Wednesday, 5 November 2014

Tagged Under:

புராதன சின்னமாகிறது திருமால்கோனேரி மலை! ஒரே இடத்தில் கிமு, கிபி ஓவியங்கள்!

By: ram On: 01:03
  • Share The Gag

  •  சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருமால்கோனேரி மலை புராதன சின்னமாக தொல்லியல் துறையால் விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது. மதுரையை சுற்றியுள்ள மலைகளில் பாரம்பரிய சின்னங்கள், கல்வெட்டுக்கள், சமணர்களின் வாழ்வு நிலை, ஓவியங்கள் என ஏராளமான பொக்கிஷங்கள் உள்ளன. இம்மலைகளை கண்டறிந்து தொல்லியல் துறை புராதன சின்னங்களாக அறிவித்து பாதுகாத்து வருகிறது. அந்த வரிசையில், சிவகங்கை மாவட்டம் திருமால்கோனேரி மலை தொல்லியல் துறையால் விரைவில் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட உள்ளது.

    இந்த மலையில் 5ம் நூற்றாண்டில் வரையப்பட்ட ஓவியங்கள், தமிழீ எழுத்துக்கள் (அப்போதைய தமிழ் எழுத்து வடிவம்), 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சமணர்களின் மந்திரமாக இருந்த ஸ்வஸ்திக் சின்னம், சமணர் படுக்கைகள், விளக்குத்தூண் என பல்வேறு வரலாற்றுச் சான்றுகள் உள்ளன. தமிழீ எழுத்துகளில் சமண படுக்கைகளை செய்து கொடுத்தவரின் பெயர் ‘எரு காட்டுஊர் கோன் கொன்றி பாளிய்’ என எழுதப்பட்டுள்ளதை காணமுடிகிறது.விநாயகர், மீனாட்சி சுந்தரேஸ்வரர் மகிழ்ச்சி நிலையில் கைகோர்த்து ஒரு காலை மடித்து உட்கார்ந்திருக்கும் சிற்பம் குடவரை சிற்பமாக காண கிடைக்கிறது.

    இம்மலை தொல்லியல் துறையால் ஆய்வு செய்யப்பட்டு பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட தகுதியுள்ளது என மதுரை மண்டல அலுவலகத்தால் அங்கீகரிக்கப்பட்டு தமிழக அரசிற்கு ஒப்புதல் அனுப்பப்பட்டுள்ளது. தொல்லியல் துறை மண்டல உதவி இயக்குனர் கணேசன் கூறியதாவது:
    தமிழகத்தில் இதுவரை கண்டறியப்பட்டுள்ள பாரம்பரிய சின்னங்களிலேயே சிறப்பு வாய்ந்தது திருமால்கோனேரி மலை. இங்கு கி.மு.க்கு முற்பட்ட ஓவியங்களும், கி.பி.யில் வரையப்பட்ட ஓவியங்களும் ஒருங்கே அமைந்துள்ளன.

     இங்கு மட்டும்தான் சமண படுக்கையின் மேல் சமணர்களின் சின்னமான ஸ்வஸ்திக் உள்ளது. தமிழகத்தில் உள்ள சமணர் படுக்கைகளில் வேறு எங்கும் இச்சின்னம் இல்லை. பாண்டிய மற்றும் சோழ மன்னர்களின் வாணிப வழித்தடமாக இருந்ததற்கான சான்றும் உள்ளது. அந்த காலத்தில் குன்றத்தூர் என்ற பெயரில் அழைக்கப்பட்டுள்ளது.

    குடவரை கோயிலை ஒட்டி 13ம் நூற்றாண்டில் பாண்டியர் காலத்தில் கட்டப்பட்டுள்ள பாகம்பிரியாள் சமேத மலைகொழுந்தீஸ்வரர் கோயில் சுவர் முழுவதும் பழமையான தமிழ் எழுத்துக்கள், வட்டெழுத்துக்களை காணலாம். இந்த கோயில் சிவகங்கை சமஸ்தானத்தின் கீழ் வருகிறது. அதனால் மலை முழுவதையும் பாரம்பரிய சின்னமாக அறிவிக்க இயலாத நிலை உள்ளது. கோயிலை தவிர்த்து மலை, பாரம்பரிய சின்னமாக விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது. அதனை தொடர்ந்து சுற்றுலாத் துறையுடன் இணைந்து மேம்பாட்டு பணிகள் விரைவில் செய்யப்படும். இவ்வாறு தெரிவித்தார்.

    0 comments:

    Post a Comment