Tuesday, 7 January 2014

Tagged Under: , , , ,

நம்பிக்கை....?

By: ram On: 06:12
  • Share The Gag

  • நம்பிக்கை

    'என் பையன் மிகவும் நல்லவன்' என்று நீ நம்பிவிட்டால், எந்தவித தொல்லையும் உனக்கு இருக்காது.


    பையன் கெட்டவனாக இருக்கலாம்; அதன் விளைவுகளை  அனுபவிக்க வேண்டியவன் அவனே.


    மனைவி உத்தமி, பத்தினி என்று நம்பி விட்டால், உன்னை பொறுத்தவரை காதல் சுகமாகி விடும்.


    தவறான நடத்தைக்குத் தண்டனை அனுபவிக்க வேண்டியவள் அவளே.


    வேலைக்காரனையும் நம்பி விட வேண்டும்; அதற்கு அவன் துரோகம் செய்தால் அவனை விலக்கிவிடு; அதற்காக யாரைக் கண்டாலும் அவ நம்பிக்கை கொள்ளாதே.


    நம்பிக்கையோடு கோவிலுக்குப் போ.


    'நம்பினார் கெடுவதில்லை' என்பது நான்கு மறை தீர்ப்பு.


    வாஸ்கோடகாமாவின் நம்பிக்கை, புதிய நிலத்தைக் கண்டுபிடித்தது.


    கொலம்பஸ்ஸின் நம்பிக்கை, அவன் தாய் நாட்டுக்கு ஒரு புதிய நிலத்தை தந்தது.


    ஆயுதங்களில்லாத சர்ச்சிலின் நம்பிக்கை, இரண்டாவது  உலகப் போரின் போது இங்கிலாந்துக்கு வெற்றியை தேடி தந்தது.


    கடலில் விழுந்து தத்தளித்து ஒருவன் இரண்டு மாதங்கள் நீந்திக் கொண்டிருந்தான் என்றும், பிறகொரு கப்பலில் கரை சேர்ந்தான் என்றும் நான் படித்திருக்கிறேன்.


    நம்பிக்கை மட்டும் இல்லாதிருந்தால் அவன் பிணமாகி மீன்களுக்கு இரையாகி இருப்பான்.


    பிரகலாதனின் நம்பிக்கை, கடவுளைக் காட்டிற்று.


    கண்ணனின் நம்பிக்கை பாரத போரில் வெற்றிப் பெற்றது.


    நான் முன்னேறியது  படிப்பினால் அல்ல; நம்பிக்கையால்.


    அப்போது எனக்கு பதினான்கு வயது. கவிதை எழுதுவதில் எனக்குக் கொள்ளை ஆசை.


    ஒரு நாள் அதிகாலையில் எழுந்து நான்கு வரி எழுதினேன்;


    வீணா கானம் விடியுமுன் கேட்டது;
    கானாமிர்தம் காதுக்கினிமை !
    தூக்கம் கலைந்தது துள்ளி எழுந்தேன்!
    படுக்கையிலிருந்தே பருகினேன் அமுதம்!


    --- இந்த நான்கு வரிக்கு மேல் எழுத தெரியவில்லை. விட்டுவிட்டேன்.


    பதினேழாவது வயதில் முதன் முதலாக முழுக் கவிதை எழுதினேன். அந்த வயதிலேயே ஒரு பத்திரிக்கையில் ஆசிரியரானேன்.


    ஒரு நண்பர் எத்தனை ஆயிரம் ரூபாய் இருந்தாலும் என்னிடம் கொடுத்து வைப்பார்-- நம்பிக்கை.


    நம்பிக்கைக்குத் துரோகம் செய்கிறவன் பெரும் தண்டனைக்கு ஆளாவான்--காண்ணாரக் கண்டிருக்கிறேன்.


    என்னிடம் அநியாயமாகப் பணம் வாங்கியவர்கள், அந்த பணத்தை நியாயமாக செலவழித்தது இல்லை;  அது துரோகத்துக்கு தண்டனை.


    தேசத்தை நம்பு; தெய்வத்தை நம்பு; உலகம் உன்னை புகழும்.


    'இது நம்மால்  முடியும்' என்று எண்ணு; முடிந்துவிடும்.


    மனோதிடமும், வைராக்கியமும் இந்த நம்பிக்கையின் குழந்தைகளே!


    ஒரு துறையில் முனைந்து நின்று நம்பிக்கையோடு முன்னேறினால், நீ நினைக்கும் அளவுக்குப் புகழும், பொருளும் வந்து சேரும்.


    கடலைக்  கடக்க கப்பலை தந்தது எவனோ ஒருவனின் நம்பிக்கை.


    இவற்றுள் தலையாயது  தெய்வ நம்பிக்கை.


    தெய்வ நம்பிக்கை பொருள் தருகிறது; நிம்மதி தருகிறது; நியாயமாக நடக்க செய்கிறது.


    மருத்துவரிடம் நம்பிக்கை வைத்தால் மருந்தில்லாமலேயே பாதி நோய் தீர்ந்து விடுகிறது.


    நம்பிக்கை உடையவன் தான் வேதந்தியானான், விஞ்ஞானியானான்.


    நம்பிக்கை இல்லாதவனுக்கு சுகமும் அற்பம்; ஆயுளும் அற்பம்.


    தண்ணீரைப் பால் என்று நம்பினால் அது பால் தான்; வேப்பிலை இனிக்கும் என்று நம்பினால் இனிக்கும்.


    நம்பிக்கைக்கு மிகவும் தேவையானது மனம்.


    அது உன்னிடமே இருக்கிறது; அதற்காக நீ ஒரு பைசாவும் செலவழிக்க தேவை இல்லை.

    -கவியரசு கண்ணதாசன்

    0 comments:

    Post a Comment