Sunday, 20 July 2014

Tagged Under: , , , , ,

குழந்தைபேறு தரும் எலுமிச்சை....!!!

By: ram On: 21:21
  • Share The Gag
  •         கொங்குநாட்டில் பதினான்காம் நூற்றாண்டின் மத்தியில் சிறப்பாக ஆட்சி புரிந்து வந்தவன் `கோணவராயன்' என்ற குறுநில மன்னன். அவனது ஆட்சி கட்டுப்பாட்டில் இருந்து வந்த நம்பியூரில் பழமைமிக்க பல திருக்கோயில்கள் இருக்கின்றன. அவற்றுள் ஒன்றுதான், பட்டத்து அரசி அம்மன் கோயில். இக்கோயில் தோன்றிய வரலாறு தெளிவாக இன்னும் அறியப்படவில்லை என்றபோதும் செவி வழிச் செய்தியாகப் பல தகவல்கள் சொல்லப்படுகின்றன.

    ஒருசமயம், திப்புசுல்தானின் படை வீரர்களால் இப்பகுதி சுற்றி வளைக்கப்பட்டது. போரில் நம்பியூரையும் அதன் சுற்றுப் பகுதிகளையும் அப்போது ஆட்சி செய்து வந்த பட்டத்து அரசியான மருதம்மா உயிர் நீத்தாள். அந்த அரசியின் வீரத்தை நினைவுகூரும் விதமாக, அங்குள்ள கோயிலில் அருளாட்சி புரிந்து வந்த அம்மனுக்குப் `பட்டத்து அரசி அம்மன்' என்ற பெயர் ஏற்பட்டதாகச் சொல்கின்றனர்.

    போர் நடைபெற்றபோது படைகளைத் தலைமை தாங்கி நடத்திய அரசியையே `படைத்தலைச்சி அம்மன்' என்று பிற்காலத்தில் மக்கள் வணங்க ஆரம்பித்ததாகவும், அந்த அம்மனே இன்று பட்டத்தரசி அம்மன் எனவும் ஒரு கருத்து நிலவுகிறது. கோயிலின் முன்னே விநாயகருக்கு தனி சன்னதி இருக்கிறது.

    உள்ளே கன்னிமார் சிலைகள் மலர்ச்சரங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. பிரதி வாரம் வெள்ளி, திங்கள் கிழமைகள் இங்கே விசேஷமானவை. மிகப் பழமை வாய்ந்த பட்டத்து அரசி அம்மன் மிகுந்த வரப்பிரசாதி. குழந்தைப் பேறு இல்லாத தம்பதிகளுக்கு, அன்னையின் சூலத்தில் குத்திய எலுமிச்சங் கனியை பூசாரி கொடுத்து, பிழிந்து உண்ணச் சொல்வார்.

    பல தம்பதிகளுக்கு இதனால் குழந்தைப்பேறு கிடைத்திருக்கிறது என்று சொல்கிறார்கள். கோபி செட்டிபாளையத்திலிருந்து கோவை செல்லும் பேருந்துப் பாதையில் 18 கி.மீ. தொலைவில் நம்பியூர் பாரதிநகரில் உள்ளது பட்டத்து அரசி அம்மன் கோயில்.

    0 comments:

    Post a Comment