Wednesday, 15 January 2014

Tagged Under: , , , ,

வெற்றியின் விலை சமயோசிதம்....அவசியம் படிக்கலாம்!

By: ram On: 12:49
  • Share The Gag

  • இயல்பாகவே குழந்தைகளுக்கு பெற்ற தாயின் மீது பாசம் அதிகம். ஆனால் நியூயார்க் நகரத்தில் மர்கிட்டா ஆண்ட்ருஸ் என்ற 12 வயது பள்ளி மாணவி தனது தாயின் மீது வைத்த பாசம் மிக அதிகம். ஏனென்றால் இவளின் தந்தை இவள் சிறுமியாக இருந்தபொழுதே தாயை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டார். இவளின் தாயார் மிகவும் கடினமாக வேலை செய்து இவளைப் படிக்க வைத்தாள். மேலும் தனது புதல்வியின் கல்லூரிப் படிப்புக்காக கடினமாக உழைத்து சேமித்து வந்தார்.


    ஆனால் பெற்ற தாயின் கனவோ இந்த உலகத்தைச் சுற்றி வரவேண்டும் என்பதே. தனது குழந்தையின் நலன் கருதி தனது ஆசையை அந்த தாய் வெளிக்காட்டாமல் இரவு பகல் பார்க்காமல் பாடுபட்டு சேமித்து வந்தார். தாயின் ஆசையை மர்கிட்டா தெரிந்து கொண்டு எப்படியாவது தனது தாயை உலகச் சுற்றுலா அழைத்துச் செல்லவேண்டும் என்று விரும்பினாள்.


    மர்கிட்டா பள்ளியில் படித்துக் கொண்டு இருந்த காரணத்தால் வேலைக்கு போய் உலகச் சுற்றுலா செல்வதற்கான பெரும் தொகையை சம்பாதிக்க முடியாது. எப்படி தனது தாயின் ஆசையை நிறைவேற்றலாம்? என்று சிந்தித்துக் கொண்டு இருந்த பொழுதுதான் அவள் படித்த பள்ளியின் சாரணர் இயக்க நோட்டீஸ் போர்டு செய்தி அவளைத் துள்ளிக் குதிக்கச் செய்தது. அந்த செய்தி என்னவென்றால் பிஸ்கட் தயாரிக்கும் நிறுவனம் ஒன்று சாரணர் இயக்கத்தில் உள்ள பெண்களில் யார் அதிகமாக “” பிஸ்கட் பாக்கெட் விற்பனை செய்கின்றனரோ அவர்களுக்கு “கோடை விடுமுறையில் நடைபெற உள்ள கோடை முகாமில் இலவசமாக பங்கேற்க வாய்ப்பு” மற்றும் மிகவும் அதிகமாக விற்பனை செய்பவர்களுக்கு “உலகத்தைச் சுற்றி வர இரண்டு நபர்களுக்கான இலவச டிக்கட்” என்று அறிவித்திருந்தனர். மர்கிட்டா இந்த செய்தியைப் படித்தவுடன் தரையிலே நடக்கவில்லை. வானத்தில் பறப்பதைப் போன்று உணர்ந்தாள். தனது தாயின் ஆசையை நிறைவேற்ற சரியான தருணம் என்று துள்ளிக் குதித்தாள்.


    தனது பள்ளியில் படித்த நேரம் தவிர மற்ற நேரங்களில், அவள் தனது அத்தையின் அறிவுரையின் பேரில் ஸ்கவுட் சீருடையை அணிந்து கொண்டு மக்கள் கூடுகின்ற இடங்களான ஷாப்பிங் மால்கள், பெரிய அப்பார்ட்மெண்ட், தெருமுனை, மார்க்கெட் போன்ற இடங்களைத் தேர்வு செய்து, யாரிடமெல்லாம் பிஸ்கட் வாங்க பணம் இருக்கும் என்று தெரிகின்றதோ, அவர்களிடம் சென்று, “எனது பள்ளியில் நடை பெறும் கோடை விடுமுறை இலவச சம்மர் கேம்பில் பங்கேற்க உதவுங்கள். அதற்கு என்னிடம் இந்த பிஸ்கட் பாக்கெட் வாங்குங்கள்” என்று கூவிக் கூவி பிஸ்கெட் பாக்கெட்டுகளை விற்றாள்.


     சிலர் அவளின் சிறந்த அணுகுமுறைக்காக வாங்கினர். சிலர் அவளின் ஆர்வத்திற்காகவும், உற்சாகத்திற்காகவும் பிஸ்கெட் பாக்கெட் வாங்கினார்கள். இன்னும் சிலர் பிஸ்கெட் வாங்க முன்வரவில்லை. மர்கிட்டா சிறிதும் கவலைப் படாமல் அவர்களிடம் சென்று சாரணர் இயக்கத்திற்கு 30,000 டாலர்கள் நன்கொடை அளிக்க முடியுமா? என்று பணிவுடன் கேட்டாள். அதற்கு அவர்களிடமிருந்து முடியாது என்ற பதில் வந்தது. உடனே மர்கிட்டா அப்படியென்றால் என்னிடம் ஒரு பிஸ்கெட் பாக்கெட் தாங்கள் வாங்கலாமே என்று கூறி மிக எளிதாக விற்றாள்.


    முதல் பாக்கெட் விற்பது தான் மிகவும் கடினமாக இருந்தது. பிறகு சிரமம் ஏதுவுமில்லை. ஏனென்றால் அவளின் சிந்தனை மற்றும் இலக்கு முழுவதும் தன்னுடைய சம்மர் கேம்பில் பங்கேற்பதும், தனது தாயின் கனவை நிறை வேற்றுவது தான். மிகவும் கடின மாக உழைத்தாள். மர்கிட்டாவின் முயற்சி அறிந்த பொதுமக்கள் பலர் அவளின் ரசிகையானார்கள். அந்த ரசிகர்களே மற்றவர்களிடம் அவளின் லட்சியத்தைக் கூறி அந்த சிறுமி ஜெயிக்க வேண்டும் என்று உதவி கோரினர். மர்கிட்டாவின் முயற்சி வீண்போகவில்லை.


    அவளின் கடின உழைப்பால் 3526 பெட்டிகள் (ஒரு பெட்டிக்கு ஒரு டஜன் பிஸ்கெட்டுகள்) விற்பனை செய்து அந்த ஆண்டு விற்பனையில் முதல் இடத்தைப் பிடித்தாள். அவள் தாயின் கனவை நிறைவேற்றினாள். தாயை அழைத்துக் கொண்டு மிகவும் சந்தோஷமாக உலகத்தைச் சுற்றி வந்தாள்.


    இந்த சாதனை புரிந்து 5 ஆண்டுகளில் மர்கிட்டாவின் விற்பனை 39,000 பெட்டிகள் அதன் மதிப்பு 80,000 டாலர்கள். இப்பொழுது மர்கிட்டாவை எல்லோரும் கவனிக்க ஆரம்பித்தனர். அனைவரும் அந்த சிறுமியின் சாதனையைப் பற்றியே பேசினார்கள். மர்கிட்டாவின் பேட்டிகள் பத்திரிகையில் செய்தியாகவும், கட்டுரையாகவும் வரத்துவங்கின. உலகின் முன்னணி கணினி இயந்திரம் விற்பனை செய்யும் ஐஆங என்ற நிறுவனம் தங்களிடம் பணி புரியும் விற்பனை பிரதிநிதிகளிடையே மர்கிட்டா உரையாற்றுவதற்கு வாய்ப்பு அளித்தது.


     வால்ட் டிஸ்னி என்ற உலகின் முன்னோடியான சினிமா தயாரிக்கும் நிறுவனம் மர்கிட்டாவின் விற்பனை அனுபவத்தை “த குக்கி கிட்” என்ற பெயரில் 12 நிமிடம் ஓடக்கூடிய குறும்படம் ஒன்றைத் தயாரித்து வெளியிட்டது. அந்த குறும்படம் பல பெரிய நிறுவனங்களுக்கு விற்பனை செய்யும் விற்பனையாளர்களுக்கு உற்சாகம் அளிக்கும் பாடமாக பயன்பட்டது. மர்கிட்டா எழுதிய “குக்கிஸ் எப்படி விற்பனை செய்யலாம்” என்ற புத்தகம் விற்பனையில் சாதனை புரிந்தது.


    மர்கிட்டாவின் விற்பனைத் திறனைப் பற்றித் தெரிந்து கொள்ள ஒரு துளி. மில்லியன் டாலர் ரவுண்ட் டேபிள் என்ற இன்சூரன்ஸ் ஏஜெண்ட் களுக்கான அமைப்பில் 5000 ஏஜெண்ட்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் விற்பனை திறன்கள் பற்றி உரையாட மர்கிட்டா சென்று இருந்தாள். மிகவும் சிறப்பாக உரையாடி முடித்துவிட்டு நான் இந்த ஆண்டு கோடை விடுமுறையில் சம்மர் கேம்பில் கலந்து கொள்வதற்கு நீங்கள் உதவலாமா? அதற்கு நீங்கள் எத்தனை டஜன் பிஸ்கட் வாங்கப் போகின்றீர்கள்? என்று கேட்ட மறுநிமிடம் விற்று தீர்ந்தன, 5000 பிஸ்கெட் பெட்டிகள்.


    நாம் பல நேரங்களில் பல விதமான சிந்தனைகளை அந்த சூழலுக்கேற்பத் தேர்வு செய்கின்றோம். இதில் எந்த சிந்தனை சரி? எந்த சிந்தனை தவறு? என்ற சிந்தனைக்கே இடமில்லை நாம் சிறுமி மர்கிட்டாவின் அனுபவத்தி லிருந்து பார்த்தால் நமக்கு மிகவும் தெளிவாகப் புரியும். மர்கிட்டா தன்னால் பிஸ்கட் விற்பனை செய்யும் போட்டியில் பங்கேற்க முடியாது என்று நினைத்திருந்தால், அவள் தெருத்தெருவதாக சென்று பிஸ்கெட் பாக்கெட் விற்றிருக்க மாட்டாள். அவள் தாயின் கனவு நிறைவேறி இருக்காது. அவள் பள்ளியில் நன்றாகப் படித்து தாயின் சேமிப்பின் மூலம் ஏதாவது ஒரு கல்லூரியில் சேர்ந்து படித்து இருப்பாள். இதுவும் சரி.


    மர்கிட்டா தன்னால் முடியும் என்று நம்பியதால், முயற்சி செய்தாள். கடினமாக உழைக்க ஆரம்பித்தாள், சாதனை புரிந்தாள். உலகமே அவளைத் திரும்பிப் பார்த்தது. தனது தாயின் கனவும் நிறைவேறியது. இதுவும் சரி.


    நாம் முடியும் என்று சிந்தித்தால் வெற்றி வாய்ப்புகளுக்கான கதவுகள் அனைத்தும் திறக்கப் படும். முடியாது என்று நம்பி முடிவெடுத்து விட்டால் எத்தனைமுறை தட்டினாலும் வெற்றி வாய்ப்புகளுக்கான கதவுகள் திறக்காது. நீங்களும் எந்த காரியம் செய்வதற்கு முன்பும் உங்கள் அறிவு மனது உங்களிடம் முடியாது என்று கூறினாலும், நீங்கள் அதோடு போட்டியிட்டு உங்களால் முடியும் என்ற முடிவினை எடுத்தால் வெற்றி நிச்சயம் .

    0 comments:

    Post a Comment