Friday, 29 August 2014

Tagged Under: , ,

மாவீரன் சிவாஜியின் பக்தி அடையாளம்!

By: ram On: 11:07
  • Share The Gag

  • மாவீரன் சத்ரபதி சிவாஜியின் ஆன்மிகப்பற்று, இந்து சமயத்திற்கு அவர் ஆற்றிய தொண்டு மற்றும் அவர் கட்டிய கோயில் திருப்பணிகள் எல்லாமே  மிகப்பெரியன. மஹாராஷ்டிரா மாநிலம் கொங்கண் கடற்கரையை ஒட்டிய காட்டுப்பகுதியில் சில கோயில்கள் உள்ளன. அவற்றுள் பகவதி தேவி  கோயில், கணபதிதாரி கோயில் மற்றும் சிவாஜி கட்டிய சிவராஜேஸ்வர் கோயில்கள் மிகவும் புகழ்பெற்றவை. கொங்கண் காட்டுப்பகுதியில் உள்ள  சவந்தவாடி என்ற குன்றிலிருந்து உற்பத்தியாகும் நீர், கர்லா என்ற நதி வழியாக தாமாப்பூர் ஏரிக்கு வந்து சேருகிறது.

    அந்த ஏரிக்கரையின்மேல் அமைந்துள்ள கோயிலில் பகவதி தேவி தரிசனமளிக்கிறார். அக்கோயிலைச் சுற்றி ஓடுகள் வேயப்பட்டு கேரளபாணியில் கட் டப்பட்ட மண்டபங்கள் உள்ளன. அவை இத்தலத்திற்கு புனிதயாத்திரை வரும் பக்தர்களின் வசதிக்காகக் கட்டப்பட்டவை. அங்கிருந்து சிறிது தூரம்  சென்றால் மால்வன் என்ற கோட்டைக்கு அருகில் கணபதிதாரி என்ற இடத்தில் ஒரு கிணற்றில் புனித கங்கை நீர் ஊற்றெடுக்கிறது. அதன் அருகில்  வலது பக்கத்தில் ஒரு துளசிமாடம் உள்ளது.

    மாவீரன் சிவாஜியின் ஆட்சிக்காலத்தில் நியமிக்கப்பட்ட பரம்பரை பூசாரிகள், கணபதிதாரி கிணற்றிலிருந்து ஒரு குடம் தண்ணீர் எடுத்துத் தருகிறார்கள்.  அலங்கரிக்கப்பட்ட பாய் மீது அக்குடத்தை வைத்து மலர் மாலை அணிவித்து பக்தர்கள் பூஜை செய்கின்றனர். சம்பந்தப்பட்ட மந்திரங்களை பூசாரி ஓ துகிறார். சந்தன மணம் கமழும் ஊதுவத்தி, ஆரத்தியாக காட்டப்படுகிறது. லட்டு போன்ற இனிப்பு வகைகள் அக்குடத்திற்கு நிவேதனம் செய்யப்பட்டு  பக்தர்களுக்கு பிரசாதமாக விநியோகிக்கப்படுகிறது. ஒரு பெரிய போரில் வெற்றி பெற விரும்பிய மாவீரன் சிவாஜி இங்கு வந்து கங்கா பூஜை செய்து ள்ளார். அவருடைய வேண்டுகோளை ஏற்று கங்கா தேவி அக்கிணற்றுக்குள் வந்ததாகக் கூறப்படுகிறது.

    அதன் நினைவாகவே மேற்படி பூஜை. சற்று தூரம் சென்றால், மால்வன்கோட்டைக்கு தெற்குப் பக்கத்தில் மன்னன் சிவாஜி கட்டிய சிவராஜேஸ்வர்  கோயில் உள்ளது. அக்கோயில் முழுவதும் செங்கற்களாலேயே கட்டப்பட்டுள்ளது. சிவாஜி தன் கைகளாலேயே செங்கல் எடுத்து வைத்து, கட்டு மானப்பணிகளைத் தொடங்கி வைத்திருக்கிறார்.

    கோயில் கருவறையில் காட்சி தரும் சிவராஜேஸ்வர் சிலையின் முகத்திற்கு உலோகக் கவசம் அணிவிக்கப்பட்டுள்ளது. அவர் பெரிய மீசையுடன்  கம்பீரமாக போர்வீரனைப் போல் காணப்படுகிறார். முகம் தவிர மற்ற பாகம் முழுவதும் சிவப்புத்துணியால் மறைக்கப்பட்டுள்ளது. இச்சிலையையொட்டி  சிவாஜி பயன்படுத்திய இருமுனைவாள் (தோதார்) வைக்கப்பட்டுள்ளது. கீழே அமர்ந்த நிலையில் உள்ள சிவராஜேஸ்வர் படமும் வைக்கப்பட்டுள்ளது.  இக்கோயிலை சிவாஜி கோயில் என்றும் அழைக்கின்றனர்.

    மேலும் அப்பகுதியிலுள்ள கோட்டைகள், கிணறுகள், மதகுகள், எதிரிகளிடமிருந்து தப்பிச் செல்லும் சுரங்கவழிப் பாதைகள், திசை காட்டும் உயரமான  கோபுரங்கள், மணிக்கூண்டுகள் மற்றும் சிவராஜேஸ்வர் கோயில் சுவர்கள் என்று எல்லா இடங்களிலும் சிவாஜியின் வலது கை அடையாளம்  பதிக்கப்பட்டு இன்றும் அப்படியே காணப்படுகிறது. ஒரு முகமதிய வியாபாரி தன் சரக்குகளை கப்பலின் ஏற்றிக் கொண்டு கொங்கண் கடற்கரை  நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென்று இடி மின்னலுடன் பெருமழை பெய்து பெரும் புயலும் வீசியது.

    அதனால் அந்தக் கப்பல் வழிதடுமாறி ஒரு கருப்பு மலையில் மோதிக் கொள்ள இருந்தது. அப்போது அந்த மலையிலிருந்து ஒரு ஒளி தோன்றியது.  அந்த வெளிச்சத்தில் மலைமீது ஒரு மூங்கில் கொட்டகை இருப்பது அந்த வியாபாரியின் கண்களில் பட்டது. பின்னர் இறைவன் அருளால் புயல்  அபாயம் நீங்கியது. அதனால் மகிழ்ந்த வியாபாரி இறைவனுக்கு நன்றி செலுத்த விரும்பி மூங்கிலாலேயே ஒரு சிவபெருமான் உருவத்தைச் செய்து  அந்த மூங்கில் கொட்டகையில் வைத்து வணங்கினார். இன்றும் அந்த மூங்கில் ஆலயம் இந்து-முஸ்லிம் மத நல்லிணக்கத்திற்கு ஒரு எடுத்துக்காட்டாக  விளங்கிவருகிறது.

    மும்பை வந்து விட்டால் இக்கோயில்களுக்குச் செல்ல வசதிகள் உள்ளன. காடுகள் நிறைந்த மலைப்பிரதேசமாக இருப்பதால் வழிகாட்டிகளை அழை த்துச் செல்ல வேண்டும். குறிப்பிட்ட காலங்களில் மட்டும்தான் இங்கு செல்ல முடியும்.

    0 comments:

    Post a Comment