Thursday, 31 July 2014

Tagged Under: ,

கிரயப்பத்திரத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள்!

By: ram On: 18:27
  • Share The Gag

  • கிரயப்பத்திரத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள்!

    சொத்துக்கு உரிமை கொண்டாடும் முக்கிய ஆணவங்களில் முதன்மையானது கிரயப்பத்திரம். அதில் தான் சொத்து பற்றிய அனைத்து விவரங்களும் பதிவாகி இருக்கும். சொத்துக்கான சர்வே எண், பதிவு எண், யாருடைய பெயரில் சொத்து இருக்கிறது? அது வாங்கப்பட்ட ஆண்டு, சொத்தின் எல்லை அளவுகள் உள்ளிட்ட முக்கிய விவரங்கள் இடம்பெற்று இருக்கும். அதன் மூலமாக தான் சொத்து நமக்கு சொந்தமானது என்பதை உறுதிபடுத்த முடியும்.

    நகல் பத்திரம்

    பிறருக்கு சொத்தை விற்பனை செய்வதாக இருந்தாலும் சிக்கல் இன்றி பரிவர்த்தனையை மேற்கொள்ள முடியும். ஆதலால் கிரயப்பத்திரத்தை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டியது அவசியம். அது தொலைந்து போனால் சொத்து நமக்குரியதாக இருந்தாலும் சொந்தம் கொண்டாட முடியாத நிலை ஏற்படும். மீண்டும் சார்பதிவாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்து நகல் பத்திரம் வாங்க வேண்டி இருக்கும்.

    அதற்கும் சில நடைமுறைகள் இருக்கின்றன. முதலில் கிரயப்பத்திரம் தொலைந்து போய்விட்டதாக காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வேண்டும். அதற்கு கிரயப்பத்திரத்தின் பதிவு எண், அதில் குறிப்பிடப்பட்டு இருக்கும் சொத்து விவரங்கள் பற்றிய தகவல் தெரிந்திருக்க வேண்டும். பத்திரத்தின் ஜெராக்ஸ் நகல் இருந்தால் அதன் மூலமாக புகாரில் விவரங்களை குறிப்பிட்டு விடலாம்.

    சிரமங்களை சந்திக்கநேரும்

    ஆனால் ஜெராக்ஸ் இல்லாமல் இருந்தால் சிக்கலை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். ஏதாவது ஒரு நோட்டில் கிரயபத்திரத்தில் இருக்கும் எண்கள், விவரங்களை குறிப்பிட்டு வைத்திருந்தால் அதன் மூலம் புகார் கொடுக்க ஏதுவாக இருக்கும். அப்படி எழுதி வைக்காத பட்சத்தில் கிரயப்பத்திர நகலை பெறுவதற்கு பல்வேறு சிரமங்களை சந்திக்க வேண்டியிருக்கும். அந்த சொத்தின் சர்வே நம்பராவது மனதில் பதிந்திருந்தால் அதன் மூலம் புகார் செய்ய முதல்கட்ட நடவடிக்கையாவது எடுக்கலாம்.

    அதுவும் தெரியாத பட்சத்தில் சிக்கலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். ஏனெனில் காவல் நிலையத்தில் கிரயப்பத்திரம் தொலைந்து விட்டதாக புகார் தெரிவித்தால்தான் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திர நகலை எளிதாக பெற முயற்சிக்க முடியும். அத்துடன் பத்திர எண், பதிவு செய்யப்பட்ட ஆண்டு போன்ற விவரங்கள் தெரிந்தால்தான் எளிதாக கிரயப்பத்திர நகலை பெற முடியும்.

    கேள்விகள் எழும்

    ஏனென்றால் 1987–ம் ஆண்டுக்கு முன்பு சொத்து வாங்கப்பட்டு இருந்தால் கணிணி மூலம் பத்திர நகலை பெறுவது இயலாது. அதனால் சார்பதிவாளர் அலுவலகத்தில் இருக்கும் பழைய ஆவணங்களை தேடி பிடித்து அதன் மூலமே நகல் பத்திரம் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்க முடியும் என்பதால் காலதாமதத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

    அப்படியே நகல் கிரயப்பத்திரத்தை வாங்கினாலும் அதனுடன் பல்வேறு கேள்விகளும் எழுந்து நிற்கும். அதிலும் சொத்தை விற்பனை செய்வதாக இருந்தால் பல கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டியிருக்கும். உண்மையிலேயே கிரயப்பத்திரம் தொலைந்து விட்டதா என்பதுதான் முதல் கேள்வியாக இருக்கும். ஏனெனில் கிரயப்பத்திரத்தை வேறு யாரிடமாவது அடமானம் வைத்து பணம் வாங்கி இருக்கிறார்களா? என்ற சந்தேகத்தை வரவழைப்பதாகவே இருக்கும்.

    பாதுகாக்க வேண்டும்

    பிறரிடம் அடமானம் வைத்தது பற்றி சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யாமல் இருந்தால் அது வில்லங்க சான்றிதழில் தெரியாது என்பதே சந்தேகத்துக்கு காரணமாக அமையும். அதனால் நகல் கிரயப்பத்திரம் வைத்திருக்கும் சொத்தை விற்பனை செய்வது சிக்கல் நிறைந்ததாகவே இருக்கும். சொத்து தங்களுடையது தான் எனத் தெரிந்தும் கிரையப்பத்திரம் தொலைத்து போனால் விற்பனை செய்ய முடியாமல் சிரமப்பட வேண்டியிருக்கும்.

    கிரயப்பத்திரத்தில் இருக்கும் விவரங்கள் நினைவில் இல்லாத பட்சத்தில் எதுவும் செய்ய இயலாத நிலைதான் ஏற்படக்கூடும். ஆகவே கிரயப்பத்திரத்தை பத்திரமாக பாதுகாத்து வைக்க வேண்டும். அதை ஜெராக்ஸ் எடுத்து வைத்திருக்க வேண்டியதும் முக்கியம். அத்துடன் கிரயப்பத்திர விவரங்களை முக்கியமான நோட்டுகளில் எழுதி வைத்துக்கொள்வதும் நல்லது. அதுபற்றிய விவரங்களை வீட்டில் உள்ளவர்களிடம் தெரியப் படுத்தி விடுவதும் பிற்காலத்தில் உபயோகமானதாக இருக்கும்.

    0 comments:

    Post a Comment