Tuesday, 24 December 2013

Tagged Under: , , , , ,

இரண்டாவது குழந்தையால் அப்செட்டாகும் முதல் குழந்தை!

By: ram On: 00:04
  • Share The Gag



  • முதல் குழந்தை பிறந்ததும், தாய், தந்தை இருவருக்குமே முதன் முதலில் பெற்றோரான மகிழ்ச்சி ஏற்படுகிறது. அதனால், இருவருமே அன்பு முழுவதையும் பொழிந்து முதல் குழந்தையை வளர்க்கின்றனர்.

    இதற்கிடையில் இரண்டாம் முறை கருவுற்றால் நீங்கள் சீக்கிரமே தளர்வடைந்து போவீர்கள். ஏனெனில், நீங்கள் இந்த சமயத்தில் இரண்டு வேலைகளைப் பார்க்க நேரிடும். ஒன்று உங்கள் உடல் நலத்தை பார்த்துக் கொள்ளுவது இரண்டாவதாக உங்கள் முதல் குழந்தை கவனித்து கொள்ளுவது. அதிலும் உங்கள் முதல் குழந்தையின் உணர்ச்சிகளை புரிந்து கொண்டு அவர்களின் ஆசைகளை நிறைவேற்ற வேண்டும். பின்னர் பிரசவம் முடிந்த 6 முதல் 8 வாரங்களுக்கு இன்னும் கடினமாக இருக்கும். காரணம் அச்சமயம் உங்கள் கைக் குழந்தையையும் கவனிக்க வேண்டி இருக்கும்.

    இப்படி இரண்டாவது குழந்தை பிறந்ததும் முதல் குழந்தையின் அன்புதான் பகிர்ந்தளிக்கப்படுகிறது. இதனால் பெற்றோரின் அன்பை முழுமையாக அனுபவித்த முதல் குழந்தைக்கு,இப்போது ஏமாற்றம் ஏற்பட்டு அது ஏக்கமாக மாறுகிறது. அத்துடன் பெற்றோரைப் போன்றே உறவினர்களின் அன்பும் பகிர்ந்தளிக்கப்படுகிறது. எனவே, இந்த பகிர்தல் தெரியாத வண்ணம் குழந்தையிடம் பாரபட்சம் காட்டாமல் வளர்க்க வேண்டும். அதற்கான வழிமுறைகளில் சில இதோ..

    # முதல் குழந்தைக்கு அன்பு முழுவதையும் பொழிந்துவிட்டு இரண்டாவது குழந்தை வந்ததும் அதனை அதிகமாகப் பராமரிக்க ஆரம்பிக்கின்றனர். சிறு குழந்தை என்பதால், இரண்டாவது குழந்தையைக் கொஞ்சுகின்றனர். இதில், ஆண், பெண் வித்தியாசமில்லை. பெரிய குழந்தையின் ஏக்கம் இரண்டாவது குழந்தையின் மேல் கோபமாக மாறுகிறது. இதை தவிர்ப்பதற்கு இரண்டாவது குழந்தை வயிற்றில் இருக்கும்போதே, “நீ தனியா விளையாடுகிறாய்; பாப்பா வந்ததும் உன்னுடன் சேர்ந்து விளையாடும். நீ தான் பாப்பாவுக்கு எல்லாம் சொல்லித் தர வேண்டும்” என்று சொல்லி சொல்லி, முதல் குழந்தையிடம் இரண்டாவது குழந்தையைப் பற்றிய ஆசையை வளர்க்க வேண்டும்.

    # உறவினர்கள் ஒரு குழந்தையிடம் அன்பை காட்டிச் சென்ற பின், தாயோ அல்லது தந்தையோ மற்றொரு குழந்தையிடம் அரவணைப்பைக் காட்டி “உன் சகோதரன் (சகோதரி) தானே, நீ விட்டுக் கொடுக்க வேண்டும்” என்பதை, நம் அன்பில் சிறிதும் குறையாமல் புரிய வைக்க வேண்டும்.

    # கொஞ்சம் வளர்ந்த பின், சிறுவர் சிறுமியாயிருக்கும் போது பள்ளிக்கோ அல்லது பக்கத்திலிருக்கும் உறவினர் வீட்டுக்கோ அனுப்பும் போது, சிறு குழந்தையைப் பாதுகாக்கும் பொறுப்பை பெரிய குழந்தையிடம் ஒப்படைக்க வேண்டும். அப்போதுதான், பெரிய குழந்தைக்கு சிறு குழந்தையின் மீது, பொறுப்புடன் கூடிய அன்பு வளரும். மேலும், அன்பு, உணவு என அனைத்தையுமே இரு குழந்தைகளுக்கும் சமமாகக் கொடுக்க வேண்டும்.

    # ஒரு குழந்தை படிப்பிலோ, விளையாட்டிலோ திறமையாக இருக்கலாம். குணத்திலோ மற்றவருடன் பழகும் விதத்திலோ சிறப்பாக இருக்கலாம். ஆதலால், எக்காரணத்தைக் கொண்டும், ஒரு குழந்தையை மற்ற குழந்தையோடு ஒப்பிட்டுப் பேசக் கூடாது. தாழ்வு மனப்பான்மை உண்டாகாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். எந்த விதத்திலும் தன் ஆதிக்கத்தை மற்றொன்றின் மேல் செலுத்தாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். இவையெல்லாம் அமைந்தால், சகோதர, சகோதரி பாசம் என்பது ஆயுள் வரை அன்புடம் நீடிக்கும்.

    0 comments:

    Post a Comment