Sunday, 17 November 2013

Tagged Under: , ,

பேசும் கலை - ஜெயிக்கலாம் வாங்க...!

By: ram On: 09:03
  • Share The Gag
  • வாயுள்ள பிள்ளை பிழைக்கும்.. இது அடிக்கடி என்னுடைய பாட்டி எனக்குச் சொல்லிக்கொடுத்த மந்திர வார்த்தை..

    நம் உள்ளத்தில் தோன்றும் எண்ணங்களை, நம் எதிரில் இருப்பவர்கள் தெளிவாக புரிந்தகொள்ளும்பொருட்டு வார்த்தைகளாக வெளிப்படுத்துவது என்பது ஒரு கலை. வாயிலிருந்து வெளிப்படும் வார்த்தைகளாக தெளிவாக இருக்குமானால், எதிரில் இருப்பவர்கள் நம்முடைய எண்ணங்களைப் புரிந்துகொள்வார்கள்.

    அதுமட்டுமா? நம்முடைய எண்ணங்களை தெளிவான வார்த்தைகளில் கூறுவதன் மூலம் கேட்பவர் மனதிலும் அந்த வார்த்தைகள் அப்படியே பதிந்துவிடும். அந்த வார்த்தைகளை சொல்லக்கூடிய தருணம், முகபாவம் ஆகியவை முக்கியம்.

    நம்மைவிட பெரியவர்களிடத்தில் எப்படி பேச வேண்டும். சக தோழர்களிடம் எப்படி பேச வேண்டும். சபையோர்களிடத்தில் எப்படி பேச வேண்டும் என ஒரு வரைமுறையே, வரையறையே இருக்கிறது.

    பொதுவாக நம்முடைய கருத்தை ஒருவரிடத்தில் சொல்லும்போது தெளிவாக, புன்முறுவல் கலந்து, இயல்பான முகபாவனையுடன் சொல்வோமானால் நிச்சயம் அந்த கருத்தை அவர் ஏற்றுக்கொள்வார் என்பதில் சந்தேகமே இல்லை.

    ஏளனத்துடன், கேலியும் கிண்டலும் கலந்து நீங்கள் உண்மையையே பேசினால் கூட அதை நம்ப மறுப்பார்கள். இந்த முறையாலும் நீங்கள் மற்றவர்களைக் கவர முடியாது என்பதோடு மட்டுமல்லாமல், எதிரில் இருப்பவர் தன்னை அவமானப் படுத்திவிட்டதாக எண்ணிவிடும் அபாயமும் உண்டு.

    கடுகடு முகத்துடன், சிடு சிடு வெனப் பேசி, ஒரு கருத்தைச் மற்றவர்களிடம் சேர்க்க நினைக்கும்போது, அந்த கருத்தால் எதிரில் இருப்பவர் மனம் பாதிப்பதோடு, சொல்லுகிற கருத்தையும் ஏற்றுக்கொள்கிற மனநிலையை நாம் இழக்க வைத்துவிடுகிறோம். இதனால் மேலும் பிரச்னைகள் கூடுமே தவிர, குறையவே குறையாது. இவ்வாறு பேசுவதால் உங்களுடைய கருத்துகளையும் பிறர் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்பது மட்டுமல்ல.. உங்களுடைய கருத்திற்கு மதிப்பும் இருக்காது.

    எனவே எளிமையாக, இனிமையாக, இயல்பாக மனதில் மகிழ்ச்சி பொங்க சொல்ல வந்த கருத்தை தெளிவாக கூறுங்கள்.

    அவ்வாறு தெளிவாக வார்த்தைகளை உச்சரித்து பேசுவதால், கேட்பவர்களின்  மனதில் உங்களுடைய கருத்து ஆழ பதியும்.  இதற்கு எடுத்துக்காட்டாக நமது ஆன்மீக சொற்பொழிவாளர் திரு. சுகி சிவம் ஐயா அவர்களைக் கூறலாம். மேடையில் அவர் பேசும்போது உச்சரிக்கும் விதம், வெளிவரும் சொற்களில் ஓசைநயம், அழுத்தம் ஆகியற்றை உன்னிப்பாக கவனித்தால் இக்கலை உங்களுக்கும் கைகூடும்.

    உரையாடல் தெளிவாக அமைந்துவிட்டால், அதன் மூலம் நாம் சொல்லக்கூடிய கருத்துகள் மற்றவர்களை அடைவதோடு மட்டுமல்லமால், நல்லதொரு நட்பையும் நாம் பெற்றுக்கொள்ள முடியும்.

    வாயுள்ள பிள்ளை பிழைக்கும் என என் பாட்டி சொன்னதிற்கான சரியான அர்த்தம் இப்போதுதான் எனக்கு புரிபட ஆரம்பித்திருக்கிறது? ஆரம்ப கால  பள்ளி நாட்களில் "வாயுள்ள பிள்ளைப் பிழைக்கும் என்று சொல்கிறீர்களே... அது என்ன வாயு பாட்டி" என்று என் பாட்டியிடம் திருப்பிக் கேட்டிருக்கிறேன்.

    "சுவாசத்திற்கு தேவையான வாயு ஆக்சிஜனா என்றெல்லாம் கேட்டு கேலியும் கிண்டலும் செய்திருக்கிறேன்." தற்போதுதான் அவர்கள் சொன்ன ஒவ்வொரு வார்த்தைகளுக்கும் ஒவ்வொரு அர்த்தம் இருக்கிறது என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.

    வாயுள்ள பிள்ளை - நன்றாக பேசி, தெளிவான வார்த்தைகளை வெளிப்படுத்தி பிறர்மனதில் பதியவைப்பது என்பது தான்  இதனுடைய சரியான அர்த்தம் என்பது இப்போதுதான் என்னால் உணர முடிகிறது. புரிந்துகொள்ள முடிகிறது.

    உங்களுடைய எண்ணங்களை எதிரில் இருப்பவரிடம் தெளிவான வார்த்தைகளால் வெளிப்படுத்தி, தான் சொல்ல வந்ததை சரியாக எடுத்துச்சொல்லி,  கருத்தைப் பதிந்தாலே போதும். நீங்களும் ஒரு வெற்றியாளர்தான். இதுதான் பேசும் கலை.. இதுவே ஜெயிக்கும் கலை..!

    அலுவலகம் ஆனாலும் சரி, பொது இடமானாலும் சரி, வியாபாரத் தொடர்பான உரையாடல் ஆனாலும் சரி.. வேறு தொடர்பு உரையாடல்களானாலும் சரி...

    இவ்வாறு தெளிவாக பேசக்கூடியவர்கள் என்றும் வெற்றிபெற்றவர்களாகவே, வெற்றியை எப்போதும் தன்னுடன் வைத்துக்கொண்டிருப்பவர்களாகவே வலம் வருகிறார்கள்.. உங்கள் கருத்துகளை சொல்வதில் நீங்கள் எப்படி ? நீங்களும் வாயுள்ள பிள்ளைதானே...

    0 comments:

    Post a Comment