Tuesday, 20 August 2013

Tagged Under:

சென்னையின் சுற்றுலா தளங்கள்...

By: ram On: 20:22
  • Share The Gag



  • சென்னையின் சுற்றுலா தளங்கள்...


    மெரீனா கடற்கரை : மெரீனா கடற்கரை உலகின் நீளமான கடற்கரைகளில் ஒன்றாகும். இதன் நீளம் 13 கி. மீ. ஆகும். இந்தியாவின் கிழக்குக் கடற்பகுதியில் அமைந்துள்ள மெரீனா, இந்திய மாநகரங்களில் ஒன்றான சென்னையின் கடல் எல்லையை வரைவு செய்வதாயும் அதன் அடையாளங்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது. இக்கடற்கரையை ஒட்டி புகழ்பெற்றோரின் உருவச்சிலைகள், நினைவிடங்கள், சமாதிகள் அமைந்துள்ளதால் இது சென்னை நகரின் சுற்றுலா தலங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது.

    வள்ளுவர் கோட்டம் : உலகப் பொதுமறை தந்த திருவள்ளுவரின் நினைவாக 1976 ஆம் ஆண்டு கட்டப்பட்டது வள்ளுவர் கோட்டம். முன்னால் அமைக்கப்பட்டிருக்கிற பிரம்மாண்டமான தேர், திருவாரூர் கோயில் தேரை மாதிரியாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டது. தேரின் பீடம் 25 அடி. சதுரப் பளிங்கால் ஆனது. ஏழு அடி உயரமுள்ள இரு யானைகள் தேரை இழுப்பது போன்று அமைக்கப்பட்டுள்ளது. பெரியதும், சிறியதுமாக உள்ள நான்கு சக்கரங்கள் ஒவ்வொன்றும் ஒரே கல்லால் ஆனவை.

    பெரிய சக்கரத்தின் குறுக்களவு 11 1/4 அடி. பருமன் இரண்டரை அடி. தேரின் உயரம் 101 அடி. அதன் மேலுள்ள கலசம் 5 அடி. தேரின் அடித்தள அடுக்கில் நுண்ணிய சிற்பங்கள் உள்ளன. அவை குறிப்பிட்ட குறள்களின் விளக்கும் வகையில் செதுக்கப்பட்டுள்ளது. திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள கருவறை, தரையிலிருந்து 30 அடி உயரத்தில் உள்ளது. 10 அடி அகலத்தில் எண்கோண வடிவமாக அமைக்கப்பட்டுள்ளது.

    அரங்கம்:
    தோரண வாயில் அழகுற அமைக்கப்பட்டுள்ளது. தூண்கள் ஏதுமில்லாத அரங்கத்தின் நீளம் 220 அடி; அகலம், 100 அடி. ஆசியாவின் மிகப்பெரிய அரங்குகளில் ஒன்று. 4,000 பேர் வரை அமரலாம். அரங்கத்தைச் சுற்றியுள்ள தாழ்வாரத்தின் நீளம் 20 அடி. மேல் மாடியில் மைய மாடமாக ஒரு தாழ்வாரம் உள்ளது. அது, குறள் மணிமாடம்.

    குறள் மணிமாடம்:
    இம்மணிமாடச் சுற்றில் அறத்துப்பால் கருநிறப் பளிங்கிலும், பொருட்பால் வெண்ணிறப் பளிங்கிலும், காமத்துப்பால் செந்நிறப் பளிங்கிலும் திறந்த புத்தக வடிவில் பொறிக்கப்பெற்றுள்ளன.

    வேயா மாடம்:
    திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டுள்ள இடம். ஒன்றன்பின் ஒன்றாக மூன்று நீர்நிலைகள் உள்ளன. அவை, கலசம், கோபுரம், திருவள்ளுவர் சிலை ஆகியவற்றின் பிம்பங்களைக் காணும் வகையில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

    எம்.ஜி.ஆர். நினைவு இல்லம் : சென்னை தி.நகர் ஆற்காடு தெருவில் எம்.ஜி.ஆர் நினைவு இல்லம் இருக்கிறது. 1990ஆம் ஆண்டு ஜானகி எம்.ஜி.ஆர் திறந்து வைத்ததாக கல்வெட்டு மூலம் அறிய முடிகிறது. சுற்றிப் பார்க்க கட்டணம் இல்லை. கீழ்த்தள ஹால் பெரியது. 1950களில் தொடங்கி எம்.ஜி.ஆருக்கு வழங்கப்பட்ட நினைவுப்பரிசுகள் இந்த ஹாலினை அலங்கரிக்கிறது. பல தலைவர்களோடு எம்.ஜி.ஆர் எடுத்துக்கொண்ட அரியப் புகைப்படங்கள் இல்லம் முழுக்க ஆங்காங்கே வைக்கப்பட்டிருக்கிறது.


    மாமல்லபுரம் : தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். 7ஆம் நூற்றாண்டில் பல்லவ நாட்டின் முக்கிய துறைமுகமாக விளங்கிய நகரமாகும். இந்நகரம் மகாபலிபுரம் என்றும் அழைக்கபடுகிறது. இந்நகரில் உள்ள கடற்கரைக் கோயில் உலகப்புகழ் பெற்றது. இக்கோவில் இரண்டு சிவன்கோவில்களை உள்ளடக்கியதாகும். இவை கி.பி. 700 - 728க்கு இடைப்பட்ட காலத்தில் கட்டப்பட்டவை. ஆனந்தமும், ஆன்மீகமும் தழுவும் இடம் இந்தக் கடற்கரைக் கோவில்.

    சென்னையில் இருந்து சுமார் 60கி.மீ தொலைவிலும், பாண்டிச்சேரியில் இருந்து 130 கி.மீ தொலைவிலும், திருச்சியில் இருந்து 250 கி.மீ தொலைவிலும் மாமல்லபுரம் அமைந்துள்ளது. ரயிலில் வருவோர் செங்கல்பட்டில் இறங்கி விட்டால் அங்கிருந்து 30கி.மீ தூர பயணம்தான். சென்னை, திருச்சியில் சர்வதேச விமானநிலையம் உள்ளது. டிசம்பர்- ஜனவரி மாதத்தில் சுற்றுலா பயணிகளைக் கவரும் வகையில் தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறை சார்பில் நாட்டியவிழா ஒன்றும் மாமல்லபுரத்தில் நடத்தப்படுகிறது.

    அறிஞர் அண்ணா விலங்கியல் பூங்கா (வண்டலூர் பூங்கா) : அறிஞர் அண்ணா விலங்கியல் பூங்கா சென்னையின் தெற்கு பகுதியில் 30 கீ.மீ தூரத்தில் அமைந்துள்ளது. இப்பூங்கா வண்டலூர் பூங்கா என்றும் அழைக்கப்படுகிறது. இப்பூங்கா 1855ல் தோற்றுவிக்கப்பட்ட இந்தியாவின் முதல் விலங்கியல் பூங்காவாகும். இங்கு 170க்கும் மேற்ப்பட்ட பாலுட்டிகள், பறவைகள் மற்றும் ஊர்வன உள்ளது.

    கிண்டி தேசியப் பூங்கா : சென்னை மாநகராட்சியில் அமைந்துள்ள ஒரு தேசியப் பூங்கா. இது, இந்தியாவில் எட்டாவது சிறிய தேசியப் பூங்காவாகும். அரிய வகை தேசியப் பூங்காக்களில் இப்பூங்காவும் ஒன்று. இப்பகுதி பரங்கியர் காலத்தில் மில்பர்ட்டு ரோடிரிக்கிசு (Gilbert Rodericks) என்பவரின் சொந்த வேட்டையாடும் பகுதியாக இருந்தது, பின்னர் 1958ல் தமிழ் நாடு வனத்துறையின் கண்காணிப்பிற்கு மாற்றப்பட்டது.

    வேடந்தாங்கல் : வேடந்தாங்கல் தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு ஊர். இவ்வூரில் உள்ள பறவைகள் சரணாலயம் மிகவும் புகழ்பெற்றது (மொத்தப் பரப்பு 30 ஹெக்டேர்). இங்கு ஆண்டுதோறும் உலகின் பல பகுதிகளில் இருந்தும் பறவைகள் வருகின்றன. இவ்விடத்திற்கு கனடா, சைபீரியா, பங்களாதேசம், பர்மா, ஆஸ்திரேலியா முதலிய நாடுகளில் இருந்து பறவைகள் வருகின்றன. அக்டோபர் முதல் மார்ச் வரையிலான பருவத்தில் ஆயிரக்கணக்கான பறவைகள் இங்கு தங்கி முட்டையிட்டுக் குஞ்சு பொறிக்கும். இங்கு வரும் பறவைகளில் நீர்க்காகங்கள், பலவித கொக்குகள், நாரைகள், கூழைக்கடா, நீர்க்கோழி போன்றவை குறிப்பிடத்தக்கவை.

    விவேகானந்தர் இல்லம் : விவேகானந்தர் இல்லம் சென்னையில் உள்ளது. இது 'ஐஸ் ஹவுஸ்' (Ice House) எனவும் ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது. இந்த இல்லத்தில் சுவாமி விவேகானந்தர் 1900 ஆம் ஆண்டு ஆறு வாரங்கள் தங்கியிருந்தார். இந்த கட்டிடம் 1877 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. விக்டோரிய கட்டடக் கலையைப் பின்பற்றி இக்கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இப்போது இது சென்னையில் மிகவும் முக்கியமான சுற்றுலாத் தலமாக விளங்குகின்றது.

    சாந்தோம் தேவாலயம் : சாந்தோம் சென்னையில் மயிலாப்பூர் பகுதியில் உள்ள ஓர் சுற்றுப்புறப் பகுதியாகும். சான் தோம் என்ற சொற்கள் செயிண்ட் தாமசு என்ற கிறித்தவ புனிதரின் பெயரை ஒட்டி எழுந்தது. சான் தோம் என்றால் புனித தோமா என்று பொருள். உள்ளூர் கிறித்தவர்களின் நம்பிக்கையின்படி இயேசு கிறித்துவின் பன்னிரெண்டு சீடர்களில் ஒருவரான புனித தோமையார் கி.பி 52ஆம் ஆண்டு இந்தியா வந்திருந்தார். கி.பி72ஆம் ஆண்டு சென்னையின் மற்றொரு சுற்றுப்புறப்பகுதியான செயிண்ட் தாமசு மவுண்ட் பகுதியில் உயிர்தியாகம் செய்து இங்கு அடக்கம் செய்யப்பட்டார். அவரது சமாதி மீது சாந்தோம் தேவாலயம் கட்டப்பட்டது. இந்த தேவாலயத்திற்கு இத்தாலிய உலகப்பயணி மார்கோ போலோ 1292ஆம் ஆண்டு வருகை புரிந்து தனது பயணக்குறிப்புகளில் பதிந்துள்ளார்.

    0 comments:

    Post a Comment