Sunday, 8 December 2013

Tagged Under: , , ,

இறைநம்பிக்கையே வாழ்க்கை!

By: ram On: 19:06
  • Share The Gag
  • மதமும், மதம் சார்ந்த சிந்தனைகளும் மனித இனத்தில் இன்று, நேற்று உருவானவை அல்ல. மனிதனுடைய கலாச்சார மாற்றத்தினூடாக விளைந்தவையே மதங்களும் அவை சார்ந்த நற்சிந்தனைகளும்.


    இன்று சில நாடுகளில் மதங்களைப் பிரதிநிதிப்படுத்துகிறோம். என்று கூறிக் கொண்டு தவறான செய்கைகளில் ஈடுபடும் சில மனிதர்களினால் மதங்களை மிகவும் இழிவாக விமர்சனம் செய்யும் நிகழ்வுகள் தலைதூக்கியுள்ளன.


    ஆத்திகவாதிகள், நாத்திகவாதிகள் இருபாலருமே மனிதர்கள்தான். அவர்களின் மன உணர்ச்சிகள் சாதாரண மனித உணர்ச்சிகளுக்கு உட்பட்டவையே. அதற்காகத் தவறு செய்யும் மனிதன் சந்தர்ப்பவசத்தால் மதத்தைப் பிரதிநிதிப்படுத்தும் ஒருவராக இருந்து விட்டால் அது அந்த மதத்தின் குற்றமல்ல.


    மதங்களின் பெயரைச் சொல்லி ஏமாற்றும் பேர்வழிகள் செய்வது சரி எனபதல்ல நமது நிலைப்பாடு. அத்தகைய சிலரை வைத்துக் கொண்டு இறை நம்பிக்கை கொண்டவர்களை அதுவும் குறிப்பாக ஒரு மதத்தைத் தாக்கிப் பலரின் மனங்களை புண்ணாக்குவது ஒரு மனிதாபிமானமான செயலாக இருக்காது.


    உதாரணத்திற்கு மிகவும் நெருங்கிய நண்பர்கள் இருவர்கள் இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அவர்களில் ஒருவர் மணமானவர், மற்றொருவர் மணமாகாதவர் என்றும் வைத்துக் கொள்வோம். மணமாகாத நண்பன், மணமாகிய நண்பனின் மனைவியுடன் தகாத உறவினை வைத்துக் கொண்டால் அது அந்த தனிப்பட்ட மனிதனின் நயவஞ்சகத்தனம் என்று சொல்லுவோமா? அல்லது நட்பு என்பதே வேஷம், உலகில் நட்பு என்று ஒன்றே இல்லை என்று வாதிடுவோமா?


    அதேபோலத்தான் தம்மை ஆன்மீகவாதிகள் என்று கூறிக் கொள்பவர்கள் சிலர் இழைக்கும் தவறுகள் ஆன்மீகத்தின் தவறாகாது, அந்த ஆன்மீகத்தைச் சரிவரப் புரிந்து கொள்ளாமல் தனது மனதின் பலவீனங்களை மறைத்துக் கொள்ளும் திரையாக அதனைப் பயன்படுத்திக் கொள்ளும் ஒரு தனிப்பட்ட மனிதனின் தவறேயாகும்.


    இந்த உலகில் விளக்க முடியாத பல நிகழ்வுகள் நிகழ்கின்றன. பலருடைய வாழ்வில் ஏன் ஒரு நிகழ்வு அந்த நேரத்தில் தமக்கு நிகழ வேண்டும் என்று புரியாமல் அல்லாடும் பல கணங்கள் உண்டு. படகில் துடுப்பைத் தவற விட்டுத் தவிக்கும் படகோட்டியின் கையில் மிதந்து செல்லும் ஒரு மரக்கட்டை அகப்பட்டால் அதைக் கைப்பற்றி தன்னைக் கரை சேர்க்க அவன் முயற்சிப்பதைப் போல, தமக்கு ஏற்பட்ட துயர நிகழ்வை விளங்கிக் கொள்ள முடியாமல் தத்தளிக்கும் ஒருவனுக்கு ஆன்மீகம் கைகொடுக்கும் போது அவன் அதைத் தன்னைக் கரை சேர்க்கும் துடுப்பாக உபயோகிப்பது எப்படித் தவறாக முடியும் ?


    சிந்திக்கும் சுதந்திரம் ஒவ்வொரு மனிதனுக்கும் உண்டு. தன் சிந்தையில் விளைந்த உணர்வுகளின் அடிப்படையில் அவன் தனது நம்பிக்கைகளை வளர்த்துக் கொள்கிறான். அவன் தன் மனதில் வரித்துக் கொண்ட நம்பிக்கைகள் வேறு சிலரின் பார்வையில் மூடக்கொள்கைகளாகத் தோற்றமளிக்கலாம்.


    அந்த நம்பிக்கைகளினினால் ஏனைய மனிதர்களுக்கோ, சமூகத்திற்கோ தீங்கு விளைவிக்காமலும், அடுத்தவரின் மனதைப் புண்படுத்தும் வகையில் நடக்காமலும் இருக்கும் வரையிலும் அவனது நம்பிக்கைகளைச் சிதைக்கும் வகையில் அவற்றை இகழ்வது ஒரு சரியான செயலல்ல.


    இதுதான் வாழ்க்கை, இப்படித்தான் வாழ வேண்டும் என்று வாழ்க்கைக்கு சட்டமூலமான விதிகள் கிடையாது. அதற்காக எல்லோரும் எப்படியும் வாழலாம் என்னும் வகையில் வாழ்ந்தால் மிருகங்களுடைய வாழ்விற்கும், மனிதர்களுடைய வாழ்விற்கும் என வித்தியாசம்.


    மனிதன் கட்டுப்பாடின்றி வாழ்வதைத் தடுக்கும் வகையில் அவனது செய்கைகளுக்கு ஒரு வரம்பு போடுவதற்காக மதங்களின் வழி சில நற்சிந்தனைகள் போதிக்கப்பட்டன. இவற்றில் எந்த மதத்தின் சிந்தனைகள் சிறந்தவை என்பதல்ல முக்கியம். அனைத்து மதங்களுமே மனிதர்களின் மேம்பட்ட வாழ்க்கை முறைக்குத்தான் வழிவகுத்தன என்பதுவே உண்மை.


    மதங்களின் பெயரால் மக்களை இழிவுபடுத்தும் முறையில் பிரித்துக்காட்டும் செய்கை ஆண்டவன் மனிதனுக்கு அளித்த விதிமுறை அல்ல. மதத்தின் பெயரால் தமது ஆதிக்கத்தை நிலைநிறுத்துவதற்காக சுயநலமிக்கோரால் மதத்தின் பெயர் துஷ்பிரயோகம் செய்யப்பட்டது என்பதுவே உண்மை.


    அப்படிப்பட்ட சில சுயநலவாதிகளின் கட்டுப்பட்டிற்குள் சில மதமும் விழுந்திருக்கிறது என்பதற்காக  அம்மதம் சார்ந்த வழிபாட்டையோ, அம்மதத்தினர் வழிபடும் தெய்வங்களையோ இழித்தும், பழித்தும் பேசுவது ஒரு நாகரீகமான செயலாகாது.


    வெங்காயத்தை உரித்துக் கொண்டே போனால் இறுதியில் ஒன்றுமே இருக்காது ஆனால் மனிதாபிமானத்தின் தோலை உரித்துக் கொண்டே போனால் அதன் ஆணிவேராக ஆன்மீக சிந்தனைகள் ஆழப்பதிந்திருப்பதைக் காணலாம்.


    குழந்தையிடம் பேசும் போது அது தொடர்ந்து வினாக்களை நம்மிடம் வீசுவதைப் போல பண்பு, மனிதாபிமானம், மானுடநேசம் என்பவற்றைப் பற்றி அடுக்கடுக்காய் வினாக்களைத் தொடுத்துப் பாருங்கள், அது எங்கே எம்மை அழைத்துச் செல்கிறது என்பதைக் கண்டு வியந்து போவோம்.


    ஏன் செய்கிறோம், எதற்குச் செய்கிறோம் என்று தெரியாமல் சில விடயங்களை, சிலநேரங்கள் நம்மில் பலர் செய்திருக்கிறோம். அவற்றிற்கான விளக்கங்கள் நமது மனங்களுக்கு கிடைப்பது அவசியம். அதைப் பெறுவதற்கு ஆன்மீகத்தின் துணை அவசியமாகிறது.


    இறை நம்பிக்கை நிறைந்த மனம் தெரிந்து செய்த தப்பிற்கும், தெரியாமல் செய்த தவறிற்கும் நிச்சயமாக வருந்தத்தான் செய்கிறது. ஏனெனில் மனமென்னும் தராசிலே செய்கைகள் ஒரு தட்டிலும் இறை நம்பிக்கையின் அடிப்படையில் வளர்ந்த சமூகநீதிகள் இன்னொரு தட்டிலும் இருப்பதினாலேயே.


    "விதி என்று ஏதுமில்லை, வேதங்கள் வாழ்க்கையில்லை" என்பது வாதத்திற்கு மிகவும் உகந்ததாகத் தெரியலாம். ஆனால் அதன் உள்ளர்த்தத்தை நன்கு துல்லியமாக ஆராய்ந்தால், சோம்பேறித்தனத்தை மூட்டையாகக் கட்டி அதற்கு விதி என்று பெயரிட்டு விடக்கூடது என்பதையும், வேதம் என்னும் பெயரால் அடுத்தவர்களின் மனங்களைப் புண்படுத்தும் வகையில் நடந்துக் கொள்ளக் கூடாது என்பதையுமே அது குறிக்கிறது என்பதை நன்கு உணரலாம்.


    இதற்கு எதிர்வாதமாக நமக்கு எது நடந்தாலும் அதை ஏற்றுக் கொள்வதை விட்டு அது ஏன் நடக்கிறது என்னும் ஆராய்ச்சி எதற்கு என்னும் கேள்வி நமக்குள் வரலாம். அப்போது அதை ஆக்கப்பூர்வமாக மாற்ற முயற்சி செய்ய வேண்டும்.


    மிகவும் எளிதாக நடப்பது அனைத்தையும் ஏற்றுக் கொண்டு விடு என்று கூறிவிடலாம் ஆனால் யதார்த்த வாழ்க்கையில் மனம் நிச்சயமாக நாம் எதிர்பார்க்காத எதிர்மறை நிகழ்வு ஒன்று நிகழும் போது "ஏன் இது எனக்கு?" என்று மனம் ஆராய்ச்சியில் இறங்குவது தவிர்க்க முடியாத ஒன்று என்பதை அனுபவத்தில் நம்மில் பலர் உணர்ந்திருப்போம்.


    "விடையில்லா வினாக்களை விளங்கிக் கொள்ள, மனம் கொஞ்சம் அமைதியடைய ஆன்மீகம், இறைநம்பிக்கை என்பன துணை வருகின்றன" என்பது ஒரு நிதர்சனமான உண்மை.


    மனிதன் புரியும் தவறுகளுக்கு அவன் சார்ந்த மதத்தினை குற்றம் சொல்வதைத் தவிர்த்திடுவோம். மதங்களின் உருவாக்கம் மனிதனின் நல்வழிக்கேயன்றி அவனது மூடவழக்கங்களுக்காக அல்ல என்பதை நம் மனங்களில் ஆழப்பதித்துக் கொள்ளுவோம்.

    0 comments:

    Post a Comment