Saturday, 26 October 2013

Tagged Under:

தாயார் பெயரில் தியேட்டர்! ஒரு கோடி தந்த சூர்யா!!

By: ram On: 23:51
  • Share The Gag
  • இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாவை தமிழ்நாட்டிலும் கொண்டாடி கலை உலகமே மகிழ்ந்திருக்கும் நேரம் இது. இதற்கான பெருமை எல்லாம் தமிழக அரசையும், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையையுமே சேரும்.மாடர்ன் தியேட்டர்ஸ் சுந்தரம் அவர்கள் இலவசமாக கொடுத்த நிலத்தில் பிரம்மாண்டமான வானளாவிய புதிய கட்டிடத்தில் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை இயங்கி வருகிறது. 


    இந்த வளாகத்தை கட்ட அனுமதி தந்து அடிக்கல் நாட்டியவர் அன்றைய முதல்வர் டாக்டர் கலைஞர். அந்தக் கட்டிடத்தை திறந்து வைத்தவர் இன்றைய முதல்வர் ஜெ. ஜெயலலிதா.

    இந்த பிரம்மாண்டமான கட்டிடத்தின் ஒரு பகுதியில் மினி சினிமா தியேட்டர் ஒன்று இருந்தது. அது இடிக்கப்பட்டு அங்கேயும் பிரம்மாண்ட கட்டிடம் இப்போது கட்டப்பட்டு வருகிறது. அதற்குள் ஒரு சினிமா தியேட்டரும் உருவாகிறது. இதை லேட்டஸ்ட் மாடலில், டிஜிட்டல் திரை அரங்கமாக குளுகுளு வசதியோடு வடிவமைத்து இருக்கிறார்கள். வர்த்தக சபை தொடர்பான விழாக்கள், திரைப்பட தயாரிப்பாளர்கள் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகள் எல்லாம் இதில் நடத்திக்கொள்ள முடியும்.எதிர்காலத்தில் சினிமா பிரபலங்கள், திரை உலக நட்சத்திரங்கள், அமைச்சர்கள் உள்பட அரசுப் பதவிகளில் அமர்ந்திருப்பவர்கள் எல்லாருமே வந்து அமரும் முக்கிய அரங்கமாக இந்தத் தியேட்டர் அமையப்போகிறது.


     இவ்வளவு பெருமையும், முக்கியத்துவமும் வாய்ந்த சினிமா தியேட்டரை கட்டுவதற்கு ஒரு கோடி ரூபாயை தன் சொந்தப் பணத்தில் இருந்து நன்கொடையாக வழங்கி இருக்கிறார் நடிகர் சூர்யா.தென்னிந்திய திரைப்பட வர்த்தகசபை அந்தப் பணத்தை மகிழ்ச்சியோடு பெற்றுக்கொண்டிருக்கிறது. திரை அரங்கம் கட்டி முடிக்கப்பட்டதும் அதற்கு நடிகர் சூர்யாவின் தாயார் லட்சுமி அம்மாளின் பெயரை சூட்டவும் வர்த்தக சபை நிர்வாகம் சம்மதம் தெரிவித்துள்ளதாக சொல்கிறார்கள். 


    இது அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தும் நல்ல செய்திதான். ஆனால் அதிலும் இப்போது பிரச்னையை எழுப்பியிருக்கறார்கள் சிலர். தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை நடத்திய ""சினிமா -100'' கலை நிகழ்ச்சிகள் அனைத்தையும் பதிவு செய்து தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பும் உரிமையை ஒரு பிரபல நடிகையின் "ரா' நிறுவனத்துக்கு 22 கோடி ரூபாய்க்கு ஓசை இல்லாமல் கொடுத்து ஒப்பந்தத்தில் கையெழுத்தும் போட்ட வர்த்தக சபை நிர்வாகம், விஷயம் வெளியே கசிந்து, இதை டெண்டருக்கு விடாமல் தனிப்பட்ட ஒருவருக்கு எப்படிக் கொடுக்கலாம் என்ற கேள்வியை எழுப்பியதும் சுதாரித்துக்கொண்டு அந்த ஒப்பந்தத்தையே ரத்து செய்துவிட்டதாம். 


    அவர்கள் கொடுத்திருந்த அட்வான்ஸ் தொகையை திருப்பித் தந்துவிட்டதாகவும் சொல்கிறார்கள். விஷயம் இப்படி இருக்க...அதே போன்று கேள்விகள் இந்த சினிமா தியேட்டர் விஷயத்திலும்  எழுந்திருக்கின்றனவாம் இப்போது. எதிர்காலத்தில் அனைவராலும் பேசப்படும் இந்த திரை அரங்கத்தை கட்டுவதற்கு, சத்தம் இல்லாமல் தனிப்பட்ட முறையில் நடிகர் சூர்யாவிடம் இருந்து ஒரு கோடி ரூபாயை வர்த்தக சபை நிர்வாகம் வாங்கியது எப்படி?
    என்ன நியாயம்? இப்படியோர் திட்டம் இருப்பின் அதை முறையாக வெளிப்படுத்தியிருந்தால் "நீ -நான்' என்று போட்டி போட்டுக்கொண்டு பல கோடி தருவதற்கு எத்தனையோ பேர் முன் வருவார்களே? இப்படி சரமாரி கேள்விக் கணைகளை வீசி இருக்கிறார்களாம் சிலர்.



    இது நல்ல விஷயம்தானே? இதிலுமா சிக்கலை உருவாக்குவது? என்று வருத்தப்படுகிறார்கள் சிலர். ""தாயிற் சிறந்த கோவிலும் இல்லை; தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை'' என்ற பழமொழிக்கு ஏற்ப, தன் தந்தை சிவகுமாரின் ஆலோசனையைக் கேட்டு, ஆசை ஆசையாய் அம்மாவின் பெயரில் தியேட்டர் கட்ட ஒரு கோடி ரூபாயை அள்ளிக் கொடுத்த நடிகர் சூர்யாவின் கனவு நிறைவேறுமா?என்ன செய்யப் போகிறது தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை? கேள்வியோடு காத்திருக்கிறது கலை உலகம்!

    0 comments:

    Post a Comment