Saturday, 7 December 2013

Tagged Under: , , , ,

நிமிடங்களில் மாற்றம் !

By: ram On: 18:05
  • Share The Gag

  • ஏழு நிமிடங்களில் நம் வாழ்க்கையில் மாற்றங்களைக் கொண்டுவர முடியுமா? முடியும் என்கிறார் 'தி 7 மினிட் சொல்யூஷன்’ என்கிற இந்தப் புத்தகத்தை எழுதிய ஆசிரியர் அலிசன் லூயிஸ். ஏழு நிமிடங்களில் மாற்றம் என்பது இரண்டு அடிப்படை நம்பிக்கைகளை மனதில் கொண்டு சொல்லப்படுவது என்கிறார் அவர். முதலாவது, நீங்கள் மாற வேண்டும் என்று நினைத்த நேரத்திலேயே மாறுதல் வந்துவிடுகிறது. இரண்டாவது, மாற வேண்டும் என்று நினைத்த நிமிடத்தில் இருந்து அன்றாடம் சிறுசிறு அடிகளாக முன்னேற்றத்தை நோக்கிய பாதையில் பயணிக்க ஆரம்பித்துவிடுவீர்கள். ஆக, மாற வேண்டும் என்கிற எண்ணம்தான் மாற்றத்துக்கான வித்து. 


    அதெப்படி மாறவேண்டும் என்று நினைத்தவுடன் மாறிவிட முடியுமா? என்று கேட்கிறவர்களுக்கு மனித இதயத்தைப் பற்றி சொல்ல ஆரம்பிக்கிறார் ஆசிரியர். இதயம் எவ்வாறு வடிவமைக்கப்பட்டுள்ளது? நம் உடலுக்குத் தேவையான ரத்தத்தைத் தேவையான அளவில் சீராக பம்ப் செய்யவே வடிவமைக்கப்பட்டுள்ளது.


    ஆனால், உடலின் தேவையோ ஒவ்வொரு நேரத்திலும் ஒவ்வொரு மாதிரியாக இருக்கிறது. படுத்துறங்கும்போது குறைந்தபட்ச தேவையும், உடற்பயிற்சி செய்யும்போது அதிகபட்ச தேவையும் உண்டாகிறது. இதயமோ தேவைக்கேற்ப மாறுபட்டு செயல்படுவதில் சளைப்பதே இல்லை. அதுமாதிரி நீங்கள் என்ன கேட்கிறீர்களோ, அதைத் தரும் குணத்தைக் கொண்டுள்ளது வாழ்க்கை. திருப்தியான வாழ்க்கையைக் கேட்டுப் பாருங்கள். அது உங்களுக்கு  நிச்சயம் கிடைக்கும். 


    ஒவ்வொரு நாளும் ஏழு நிமிடங்களுக்கு உங்கள் வாழ்க்கையின் நிகழ்வுகளை கொஞ்சம் சீரியஸாக உற்றுநோக்குங்கள். உங்கள் வாழ்க்கையில் மாற்றங்கள் தெரிய ஆரம்பிக்கும் என்கிறார் ஆசிரியர்.


    ஏன் ஏழு நிமிடம்? ஏழு நிமிடத்துக்குமேல் மனிதனின் முழுக்கவனம் ஒன்றின்மேல் ஈடுபாட்டுடன் இருப்பதில்லை என்கிறது உளவியல் ஆய்வுகள்.  இதயம் சரியாக செயல்பட ஆக்ஸிஜன் தேவைப்படுகிற மாதிரி நம் வாழ்க்கை சிறக்க இந்த ஏழு நிமிட தீர்வுகள் உதவும். இந்தத் தீர்வில் ஆசிரியர் நம்மை நாமே அன்றாடம் கேட்டுக்கொள்ளச் சொல்வது ஏழே ஏழு கேள்விகளைத்தான். அந்தக் கேள்விகளை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.


    உங்கள் வாழ்வை அறிவீர்களா?


    உலகத்தில் இருக்கும் பிரச்னைகளுடனான இரைச்சல்களில் நம் மூளை எது முக்கியம் என்பதை உணரத் தவறுகிறது. பெருநகரங்களில் அலுவலகத்துக்குச் செல்வதே பெரிய வேலையாகிறது, அலுவலகத்தில் செய்யும் வேலையைவிட! நிஜமான கேள்வியே உங்களுக்கு உங்கள் வாழ்க்கை என்ன தரவேண்டும் என்று நீங்கள் கேட்கிறீர்களோ, அதைத் தர வாழ்க்கை தயாராக இருக்கிறது. உங்கள் தேவை  என்ன? அதை எழுதி வைத்துக்கொள்ளுங்கள் என்கிறார் ஆசிரியர்.


    முன்னேற வேண்டும் என்ற எண்ணத்துடன் இருக்கிறீர்களா?


    நீங்கள் உங்கள் வாழ்க்கையிடம் அதிகமாக திட்டவட்டமாக இது வேண்டும் என்று கேட்கும்போது, நாம் இதற்கு தகுதியானவராக இருக்கிறோமா அல்லது நம்மை இந்தத் தகுதிக்கு உயர்த்திக்கொள்ளும் செயல்களைச் செய்கிறோமா என்கிற கேள்வி உங்களுக்கே தோன்றிவிடும் என்கிறார்
    ஆசிரியர்.

    அடுத்த 90 நாட்களில் இதைச் செய்து முடிக்கவேண்டும் என்ற தீர்மானமான முடிவை எடுத்து செயலாக்க முயன்றீர்கள் என்றால், உங்களினுள் பிறக்கும் உத்வேகத்துக்கு அளவேயிருக்காது என்கிறார் அவர்.


    நீங்கள் வளர்கிறீர்களா?


    நம் மூளைக்கு அபரிமிதமான சக்தி இருந்தபோதிலும், ஒரேயரு பிரச்னை அதில் இருக்கிறது. உபயோகியுங்கள் அல்லது இழந்துவிடுங்கள் என்ற நிலையில்தான் மூளையின் பவர் அனைவருக்கும் இருக்கிறது. தொடர்ந்து பயன்படுத்தாதபட்சத்தில் மூளை தன் சக்தியை இழக்கிறது என்கிறார் ஆசிரியர். வளர்ந்துகொண்டே கற்றுக்கொள்வது மிக மிக முக்கியமானது என்று இங்கே ஆசிரியர் குறிப்பிடுகிறார்.


    நீங்கள் ஈடுபாட்டுடன் இருக்கிறீர்களா?


    எப்போது பார்த்தாலும் பிஸியாக இருக்கும் நீங்கள் ஈடுபாடில்லாமல் பிஸியாக மட்டும் இருந்தீர்கள் என்றால் வாழ்க்கை உங்களுக்கு சுலபத்தில் போரடிக்க ஆரம்பித்துவிடும். மிகவும் பிடித்த மற்றும் ஈடுபாடுடைய விஷயங்களைப் பட்டியலிட்டு அதைத் தொடர்ந்து செய்யும்போது மட்டுமே புதிய முன்னேற்றத்துக்கான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும் என்கிறார் ஆசிரியர்.


    நீங்கள் விடாமுயற்சியுடன் கொண்ட ஊக்கம் மிகுந்தவரா?


    வாழ்க்கையில் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு மாறுதலைக் கொண்டுவர நினைப்பவர்களுக்கு விடாமுயற்சி என்பது மிக மிக அதிகமாக வேண்டியிருக்கும். ஏனென்றால், கெட்ட பழக்கங்களை (இணையத்தில் மூழ்கியிருப்பது) விட்டொழிப்பதற்கு விடாமுயற்சி மிக மிக அவசியம். சௌகரியமான தினசரி வாழ்க்கையிலிருந்து வெளியே வருவதற்கும் விடாமுயற்சி அதிகமாக இருக்க வேண்டும். இவற்றைவிட்டு வெளியே வந்தால்தான் வளர்ச்சி என்ற ஒப்பற்ற விஷயத்தை நாம் அனுபவிக்க முடியும் என்கிறார் அவர்.


    நீங்கள் நம்பிக்கையுடன் வாழ்கிறீர்களா?


    மனித மூச்சைப்போல நம்பிக்கையும் மிக மிக முக்கியமான ஒன்று. நம்பிக்கைதான் உங்களை இன்றைய நிலையிலிருந்து முன்னேற்ற நிலைக்கு கொண்டு செல்வது. நம்மாலும் மாற முடியும் என்ற நினைப்பைத் தருவது. நம்பிக்கையில்லாத வாழ்க்கை ஓர் அவநம்பிக்கை நிறைந்ததாக இருக்கும், எந்த ஒரு மூடநம்பிக்கையிலும் (பில்லி, சூனியம், சாமியார் என) நம்பிக்கைகொண்டதாக மாறிவிடவும் கூடும்.


    இந்த ஏழு நிமிட முறையினை எப்படி கடைப்பிடிப்பது என்று புத்தகம் முழுவதுமே விவரித்து இருக்கிறார்.

    ''உங்கள் கனவுகளை பேப்பரில் கொண்டு வாருங்கள். எழுதாத கனவுதனை சாதிப்பது என்பது சாத்தியமில்லை. உங்களை ஊக்கப்படுத்தும் ஒரு நபரிடமாவது அன்றாடம் உரையாடுங்கள். நீங்கள் சரியென்று நினைக்கும் விஷயங்களைத் தவறென்று சொல்லும் புத்தகங்களைப் படியுங்கள். உங்கள் நண்பர் ஒருவரையும் அந்தப் புத்தகத்தைப் படிக்கச் சொல்லுங்கள். இருவரும் அந்தப் புத்தகத்தைப் பற்றி உரையாடுங்கள். ஒவ்வொரு நாளையும் ஒரு பாசிட்டிவ் சபதத்துடன் ஆரம்பியுங்கள். உங்கள் சபதத்தை உறக்கச் சொல்லுங்கள். அது உங்கள் மனதில் வலுசேர்க்கும்.


    கஷ்டம் வரும்போது நீங்கள் எதையெல்லாம் நினைத்துப் பெருமைப்படவேண்டும், எதற்கெல்லாம் நன்றியுணர்வுடன் இருக்கவேண்டும் என்ற ஒரு லிஸ்ட்டைப் போடுங்கள். அவை உங்கள் மனதின் போக்கை மாற்றிவிடும். உங்களுடைய தனித்திறமை ஒன்றை கண்டுபிடியுங்கள். அதை வளர்ப்பதற்கு தினம்தினம் முயற்சிகளை இடைவிடாது செய்யுங்கள். எல்லாவற்றுக்கும் மேலாக இறைவனை நம்புங்கள். எனக்கு எல்லாம் தெரியும் என்று நினைத்து செயல்படாதீர்கள்'' என்று சொல்கிறார் ஆசிரியர்.


    புத்தகத்தின் கருத்துகளும், அவை சொல்லப்பட்ட விதமும் தன்னை மாற்றவேண்டும் என்ற உத்வேகம் கொண்ட வர்கள் படித்தேயாகவேண்டும் என்று பறைசாற்றுபவையாக இருக்கின்றன. அனைவரும் ஒருமுறையாவது கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம் இது என்பதில் சந்தேகமே இல்லை!

    0 comments:

    Post a Comment