Sunday, 6 October 2013

Tagged Under:

நிம்மதியான வருமானத்துக்கு வழிகாட்டும் நீளப்புடலை!!

By: ram On: 17:21
  • Share The Gag




  • காய்கறி சாகுபடி என்றாலலே மூட்டைக் கணக்கில் ரசாயன உரத்தையும், லிட்டர் கணக்கில் பூச்சிக்கொல்லிகளையும் கிடைக்கும் என்று விவசாயிகள் பலரும் எண்ணி வருகின்றனர். அதிலும் பந்தல் காய்கறிகள் என்றால் சொல்லவே வேண்டாம். ‘அதுக்கெல்லாம் யாரு பண்டுதம்  பார்க்கறது”  என்று ஒதுங்கிப் போகும் விவசாயிகள்தான் அதிகம்.


    இந்நிலையில் இயற்கை இடுபொருட்களைக்கூட தயாரித்து உபயோகப்படுத்தாமல் எரு, கடலைக்கொடி, கொளுஞ்சி ஆகியவற்றை மட்டுமெ பயன்படுத்தி புடலை சாகுபடி செய்து மனம் நிறைவான மகசூலை எடுத்து வருகிறார். மயிலாடு துறைக்கு அருகே உள்ள சிங்கான் ஒடையைச் சேர்ந்த பாஸ்கரன்.


    “ ஆரம்பத்துல நான் கடலை வியாபாரம்தான் பாத்துக்கிட்டு இருந்தேன். அதுல பெருசா வருமானம் கிடைக்காததால விவசாயம் பண்ணிப் பாக்கலாம்னு 100 குழி (33 சென்ட் ) நிலத்தை குத்தகைக்கு எடுத்து, புடலங்காயை நட்டு வெச்சேன். ஒரளவுக்கு வருமானம் கிடைக்கவே, புடலங்காய் விவசாயத்தையே தொடர ஆரம்பிச்சுட்டேன். விவசாயத்துக்கு வந்து இப்ப பதினாறு வருஷமாச்சு, குத்தகை நிலத்துல விளைஞ்ச புடலங்காயை வித்துக் கிடைச்ச வருமானத்துல, கொஞ்சம் கொஞ்சமா சேத்து வெச்சு ஆறு வருசத்துக்கு முன்ன ரெண்டு ஏக்கர் நிலம் வாங்கியிருக்கேன்.


    நான் வாங்கின நிலம் கடலுக்குப் பக்கத்துல இரக்கறதால, ஒரு குளத்தை வெட்டி அதுல ஊறுற தண்ணியைத்தான் பாசனத்துக்காகப் பயன்படுத்திக்கிட்டு இருக்கேன். இது மணல் பாங்கான நிலம். வருஷம் முழுக்க நிலத்தை சும்மா போடாம, இந்த நிலத்துக்கேத்த, வருஷம் முழுக்க நிலத்தை சும்மா போடாம, இந்த நிலத்துக்கேத்த, கடலை, வெள்ளரி, கொத்தவரை, பாகல், நீளப்புடலைனு மாத்தி மாத்தி வெள்ளாமை செஞ்சுக்கிட்டு இருக்கேன். ஆரம்பத்துல நானும் ரசாயன விவசாயம்தான் செஞ்சுக்கிட்டு இருந்தேன். ரெண்டு வருஷமாதான் இயற்கை விவசாயத்தக்கு மாறியிருக்கேன். ஆனா, பஞ்சகவ்யா, அமுதக்கரைசலனு எதையும் தயாரிச்சுப் பயன்படுத்தறது இல்லை. எரு கடலைக் கொடி, கொளுஞ்சிச் செடி இது மூணை மட்டுமே வெச்சுதான் முழு வெள்ளாமையும் செய்றேன். புடலையில் காய்ப்பு ரொம்ப நல்லாவே இருக்குது. எப்பவும் சித்திரைப் பட்டத்துல அரை ஏக்கர்லயும், தை பட்டத்துல கம்மியாவும்தான் சாகுபடி செய்வேன்” என்று முன்னுரை கொடுத்த பாஸ்கரன் பத்து சென்ட் நிலத்தில்புடலை சாகுபடி செய்வது எப்படி என்பது குறித்த பாடத்தை ஆரம்பித்தார்.


    பொதுவாக, நீளப்புடலையின் வயது ஏழு மாதம். சில இடங்களில் மண் வாகைப் பொறுத்து வயது மாறுபடலாம். உப்பு மற்றும் காரத்தன்மை அதிகமில்லாத, தண்ணீர் வளம் உள்ள எல்லா நிலமும் புடலைக்கு ஏற்றது. புடலையை சித்திரை மற்றம் தை பட்டம் இரண்டிலும் நடவு செய்யலாம். பத்து சென்ட் நிலத்தையும் களைகள் நீங்கும்படி ஒரு அடி ஆழத்துக்கு கொத்திவிட்டு, 21 அடி நீளம் 7 அடி அகலத்தில் பாத்தி எடுக்க வேண்டும். பாத்தியை ஒட்டி நீளவாக்கில் ஒன்றரை அடி அகலத்தில் வாய்க்கால் எடுக்க வேண்டும்.



    ஒவ்வொரு பாத்தியின் மையத்திலும் நேர் வரிசையில் மூன்று மூன்று குழிகள் எடுக்க வேண்டும். நீளவாக்கில் குழிக்கு குழி 7 அடி இடைவெளி விட்டு எடுத்தால் சரியாக அமையும். குழியின் அளவு ஒன்றரை அடி சதுரம் ஒன்றரை அடி ஆழம் இருக்க வேண்டும். பத்து சென்டில் நிலத்தின் வாகைப் பொறுத்து அறுபது குழிகள் வரை எடுக்க முடியும். ஒவ்வொரு குழியிலும் ஒரு கூடை எரு, அரைக் கூடை மேல் மண் ஆகியவற்றைக் கலந்து நிரப்ப வேண்டும். பின், அதில் தண்ணீர்விட்டு ஒரு நாள் முழுவதும் ஆற வைக்க வேண்டும்.



    மறுநாள், குழியின் மையத்தில் ஒரு அங்குல ஆழத்தில் ஒரு விதையை விதைத்து, அந்த விதைக்கு நான்கு பக்கமும் அரையடி இடைவெளியில் பக்கத்துக்கு ஒன்றாக நான்கு விதைகளையும் விதைக்க வேண்டும். அதாவது ஒரு குழிக்கு ஐந்து விதை என்ற கணக்கில் விதைக்க வேண்டும். பின் வாழைச் சருகு அல்லது தென்னை மட்டையால் குழியை மூடி வைத்து, தொடர்ந்து மூன்று நாட்கள் பூவாளியால் தண்ணீர் ஊற்ற வேண்டும். அதன்பிறகு, ஒரு நாள் விட்டு ஒரு நாள் தண்ணீர் ஊற்ற வேண்டும். பூவாளியால் தண்ணீர் ஊற்றுவது சாத்தியப்படா விட்டால், விதைகள் முளைத்து வரும் வரை, கொஞ்சமாகத் தண்ணீர் கட்டிக் கொள்ளலாம்.


    விதைத்த 8-ம் நாள் முளைத்து வரும். அந்த சமயத்தில் மூடாக்கை அகற்றிவிட்டு, ஒரு தண்ணீர் கட்ட வேண்டும். தொடர்ந்து மண்ணின் ஈரப்பதத்தைப் பொருத்து நான்கு நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்சினால் போதும். 25-ம் நாளுக்கு மேல் கொடி படரத் தொடங்கும். அந்த சமயத்தில் கொடிக்கு இடையூறு இல்லாமல் ஒவ்வொரு குழியிலும் பத்தடி உயரமுள்ள மூன்று சவுக்குக் குச்சிகளை ஊன்றி கொடிகளை இதில் இழுத்துச் சுற்றிவிட வேண்டும். இது கொடி படர்வதற்காக. பிறகு பத்தடி நீளம் உள்ள ஒதியன் மர போத்துக்களை ஏழடிக்கு ஏழடி இடைவெளியில் இரண்டடி ஆழத்துக்கு குழியெடுத்து ஊன்ற வேண்டும். இது பந்தல்காலுக்காக என்பதால் உறுதியாக இருக்க வேண்டும். ஒதியன் மரங்களின் மேல்பக்கத்தை சவுக்குக் குச்சிகளால் குறுக்கும் நெடுக்கமாக இணைத்து, கயிறு அல்லது பனை நார் மூலம் கட்ட வேண்டும். அவற்றின் மேல், ஆற்றில் மண்டிக் கிடக்கும் கட்டுக் கொடியைச் சேகரித்து இரண்டாகப் பிளந்து காய வைத்து, தண்ணீரில் நனைத்து பந்தல் பின்ன வேண்டும். இந்தப் பந்தல் ஒரு வருடம் வரை அப்படியே இருக்கும். இது கிடைக்காதவர்கள், வழக்கமான முறையில் கல்தூண், கம்பிகளை வைத்து பந்தல் போட்டுக் கொள்ளலாம்.


    30 ம் நாளுக்கு மேல் பூவெடுக்க ஆரம்பித்த உடன், பக்கவாட்டில் கிளை அடிக்கும் தேவையற்றக் கொடிகளைக் கிள்ளிவிட வேண்டும். 55-ம் நாளில் வேரைச் சுற்றி உள்ள களைகளை அகற்றி, கொடியின் அடிபாகத்தில் இருந்து ஒன்றரை அடி இடைவெளியில் கொடியைச் சுற்றி உரக்குழிக்காக கொஞ்சம் பள்ளம் பறிக்க வேண்டும். அதில் ஒரு குழிக்கு மூன்று கூடை எரு, பத்து கிலோ காய்ந்த கடலைக் கொடி, 10 கிலோ காய்நத கொளுஞ்சி இலை ஆகியவற்றைப் போட்டு மூட வேண்டும். வேறு உரம் எதுவுமே தேவையில்லை. 60-ம் நாளுக்கு மேல் பிஞ்சு எடுக்கும். பிஞ்சு எடுத்த ஐந்தாவது நாளுக்கு மேல் சுருளும் காய்களுக்கு மட்டும் அடியில் கல்லைக் கட்டிவிட வேண்டும். நீளப்புடலையில் பெரிய அளவில் நோய், பூச்சித்தாக்குதல் இருக்காது. அப்படியே வந்தாலும், பெரிய அளவில் பாதிப்பு இருக்காது. 70-ம் நாளுக்கு மேல் காய்கள் பெரிதாகி அறுவடைக்குத் தயாராகிவிடும்.


    சாகுபடி பாடத்தை முடித்த பாஸ்கரன், வருமானத்தைப் பற்றி சொல்ல ஆரம்பித்தார்.


    “பறிக்க ஆரம்பிச்சுதுல இருந்து ஒரு நாள் விட்டு ஒரு நாள்னு எழுபது தடவை காய் பறிக்கலாம். அதாவது, 140 நாட்கள் வரை பறிக்கலாம். ஆரம்பத்துல ஒரு பறிப்புக்கு 40-ல் இருந்து 50 காய்கள் வரை கிடைக்கும். அதுக்கப்புறம் படிப்படியா அதிகரிச்சு, அஞ்சாவது பறிப்புக்கு மேல ஒரு பறிப்புக்கு 150 காய்கள் வரை கிடைக்க ஆரம்பிச்சுடும். ஒவ்வொரு காயும் ஏழிலிருந்து பத்தடி வரை நீளமும் ஒரு கிலோ வரை எடையும் பத்தடி வரை நீளமும் ஒரு கிலோ வரை எடையும் இருக்கும். சராசரியா ஒரு பறிப்புக்கு 70 காய்னு வெச்சுக்கிட்டாலே, மொத்தமாக 4,900 காய்கள் வரை கிடைக்கும். ஒரு காய் ஆறு ரூபாய் வரை விலை போகுது. சராசரியாக அஞ்சு ரூபாய்ன வெச்சுக்கிட்டா 24,500 ரூபாய்க்கு விற்பனை செய்ய முடியும். செலவெல்லாம் போகபத்து சென்ட் நிலத்துல 17 ஆயிரம் ரூபாய் வரை லாபம் கிடைக்கும் “. என்றார், மகிழ்ச்சியுடன்.

    தொடர்புக்கு
    பாஸ்கரன் 
    மயிலாடு துறை 
    சிங்கான் ஒடை, அலைபேசி: 93645-29720

    0 comments:

    Post a Comment