இருந்து இராஜபட்சதான் இவ்வாறு பேச வைத்திருக்க வேண்டும்.


    இதற்கு பதில் கூறத் துணிவில்லாமல், “காமன்வெல்த் மாநாட்டில் இந்தியப் பிரதமர் கலந்துக் கொள்ளாவிட்டால் நம்முடைய பொருளாதார, வர்த்தக நலன்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகும்’ என கற்றுக் குட்டி மத்திய அமைச்சர் ஒருவர் திருவாய் மலர்ந்தருளியிருக்கிறார். இவரைப் போன்றவர்களுக்கு இந்தியாவின் கடந்த கால வரலாறு சிறிதளவு கூடத் தெரியவில்லை.
    தென்னாப்பிரிக்கா தனது நிறவெறிக் கொள்கையை கைவிட வேண்டும் அல்லது காமன்வெல்த்திலிருந்து வெளியேற வேண்டும் என்று காமன்வெல்த் மாநாட்டில் அன்றைய பிரதமர் நேரு தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றியதோடு மட்டுமல்ல, தென்னாப்பிரிக்காவை காமன்வெல்த்திலிருந்து வெளியேறவும் வைத்தார்.


    அவரைத் தொடர்ந்து பிரதமர் இந்திரா செயல்பட்டார். 1976-ஆம் ஆண்டில் ஐ.நா.வின் மூலம் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான பொருளாதாரப் புறக்கணிப்பு மேற்கொள்ளவும் இராஜதந்திர உறவுகளைத் துண்டித்துக் கொள்ளவும் வேண்டுமென ஐ.நா. பேரவையில் இந்தியாவும் மேலும் பல நாடுகளும் இணைந்து கொண்டு வந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    இதுபோன்ற தொடர் நடவடிக்கைகளின் மூலம் தென்னாப்பிரிக்கக் கருப்பின மக்களுக்கும், தமிழர்களுக்கும் விடிவு கிடைக்க இந்தியா வழி செய்தது. வெள்ளையர் ஆட்சி மறைந்து அந்நாட்டு மக்களின் உண்மையான ஆட்சி ஏற்பட்டது, வெஞ்சிறையில் 27 ஆண்டு காலம் வாடிய நெல்சன் மண்டேலா அந்நாட்டின் அதிபரானார்.


    ஆனால் நிறவெறியை விட மோசமானதான இனவெறியைக் கடைப்பிடித்து தமிழர்களைக் கொன்று குவித்து வரும் இராஜபட்சக்கு துணை நின்று தோள் கொடுக்கும் கைங்கரியத்தை பிரதமர் மன்மோகன் சிங் செய்து வருகிறார்.
    இத்தகையச் செயல்களின் மூலம் சீனாவின் பிடியில் சிக்கிக் கொண்டிருக்கிற இராஜபட்சவை இந்தியாவின் பக்கம் ஈர்த்து விட முடியுமென நம்புவது, கொக்கின் தலையில் வெண்ணை வைத்துப் பிடிப்பது போன்றதாகும். இந்த உண்மையை இந்திய அரசு என்றைக்கு உணர்கிறதோ அன்றைக்குதான் கரியவாசம் போன்றவர்கள் இந்தியாவை அவமதிப்பது நிற்கும்.


    காமன்வெல்த் மாநாட்டில் இந்தியப் பிரதமர் கலந்து கொள்ளக் கூடாது என்பது நமது கோரிக்கையல்ல. இனவெறி இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடத்தப்படக் கூடாது. அப்படி நடத்தப்பட்டால் அதன் மூலம் இரண்டாண்டு காலத்திற்கு காமன்வெல்த் அமைப்பிற்கு இராஜபட்ச தலைமை தாங்கும் நிலை ஏற்படும். சர்வதேச நீதிமன்றத்திற்கு முன்னால் குற்றவாளியாக நிறுத்தப்பட வேண்டிய ஒருவருக்கு அரசியல் ரீதியாக இது போன்ற உயர்ந்த தகுதி அளிக்கப்படுவது, அவர் மீது உள்ள குற்றச்சாட்டுகளை மூடி மறைப்பதற்கு உதவுவதாகும் என்பதுதான் நமது எதிர்ப்புக்குக் காரணம்.


    இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி இந்தியா செயல்பட்டிருக்குமானால் காமன்வெல்த் அமைப்பில் உள்ள பல நாடுகளும் இந்த கோரிக்கையை ஆதரித்து அதன் விளைவாக மாநாடு வேறொரு நாட்டிற்கு மாற்றப்பட்டிருக்கும். இராஜபட்சயும் அடங்கி ஒடுங்கியிருப்பார். செய்ய வேண்டியதைச் செய்ய வேண்டிய நேரத்தில் செய்ய இந்தியா முன் வராததால் யார் யாரோ மிரட்டுகிற நிலைக்கு ஆளாக நேர்ந்திருக்கிறது.


    சின்னஞ்சிறிய சுண்டெலியின் மிரட்டலுக்கு அஞ்சி பெரிய யானை பதுங்குவது போன்ற நிலை ஏற்பட்டிருப்பது உலக அரங்கில் இந்தியாவிற்கு மாறாத தலை குனிவை தேடித் தந்து விட்டது.கொழும்பில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளப் போகிறதா அல்லது புறக்கணிக்கப் போகிறதா என்பதோ, பிரதமர் கலந்து கொள்கிறாரா இல்லை வெளியுறவுத் துறை அமைச்சர் கலந்து கொள்கிறாரா என்பதோகூட அல்ல பிரச்னை.
    இந்தியாவுக்கான இலங்கைத் தூதராக இருக்கும் ஒருவர், 120 கோடி மக்கள்தொகை கொண்ட, உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாட்டை மிரட்டுகிறார், ஆலோசனை கூறுகிறார் என்றால், அதற்காக தலைகுனிய வேண்டியவர் பிரதமர் மட்டுமல்ல; அவரை அரியணையில் அமர்த்தி அழகு பார்க்கும் இந்தியக் குடிமக்கள் அனைவருமேதான்!

    பழ. நெடுமாறன்

    0 comments:

    Post a Comment