Thursday, 31 October 2013

Tagged Under: ,

குழந்தைகள் இதய நலம் தாய்மார்கள் கையில்!

By: ram On: 07:49
  • Share The Gag

  • உலகம் எவ்வளவு வேகமாக மாறிவருகிறதோ அதற்கு ஏற்ப வாழ்க்கை முறையும் மாறிவருகிறது. உடல் உழைப்புக்கு முக்கியத்துவம் கொடுத்த காலத்திலும் நோய்கள் இருந்தன. ஆனால் அவை பெரும்பாலும் இயற்கை வைத்தியத்துக்கு கட்டுப்பட்டன.

    தற்போது பலர் செய்யும் வேலையை ஒரு எந்திரமே செய்து விடுகிறது. சிந்திக்கும் விஷயங்களுக்கு கம்ப்யூட்டர் இல்லாமல் காரியம் நடக்காது என்ற நிலை உருவாகிவிட்டது. வீடியோ கேம் முன்பு உட்கார்ந்து வீணாகும் நேரம்பற்றி கவலைப்படாமலும் உடல் நலம் பாதிக்கப்படுவது தெரியாமலும் குழந்தைகள் உட்கார்ந்து இருக்கிறார்கள்.

    குழந்தை நன்றாக சாப்பிடுவதும், கேட்டதை எல்லாம் வாங்கிக் கொடுப்பதும் தான் பெற்றோரின் கடமை என்று நினைக்கிறார்கள். குழந்தையை உடல் நலத்துடன் வளர்க்க வேண்டும் என்பது பற்றி யாரும் சிந்திப்பது இல்லை.

    குழந்தை கொழு கொழு என்று இருக்க வேண்டும் என்றால் நன்றாக சாப்பாடு கொடுக்க வேண்டும் என்று தான் பெரும்பாலான தாய்மார்கள் நினைக்கிறார்கள். அளவுக்கு அதிகமாக உணவு கொடுப்பதால், குழந்தை சராசரி எடையை விட உடல் பருமனாக வளர்கிறது.

    இது குறைந்த வயதிலேயே இதயத்தை பாதிக்கும் நிலையை உருவாக்குகிறது என்கிறார் இதய நல மருத்துவர் பிரியா சொக்கலிங்கம். அவர் சொல்வது இதுதான்... இந்த காலத்தில் பெரும்பாலான பெற்றோர்கள் ஒரு குழந்தை மட்டுமே பெற்றுக்கொள்கிறார்கள்.

    தாய்-தந்தை இருவருமே சம்பாதிப்பதால் குழந்தை மீது அளவுக்கு அதிகமாக பாசத்தை பொழிவதாக நினைத்துக் கொண்டு வித விதமான உணவு வகைகளை வாங்கி கொடுக்கிறார்கள். பச்சிளம் குழந்தைக்கு முழுமையான தாய்ப்பால் கொடுத்தாலே போதுமானது என்பது பற்றி சிந்திப்பதே இல்லை.

    வளரவளர தேவையான அளவு சத்துள்ள உணவுகளை கொடுக்காமல் கொழுப்பு மற்றும் ருசிக்காக சேர்க்கப்பட்ட ரசாயன உணவு வகைகளை கொடுக்கிறார்கள். இதனால் சிறு வயதிலே குழந்தைகளின் உடல் எடை அதிகமாகி விடுகிறது.

    20 வயது ஆவதற்குள் சர்க்கரை வியாதி, ரத்தத்தில் தேவைக்கு அதிகமாக கொழுப்பு சேர்வது, இரத்தக் கொதிப்பு, மாரடைப்பு, பக்கவாதம் போன்ற பலவித நோய்கள் ஏற்பட இது காரணமாகி விடுகிறது. குழந்தைகள் போதிய உடற்பயிற்சி இல்லாமல் அதிக உணவு உண்பதால், பிற்காலத்தில் அதிக உணவு சாப்பிடும் மனநிலை நீடிக்கும்.

    இதனால் உடல் எடை பலமடங்கு அதிகரிக்கும். 30 வயதிலேயே மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்யும் நிலை உருவாகலாம். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து விடும். ஆஸ்துமா வருவதற்கும் வாய்ப்பு உருவாகும். நோய் எதிர்ப்பு சக்தி இல்லாமல் போவதால் பேக்டீரியா, வைரஸ் போன்றநோய் கிருமிகள் எளிதில் தாக்க இடம் கொடுத்து விடும்.

    எனவே, சிறுவயது முதலே குழந்தையின் வளர்ச்சிக்கு தேவையான அளவில் சத்தான உணவுகளை மருத்துவர்களின் ஆலோசனைப்படி கொடுக்க வேண்டும். இயற்கை உணவுகளை கொடுக்க பழக்க வேண்டும். வெளியில் இருந்து வாங்கும் உணவுகளை, டின்னில் அடைத்து வைத்திருக்கும் உணவுகளை தவிர்ப்பது நல்லது.

    சரிவிகித உணவை கொடுக்க வேண்டும். குறிப்பிட்ட வயது வரை தாய்ப் பால் கொடுத்தால், குழந்தை உடல் பருமன் ஆகாமல் ஆரோக்கியமாக வளரும். சமையல் செய்யும் பெண்கள் கணவர், குழந்தையுடன் தானும் நல்ல உடல் நலத்துடன் இருக்க உணவில் எண்ணெய் சத்து அவசியம்.

    இதற்கு நல்ல கொழுப்பை அதிகரிக்கச் செய்யும் எண்ணெய் வகைளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். தினமும் உணவில் 4 அல்லது 5 தேக்கரண்டி எண்ணெய் பயன்படுத்த வேண்டியது அவசியம். எண்ணெய்யை ஒரேயடியாக தவிர்க்க கூடாது. ஒரே எண்ணெய்யை பயன்படுத்தக் கூடாது.

    நல்லெண்ணை, சூரிய காந்தி எண்ணெய், அரிசி தவிட்டு எண்ணெய், கடலை எண்ணெய், ஆலிவ் எண்ணெய் ஆகியவற்றை மாற்றி மாற்றி பயன்படுத்தலாம். கொழுப்பு சத்து அதிகம் உள்ள நெய், தேங்காய் எண்ணெய், பாமாயில் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

    பழைய எண்ணெய்யை மீண்டும் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். உணவில் உப்பு குறைவாக சேர்க்க வேண்டும் பயன்படுத்தும் உப்பின் அளவு 2 கிராமுக்குள் இருக்க வேண்டும். உப்பு அதிகம் சேர்ப்பது ரத்த கொதிப்பு ஏற்பட காரணமாகிவிடும். தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டும்.

    இனிப்புக்காக சர்க்கரை (சீனி)க்குப் பதில் தேன், வெல்லம் போன்றவற்றை குறைந்த அளவு சேர்ப்பது நல்லது. இளநீரில் உள்ள தேங்காய் வழுக்கை சாப்பிடலாம். பிறந்த குழந்தைகளுக்கு தாய்ப்பால் அவசியம். வளரும் குழந்தைகளுக்கு தேவையான அளவு சரிவிகித உணவு, கொடுப்பதுடன் ஓடி விளையாடுவது, சைக்கிள் ஒடுவது நீச்சல் அடிப்பது போன்ற உடற்பயிற்சிகள் செய்யவும் ஊக்குவிக்க வேண்டும்.

    அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது, சோம்பேறித்தனமாக இருப்பது, கொழுப்பு மிகுந்த உணவு சாப்பிடுவது, சாப்பிடும் உணவுக்கு தகுந்த உடல் உழைப்பு இல்லாமல் இருப்பது போன்ற காரணங்களால் உடல் எடை அதிகமாகும். ரத்த குழாய்களில் அடைப்பு ஏற்படலாம், ரத்த குழாய் சுருங்கலாம்.

    இதனால் ரத்த ஓட்டத்தை சீர்படுத்துவதற்காக இதயத்தின் வேலை அதிகமாகும்.இதயம் பாதிக்கப்படும் நிலை உருவாகும். ஆரோக்கியமாக உணவுகளை உண்பதற்கு தாய்மார்கள் குழந்தைகளை பழக்கப்படுத்த வேண்டும். இதனால் ரத்த ஓட்டம் சீராக இருக்கும்.

    இதயம் சிறப்பாக இயங்கும். சரியான உணவு, உடற்பயிற்சி மூலம் இதயத்தின் வேலைப்பளு குறையும் இதயம் பாதுகாக்கப்படும். இளம் வயதில் மாரடைப்பை சந்திக்கும் அபாயம் வராது.  குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்தையும், இதயத்தையும் பாதுகாப்பது தாய்மார்களின் கையில் தான் இருக்கிறது.

    இதை ஒவ்வொரு தாயும்- தந்தையும் மனதில் கொண்டு குழந்தைகளை வளருங்கள். உங்கள் பாசம் உங்கள் குழந்தையின் இதயத்துக்கு பலமும் பாதுகாப்பும் அளிப்பதாக இருக்கட்டும். உங்கள் குழந்தையின் நலமான ஆரோக்கிய வாழ்வு உங்கள் ஆயுளையும் அதிகரிக்கச் செய்யும்.

    மனதை சமநிலையில் வைக்க பழகுங்கள். எந்த பிரச்சினையையும் பதட்டம் இல்லாமல் அணுகுங்கள். உங்கள் குழந்தையை மகிழ்ச்சியான மனநிலையில் வளரச் செய்யுங்கள் நீங்களும் உங்கள் வாரிசுகளும் ஒரு நூற்றாண்டை சுலபமாக ஓடி கடக்க முடியும்.

    சாப்பிடும் வழிமுறைகள் :

    சாப்பாட்டில் வெங்காயம், பூண்டு, மிளகு, சீரகம், மஞ்சள்தூள், வெந்தயம், பெருங்காயம் ஆகியவற்றை சேர்த்துக் கொள்வது உடல் நலத்துக்கு நல்லது. சாப்பிட்ட உணவு ஜீரணம் ஆன பிறகு சாப்பிட்டால் நோய் வராது என்பது வள்ளுவர் வாக்கு. இதை நாம் கடைபிடித்தால் உடல் நலம் பேணலாம். முழுவயிறும் நிரம்பும் அளவுக்கு சாப்பிடக்கூடாது.

    அரை வயிறு உணவு-பழவகைகள் சாப்பிட வேண்டும். கால்வயிறு காலியாக இருக்க வேண்டும். வேகமாக சாப்பிடக் கூடாது. காலையில் சாப்பிடாமல் இருக்கக் கூடாது. சாப்பிடும் போது சிந்தனை சாப்பாட்டில் மட்டுமே இருக்க வேண்டும். சாப்பாட்டில் கண்டிப்பாக காய்கறி பழங்கள் இடம் பெற வேண்டும்.

    இரவு தூங்குவதற்கு முன்பு வயிறு நிறைய சாப்பிடக்கூடாது. இதனால் இதயத்தின் பழுகுறையும், சீராக செயல்படும். சாப்பிடும்போது புரை ஏறிவிட்டால், யாரோ நினைக்கிறார்கள் என்று சொல்வது தவறு. சாப்பாட்டில் கவனம் இல்லாமல் வேறு எதையோ பற்றி நினைப்பதால் அல்லது பேசுவதால்தான் புரை ஏறுகிறது.

    புரை ஏறினால் தலையில் தட்டக் கூடாது. இதனால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. தலையில் தட்டுவதற்கு பதிலாக குனியச் சொல்லி முதுகில் தட்டினால் தொண்டையில் சிக்கிய உணவு வெளியேறி விடும். இரவு தூங்குதவற்கு முன்பு ஆப்பிள் பழம், ஆடை நீக்கிய பால் குடித்தால் நன்றாக தூக்கம் வரும்.

    அதிக இனிப்பு ஆபத்து :

    இனிப்பு அதிகம் உள்ள உணவு வகைளை சாப்பிட்டால் ரத்தில் அதிகரிக்கும் சர்க்கரை அளவை சரி செய்ய மிகுந்த உடற்பயிற்சி தேவைப்படும். ஒரு குளோப் ஜாமூன் சாப்பிட்டால் ரத்தத்தில் கலக்கும் சர்க்கரையை சரிசெய்ய 4 கிலோமீட்டர் நடக்க வேண்டும். ஒரு ஜஸ்கீரிம் சாப்பிட்டால் 3 கி.மீ ஓட வேண்டும். இனிப்பு வகைகளை அதிகம் சாப்பிடாமல் தவிர்ப்பது உடல் நலத்துக்கு நல்லது.

    குழந்தையுடன் விளையாடுங்கள் :

    தாய்மார்கள் உடற்பயிற்சிக்கு தனியாக நேரம் ஒதுக்க வேண்டியது இல்லை. குழந்தையுடன் விளையாடுங்கள் அது உங்களுக்கும், குழந்தைகளுக்கும் நல்ல உடற்பயிற்சி. இயற்கையான சூழ்நிலையில் குழந்தையுடன் நடக்கலாம். இளம் வயது பெண்கள் ஜாக்கிங் செய்யலாம். மாரடைப்பு வராமல் தவிர்க்க இதுவும் ஒரு வழி.

    உடல் பருமன் ஆன பெண்கள் உடல் எடையை குறைக்க சாப்பிடாமல் இருக்க கூடாது. மருந்து சாப்பிட்டு உடலை குறைப்பது பக்க விளைவுகளை ஏற்படுத்தும். அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சி செய்து பெண்கள் உடலை குறைக்க முயற்சி செய்வது தற்காலிக பலனைத் தான் கொடுக்கும். பயிற்சி செய்வதை விட்டு விட்டால் மீண்டும் உடல் எடை அதிகரித்து விடும்.

    இயற்கையான உடற்பயிற்சி தான் நிரந்தர பயன்தரும். காலையில் நடக்க நேரம் இல்லையென்றால் இரவு சாப்பிட்ட பின்பு ஒரு மணி நேரம் நடைபயிற்சி செய்யலாம். மாடி வீட்டில் குடியிருப்பவர்கள் பலமுறை படி ஏறி இறங்குவதும் நல்ல உடல் பயிற்சிதான்.

    இதனால் ரத்த ஓட்டம் சீராகும். மூட்டு வலி இருப்பவர்கள் வேகமாக ஓடக்கூடாது. மூட்டு வலியை போக்க நீந்துவது நல்லது. நீந்த தெரியாதவர்கள் இடுப்பு அளவு தண்ணீரில் இறங்கி நடை பயிற்சி செய்தால் நல்ல பலன் கிடைக்கும். 

    0 comments:

    Post a Comment