Monday, 30 September 2013

Tagged Under:

புரட்டாசிப் பட்டம் - என்ன விதைக்கலாம்? எவ்வளவு அறுக்கலாம்?

By: ram On: 19:52
  • Share The Gag

  • தமிழ்நாட்டின் முக்கிய சாகுபடி பட்டங்களில் புரட்டாசிப் பட்டமும் ஒன்று. இப்பட்டத்தில் தானியங்கள், சிறு தானியங்கள், பயறு வகைகள், நார்ப் பயிர்கள் அதிகமாக சாகுபடி செய்யப்படுவது வழக்கம். தென்மேற்குப் பருவ மழை  சிறப்பாக கைகொடுத்துள்ள நிலையில், வடகிழக்குப் பருவ மழையும், அக்டோபர் முதல் வாரத்தில் துவங்க வாய்ப்புள்ளதால் இந்தாண்டு புரட்டாசிப் பட்டம் செழிப்பு நிறைந்ததாகவே இருக்கும். புரட்டாசிப் பட்டத்தில் என்னென்ன பயிர்கள் விதைக்கலாம், சராசரியாக எவ்வளவு மகசூல் கிடைக்கும்? இதோ...


    பருத்தி: வெள்ளைத் தங்கம்


    புரட்டாசிப் பட்டத்திற்கு எல்.ஆர்.ஏ. 5166, கே 11, கே.சி. 2, எஸ்.பி.வி.ஆர். 2 போன்ற பருத்தி ரகங்களைப் பயிரிடலாம். பருத்திக் காய்களில் மேலிருந்து கீழாக கீறல் தோன்றி, ஓரிரு நாட்களில் முழுவதும் மலர்ந்து வெடிப்பதே அறுவடைக்கான அறிகுறியாகும். விதைத்த  120 நாட்களுக்குப் பின் வாரம் ஒரு முறை அல்லது 10 நாட்களுக்கு ஒரு முறை காலை மற்றும் மாலை நேரங்களில் பஞ்சை கைகளால் அறுவடை செய்ய வேண்டும். ரகங்களைப் பொருத்து மகசூல் அளவு மாறுபடும்.


    துவரை: ஏற்றம் தரும் நாற்று நடவு


    துவரை, மிதமான வெப்பம் மற்றும் குறைந்த ஈரப்பதத்தில் வளரக்கூடியவை. நல்ல வடிகால் வசதி கொண்ட செம்மண் மற்றும் குறுமண் நிலம் துவரை சாகுபடிக்கு ஏற்றது. புரட்டாசிப் பட்டத்தில் கோ 6, வம்பன் 1, வம்பன் 2, கோ(சிபி) 7  போன்ற துவரை ரகங்களைப் பயிரிடலாம். துவரை சாகுபடியில் விதைப்பு முறையை விட, நாற்று நடவு தொழில்நுட்பத்தைப் பின்பற்றுவதன் மூலம் ஏக்கருக்கு 800 கிலோ மகசூல் பெறலாம். 150 நாட்களில் அறுவடை செய்துவிடலாம். 80 சதவிகிதக் காய்கள் முதிர்ச்சி அடைந்தவுடன் காய்களை தனியாகவோ அல்லது முழு செடியாகவோ அறுவடை செய்து வெயிலில் உலர்த்தி விதைகளைப் பிரித்தெடுக்கலாம்.


    அவரை: அள்ளலாம் மகசூல்


    அவரையில் இரண்டு ரகங்கள் உண்டு. ஒன்று, செடியில் காய்ப்பது (குத்து அவரை), மற்றொன்று கொடியில் காய்ப்பது (பந்தல் அவரை). பந்தல் ரகத்தை பயிர் செய்வதாக இருந்தால் பார்களுக்கிடையே 10 அடியும், குத்து ரகத்தைப் பயிர் செய்வதாக இருந்தால் பார்களுக்கிடையே 1.5 அடியும் இடைவெளி விட வேண்டும். பந்தல் அமைத்து சாகுபடி செய்யும்போது, கொடி, பந்தலை அடைந்தவுடன் நுனிக்குருத்தைக் கிள்ளிவிட வேண்டும். அவரை வேர்களில் நைட்ரஜனை நிலைநிறுத்தக்கூடிய பாக்டீரியங்கள் இருப்பதால் இது மண்ணில் தழைச்சத்தை நிலைநிறுத்தி மண்ணை வளமாக்குகிறது. பந்தல் அவரையில் ஹெக்டேருக்கு 240 நாட்களில் 8-10 டன் மற்றும் குத்து அவரையில் 120 நாட்களில் 6-8 டன் மகசூல் கிடைக்கும்.


    தட்டைப்பயறு: வெப்பத்திலும் மகசூல் கொட்டும்


    வெப்ப மற்றும் மிதவெப்ப மண்டலப் பகுதிகளில் தட்டைப்பயிரை சாகுபடி செய்யலாம். நல்ல வடிகால் வசதியுள்ள வண்டல் மண் மற்றும் நடுநிலை கார அமிலநிலை கொண்ட மண் ஏற்றது. தனிப்பயிராக இருப்பின் ஹெக்டேருக்கு அனைத்து ரகங்களுக்கும் 20 கிலோ விதைகளும், கலப்புப் பயிராக இருப்பின் 10 கிலோ விதைகளும் தேவைப்படும். 120 நாட்களில் அறுவடை செய்து விடலாம். காய்கள் 80 சதவிகிதம் முற்றியபின், செடிகளை அறுத்துக் கட்டி வைத்து பின்பு வெயிலில் காய வைத்து, மணிகளைப் பிரித்தெடுக்க வேண்டும். ஹெக்டேருக்கு மானாவாரியில் 700-900 கிலோ மற்றும் இறவையில் 1,200-1,500 கிலோ மகசூல் கிடைக்கும்.


    பச்சைப்பயறு: பலே வருமானம்


    கோ 4, கோ 6, கேஎம் 2, விபிஎன் 1, பிஒய் 1 போன்ற பச்சைப்பயறு ரகங்கள் புரட்டாசிப் பட்டத்துக்கு ஏற்றவை. ஹெக்டேருக்கு தனிப்பயிருக்கு 20 கிலோவும், கலப்புப்பயிருக்கு 10 கிலோ விதைகளும் தேவைப்படும். மூன்றில் 2 பங்கு காய்கள் முதிர்ச்சியடைந்த நிலையில் செடியை அறுவடை செய்து காயவைத்து விதைகளைப் பிரித்தெடுக்கலாம். பச்சைப்பயறு தானியங்களில் பாஸ்பாரிக் அமிலம் அதிகளவில் உள்ளது. பருப்பு தவிர எஞ்சிய பாகங்கள் பசுந்தாள் உரமாகவும், கால்நடைத் தீவனமாகவும் பயன்படுகின்றன. ஹெக்டேருக்கு மானாவாரியில் 600-750 கிலோவும், இறவையில் 1,000-1,200 கிலோவும் மகசூல் கிடைக்கும்.


    தினை: மானாவாரி மன்னன்


    தமிழகத்தில் பெரும்பாலும் மானாவாரியாகவே சாகுபடி செய்யப்படும் தினை, கடினமான வறட்சியைத் தாங்கி வளரக்கூடியது. செம்மண், இரு மண் கலந்த நிலங்கள் இதற்கு உகந்தது. ஒரு ஹெக்டேருக்கு வரிசை விதைப்பிற்கு 10 கிலோவும், தூவுவதற்கு 12.5 கிலோ விதைகளும் தேவைப்படும். 90-ஆம் நாளில் கதிர் முற்றி, அறுவடைக்குத் தயாராகி விடும்.  உயர் விளைச்சல் ரகங்களைப் பயன்படுத்துவதாலும், சீரிய சாகுபடி குறிப்புகளைக் கடைப்பிடிப்பதாலும் தோராயமாக ஹெக்டேருக்கு ஒன்றரை டன் தானியமும், 5 டன் தட்டையும் பெறலாம். தினை தானியத்தை சாக்குப் பைகளில் வைத்து நீண்ட காலத்திற்கு சேமிக்க முடியும். தினையில் உள்ள சத்துக்கள் நெல், அரிசி, கோதுமையில் உள்ளதைவிட அதிகமானது.


    குதிரைவாலி: காலம் கம்மி, லாபம் ஜாஸ்தி


    குதிரைவாலியை 90 நாட்களில் மானாவாரியாகப் பயிரிட்டு அறுவடை செய்யலாம். ஏக்கருக்கு 5 கிலோ விதைகள் தேவைப்படும். ஒரு மழை பெய்த பின், ஒரு மாதம் வரை மழை இல்லாவிட்டாலும் தாக்குப் பிடிக்கும். பெரும்பாலும் பூச்சிகள், நோய்கள் குதிரைவாலியைத் தாக்குவது இல்லை. கதிர் நன்கு காய்த்து முற்றிய பின், அறுவடை செய்து, நன்கு காய வைத்து சுத்தம் செய்து, காற்று புகாதபடி சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும். குதிரைவாலி சாகுபடியில் தானியங்களைத் தவிர, அவற்றின் தாள்களும் கால்நடைத் தீவனங்களுக்காக விற்பனை செய்யப்படுவதால், விவசாயிகளுக்கு இரட்டிப்பு லாபம் கிடைக்கும். ஏக்கருக்கு 800 கிலோ மகசூல் கிடைக்கும். இதன் உமி நீக்கிய அரிசி மிகவும் சத்தானது.



    கோதுமை, கம்பு, ராகி, மக்காச்சோளம், உளுந்து, சோயாமொச்சை போன்ற பயிர்களையும் புரட்டாசிப் பட்டத்தில் சாகுபடி செய்யலாம். மேலும் விவரங்களுக்கு வட்டார வேளாண் உதவி இயக்குநர் அலுவலகத்தைத் தொடர்புகொண்டு விவசாயிகள் ஆலோசனை பெற்றுக்கொள்ளலாம்.

     

    0 comments:

    Post a Comment