Monday, 23 September 2013

Tagged Under:

வியக்க வைக்கும் விருதுநகர்! - சுற்றுலாத்தலங்கள்!

By: ram On: 18:48
  • Share The Gag

  •    வியக்க வைக்கும் விருதுநகர்
    உழைப்புக்கும், வர்த்தகத்திற்கும் பெயர் பெற்றது விருதுநகர் மாவட்டம். சமையல் எண்ணெய், பருத்தி, மிளகாய், ஏலக்காய், நறுமணப்பொருட்கள் என பல்வேறு நுகர்பொருட்கள் இந்த மாவட்டத்திலிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. சிறப்பு மிக்க விருதுநகர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பார்க்கத்தகுந்த பல இடங்கள் உள்ளன.

    சிவகாசி:
    குட்டி ஜப்பான் என்றழைக்கப்படும் சிவகாசியில் தயாராகும் பட்டாசுகள் உலக அளவில் பிரபலமானவை. தீப்பெட்டி உற்பத்தியும், நவீன அச்சுத் தொழிலும் இங்கு பிரசித்தம். வானத்தில் வர்ணஜாலம் காட்டும் பட்டாசுகள் தயாராகும் முறைகளை இங்கு நேரில் பார்க்கலாம்.

    ரமண மகரிஷி ஆசிரமம்:
    பகவான் ஸ்ரீரமண மகரிஷி அவதரித்த திருச்சுழி இங்குதான் உள்ளது. ரமணர் பெயரால் இங்குள்ள குண்டாற்றங்கரையில் ஆசிரமம் அமைக்கப்பட்டுள்ளது. திருச்சுழியில் ரமணர் வாழ்ந்த வீடு ‘சுந்தர மந்திரம்’ என்றழைக்கப்படுகிறது. ரமணரின் கருத்துக்களால் கவரப்பட்டவர்கள் கண்டிப்பாக வந்து செல்லவேண்டிய இடம் இது.

    திருத்தங்கல்:
    வரலாற்று சிறப்பு மிக்க நகரம். முதற்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என தமிழின் மூன்று சங்கங்களிலும் இடம் பெற்ற புலவர்களான முடக்கூரனார், போர்க்கோலன், வெண்ணாகனார், ஆதிரேயன் செங்கண்ணனார் ஆகியோர் வாழ்ந்ததாக சொல்லப்படும் இடம்.

    அணில்கள் சரணாலயம்:

    செண்பகத்தோப்பு காட்டு அணில் சரணாலயம் இயற்கை எழில் கொஞ்சும் இடமாகும். சாம்பல் நிற காட்டு அணில்களை இங்கு பார்க்கலாம். புலி, சிறுத்தை, நீலகிரி நீண்ட வால் குரங்கு, புள்ளிமான், தேவாங்கு போன்ற உயிரினங்களும் உண்டு.

    இருக்கன்குடி மாரியம்மன் கோவில்:

    பிரசித்தி பெற்ற இருக்கன்குடி மாரியம்மன் கோவில் சாத்தூரில் இருந்து 8 கி.மீ தொலைவில் உள்ளது. இங்குள்ள அம்மனை வழிபட்டால் அம்மை உள்பட பல்வேறு நோய்கள் நீங்கும் என்பது காலந்தொட்டு வரும் நம்பிக்கை.

    சவேரியார் தேவாலயம்:

    புனித பிரான்சிஸ் நினைவாக பிரான்சிஸ் அசோசியேஷனால் கட்டப்பட்ட தேவாலயம். இதன் சுவர்களில் ஏழு குதிரை பூட்டப்பட்ட தேரில் ஸ்ரீகிருஷ்ண பகவான் வருவது போலவும், இஸ்லாமை குறிக்கும் பிறை நிலவும் பொறிக்கப்பட்டு மத நல்லிணக்கத்தை உணர்த்துகிறது.

    ஆண்டாள் கோவில்:

    பிரசித்தி பெற்ற ஆண்டாள் கோவில் ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைந்துள்ளது. திருப்பாவை பாடிய ஆண்டாளின் பெருமையை உணர்த்தும் திருத்தலம். இந்த கோவிலின் கோபுரம்தான் தமிழ்நாடு அரசாங்கத்தின் இலச்சினையாக அமைந்துள்ளது.

    இவை தவிர அய்யனார் அருவி, திருமேனிநாத சுவாமி கோவில், கல்விக்கண் திறந்த காமராஜர் நினைவு இல்லம் என பார்க்கத் தகுந்த பல இடங்கள் விருதுநகர் மற்றம் சுற்றுப் பகுதிகளில் உள்ளன.

    0 comments:

    Post a Comment