Wednesday, 13 November 2013

Tagged Under: , , ,

பாரதிராஜா - வாழ்க்கை வரலாறு (Biography)

By: ram On: 23:09
  • Share The Gag
  • “இயக்குனர் இமயம்” எனப் புகழப்படும் பாரதிராஜா அவர்கள், தமிழ் திரைப்படத்துறையில் ஒரு புகழ்பெற்ற இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் நடிகர் ஆவார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று  மொழிகளில் திரைப்படங்கள் இயக்கியுள்ள இவர், உணர்வு நிறைந்த நாட்டுப்புறக் கதைகளைத் திரையில் கண்முன் காட்டியவர். அவரது ‘பதினாறு வயதினிலே’, ‘சிவப்பு ரோஜாக்கள்’, ‘அலைகள் ஓய்வதில்லை’, ‘மண் வாசனை’, ‘முதல் மரியாதை’, ‘கடலோர கவிதைகள்’, ‘வேதம் புதிது’, ‘கிழக்குச் சீமையிலே’, ‘கருத்தம்மா’ போன்ற திரைப்படங்கள் தமிழ் திரையுலகில் அற்புதப் படைப்புகளாக இன்றளவும் போற்றப்பட்டு வருகிறது. ‘பாக்கியராஜ்’, ‘ராதிகா’, ‘கார்த்திக்’, ‘ராதா’, ‘ரேவதி’, ‘நெப்போலியன்’, ‘ரஞ்சிதா’ போன்ற பல நடிகர்களை திரையுலகிற்கு அறிமுகப்படுத்தியவர். கிராமம் மற்றும் கிராமத்து மண் சார்ந்த மனிதர்களும், அழுத்தமான நடிப்பும், இவர் இயக்கிய திரைப்படைப்புகளின் முத்திரைகள்.

     Bharathiraja

    திரைப்படத்துறைக்கு இவர் ஆற்றிய பங்களிப்பிற்காக, இந்தியாவின் உயரிய விருதுதான “பத்ம ஸ்ரீ”, வழங்கி கெளரவிக்கப்பட்டது. மேலும், ஆறு முறை “தேசிய விருதுகள்”, மூன்று முறை “தமிழ் நாடு மாநில விருதுகள்” மற்றும் “ஃபிலிம்ஃபேர் விருது”, “கலைமாமணி விருது” என மேலும் பல விருகளை வென்றுள்ளார். “16 வயதினிலே” திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகி, சுமார் முப்பதிற்கும் மேற்பட்ட தரமான படைப்புகளைத் தந்து, தமிழ் திரையுலகின் “திருப்பு முனை” என வர்ணிக்கப்பட்ட பாரதிராஜாவின் வாழ்க்கை வரலாறு மற்றும் திரைத்துறைக்கு அவர் ஆற்றிய பங்களிப்பினை விரிவாகக் காண்போம்.

    பிறப்பு: ஜூலை 17, 1941

    இடம்: அல்லி நகரம், தேனி மாவட்டம், தமிழ்நாடு மாநிலம், இந்தியா

    பணி: இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் நடிகர்

    நாட்டுரிமை: இந்தியன்




    பிறப்பு 

    ‘சின்னசாமி’ என்ற இயற்பெயர் கொண்ட பாரதிராஜா அவர்கள், 1941  ஆம் ஆண்டு ஜூலை மாதம் 17  ஆம் நாள், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம், தேனி மாவட்டதிலுள்ள “அல்லி நகரம்” என்ற இடத்தில் ‘பெரிய மாயத்தேவர்’ என்பவருக்கும், ‘கருத்தம்மாவிற்கும்’ ஐந்தாவது குழந்தையாகப் பிறந்தார். இவருக்கு மூன்று சகோதரிகள் மற்றும் மூன்று சகோதரர்கள், என ஆறு பேர் இவருடன் பிறந்தவர்கள்.

    ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி


    பள்ளிப்படிப்பைத் தன்னுடைய சொந்த ஊரிலேயே முடித்த அவர், பள்ளியில் படிக்கும்போதே இலக்கியங்கள் படிப்பதில் அதிக ஆர்வம் காட்டினார். பிறகு, நாடகம் எழுதுவதிலும், நடிப்பதிலும், இயக்குவதிலும் தன்னுடைய கவனத்தினை செலுத்திய அவர் ‘ஊர் சிரிக்கிறது’, ‘சும்மா ஒரு கதை’ போன்ற நாடகக் கதைகளை எழுதி, அதை அவ்வப்போது திருவிழாக்காலங்களில் மேடைகளிலும் அரங்கேற்றியுள்ளார்.

    திரைப்படத்துறையில் அவரின் பயணம்


    ஆரம்பக் காலத்தில் சுகாதார ஆய்வாளராக சிறிது காலம் பணிபுரிந்து வந்த அவர், பின்னர் சினிமாத் துறையின் மீது அவருக்கு ஏற்பட்ட ஆர்வத்தால் சென்னைக்குப் பயணமானார். சென்னையில் ‘மேடை நாடகம்’, ‘வானொலி நிகழ்வுகள்’, ‘பெட்ரோல் பங்க் வேலை’ என பணிபுரிந்துக்கொண்டே சினிமாத் திரையில் நுழைய முயற்சிகள் மேற்க்கொண்ட அவர், இறுதியில் இயக்குனர் ‘பி. புல்லையாவிடம்’ உதவியாளராகத் திரைப்படத்துறையில் கால்பதித்தார். பின்னர் பிரபலக் கன்னட இயக்குனர் ‘புட்டண்ணா கனகலிடம்’ சேர்ந்து சினிமா நுணுக்கங்களைக் கற்றுத் தேர்ந்தார்.

    குறுகிய காலத்திலேயே தன்னுடைய முதல் படமான ‘16 வயதினிலே’ திரைப்படத்தை 1977 ஆம் ஆண்டு இயக்கினார். இதில் ‘கமல்ஹாசன்’, ‘ஸ்ரீதேவி’, ‘ரஜினிகாந்த்’ போன்ற முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். 1978 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இத்திரைப்படம் தமிழ் திரைப்பட வரலாற்றில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியது எனலாம். கிராமத்துச் சூழலை மையமாகக் கொண்டு அமைந்த இக்கதையில், கமலஹாசன்’ அவர்கள், ‘சப்பாணி’ என்னும் பெயரில் ‘வெள்ளந்தியான’ குணச்சித்திரப் பாத்திரத்தில் மிக அற்புதமாகத் தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.

    இதற்கு முன் எத்தனையோ திரைப்படங்கள் கிராமத்துக் கதைகளில் வந்திருந்தாலும், உணர்வுப்பூர்வமான கிராமத்துச் சூழலை திரையில் கண்முன் காட்டியது அப்படம். இத்திரைப்படம் முழுவதுமே இயற்கையான வெளிப்புறச் சூழலிலேயே எடுக்கப்பட்டதால், தமிழ் திரைப்படத்துறையில் பெரும் மாற்றத்தினையே கொண்டுவந்தது. தன்னுடைய ஆளுமையை முதல் படத்திலேயே நிரூபித்துக் காட்டிய அவர், தொடர்ந்து ‘சிகப்பு ரோஜாக்கள்’, ‘கிழக்கே போகும் ரயில்’, ‘அலைகள் ஓய்வதில்லை’, ‘மண் வாசனை’, ‘முதல் மரியாதை’, ‘கடலோரக் கவிதைகள்’, ‘வேதம் புதிது’, ‘கிழக்குச் சீமையிலே’, ‘கருத்தம்மா’ போன்ற வெற்றிப்படங்களைத் தந்து “இயக்குனர் இமயம்” என அனைவராலும் போற்றப்பட்டார்.

    அவர் இயக்கியத் திரைப்படங்கள்


    ‘பதினாறு வயதினிலே’ (1977), ‘சிகப்பு ரோஜாக்கள்’ (1978), ‘கிழக்கே போகும் ரயில்’ (1978), ‘நிறம் மாறாத பூக்கள்’ (1979), ‘நிழல்கள்’ (1980), ‘அலைகள் ஓய்வதில்லை’ (1981), ‘புதுமைப் பெண்’ (1983), ‘மண் வாசனை’ (1983), ‘ஒரு கைதியின் டைரி’ (1984), ‘முதல் மரியாதை’ (1985), ‘கடலோரக் கவிதைகள்’ (1986), ‘வேதம் புதிது’ (1987), ‘ஆராதனா’ (1987), ‘கொடி பறக்குது’ (1989), ‘புது நெல்லு புது நாத்து’ (1991), ‘நாடோடி தென்றல்’ (1992), ‘கிழக்குச் சீமையிலே’ (1993), ‘கருத்தம்மா’ (1995) போன்ற திரைப்படங்கள் அவரின் புகழ்பெற்றப் படைப்புகளாகும்.

    இல்லற வாழ்க்கை

    ‘சந்திர லீலாவதி’ என்பவரைத் திருமணம் செய்துகொண்ட பாரதிராஜா அவர்களுக்கு, ‘மனோஜ்’ என்றொரு மகனும், ‘ஜனனி’ என்றொரு மகளும் பிறந்தனர்.

    விருதுகளும், மரியாதைகளும்

    •2004 – இந்திய அரசால் “பத்மஸ்ரீ” விருது.

    •1982-ல் ‘சீதாகொகா சிகே’, 1986-ல் ‘முதல் மரியாதை’, 1988-ல் ‘வேதம் புதிது’, 1995-ல் ‘கருத்தம்மா’, 1996-ல் ‘அந்தி மந்தாரை’, 2001-ல் ‘கடல் பூக்கள்’ போன்ற திரைப்படங்களுக்காக “தேசிய விருதை” வென்றுள்ளார்.

    •1978 – ‘கிழக்கே போகும் ரயில்’ திரைப்படத்திற்காக ‘ஃபிலிம்பேர்’ விருது.

    •1977-ல் ‘16 வயதினிலே’, 1979-ல் ‘புதிய வார்ப்புகள்’, 1981-ல் ‘அலைகள் ஓய்வதில்லை’, 2003-ல் ‘ஈர நிலம்’ போன்ற திரைப்படங்களுக்காக “தமிழக அரசின் மாநில விருது”.

    •தமிழக அரசின் “கலைமாமணி” விருது.

    •1981 – ‘சீதாகொகா சிலுகா’ திரைப்படத்திற்காக ஆந்திரபிரதேச அரசிடம் இருந்து “நந்தி விருது”.

    தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும், சுமார் நாற்பதிற்கும் மேற்பட்டத் திரைப்படங்களை இயக்கிய பாரதிராஜா அவர்கள், தமிழ் திரையுலகில் தோன்றிய இயக்குனர்களில் தனக்கெனத் தனி பாணியில் கதை வேர்களை வெளிச்சமிட்டுக் காட்டிய கலைஞன். தன்னுடைய அற்புதப் படைப்புகளினால் தமிழ் சினிமாவை புதிய திசைக்குச் செலுத்தி, தமிழ் திரைப்படத்துறையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தினார் என்று சொன்னால் அது மிகையாகாது.

    0 comments:

    Post a Comment