Tuesday, 5 November 2013

Tagged Under: ,

உலக செஸ் சாம்பியன் போட்டி: தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஜெயலலிதா!

By: ram On: 08:37
  • Share The Gag


  • இந்திய வீரர் விஸ்வநாதன் ஆனந்த் மற்றும் நார்வே வீரர் கார்ல்ஸென் ஆகியோர் இடையிலான உலக செஸ் சாம்பியன் போட்டி சென்னையில் வரும் 9-ம் தேதி தொடங்குகிறது.


    முன்னதாக, செஸ் சாம்பியன் போட்டியை முதல்வர் ஜெயலலிதா வரும் 7 ஆம் தேதி தொடங்கி வைக்கிறார். போட்டி தொடக்க விழா சென்னை ஜவாஹர்லால் நேரு உள்விளையாட்டரங்கில் மாலை 4 மணியளவில் தொடங்குகிறது. இந்த தொடக்க விழாவை ஒட்டி, கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.


    உலக செஸ் சாம்பியன் போட்டி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ஐந்து நட்சத்திர தனியார் ஹோட்டலான ஹயாத் ரெஜன்சியில் நடைபெறுகிறது. இதற்கென ஹோட்டலில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தனி அறையில் அவர்கள் இருவரும் விளையாடுவதை கண்ணாடித் தடுப்புகளின் வழியாக பார்ப்பதற்கென ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.


    சுமார் 400 பேர் வரை போட்டியை பார்க்கலாம் எனக் கூறப்படுகிறது. வரும் 28ஆம் தேதி வரை நடைபெறும் இந்தப் போட்டி 12 சுற்றுகள் கொண்டதாக இருக்கும்.


    மிகவும் இளம் வயதுக்காரர்: நார்வே நாட்டின் செஸ் வீரர் கார்ல்ஸெனின் வயது 22. அவர் தன்னை விட 21 வயது அதிகமுள்ள ஆனந்தை எதிர்த்து விளையாடுகிறார். இந்தப் போட்டியில் பங்கேற்பதற்காக கார்ல்ஸென், திங்கள்கிழமை மாலை சென்னை வந்தார். அவருக்கு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.


    போட்டிக்கான பரிசுத் தொகையாக ரூ.14 கோடி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டியை நடத்துவதற்காக தமிழக அரசு ரூ.29 கோடியை வழங்கியுள்ளது. போட்டியில் பங்கேற்பதற்காக விஸ்வநாதன் ஆனந்த், தனது குடும்பத்தினருடன் கடந்த வெள்ளிக்கிழமை முதலே சென்னையில் முகாமிட்டுள்ளார். இந்தப் போட்டி சென்னை ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    0 comments:

    Post a Comment